உள்ளக முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ள சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று (10) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இன்று காலை 10.30 க்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை கட்சி, லிபரல் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு முன்னணி ஆகிய 6 கட்சிகளே இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.
மேற்குறித்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதுடன் கட்சியின் உரிமை தொடர்பிலும் உள்ளக முரண்பாடுகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தபால் மூல வாக்களிப்பை எந்த தினத்தில் நடத்தலாம் என்பது குறித்த இறுதி தீர்மானமும் இன்று எட்டப்படவுள்ளதாக குறித்த பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை (11) இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இதுவரை 24 சுயேற்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்ச்க்கர வண்டியில் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியின் சாரதி நேற்றிரவு (09) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேரூந்து இன்மையினால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனிமையில் மாணவி இருந்ததினை அவதானித்த முச்சக்கர வண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மாணவியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதினை அடுத்து முச்சக்கர வண்டியின் சாரதியினை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சஜித் பிரேமதாசா தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதுல்கோட்டே, ஈ.டபிள்யு. பெரேரா மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் குறித்த காரியாலயம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
சஜித் பிரேமதாசா தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்ட சமகி ஜன பலவேகய என அழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகிய செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை எனவும், அந்த விடயம் தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அணையாளர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது இராஜினாமா குறித்து ஊடகங்களில் ஆதாரமற்ற மற்றும் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட தவறான தகவல்கள் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 6 மாதங்களாக தனது இராஜினாமா பற்றி தான் தீர்மானித்ததாகவும் அதன் பிரகாரமே தான் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
எனினும் நாட்டிற்கான தனது பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச சேவைகளுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தார். அதன்படியே பட்டதாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரம் நாளை மறுதினம் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயரால் கத்தோலிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இந்த நாட்டு மக்களாகிய நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமை தான்.
முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழம்பிப்போய் உள்ளது. இந்நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
சமய அடிப்படையில் கட்சியாகவோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாகச் சிதைத்து சின்னாபின்னமாகி விடும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். கத்தோலிக்க மக்களாகிய நாம் நாட்டு நலனையும் நமது இனத்தின் நலனையும் முன்னிறுத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.
எனவே கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாக தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாவட்டத்தின் கொள்கை அல்ல என்பதை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கையினை விடுத்தும் மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமாக பிரதான வீதியூடாக காந்திபூங்காவிரையில் பேரணி வந்ததும் காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும்,உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம்,காணாமல் போனோருக்கான அலுவலகத்தினை நிராகரிக்கின்றோம்,காணாமல் போனோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்,சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப் படவேண்டும்,கலப்பு பொறிமுறை வெறும் கண்துடைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 43வது மனித உரிமை பேரவைக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றும் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால் வாசிக்கப்பட்டது.
காணாமல்போனவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருவதாகவும் தமிழ் தலைமைகளும் தங்களை ஏமாற்றியள்ளதாகவும் இங்கு காணாமல்போனவர்களின் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.இன்றைய கவன ஈர்ப்பு பேரணி மற்றும் போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
தேசிய பெண்கள் தினம் முதன் முதலில், அமெரிக்கா நியூயோர்க்கில் 1909ஆம் ஆண்டு பெப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதற்கடுத்த வருடம் மற்றைய நாடுகளுக்கும் அது பரவ, 1911 மார்ச் 19அன்று, முதல் தடவையாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி, தமது வாக்கு மற்றும் சம உரிமைக்காக போராடினார்கள். 1914 மார்ச் 8 அன்று ஜேர்மனியில் முதன் முதல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டதையடுத்து, தொடர்ந்தும் இதே நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை புரிவதுடன், பல துறைகளிலும் சாதனைப் பெண்களாக பரிணமித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. தமிழீழ பெண்களின் சாதனைகள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது. ஆனாலும் பல பெண்கள் இன்றும் பல இன்னல்களுக்கு முகம் கொடுப்பதையும், அடிமைத்தனங்களில் இன்னலுறுவதையும் பார்க்கலாம்.
பெண்ணிய விடுதலை என்பது பெண்கள் தெரிந்தெடுத்து பயணிக்க வேண்டிய ஒரு பாதையாகும். அதே நேரம் ஆண்கள் பெண்களின் உரிமையை மதித்து அவர்களை பாதுகாத்து, ஊக்குவித்து வழிநடத்தும் போது அழகான ஒரு சமத்துவம் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால், எப்படி பெண்ணின் பங்களிப்பு உள்ளதோ, அதேபோல் பெண்களின் வெற்றிக்கு பின்னால் பல ஆண்களின் பங்களிப்பு தேவை என்பது நிதர்சனமாகும்.
