Home Blog Page 129

தென்னிலங்கை இனவாதிகளால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: மக்கள் போராட்ட முன்னணி

கடந்த பொசன் போயா தினத்தில் தென்னிலங்கை இனவாதிகள் தையிட்டி விகாரைக்கு வந்ததாகவும் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் இன்று (12) வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
‘மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவும். தாமதிக்காமல் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும்’. கடந்த ஜூன் 10ஆம் திகதி அன்று பொசன் நிகழ்வு எனும் போர்வையில் தையிட்டிக்கு வந்தவர்கள் யார் என்பதை நான் அனைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்களக் கடும் போக்கு தேசிய வாத சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளரே அங்கு வந்திருந்தார்கள். பொதுபலசேன ராவண பலய போன்ற கடும்போக்குத் தேசியவாத அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களே இவர்கள்.

தொடர்ச்சியாக அமைதியான முறையில் நாங்கள் செய்யும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பியிருக்கின்றார்கள்.விளக்குகளை காலால் தட்டி இருக்கின்றார்கள். மாலைகளை கிழித்து எறிந்திருக்கின்றார்கள். நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வரும் என்று நேரடியாக மிரட்டி இருக்கின்றார்கள் என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்டவர்களை 10ம் திகதி முழுமையான காவல்துறை பாதுக்காப்புடன் வரவேற்று தையிட்டியின் சட்டவிரோத விகாரையினுள் வைத்திருந்தார்கள். இந்த காடையர் கூட்டம் உள்ளேயும் காணிகளைத் தொலைத்தவர்கள் வெளியே வெயிலில் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இங்கு வழிபட வரவில்லை, எமது கடந்தகால அனுபவ அடிப்படையில் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்தே அதிகம்.

இவர்களைப் போன்றவர்கள் தங்கள் இனவாதத் தேவைக்கு இந்தப் போராட்டத்தை பயன்படுத்துவார்கள் என நன்கு அறிந்த அரசாங்கம் இதற்கு எந்த தீர்வையும் முன்வைக்காது அமைதியாகவுள்ளது என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்புவதாக கந்தசாமி பிரபு சாடல்

வடக்கு, கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக தையிட்டி விகாரையை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்தி குழப்புகின்ற செயற்பாட்டு அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இன மொழி வேறுபாடுகள் கடந்து இன ஜக்கியத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் ஆனாலும் சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்புக்காக பல தரப்பட்ட குழப்புகின்ற செயற்பாட்டை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தி வருகின்றனர்

விசேடமாக தையிட்டி விகாரை தொடர்பான குழப்ப நிலையை அவதானித்தால் போயா தினத்தில் மட்டும் அந்த விகாரை தொடர்பான ஞாபகம் ஏற்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.அதை கொண்டு இன்று மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் வாதிகள் தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக இந்த அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

பிரகீத் எக்னெலிகொட கொலை விசாரணையில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சம்மி குமாரரத்ன கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல் போனது தொடர்பான மேல் நீதிமன்ற விசாரணையில் முக்கிய சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபின்னர் இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஜனவரி 24 அன்று காணாமல் ஆக்கப்பட்டார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்கு தொடர்பாக, சட்டமா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்.
தற்போது அவர்களுக்கான விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் எக்னெலிகொட வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஸ் குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை மிரட்டியதாக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஆகியோர் முறையிட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற பிரிகேடியரின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அவர் மன்றில் முறையிட்டார்.

அத்துடன் 2025 ஜூன் 6 ஆம் திகதியன்று, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே தொலைபேசி எண்ணிலிருந்து சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்தநிலையில் சாட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் ஆராயப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளதை விசாரணைப் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விபத்தான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 200 பேர் பலி

Unknown 10 விபத்தான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 200 பேர் பலிஇந்தியா: குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்துள்ளனர். அதிலுள்ள பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுக்கல்லை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய கோர விபத்து இது.

இந்த விபத்து குறித்து அறிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, இது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது

பிரித்தானியாவின் எஸ்.ஏ.எஸ். இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – விசாரணை அறிவிப்பு

பிரித்தானியாவின் தனியார் ஆயுதப்படை நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட எஸ்.ஏ.எஸ். என்ற விசேட படை உள்ளிட்ட பிரித்தானிய படையினர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருவதாக பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், ‘முன்னதாக வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம், காவல்துறை விசாரணைகளுக்கு உதவியிருந்தாலும் இந்த விடயத்துடன் தொடர்புடைய மேலதிக தகவல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மோதலின் போதான போர்க்குற்றங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை தாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் கேத்தரின் வெஸ்ட் பதிலளித்துள்ளார்.

