Home Blog Page 140

செம்மணி மனித புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள்  சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வட,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள  ஆக்கப்பட்டோரின் உறவுகளினுடைய அலுவலகத்தில் புதன்கிழமை (04)  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இதன்போது  காலத்துக்கு காலம் பல்வேறு மனித புதை குழிகள் கண்டு கண்டுபிடிக்கப்பட்டு அகழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவை அவ்வாறே விடப்பட்டிருக்கின்றது. இவ்வாறு செம்மணி புதை  குழியிலும் மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, இவ்வாறான அகழ்வு பணிகள் ஒரு  சர்வதேச  கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன்  ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பிலும் அவர்களது பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும்  என்று குறிப்பிட்ட அவர் தொடர்ந்து குறித்த அகழ்வு பணிக்கு நீதி கோரி வியாழக்கிழமை (05) பகல் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04)  பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்   ஒன்றை முன்னெடுத்தனர்.

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு சின்னமாக கருதப்பட்ட கிரிமியாவின் முக்கிய பாலத்தை தாக்கிய உக்ரைன்!

கிரிமியாவின் முக்கிய பாலமொன்றை நீருக்கடியில் வெடிபொருட்களை வெடிக்கவைத்து  தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

பலமாதநடவடிக்கைகளின் பின்னர் இந்த பாலத்தை வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

2014 இல் கிரிமியாவை ஆக்கிரமித்த பின்னர் ரஸ்யா கட்டிய கேர்ச் பாலத்தையே தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

2018 இல் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இதனை திறந்துவைத்திருந்தார். உக்ரைனில் அது ஆக்கிரமிப்பு சின்னமாக கருதப்பட்டது,

பாலத்தின் முக்கிய பகுதிகளில் 1100 கிலோ டிஎன்டி வெடிபொருட்களை வெடிக்கவைத்ததாக தெரிவித்துள்ள உக்ரைனின் பாதுகாப்பு சேவையான எஸ்பியு இது பாலத்தை தாங்கிநிற்கும் கட்டுமானங்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

முதலாவது வெடிபொருள் பொதுமக்களிற்கு எந்த பாதிப்பும் இன்றி வெடிக்கவைக்கப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பாலத்தை மூடிய பின்னர் திறந்துள்ளதாக ரஸ்யா முதலில் தெரிவித்திருந்தது எனினும் பின்னர் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உக்ரைன் பாதுகாப்பு சேவை தனது இயக்குநர்லெப்டினன்ட் ஜெனரல் வாசில் மல்யுக் இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கினார் என தெரிவித்துள்ளது.

இதேவேளை டெலிகிராம் பதிவொன்றில் 2022 , 2023 இல் உக்ரைன் கிரிமியா பாலத்தை தாக்கியது நீருக்கடியிலான அந்த பாரம்பரியத்தை தொடர்கின்றோம் என அவர் தெரிவித்தார் என உக்ரைனின் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டுள்ளது.

எங்கள் நாட்டின் ஆள்புலத்திற்குள் ரஸ்;யாவின் சட்டவிரோத கட்டமைப்பு எதுவும் இருக்க முடியாது,கிரிமியா பாலம் ஒரு நியாயபூர்வமான இலக்கு , எதிரி தனது படையினருக்கான விநியோகத்திற்காக இந்த பாலத்தை பயன்படுத்துகின்றான் என அவர் தெரிவித்துள்ளார்.

குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் சந்திரசேகர் பணிப்புரை

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையை  அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அவர் அறிக்கை கோரியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

‘சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது.

அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பவம்கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் ஆர்ப்பாட்டமும்!

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்க இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஊடகவியலாளரின்  மரணத்திற்கு நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கருத்து தெரிவிக்கையில், ”கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி, ரணில் ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி, மைத்திரி ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி அனுர அரசாங்கத்தின் காலத்திலாவது கிடைக்க வேண்டுமென மக்கள் நினைக்கின்றார்கள். கைது செய்யப்படுகின்றவர்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தி மனித குலத்திற்கு எதிராக அவர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், அவர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய உண்மையை, குறிப்பாக நடேசனின் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அதுதான் நாங்கள் விடுக்கும வேண்டுகோள். இந்த பகிரங்க வேண்டுகோள் தொடர்பில் அவதானம் செலுத்தி குற்றவாளியை இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலமாக ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை ஊடக தர்மத்தை பாதுகாக்கின்றீர்கள் என்ற விடயத்தை உறுதிப்படுத்த வேண்டுமென கோருகின்றேன்.” என்றார்.