அதே போன்று, சக பெண்களும் உறுதுணையாகி, பெண்களின் சமத்துவத்தை மதித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பாடுபட வேண்டும். குறிப்பாக, வீரத்திற்கும், சாதனைக்கும் சொந்தக்காரரான தமிழீழப் பெண்கள் மீண்டும் தங்கள் நிலையை சிந்தித்து, கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தி, பல புரட்சிகர மாற்றத்தை உருவாக்க முன்வர வேண்டும். எமது சமூகத்தில் தலை விரித்தாடும் அடிமைத் தனங்களில் இருந்து விடுதலையை கொண்டு வருவதுடன்,எமது சமூகத்தை ஆரோக்கியம் மிகுந்ததாக மாற்றவும் முன்வர வேண்டும்.
தமிழர் வரலாற்றில் ஒப்பீட்டளவில் பெண்களுக்கான முன்னுரிமையும், மதிப்பும் காலங்காலமாக வழங்கப்பட்டு வந்தாலும், காலப்போக்கில் பிற சமூகங்களின் கலாச்சார தலையீடுகளும், சமூக வல்லாதிக்கமும், இவற்றை மாற்றியமைக்க காரணமாகின.
குறிப்பாக சொத்துக்கள் பெண்களினூடாகவே பகிர்ந்தளிக்கப்படும். தாய்வழி பாரம்பரிய சொத்து பேணும் முறை மிகவும் முற்போக்கான ஒரு நடைமுறையாக இருந்தது. இதன் மூலம் ஓர் சமூகத்தின் சொத்துக்கள் அச்சமூகத்தின் உழைப்பால் பெறப்பட்டவை எனும் வகையிலும், அவை தம் வழித்தோன்றல்களிடமே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனும் நியாயமான சிந்தனையின் அடிப்படையிலும் விரும்பி வழங்கப்படும் ‘சீர்தானம்’ ஆக சிதறி வாழ்ந்த தமிழ் சமூக பரம்பரைகளிடையே வழக்கிலிருந்து வந்தது.
ஆனால் காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு, நகர வாழ்க்கை முறை என்பவற்றினூடான சனத்தொகை அடர்த்தி அதிகரிப்பு, சமூகங்களுக்கிடையேயான நெருக்கம் என்பன கலப்பு திருமண சூழ்நிலைகளை உண்டு பண்ணியது. பல்வேறு சமூகத்தை சார்ந்த இளையோர் கூடிப்பழகும் வாய்ப்பும், திருமண பிணைப்புகளும் தாமாக எழுந்தன. இப்போது சொத்துக்கள் ஒரு சமூகத்திடமிருந்து இன்னொரு சமூகத்திற்கு கைமாறும் நிலை வந்தது. இதற்கான பேரம் பேசல்கள் விரும்பி வழங்கும் தானத்திலிருந்து வலிந்து பெறும் ‘சீதனம்’ ஆகி தமிழ் பெண்களின் வாழ்வையும் எம் சமுதாயத்தின் மேம்பாட்டை சீரழிக்கும் காரணியாகவும் மாறியது.
தொழில் நுட்பம், மற்றும் நாகரீகம் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்திலும் எமது சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சீதனக் கொடுமையை முறியடிக்க எமது சமூகத்தின் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் முன்வந்தால், வெகுவிரைவில் எம்முள் வேரூன்றி கிடக்கும் இச்சமூக குறைபாட்டை நீக்க முடியும் என்பதில் ஐயமில்லை. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்னும் அறிவுரைக்கிணங்க, எம் சமூகத்தில் அனைவரும் சீதனக் கொடுமையை எதிர்த்து நின்றால், இந்த நடைமுறையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அகற்ற முடியும்.
அடிமைத்தனம் என்றால் என்ன, மனித குலத்தின், ஒரு சமூகத்தின், ஒரு குடும்பத்திற்குரிய கட்டுக்கோப்பு என்ன என்பதற்குரிய தெளிவான அறிவைப் பெறுதல் மிகவும் அவசியமானதாகும். கணவனுக்கு கீழ்ப்படிதல். தகப்பனுக்கு கீழ்ப்படிதல் அடிமைத்தனம் என்று நினைக்கும் பெண்கள் எம் மத்தியில் உள்ளனர். தவறான தெளிவூட்டல் குடும்பக் கட்டுக்கோப்பை சிதைத்து விடும். நேர்கொண்ட சிந்தனையும், தெளிவான பாதையும் சரியான இலக்கினை அடைய வழிவகுக்கும்.
