Home Blog Page 123

பிரதமர் ஹரிணி IMF- ன் பிரதி முகாமைத்துவ இடையே சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை திங்கட்கிழமை (16) அலரி மாளிகையில் சந்திதுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் ஹரிணி அமர் சூரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்திடம்,

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் செல்லும்போது, சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை நான் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவிடம்,

கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையுடனான மற்றும் செயற்திறமான அணுகுமுறையை கலாநிதி கோபிநாத் பாராட்டியதுடன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் அரசாங்கத்தின் முயற்சிகளில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் மீளக் கட்டியெழுப்புவதிலும் நாடு எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களையும் அவர் விசேடமாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த சட்டகம், இலங்கையை போலவே நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் கலாநிதி கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு

இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு, உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டுமே ஈரான் இராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவர் முகமது கசேமி உள்பட 4 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர்.

சமீபத்திய நிலவரப்படி, ஈரானில் 220-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன. ஈரானில் உயிரிழந்தோரில் 90% பேர் அப்பாவி பொதுமக்களாவர். அடுத்ததாக, அணு ஆயுதங்கள் பற்றி ஈரான் பேசுகிறது. ஈரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமல்லாது புவி அரசியலில் திகைக்க வைக்கும் திருப்பங்களை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் – ஈரான் மோதலினால் ஏற்பட்ட சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் குறித்த தொகுப்பு இது.

இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஈரான் அடுத்தடுத்து இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியது. ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்தும் ஏவுகணைகள் பாய்ந்தன. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. ஏவுகணைகள் மோதல் சத்தமும், நெரும்பும் அதிகாலையில் டெல் அவிவை உலுக்கியது. சிறிது நேரத்தில் டெல் அவிவ் நகரின் மீது கரும்புகை சூழ்ந்தது. டெல் அவிவ் மட்டுமல்லாது இஸ்ரேலின் ஜெருசலேம், பெட்டா டிக்வா நகரங்களையும் ஈரான் ஏவுகணைகள் தாக்கின.

அடுத்தடுத்த தாக்குதல்களால், திங்கள்கிழமை காலை இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள் நுழைந்து மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டது.

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதி வணக்க நிகழ்வு

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும் கல்விசார் ஆசிரியருமான பால பண்டிதர்வீ ரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதிக் கிரிகைகள் இன்று (16) இடம்பெற்றன உடல்நல குறைவால் நேற்று முன்தினம் (14) அவர் காலமானார்.

அவர் வடமராட்சி புலோலியில் 1942 ஆம் ஆண்டு வீரகத்திபிள்ளை பார்வதி பிள்ளை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.கலை இலக்கிய துறையிலும் கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் பாடல் ஆசிரியராகவும் பல பட்டங்களை பெற்றிருந்த இவர் மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி, போடு போடு வீர நடை போடு, நெஞ்சினிலே நெருப்பேந்தி வாருங்கள், தம்பிகளே அன்பு தங்கைகளே போன்ற தாய எழுச்சி பாடல்களையும் எழுதி இருந்தார்.

அவரின் புகழுடல் புலோலி தெற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் உள்ள மாமறவர் மணிமண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி வணக்க அஞ்சலியை தொடர்ந்து இன்று (16) தகனம் செய்யப்பட்டது.

மன்னாரில் இணைந்து சபை அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி முன்வர வேண்டும் : சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயல்பட இலங்கை தமிழரசுக் கட்சியுடன்  ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி இணைந்து சபை அமைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன்  சார்ந்து செயல்படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது. எனவே ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன் வருவார்கள் என நம்புவதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகளை அமைக்கும் நடவடிக்கைகள் உள்ளுராட்சி ஆணையாளரினால் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் 5 சபைகளுக்கான தவிசாளர்களை தெரிவு செய்கின்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் நோக்கம் தமிழ் கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆகும். அதன் மூலம் சபைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாங்கள் செயல்பட்டு இருந்தோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் போது கூட மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக வீட்டுச் சின்னத்தில் தமிழரசுக் கட்சியும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் போட்டியிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் ஒரு இனக்கப்பாடு ஏற்பட்டு இருந்தது. ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்கள் எடுக்கின்ற கட்சிக்கு மற்றைய கட்சி ஆதரவு வழங்குவதாக இனக்கப்பாடு ஏற்பட்டது.
அதனடிப்படையில் மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கை தமிழரசு கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் மாந்தை மேற் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவில் முதல் 2 வருடம் தமிழரசுக் கட்சிக்கும் அடுத்த 2 வருடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் வழங்குவது என இரு தரப்பினருக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
மாந்தை மேற்கில் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் இருக்கின்ற காரணத்தினால் எங்களுக்கு முதல் 2 வருடங்களை வழங்க கோரிக்கை விடுத்தோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் யோசித்து விட்டு கூறுவதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் இன்று வரை எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை என்று வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