1980களில் இலங்கையில் செயற்பட்ட பிரித்தானிய படையினர் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, 2020 மார்ச் முதல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் லண்டனில் உள்ள தீர்ப்பாயம் ஒன்றில் சாட்சியமளிக்குமாறு குறித்த ஆயுதப்படையினர் வலியுறுத்தப்பட்ட போதும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அதனை தடுத்து நிறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த சூழ்நிலையிலேயே பிரித்தானிய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் பாராளுமன்றில் பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கையில் செயற்பட்ட காலப்பகுதியிலேயே எஸ்.டி.எஃப் என்ற விசேட அதிரடிப்படையை ஸ்தாபிக்கவும் பிரித்தானியாவின் எஸ்.ஏ.எஸ் சேவை நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க தீர்மானம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார் ‘தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது’.

‘மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார்’.
அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா – சீனா இடையே உடன்பாடு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்காவும் சீனாவும் உடன்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன பிரதமர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினர்.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எங்களிடையேயான உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது” என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்க – சீன அதிகாரிகள் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் ட்ரம்ப் கூறினார். அதன்படி, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை லண்டன் நகரில் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய திகதி  நடந்தன.

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “கடந்த மாதம் ஜெனீவாவில் எட்டப்பட்ட ஒப்பந்தம், மூன்று இலக்கத்தை எட்டிய இருதரப்பு பழிவாங்கும் வரிகளை குறைக்க உதவியது. எனினும், முக்கியமான கனிம ஏற்றுமதிகளில் சீனா தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்ததால் ஜெனீவா ஒப்பந்தம் தடுமாறியது. இதனால், ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு குறைக்கடத்தி வடிவமைப்பு மென்பொருள், விமானங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது.

லண்டனில் தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம் சமீபத்திய அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் சிலவற்றை நீக்கும். ஒருமித்த கருத்தையும் இரு நாடுகளின் அதிபர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை செயல்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை நாங்கள் அடைந்துள்ளோம். நாங்கள் திரும்பிச் சென்று அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி இதை அங்கீகரிப்பதை உறுதிசெய்வோம். அதேபோல், அவர்கள் திரும்பிச் சென்று அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசி அவரது அங்கீகாரத்தை உறுதிசெய்வார்கள். அது அங்கீகரிக்கப்பட்டால், நாங்கள் தற்போது எட்டியுள்ள திட்டத்தை செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியும் இலங்கை தமிழரசு கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ் மக்கள் கூட்டணியும் இலங்கை தமிழரசு கட்சியும் உள்ளுராட்சிமன்ற சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் வைத்து இன்று (11) மாலை கையெழுத்திட்டுள்ளனர்.
யாழ். நல்லூர் பிரதேச சபையில் தமிழ் அரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், தமிழ் மக்கள் கூட்டணிக்கு 6 ஆசனங்களும் கிடைத்திருந்தது.

இந்தநிலையில், ஆட்சி அதிகாரத்தை முதல் இரு வருடங்கள் தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இறுதி இரு வருடங்கள் இலங்கை தமிழரசு கட்சிக்கும் வழங்கும் அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தை அடுத்து இலங்கையில் மின்கட்டணம் அதிகரிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தை அடுத்து இலங்கையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின்கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய விதிகளுக்கமையவே கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய திருத்தங்களின்படி, வீட்டு பாவனை பிரிவின் கீழ் 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மாதாந்த மின்கட்டணம் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் 60 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மாதாந்த மின்கட்டணம் 85 ரூபாவினாலும், 90 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மின்கட்டணம் 240 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மாதாந்தம் 90 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட வழிபாட்டுத் ஸ்தலங்களுக்கான மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரிவுகளின் கீழ் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்ததால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியிருந்தது.  அதனடிப்படையிலேயே அடுத்த கட்ட கடன் விடுவிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மின்கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து இனவெறி விமர்சனங்கள்: கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டனம்

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இனவெறி விமர்சனத் தாக்குதல்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன.
அத்துடன், இதுபோன்ற தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

கனேடிய தமிழ் கூட்டு, கனேடிய தமிழர்களின் தேசிய சபை மற்றும் தமிழ் உரிமைகள் குழு என்பனவே அமைச்சர் மீதான இனவெறி விமர்சனங்களை கண்டித்துள்ளன. இந்த விமர்சனங்கள், அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் தமிழ் கனேடியர்கள் மீது தவறான மற்றும் நியாயமற்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

கனேடிய தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் முரண்படாத திரையிடலை செயல்படுத்துமாறு, ஹரி ஆனந்தசங்கரி, அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்தே இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், இந்த முடிவு, மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே எடுக்கப்பட்டது என்று கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.