ஆண், பெண் என்பது விருத்தியடைந்த உயிரினங்களின் இலிங்க முறை இனப்பெருக்கத்திற்கான கூர்ப்பியல் பரிமாண விருத்தியாகும். இது தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களினதும் இன விருத்திக்கான இயற்கையின் ஏற்பாடாக அமைகிறது. அவ்வகை இன விருத்திக்கான தேவைகளின் அடிப்படையிலேயே பெண்களும் ஆண்களும் சிலவகை உடலியல் மற்றும் உளவியல் வேறுபாடுகளை கொண்டு விளங்குகின்றனர்.
ஆனால் செயல் திறனில் இருபாலாரும் ஒருவரை விட ஒருவர் குறைந்தவர் அல்ல. இந்த தெளிவு எம்முள் இருக்குமானால், மனித வாழ்வின் தேவைகளுக்கான செயற்பாடுகளை உரிய வகையில் பகிர்ந்து சரிநிகர் சமானமாக நாம் வாழ முடியும். இவ்விழிப்புணர்வு இல்லாமையே கடந்த காலங்களில் பெண் அடிமை செயல்களாக பரிணமிக்கவும் பெண் விடுதலைக்கான போராட்டமாகவும் வடிவெடுத்தது.
அனைத்துலக மகளிர் தினம் என்பது இவ்விழிப்புணர்வை கொண்டு வரும் ஒரு தினமாகவே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், பின்தங்கிய சமூகங்களிடையே பெண்களுக்கான சம உரிமையை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தும் ஓர் நாளாகவும் அமைகிறது. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு, பெண் அடிமைத்தன சிந்தனைகளை விடுத்து ஒவ்வொரு பெண்ணும் ஆணும், பங்களிப்போம் என இந்த சர்வதேச மகளிர் தினத்தில் மீண்டும் உறுதி பூண்டு உழைப்போம்.
விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
கேள்வி -ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த கால ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு பிற்பட்ட காலப்பகுதியிலும் தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குமிடையில் நீண்ட காலமாக உறவு இருக்கின்றது. இது முழுவதும் கட்சி நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே 2015இலிருந்து 2019 வரைக்கும் தமிழரசுக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் இணைந்தே செயற்பட்டன. தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்குப் பதிலாக நிபந்தனையற்ற
ஆதரவை வழங்கிவருகிறது.
தமிழரசுக் கட்சியினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் உறவை பற்றிக் கூறுவதானால், தமிழரசுக் கட்சியின் தாய்க் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று சொல்லலாம். இது காலாகாலமாக தொடர்ந்து வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பகிரங்கமான உண்மை.
கேள்வி -1965 இல் டட்லி சேனநாயக்க இருந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஆதரவானது மக்களுக்கு எவ்வாறான நலத்திட்டங்களை பெற்றுக் கொடுத்தது?
மக்களுக்கு நன்மையான காரியங்களைப் பெற்றுக் கொடுப்பது என்பதற்குப் பதிலாக அவர்கள் ஐ.தே.க. கும் தமிழரசுக் கட்சிக்கும் இருந்த உறவில் 1979ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு இவர்களும் அதற்கு ஒரு உடந்தையாக இருந்துள்ளனர்.
அந்த பயங்கரவாத தடைச் சட்டமே 30, 35 வருடங்களாக நாட்டில் பல ஆயிரக் கணக்கான இளைஞர்களை கைது செய்வதற்கும், நாட்டில் நடைபெற்ற படுகொலைக்கும் காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே ஐ.தே.க. தமிழரசுக் கட்சிக்கும் இருக்கும் உறவு தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக பல்வேறுபட்ட அநீதிகள் இழைக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது.
கேள்வி – ஐ.தே.க.உடன் அதிகமாக உறவுகளை வைத்திருக்கும் தமிழரசுக் கட்சி, ஏன் மற்றைய கட்சிகளுடன் உறவுகளை பேணவில்லை?