குறித்த மூன்று சபைகளுக்குமான தவிசாளரை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம். நானாட்டான் பிரதேச சபை குறித்து கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டின் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக ஆசனம் பெற்ற சபைகளில் தமிழ் கட்சிகள் முன் வந்து நிபந்தனையற்ற வகையில் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை முதல் 2 வருடங்கள் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய 2 வருடங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் வழங்க இலங்கை தமிழரசு கட்சி தயாராக இருக்கிறது என்றும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை பாதிப்பு : வொல்கர் ரெக் எச்சரிக்கை

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வொல்கர் ரெக் எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமீபத்தைய வரிகள் குறித்தே அவர் தமது உரையில் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகப் போரின் அதிர்ச்சிகள் மூன்றாம் உலக நாடுகளை சுனாமியின் வலுவோடு தாக்கும் என வொல்கர் ரெக் தெரிவித்துள்ளார். கரீபியன் நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் போன்ற ஏற்றுமதி தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பெரும் பேரழிவு பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் வொல்கர் ரெக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், வடக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அத்துடன், செம்மணி சிந்துபாத்தி மனித புதைக்குழி விடயம் மூடி மறைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அந்தப் பகுதியினை பார்வையிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதன்படி, மாநகர முதல்வராக வ்ராய் காலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 61 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சரூக் 54 வாக்குகளை பெற்றார்
இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (16) முற்பகல் 9.30 க்கு ஆரம்பமானது.
எனினும், இந்த அமர்வில் முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட வேண்டுமா? இரகசியமாக நடத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து இரண்டு தரப்புக்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இறுதியில், முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை இரகசிய வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தீரமானிக்கப்பட்டது. இதனையடுத்து, மேல் மாகாண ஆணையாளர். மாநகர சபை உறுப்பினர்கள் 117 பேரின் பெயர்களையும் வாசித்தார்

அதனடிப்படையில், உறுப்பினர்கள் தமது இரகசிய வாக்கை பதிவு செய்தனர்
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் பிரதி முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டமைக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கண்டனம்

கனடாவின் பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கனேடிய தமிழர் தேசிய அவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் ஜூன் 15 அன்று இடம்பெற்றமை குறித்து கனேடிய தமிழர் தேசிய அவை தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது’.

‘தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘மே 27ம் திகதி இரவும் இவ்வாறான வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன’.

வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கண்டிக்கப்பட வேண்டிய இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் தமிழ் இனப்படுகொலையின் போது பலியானவர்களின் நினைவுகளை அவமதிப்பதுடன், பன்முகத்தன்மையை கொண்ட கனேடிய சமூகத்திற்கு அடித்தளமாக உள்ள உண்மையின் மதிப்புகள், நல்லிணக்கம் போன்றவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் ஆதரவுடன் வவுனியா மாநகரசபையை கைப்பற்றிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

வவுனியா மாநகரசபையின் முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சு.காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களும், இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களுமாக 11 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். எதிர்த்து போட்டியிட்ட ஜேவிபி உறுப்பினர் 10 வாக்குகளை பெற்றார்.

வவுனியா நகரசபை மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் அதன் முதலாவது முதல்வராக காண்டீபன் பதவியேற்றுள்ளார். இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் தங்களின் தரப்பு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? : கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர்,பதில் முதல்வர் தெரிவுகள் திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர் முதல்வராகவும், பிரதி முதல்வராக ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு 11 ஆசனங்கள் தேவை.

அந்தவகையில் சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ்கட்சிகளினால் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.

அதற்கமைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட நான்கு ஆசனங்களும்,  தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட மூன்று ஆசனங்கள், ஜக்கியமக்கள் சக்தியின் இரண்டு ஆசனங்கள், ஜனநாயக தேசிய கூட்டணியின் ஒரு ஆசனம், அகில இலங்கை தமிழ்காங்கிரஸின் ஒரு ஆசனம் என 11ஆசனங்கள் கைவசம் உள்ளது.

எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் தெரிவுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும்,ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக பெயரிடப்படவுள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக பெயரிடப்படவுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கூட்டுக்கு ஆட்சி அமைக்கத்தேவையான 11ஆசனங்கள் உறுதியாகியுள்ள நிலையில்  நாளை எதிர்பார்க்கப்பட்ட படி இந்தக்கூட்டே ஆட்சியமைக்கும் என நம்பப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்: அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரானில்  இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்​ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர்.

அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் திகதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஈரானின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், இராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான்   அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடிதத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டால் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப், வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தினால், எங்கள் முழுபலத்தோடு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம். மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்கும். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். நைல் நதி விவகாரத்தில் எகிப்து – எத்தியோப்பியா இடையே சமரசம் ஏற்படுத்தினேன். அதேபோல, இஸ்ரேல் – ஈரான் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எங்களால் முடியும். இஸ்ரேல் – ஈரான் இடையே பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. மத்திய கிழக்கை மீண்டும் வலுப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.