Home Blog Page 120

மன்னாரில் பாடசாலை மாணவி மீது இராணுவ சிப்பாய் பாலியல் தொந்தரவு

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிப்பாயை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று புதன்கிழமை (18) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி மடு பகுதியில் இருந்து அரச பேருந்தில் பாடசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் குறித்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு  செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவி முருங்கன்  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன்  காவல்துறையினர் இராணுவ சிப்பாயியை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினர்.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எந்தவொரு நாட்டின் தன்னாதிக்கத்துக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் சீனா செயற்படாது என்றும் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு வேளையின்போது, டில்வின் சில்வா குறிப்பிடுகையில்,

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் ஒருபடி உறுதிபெற்றுள்ளதாகவும், அதைப்போலவே, நான் உட்பட எமது தோழர்கள் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சீனாவில் மேற்கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில் சீனாவை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் தலைவர் மாவோ சே துங் தொடக்கம் நிகழ்கால தலைவர் ஷீ ஜின் பிங் வரை சீனாவில் செயற்பட்டு வரும் விதம் பற்றி தாம் மகிழ்ச்சியடைவதாகவும் சீனா தமக்கே உரித்தான பாணியில் மார்க்சிஸத்தை முன்னோக்கி கொண்டுசெல்வது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார்.

மேலும், பாடசாலைகள் மற்றும் ஊர்களை கட்டியெழுப்புவதற்காக கட்சியானது செயற்பட்டுள்ள விதம் பற்றியும் கல்வியில் பெற்றுக்கொண்ட அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும் என்பதையும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

காஸாவில் உதவி பெறச் சென்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 45 பேர் பலி!

காஸாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் உதவிகள் பெறச் சென்ற மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ”முதலில் இஸ்ரேலின்  ஆளில்லா விமானங்கள்,  மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. சில நிமிடங்களில், அந்நாட்டின் டாங்கிகள் பல குண்டுகளை வீசி அங்குள்ளவர்களை கொன்றன” என காசா சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் இராணூவம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் எரிபொருள் நிலையங்களில் இன்றும் தொடர்ந்தது வரிசை!

வடக்கு மாகாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று பரப்பப்பட்ட போலித் தகவல்கள் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் நேற்றுமுன்தினம் இரவிரவாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து எரிபொருளை நிரப்பத் தொடங்கினார்கள். இந்த நிலை இன்றும் தொடர்கிறது.

இதேவேளை, நேற்று யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல் வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் எரிபொருள் வரிசைகளை அவதானிக்கமுடிந்தது.

செம்மணிப் புதைகுழி விவகாரம் நீதி நிலைநாட்டப்படவேண்டும்: யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழுத்தம்!

செம்மணிப்புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது- இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-

இலங்கையில் இனமுரண்பாடு தோன்றிய பின்னர் சிறுபான்மையின மக்கள் பல வழிகளிலும் பாதிப்புகளை எதிர் கொண்டனர். அவ்வப்போது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனக்கலவரங்களால் சிறுபான்மையினத்தவர் குறிப்பாகத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாகக் கொல்லப்பட்டதுடன் பெறுமதி மிக்க சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

இனமுரண்பாடு என்பது உருமாற்றம் பெற்று ஆயுதப் பிணக்காக மாற்றமுற்ற போது பல்வேறு வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. படுகொலைகள். சந்தேகத்தின் பெயரிலான கைதுகள், காலவரையறையற்ற தடுப்புகள், விசாரணையற்று அல்லது விசாரணை முடிவுறுத்தப்படாது திட்டமிட்டு இழுத்தடிப்புச் செய்யப்பட்ட சிறைவாசம், காணாமலாக்கப்படுதல் என்றவாறாக அடக்குமுறைகளின் வடிவங்கள் நீண்ட பட்டியலைக் கொண்டன.

தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்கு முறைகளில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயங்களாக இன்று வரையும் இருப்பவை சட்டத்தின் பிடியால் இறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பும் காணமால் போனவர்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையுமே. இவற்றுள்ளும் அதிக வலியையும் வேதனையையும் தருபவை காணாமலாக்கபட்டவர்களின் கதைகளே. இவ்வாறானதொரு விடயப்பரப்பாக செம்மணிப் புதைகுழி விவகாரமும் விளங்குகின்றது. ஆயினும் தொடர்ந்தும் கைவிடப்படும் விடயமாக இனியும் இது மாறிவிடக்கூடாது எனும் அக்கறையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் வலுவாகப் பதிவு செய்கின்றோம்.

இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்த போது காணமால் ஆக்கப்பட்ட பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்பது தெரியாத அவலநிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும் நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர்கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

போருக்குப் பின்னரான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத்தாலும் அவை ஏதோவொரு விதத்தில் வெளிக்கிளம்பிய வண்ணமேயுள்ளன. செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரியவகையில் முன்கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த நிலை வலுவாக்கப்படவேண்டும் என்பதுடன் புதை குழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது. உரிய நிதியை உரிய காலத்தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது. இவ்விடயங்களில் எந்தவித நெகிழ்வுமற்று செயற்படவேண்டிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்குரியது – என்றுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு: பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கே சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கையைப் பாதிக்கும் பலகாரணிகள் உள்ளன. முக்கியமானது எரிபொருள் விலை அதிகரிப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஏற்கனவே பத்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தப் போர் பிராந்திய ரீதியாக பரவினால், இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியை மோசமாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலைமை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீது மிகவும் எதிரமறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வேலை, பாதுகாப்பு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன கடுமையாகப் பாதிப்படையும் – என்றார்.

சர்வதேச வர்த்தகப் போரால் இலங்கைக்குப் பெரும் பாதிப்பு!

சர்வதேச வர்த்தகப்போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதித் தொழிற்றுறை பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 59ஆவது அமர்வின் ஆரம்ப உரையிலேயே அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் அண்மைய வரிகள் தொடர்பாகவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர், வர்த்தகப் போரின் அதிர்ச்சிகள் மூன்றாம் உலக நாடுகளை சுனாமியின் வலுவோடு தாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கரீபியன் நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா. வியட்நாம் போன்ற ஏற்றுமதி தொழிற்றுறையை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பெரும் பேரழிவுப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி

வடக்­கிலும், கிழக்­கிலும், அரச படைகள், பௌத்த தேரர்கள் மற்றும் கட்­ட­மைப்­புக்கள், வன பாது­காப்பு திணைக்­களம், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­களம், தொல்­பொ­ரு­ளியல் திணைக்­களம், மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை உள்­ளிட்ட அரச நிறு­வனக் கட்­ட­மைப்­புக்கள் ஏட்­டிக்குப் போட்­டி­யாக காணி­களை கப­ளீ­கரம் செய்து வரு­கின்­றமை தொடர்­க­தை­யா­கவே இருக்­கின்­றன.
அவ்­வா­றான நிலையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள ‘காணி நிர்­ணயக் கட்­டளைச் சட்­டத்தின் 4ஆம் பிரி­வுக்கு அமை­வாக மார்ச் 28ஆம் திக­தி­யி­லி­ருந்து மூன்று மாதங்­க­ளுக்குள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள காணிகள் குறித்த உரித்­துக்கள் உறுதி செய்­யப்­ப­டா­த­வி­டத்து கட்­ட­ளைச்­சட்­டத்தின் (5)1இற்கு அமை­வாக அரச காணி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு அவை­பற்றி நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்’ என்ற வர்த்­த­மா­னியில் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள காணி­களை உற்று நோக்­கு­கின்­ற­போது தற்­போ­தைய அர­சாங்­கத்தின் சூட்­சு­ம­மான மற்­றொரு நோக்­கத்­தையும் இல­கு­வாக அடை­யாளம் கண்­டு­கொள்ள முடியும். அந்த நோக்கம் தமிழ் மக்­களின் இருப்­பையும், வாழ்­வா­தா­ரத்­தையும் சிதைக்கும் அதி­ப­யங்­க­ர­மா­னதும் கூட.
வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம், முல்­லைத்­தீவின் கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் உள்ள அம்­ப­லவன் பொக்­கனை, முள்­ளி­வாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு, கிரா­ம­சேவர் பிரி­வு­களும், கிளி­நொச்சி மாவட்­டத்தின் பச்­சி­லைப்­பள்­ளியில் உள்ள கரை­யோர கிரா­மங்கள், யாழ்ப்­பாணம் மரு­தங்­கே­ணியில் உள்ள கரை­யோரக் கிரா­மங்கள் மற்றும் மன்னார் முசலி பிர­தேச செய­லாளர் பிரிவில் உள்ள அரு­வி­யாற்றின் ஒரு­ப­கு­தியைச் சேர்ந்த கிரா­மங்கள் அடை­யா­ள­மி­டப்­பட்­டுள்­ளமை அனை­வரும் அறிந்­தி­ருக்கும் விடயம்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பகு­திகள் போரின் கோரத்­துக்கு உள்­ளா­னவை. அங்கு மக்கள் தொகை குறைவு. மீள்­கு­டி­யேறி இருப்­ப­வர்கள் கூட உரிய ஆவ­ணங்­களை வைத்­தி­ருப்­பார்­களா என்­பது சந்­தேகம் தான். இத­னை­வி­டவும் மேற்­படி பகு­தி­களில் வாழ்ந்­த­வர்கள் புலம்­பெ­யர்ந்தும் இருக்­கின்­றார்கள். அவர்கள் அடுத்த மூன்று மாதங்­க­ளுக்குள் தங்­களின் காணி உரித்தை உறு­திப்­ப­டுத்­து­வது என்­பது காணல் நீரான விடயம்.
ஆகவே, அடை­யா­ள­மி­டப்­பட்ட காணி­களை நிச்­சயம் கைய­கப்­ப­டுத்த முடியும் என்ற பெரு நம்­பிக்கை அர­சாங்­கத்­துக்கு நன்­றா­கவே உள்­ளது என்­பதை முதலில் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
அவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தின் சூட்­சு­மத்­திட்­டத்தை முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் கரைத்­து­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரி­வி­லி­ருந்து ஒவ்­வொன்­றாக நோக்­கினால் அடை­யாளம் காண்­ப­தற்கு இல­கு­வாக இய­லு­மா­ன­தாக இருக்கும்.