நான் முன்னர் குறிப்பிட்டது போல் ஐ.தே.க. தமிழரசுக் கட்சியின் தாய்க் கட்சி. ஆகவே அவர்களுக்குள் நீண்ட காலமாக இருந்த உறவு, தங்கள் நலன் சார்ந்தே பேணுகின்றார்களே தவிர, மக்கள் நலன் சார்ந்து உறவை வைத்துக் கொள்ளவில்லை. தவறான விடயங்களை விமர்சிப்பது வேறு. ஒரு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிக் கொண்டு தமிழ் மக்களை படுகுழியில் தள்ளுவது என்பது முழுக்க முழுக்க அவர்களின் சுயநலன் சார்ந்த விடயம்.
கேள்வி – நீங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஊடக அறிக்கையொன்றை வழங்கியிருந்தீர்கள் அந்த ஊடக அறிக்கை தேசிய அளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. அந்த ஊடக அறிக்கை பற்றி கூறுங்கள்?
யாழ்ப்பாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திரு சுமந்திரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று தனியாக இருப்பதற்கு பல்வேறு இயக்கங்களை சகோதரப் படுகொலை மூலம் இல்லாமல் செய்தது தான் காரணம் என சொல்லியிருந்தார்.
இந்தக் கருத்தானது ஊடகங்கள், சர்வதேச வலைத்தளங்கள் ஊடாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. என்னைப் பொறுத்தளவில் நாங்களும் ஓர் ஆயுதப் போராட்டத்திலிருந்து வந்தவர்கள் என்ற வகையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக பல அமைப்புகள் ஆயுதம் தூக்கிப் பேராடியது. தமது உயிரை துச்சமென பணயம் வைத்து பல ஆயிரக் கணக்கான போராளிகள் மடிந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட அமைப்புகளிடையே சில கசப்பான சம்பவங்கள் நடந்ததென்பது பகிரங்கமான உண்மை. அதை யாரும் மறுப்பதற்கில்லை.
இருந்தாலும், 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த எங்களைப் போன்றவர்களை அழைத்து ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான ஒரு கௌரவமான ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக ஒரு கொள்கையின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அப்படியான ஒரு கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு அந்த கூட்டமைப்பின் பெயரையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும், மாவீரர்களையும், போராளிகளையும் தேர்தல் காலத்திலே அவற்றை பேசி வாக்குகளைப் பெற்று அதற்குப் பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவரைப் பற்றி அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுமந்திரன் மட்டுமல்ல திரு சம்பந்தன் அவர்களும் கூட மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கின்றார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இந்த பழைய விடயங்களை கிளறி மேலும் மேலும் தமிழ் மக்களை அல்லது இருக்கக்கூடிய கட்சிகளிடையே முரண்பாடுகளை வளர்க்க விரும்பவில்லை. ஆனால் இவர்கள் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொடூரமானவர்கள், பயங்கரமானவர்கள் என்று பாராளுமன்றத்திற்குள்ளே திரு.சம்பந்தன் பேசிய உரைகள் இன்று ஒளி, ஒலிவடிவில் ஹன்சாட்டில் உள்ளது. அதேபோல் பல தடவைகள் சுமந்திரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக பகிரங்கமாக வைக்கப்பட்ட விமர்சனங்கள் இருக்கின்றது.
ஆகவே இந்தக் கருத்துக்களோடு தொடர்ச்சியாக முன்வைக்கின்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளும், மாவீரர் குடும்பங்களும் , அல்லது ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக அந்த இயக்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவரையும் , கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களாக இருக்கக்கூடிய திரு சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் மிகக் கொடூரமான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள், மாவீரர் குடும்பம், போராளிகள் குடும்பம் எந்த வகையில் இவர்களை ஆதரிக்க முடியும் என்பது தான் எங்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.
கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவும், மோசமாகவும் பரவி வருவதால், உலக நாடுகள் எங்கும் ஒரு அச்சமான நிலை தோன்றியுள்ளது.
உலகம் எங்கும் 3522 மக்கள் இதுவரை பலியாகியுள்ளதுடன், 103,738 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள போதும், தற்போது அது உலகம் எங்கும் உள்ள 100 இற்கு மேற்பட்ட நாடுகளில் மோசமாக பரவி வருகின்றது.
தென்கொரியா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 45 பேர் பலியாகியுள்ளதுடன், 7000இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 500 பேர் புதிதாக தொற்றுதலுக்கு உள்ளாகி வருகின்றனர். 28500 அமெரிக்கப் படையினர் தங்கியுள்ள தென்கொரியாவின் படைத் தளங்களிலும் நோய் பரவியுள்ளது. படைத்தளங்களில் பணியாற்றும் இருவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவின் நான்காவது பெரும் பொருளாதார நாடான தென்கொரியாவின் பாதிப்பும், யப்பானின் பாதிப்பும் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. யப்பானில் கடந்த வியாழக்கிழமை வரையில் 1000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த வருடம் ஜுலை மாதம் இடம்பெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இடம்பெறும் என யப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் சிகோ கசிமோட்டோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தென்கொரியாவுக்கு அடுத்த நிலையில் ஈரானில் மிக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 120 பேர் அங்கு மரணமடைந்துள்ளதுடன், 3500 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் 20ஆம் நாள் வரையில் மூடப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் தற்போது மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.
இவற்றில் இத்தாலியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரையில் 233 பேர் பலியாகியுள்ளதுடன், ஏறத்தாள 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலையே ஐரோப்பிய நாடுகளை அதிகம் பாதித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலியே உள்ளது.அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அரசு 8.4 பில்லியன் டொலர்களை அவசரகால நிதியாக ஒதுக்கியுள்ளது.
அதேசமயம், பிரித்தானியாவில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளதுடன், 206 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவும் அவசரகால நிதியாக 8.3 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இதனிடையே, கோவிட்-19 வைரஸ் உலகின் பொருளாதாரத்தை அதிகம் பாதித்து வருவதால், உலகம் மிகப்பெரும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் ஆபத்துக்கள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருமளவான மக்கள் தமது விடுமுறை பயணங்கள் மற்றும் சுற்றுலாப் பயணங்களை இரத்துச் செய்து வருவதால், கடந்த வாரம் ஐரோப்பாவில் ஆயிரக் கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜேர்மனியை தளமாகக் கொண்ட லுப்தான்சா என்ற விமான நிறுவனம் மார்ச் மாதம் ஐந்தாம் நாள் வரையிலும் 7100 விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.
ஏனைய விமான சேவை நிறுவனங்களும் தமது சேவைகளை 25 விகிதமாக குறைத்துள்ளன. விமான சேவை நிறுவனங்களின் இழப்பு 113 பில்லியன் டொலர்கள் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், இது பல மடங்கு அதிகரிக்கலாம் என அனைத்துலக வான் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னர் இந்த தொகை 29 பில்லியன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பிரித்தானியாவின் பிளைபீ என்ற விமான சேவை நிறுவனம் முற்றாக முடங்கியதால் அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதுடன், 2000 பேர் வேலையிழந்துள்ளனர்.பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் இல் 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் இறந்துள்ளனர். ஜேர்மனியில் 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தாகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஆபிரிக்க நாடுகளில் குறைவாக காணப்பட்ட இந்த நோய், தற்போது அங்கும் பரவ ஆரம்பித்துள்ளது. தென்ஆபிரிக்காவில் முதல் நபர் கடந்த வியாழக்கிழமை தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இது தமது நாட்டின் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என தென்ஆபிரிக்காவின் அரச தலைவர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் இதுவரையில் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிலும் நோய் அதிகம் பரவி வருவதால் ஜேசுநாதர் அவதரித்த பெத்தலகாம் தேவாலயம் மூடப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திலும் மசூதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், பல இஸ்லாமிய நாடுகளில் தொழுகைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், பல்வேறு தகவல்கள் சமூகவலைத் தளங்களில் பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருவதாக அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்பட்ட வைரஸ் கிருமியே உலகில் பரவ விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்துக்களை இரண்டு மில்லியன் பேர் ருவிட்டரில் பகிர்ந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.இதனிடையே, உலகம் எங்கும் உள்ள பல நாடுகள் தமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடியுள்ளதால் 290 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
வைரசின் தாக்கம் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரலீனா யோர்ஜீவா தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஒத்த நெருக்கடியை உலகம் எதிர் நோக்குவதாகவும், வறிய நாடுகளுக்கு உதவியாக 50 பில்லியன் டொலர்களை தாம் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, சுற்றுலாத்துறை கப்பல் நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், களியாட்ட விடுதிகள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் என்பன கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பங்குச் சந்தையும் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை (6) அது 61 பில்லியன் பவுண்களை இழந்துள்ளது. உலக மக்களின் வேலை வாய்ப்புக்களில் சுற்றுலாத்துறை 319 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிவருகின்றது. உலகப் பொருளாதாரம் 347 பில்லியன் டொலர்கள் இழப்பை சந்திக்கலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
யப்பானின் அஞ்ஜெஸ் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒசாக்கா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிட்-19 வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.