Home Blog Page 128

பொன்மலைக்குடாவில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்குவின் தடையால் பதற்றம்…

WhatsApp Image 2025 06 13 at 12.39.46 1 பொன்மலைக்குடாவில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்குவின் தடையால் பதற்றம்...

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது.

குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றிருந்தது.

புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்மலைக்குடா பகுதியில் இன்று காலை ஆண் ஒருவர் சுகவீனமுற்று மரணமாகியிருந்த நிலையில் குறித்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த காணியில் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் ஜனாஸா அடக்கத்திற்கு எதிராக புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியினால்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் குறித்த ஜனாஸா நல்லடக்கத்தினை நிறுத்தக்கோரியும் புல்மோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு வந்த பிரதேச செயலாளரின் தடையீட்டினால் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

புல்மோட்டை பகுதியில் மக்களுடைய பெருமளவான காணிகளை பூஜா பூமி என்ற பெயரில் குறித்த பௌத்த பிக்கு ஆக்கிரமித்து வருவதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் இயல்புநிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி குறித்த பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்காக குழி  தோண்டப்பட்டபோது புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணி “பூஜா பூமி” என புல்மோட்டை பொலிஸார் சிலரை அப்பகுதிக்கு அனுப்பி ஜனாஸா நல்லடக்கத்தை தடை செய்திருந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் தோன்றியது. குறித்த விடயம் பிரதேச செயலாளர் உட்பட பலருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் குறித்த பகுதியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விமான விபத்து – அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை தெரிவிப்பு

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரின் ஆட்சியைத் தனதாக்கியது தமிழரசுக் கட்சி: முதல்வராக மதிவதனி தெரிவு!

யாழ்.மாநகர சபையின் முதல்வராக  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி  தெரிவு செய்யப்பட்டார்.
யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13)யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விவேகனந்தராசா மதிவதனியும் அகில இலங்க்சி தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும்  கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை முன் போராட்டம்

புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து  வெள்ளிக்கிழமை (13) யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இது குறித்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரே ஒரு புற்றுநோய் வைத்தியசாலையாகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது வைத்தியசாலை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது.

ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், வைத்தியர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

”இதனால்தான் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” – விமான விபத்து குறித்து அமித்ஷா!

”விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. இதனால் விபத்தின்போது வெப்பம் அதிகரித்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இறந்தவர்களை அடையாளம் காண உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித்ஷா, காயமடைந்தவர்கள் குணமாகத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம்  ”30 நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது.”  என  விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்  தெரிவித்துள்ளார்.

”ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சுமார் 30 விநாடிகளில் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரிய சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் விபத்துக்குள்ளானது” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபரான 40 வயதான விஸ்வாஸ் குமார்.

”நான் எழுந்தபோது, என்னைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடந்தன. எனக்குப் பயமாக இருந்தது. நான் வெளியேறியபோது, என்னைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் கிடந்தன.” எனத் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் அஜய்யும் தன்னுடன் பயணித்ததாக தெரிவித்துள்ள விஸ்வாஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் இந்தியரான விஸ்வாஸ் விடுமுறைக்கு அகமதாபாத் வந்து திரும்பும்போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்பு : சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் நடைபெறவிருக்கும் ‘மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை’ மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் கௌரவ அதிதியாகப் பங்கேற்கவுள்ளார்.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன இணைந்து நடாத்தவுள்ள இம்மாநாடானது பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், கடன்மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தல், ஏனைய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை ஆராய்தல் என்பவற்றைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருக்கும் கீதா கோபிநாத், இம்மாநாடு இலங்கையின் அனுபவங்கள் மற்றும் எதிர்வரும் சவால்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம் செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தென்னிலங்கை இனவாதிகளால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: மக்கள் போராட்ட முன்னணி

கடந்த பொசன் போயா தினத்தில் தென்னிலங்கை இனவாதிகள் தையிட்டி விகாரைக்கு வந்ததாகவும் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் இன்று (12) வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
‘மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவும். தாமதிக்காமல் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும்’. கடந்த ஜூன் 10ஆம் திகதி அன்று பொசன் நிகழ்வு எனும் போர்வையில் தையிட்டிக்கு வந்தவர்கள் யார் என்பதை நான் அனைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்களக் கடும் போக்கு தேசிய வாத சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளரே அங்கு வந்திருந்தார்கள். பொதுபலசேன ராவண பலய போன்ற கடும்போக்குத் தேசியவாத அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களே இவர்கள்.

தொடர்ச்சியாக அமைதியான முறையில் நாங்கள் செய்யும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பியிருக்கின்றார்கள்.விளக்குகளை காலால் தட்டி இருக்கின்றார்கள். மாலைகளை கிழித்து எறிந்திருக்கின்றார்கள். நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வரும் என்று நேரடியாக மிரட்டி இருக்கின்றார்கள் என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்டவர்களை 10ம் திகதி முழுமையான காவல்துறை பாதுக்காப்புடன் வரவேற்று தையிட்டியின் சட்டவிரோத விகாரையினுள் வைத்திருந்தார்கள். இந்த காடையர் கூட்டம் உள்ளேயும் காணிகளைத் தொலைத்தவர்கள் வெளியே வெயிலில் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இங்கு வழிபட வரவில்லை, எமது கடந்தகால அனுபவ அடிப்படையில் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்தே அதிகம்.

இவர்களைப் போன்றவர்கள் தங்கள் இனவாதத் தேவைக்கு இந்தப் போராட்டத்தை பயன்படுத்துவார்கள் என நன்கு அறிந்த அரசாங்கம் இதற்கு எந்த தீர்வையும் முன்வைக்காது அமைதியாகவுள்ளது என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்புவதாக கந்தசாமி பிரபு சாடல்

வடக்கு, கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக தையிட்டி விகாரையை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்தி குழப்புகின்ற செயற்பாட்டு அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இன மொழி வேறுபாடுகள் கடந்து இன ஜக்கியத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் ஆனாலும் சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்புக்காக பல தரப்பட்ட குழப்புகின்ற செயற்பாட்டை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தி வருகின்றனர்

விசேடமாக தையிட்டி விகாரை தொடர்பான குழப்ப நிலையை அவதானித்தால் போயா தினத்தில் மட்டும் அந்த விகாரை தொடர்பான ஞாபகம் ஏற்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.அதை கொண்டு இன்று மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் வாதிகள் தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக இந்த அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

பிரகீத் எக்னெலிகொட கொலை விசாரணையில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சம்மி குமாரரத்ன கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல் போனது தொடர்பான மேல் நீதிமன்ற விசாரணையில் முக்கிய சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபின்னர் இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஜனவரி 24 அன்று காணாமல் ஆக்கப்பட்டார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்கு தொடர்பாக, சட்டமா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்.
தற்போது அவர்களுக்கான விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் எக்னெலிகொட வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஸ் குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை மிரட்டியதாக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஆகியோர் முறையிட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற பிரிகேடியரின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அவர் மன்றில் முறையிட்டார்.

அத்துடன் 2025 ஜூன் 6 ஆம் திகதியன்று, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே தொலைபேசி எண்ணிலிருந்து சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்தநிலையில் சாட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் ஆராயப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளதை விசாரணைப் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விபத்தான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 200 பேர் பலி

Unknown 10 விபத்தான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 200 பேர் பலிஇந்தியா: குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்துள்ளனர். அதிலுள்ள பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுக்கல்லை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய கோர விபத்து இது.

இந்த விபத்து குறித்து அறிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, இது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது