இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரி கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவை தொடர்ந்து ஏற்பட்ட சரச்சைகளை அடுத்து, கட்சி உறுப்பினர்கள் சிலரால் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.
வழக்கு தொடர்ந்தவர்கள் சுமந்திரன் அணியினர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனினும், பகிரங்க மேடைகளில் சுமந்திரன் அதை மறுத்து வருகிறார். இந்தநிலையில், கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினரான ஜீவராசா (வட்டிக்கடை ஜீவன்) இன்று (05) யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவிடத்தின் முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வட்டிக்கடை ஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அணியை சேர்ந்தவர்.
இதேவேளை இந்த வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே நேற்றைய தினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது.
அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார் என்று பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்