Home Blog Page 130

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க தீர்மானம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார் ‘தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது’.

‘மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார்’.
அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா – சீனா இடையே உடன்பாடு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்காவும் சீனாவும் உடன்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன பிரதமர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினர்.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எங்களிடையேயான உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது” என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்க – சீன அதிகாரிகள் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் ட்ரம்ப் கூறினார். அதன்படி, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை லண்டன் நகரில் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய திகதி  நடந்தன.

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “கடந்த மாதம் ஜெனீவாவில் எட்டப்பட்ட ஒப்பந்தம், மூன்று இலக்கத்தை எட்டிய இருதரப்பு பழிவாங்கும் வரிகளை குறைக்க உதவியது. எனினும், முக்கியமான கனிம ஏற்றுமதிகளில் சீனா தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்ததால் ஜெனீவா ஒப்பந்தம் தடுமாறியது. இதனால், ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு குறைக்கடத்தி வடிவமைப்பு மென்பொருள், விமானங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது.

லண்டனில் தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம் சமீபத்திய அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் சிலவற்றை நீக்கும். ஒருமித்த கருத்தையும் இரு நாடுகளின் அதிபர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை செயல்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை நாங்கள் அடைந்துள்ளோம். நாங்கள் திரும்பிச் சென்று அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி இதை அங்கீகரிப்பதை உறுதிசெய்வோம். அதேபோல், அவர்கள் திரும்பிச் சென்று அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசி அவரது அங்கீகாரத்தை உறுதிசெய்வார்கள். அது அங்கீகரிக்கப்பட்டால், நாங்கள் தற்போது எட்டியுள்ள திட்டத்தை செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியும் இலங்கை தமிழரசு கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ் மக்கள் கூட்டணியும் இலங்கை தமிழரசு கட்சியும் உள்ளுராட்சிமன்ற சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் வைத்து இன்று (11) மாலை கையெழுத்திட்டுள்ளனர்.
யாழ். நல்லூர் பிரதேச சபையில் தமிழ் அரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், தமிழ் மக்கள் கூட்டணிக்கு 6 ஆசனங்களும் கிடைத்திருந்தது.

இந்தநிலையில், ஆட்சி அதிகாரத்தை முதல் இரு வருடங்கள் தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இறுதி இரு வருடங்கள் இலங்கை தமிழரசு கட்சிக்கும் வழங்கும் அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தை அடுத்து இலங்கையில் மின்கட்டணம் அதிகரிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தை அடுத்து இலங்கையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின்கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய விதிகளுக்கமையவே கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய திருத்தங்களின்படி, வீட்டு பாவனை பிரிவின் கீழ் 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மாதாந்த மின்கட்டணம் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் 60 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மாதாந்த மின்கட்டணம் 85 ரூபாவினாலும், 90 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மின்கட்டணம் 240 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மாதாந்தம் 90 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட வழிபாட்டுத் ஸ்தலங்களுக்கான மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரிவுகளின் கீழ் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்ததால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியிருந்தது.  அதனடிப்படையிலேயே அடுத்த கட்ட கடன் விடுவிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மின்கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து இனவெறி விமர்சனங்கள்: கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டனம்

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இனவெறி விமர்சனத் தாக்குதல்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன.
அத்துடன், இதுபோன்ற தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

கனேடிய தமிழ் கூட்டு, கனேடிய தமிழர்களின் தேசிய சபை மற்றும் தமிழ் உரிமைகள் குழு என்பனவே அமைச்சர் மீதான இனவெறி விமர்சனங்களை கண்டித்துள்ளன. இந்த விமர்சனங்கள், அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் தமிழ் கனேடியர்கள் மீது தவறான மற்றும் நியாயமற்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

கனேடிய தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் முரண்படாத திரையிடலை செயல்படுத்துமாறு, ஹரி ஆனந்தசங்கரி, அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்தே இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், இந்த முடிவு, மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே எடுக்கப்பட்டது என்று கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளதாக ரெலோ சாடல்

தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளதாக ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கு பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், வன்னியில் தமிழ் தேசிய கட்சிகளிடம் சபைகளை கையளிப்பது குறித்து திங்களன்று தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் அலுவலகத்தில் அந்த கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனுடன் சந்திப்பு இடம்பெற்றது.

அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றி கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையுமென தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்தார் என்று ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக அவர்கள் ஆசனங்களை பெற்றுள்ளார்கள்.

தமிழ் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்த சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு கால அவகாசம் உள்ளது.

அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம் என்பதையும் தெரிவித்தோம்.எனினும், அதற்கு தகுந்த பதில்கள் கிடைத்திருக்கவில்லை என்றும் ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியை கைப்பற்றுவதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

அதற்காக விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியமாகும்.
தலைமைகளின் வறட்டு கௌரவம் இதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனியை சென்றடைந்தார்!

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறவுள்ளது

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

பெண்கள் இறுக்கமான ஆடை அணிய சிரியாவில் கட்டுப்பாடு

பொது இடங்களில் பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கடற்கரைகள் மற்றும் நீச்சல்குளங்களுக்குச் செல்லும்போது புர்கா அல்லது முழு உடலையும் மறைக்கும் நீச்சலுடைகளை அணிய வேண்டும் என்று சிரியாவின் புதிய இஸ்லாமிய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிரியாவில் ஆட்சியில் இருந்த பஷார் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதை அடுத்து அஹமது அல் ஷரா தலைமையிலான இடைக்கால இஸ்லாமிய அரசு கடந்த டிசம்பரில் ஆட்சிப் பொறுப்பேற்றது.

இடைக்கால அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன நிலையில், தற்போது ஆடைக்கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அதிபர் அஹமது அல் ஷரா ஒப்புதலுடன் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கடற்கரைகளுக்குச் செல்லும் பெண்கள் புர்கா அல்லது உடலை மறைக்கும் பிற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நீச்சல் குளங்கள் தவிர்த்த பொது இடங்களில், பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்கும்படியான ஆடைகளை அணிய வேண்டும். ட்ரான்ஸ்பரண்ட் ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஆண்கள் மேலாடையின்றி இருக்க அனுமதி இல்லை. அதேநேரத்தில், ஆடம்பரமான தனியார் கடற்கரை கிளப்புகள் மற்றும் இடங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகள் பதிவாகி உள்ளன. ஷாசா என்ற சிரிய பெண் ஒருவர், “அரசின் இந்த உத்தரவு சிரியர்களின் தனிப்பட்ட சுதந்திரங்கள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. சிரியா ஒரு மிதவாத மற்றும் திறந்த நாடு. அது கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவருக்கும் இடமளிக்க வேண்டும். புதிய உத்தரவு குறித்து அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், யஹ்யா கபிஷோ என்ற நபர் புதிய விதிகளுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். இது சிரிய சமூகத்தின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டிய கடமையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

மட்டு. மாநகர சபையின் 8வது முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு

மட்டக்களப்பு மாநகர சபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதனும் பிரதி முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த வைரத்து தினேஸ்குமாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவுசெய்வதற்கான அமர்வு இன்று (11) காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.

இதன்போது முதல்வரை தெரிவுசெய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய, வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்து, பிரதி முதல்வருக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டபோது மாநகர சபை உறுப்பினர் வை.தினேஸை பிரதி முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் து.மதன் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் மீரா சாஹிபு ஆயிசா உம்மா வழிமொழிந்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்னுமொரு தெரிவாக முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலனை சுயேட்சைக் குழு உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமார் முன்மொழிய வி.சசிகலா வழிமொழிந்தார்.

அதன் பிரகாரம் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு  நடத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் வாக்கெடுப்பு இரகசிய முறையிலா, பகிரங்க முறையிலா என்பதற்கான உறுப்பினர்களின் விருப்பு கோரப்பட்டது.

அதன் பிரகாரம், 22 உறுப்பினர்கள் பகிரங்க வாக்களிப்புக்கு விருப்பு தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் பிரதி முதல்வருக்கான வாக்கெடுப்பு பகிரங்க முறையில் நடத்தப்பட்டது.

அந்த வகையில் வை.தினேஸுக்கு ஆதரவாக 18 வாக்குகளும், க.சத்தியசீலனுக்கு ஆதரவாக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. அதன்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 12 பேர் நடுநிலைமை வகித்தனர்.

அதன்படி மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிவம் பாக்கியநாதன் மற்றும் பிரதி முதல்வராக வை.தினேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இன்றைய அமர்வுக்கு பார்வையாளர்கள் அரங்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிஸ்தர்களும் வருகைதந்திருந்ததை காணமுடிந்தது.

சபை அமர்வினை தொடர்ந்து முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றதுடன் அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வாழ்த்து தெரிவித்ததை காணமுடிந்தது.

ஜேர்மனிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பயணம்

ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜேர்மனியின் ஜனாதிபதி, கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடுகள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இருநாட்டினதும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் புதிய வழிகள் தொடர்பபிலும் கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் ஜேர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்தில் இலங்கையின் பொருளாதார மாற்றம், முதலீட்டு வாய்ப்புகள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் வலிறுத்தவுள்ளார்.

மேலும், இந்த பயணத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் தொழில் சங்கங்கள் பிரதிநிதிகளையும் அங்கு வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.