மீனவர் மீது துப்பாக்கிச்சூடு : திருகோணமலையில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04) காலை பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குச்சவெளி கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதன்போது குச்சவெளி ஜாயாநகரைச் சேர்ந்த  23 வயதுடைய மீனவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுபோன்ற மிலேச்சுத்தனமான தாக்குதலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது “பாமர மக்கள்மீது கடுமையான சட்டத்தை திணிக்காதே”, “தீவிரவாதிகள் இல்லை நாம் மீனவ தொழிலாளர்” அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சிக்கு வந்தவுடன் கொள்கையை மாற்றிக் கொண்டீர்களா? : அரசாங்கத்திடம் நாமல் கேள்வி

நாட்டு மக்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு தொடர்பில் பேசுவற்கு இந்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உள்ளதா, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக  தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக கடந்த காலங்களில் குறிப்பிட்டீர்கள். தற்போதும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள். அல்லது ஆட்சிக்கு வந்தவுடன் கொள்கையை மாற்றிக் கொண்டீர்களா என்று  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற  தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தனிநபர் தரவு பாதுகாப்பு  சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. தரவு பாதுகாப்பு முகவராண்மையை  பல மாதங்களுக்கு முன்னர் நிறுவியிருக்க வேண்டும். இருப்பினும் துரதிஷ்டவசமாக இன்றும்  இந்த முகவராண்மை நிறுவப்படவில்லை.

இந்த முகவர் நிறுவனத்துக்கு உரிய  வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் மந்தகரமான நிலையில் செயற்படுகிறது.

இதனால் அரச டிஜிட்டல் கட்டமைப்பு பின்னடைவையே எதிர்கொள்கிறது.  மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான இந்த அரசாங்கம் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

தரவு பாதுகாப்பு  தொடர்பான சட்டமூலத்தை நான் ஆரம்பத்தில் கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியினர்  அந்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஆராயாமல் கடுமையாக விமர்சித்தார்கள்.

ஆனால் இன்று அவர்களே  சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளார்கள். நாட்டு மக்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு தொடர்பில் பேசுவற்கு இந்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உள்ளதா,

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விடயங்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிரயாணிகள்  என அனைத்து விடயங்களையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு  பயன்படுத்தினீர்கள். ஜனாதிபதி நிதியத்தின் நிதி பெற்றுக்கொண்டவர்களின் தனிப்பட்ட விடயங்கள் பற்றி பேசுனீர்கள்.

தனிப்பட்ட தரவுகள் முறையாக ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தரவுகளை தமது விருப்பத்துக்கு அமைய  நிர்வகிக்க முடியாது.

டிஜிட்டல் அடையாள அட்டை பற்றி பேசப்படுகிறது.  இதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தோம். இருப்பினும் ஆட்சி மாற்றத்தால்  அந்த திட்டம் நிறைவேறவில்லை. டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கத்துக்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்.

அரச சேவையாளர்களை திருடர்கள் என்றும் விமர்சிக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளியுள்ளது. விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல்  டிஜிட்டல் மயமாக்கலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் அதற்கான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குகிறோம்.

தரவு பாதுகாப்பு சட்டத்தால்  தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு  செல்லும் என்று  கடந்த காலங்களில் குறிப்பிட்டீர்கள்.இந்த குற்றச்சாட்டை தற்போது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்றார்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக அவர் இலங்கைக்கு வருகைதர அனுமதிக்கவேண்டாம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முடிவுக்கு வரவிருக்கும் பின்னணியில், தற்போது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகளை முறியடிப்பதற்கான கருவியாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகையை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு தாம் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் உள்ளக நீதிப்பொறிமுறையில் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சர்வதேச பொறிமுறையின் ஊடாக மாத்திரமே தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பூரண ஒத்துழைப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையைக் காலநீடிப்புச் செய்வதற்கும், இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விவசாயியை விடுவிக்கக் கோரியும், குருந்தூர் மலையில் நில அபகரிப்புகளை நிறுத்தக் கோரியும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் போராட்டம்

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால்  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பாக புதன்கிழமை (4) மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

திருகோணமலை: மீனவர்கள்மீது கடற்படை துப்பாக்கிச் சூடு!

Unknown 1 1 திருகோணமலை: மீனவர்கள்மீது கடற்படை துப்பாக்கிச் சூடு!

திருகோணமலை- குச்சவெளிப் பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இத் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மீனவர் ஒருவர் காயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.