கரைத்­து­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் 72கிலோ­மீற்றர் நீள­மான ஆழ்­க­டலை அடி­யொற்­றிய கடற்­கரை நிலங்கள் காணப்­ப­டு­கின்­றன. அம்­ப­ல­வன்­பொக்­கனை கிராம சேவகர் பிரிவின் சாலை கிரா­மத்­தி­லி­ருந்து வட்­டு­வாகல் வரையில் 21 கிலோ­மீற்­றர்­களும், வட்­டு­வா­கலில் இருந்து கொக்­குத்­தொ­டுவாய் வரையில் 51 கிலோ­மீற்­றர்­களும் உள்­ளன.
இதற்குள் அம்­ப­லவன் பொக்­கனை, சாலை, புது­மாத்­தளன், வலை­ஞர்­மடம், கரை­யா­முள்­ளி­வாய்க்கால், வெள்­ள­முள்­ளி­வாய்க்கால் உள்­ளிட்ட கரை­யோரக் கிரா­மங்­களும் உள்­ள­டக்­கு­கின்­றன. ஏற்­கெ­னவே 2007ஆம் ஆண்டு வெளி­யான மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் கொக்­கு­கிளாய் முதல் வட்­டு­வாகல் வரை­யி­லான பகுதி நீட்­டிக்­கப்­பட்ட ‘மகா­வலி எல்’ வல­யத்­துக்குள் வலிந்து உட்­பு­குத்­தப்­பட்­டுள்­ளது.
அவ்­வாறு இருக்­கையில் எஞ்­சி­யி­ருக்­கின்ற ஆழ்­க­டலை மையப்­ப­டுத்­திய கடற்­கரை காணி­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் நடை­மு­றை­யா­கின்­ற­போது,  முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் காணப்­ப­டு­கின்ற 72 கிலோ­மீற்றர் நீள­மான ஆழ்­கடல் கடற்­ப­ரப்பைக் கொண்ட நிலங்கள் மத்­திய அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டுக்குள் நேர­டி­யாகச் சென்­று­விடும்.
அடுத்­த­தாக, தமிழ் மக்­களின் தாயகக் கோட்­பாட்டை வர­லாறு நெடு­கிலும் அடை­ய­வி­டாது தடுப்­ப­தற்­கா­கவே கொக்­குத்­தொ­டு­வாயில் கடற்­க­ரை­யோ­ர­மாக 213 தென்­னி­லங்­கையைச் சேர்ந்த பெரும்­பான்மை சிங்­கள குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்டு முல்­லைக்­க­டலில் சட்­ட­வி­ரோத மீன்­பிடி முறை­மைகள் உட்­பட ‘தாரா­ள­மாக’ கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­வ­தற்­கான வச­திகள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. கடற்­ப­டையும் அதற்­கான ‘முழு­மை­யான ஒத்­து­ழைப்பை’ வழங்­கி­வ­ரு­கின்­றது.
அப்­ப­டி­யி­ருக்­கையில், எஞ்­சிய ஆழ்­க­டலை மையப்­ப­டுத்­திய கடற்­கரைக் கிரா­மங்­களின் நிலங்­களை அர­சு­ட­மை­யாக்­கு­வதன் மூல­மாக மேலும் திட்­ட­மிட்ட தென்­னி­லங்கை சிங்­களக் குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஏது­நி­லை­மை­களை இல­கு­வாக உரு­வாக்க முடியும். அத்­தோடு தமி­ழர்­களின் தாயகக் கோட்­பாட்டை மட்­டு­மல்ல முல்­லைத்­தீவின் குடிப்­ப­ரம்­ப­லையும் மாற்­றி­ய­மைக்க முடியும். அதனை தற்­போ­தைய அர­சாங்­கமும் விரும்­பு­கின்­றது என்­ப­தற்கு வன்னி மாவட்­டத்­துக்கு பொறுப்­பாக இருக்கும் அமைச்சர் பிமல் ரத்­நா­யக்­கவின் தேர்­தல்­காலச் செயற்­பா­டுகள் சான்­று­ரைக்­கின்­றன.
முல்­லைத்­தீவின் கொக்­குத்­தொ­டு­வாயில் இருந்து கிளி­நொச்­சியின் பச்­சி­லைப்­பள்ளி, யாழ்ப்­பா­ணத்தின் மரு­தங்­கேணி வரையில் அடை­யா­ள­மி­டப்­பட்ட கரை­யோரக் காணிகள் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டால் ‘வட­பி­ராந்­தி­யத்தின் கிழக்கு கடற்­ப­குதி’ அர­சாங்­கத்தின் பூர­ண­மான கட்­டுப்­பாட்­டுக்குள் சென்­று­விடும்.
குறித்த பகு­திக்குள் ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்­களின் வாழ்­வா­த­ரத்தை பேணும் கடல்­வளம் கொழிக்கும் கடற்­ப­ரப்பைத் தாண்டி ‘கனிம வளங்கள்’ நிறைந்த கடற்­க­ரை­யோ­ரங்­களும் உள்­ளன என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது.
இத­னை­வி­டவும்,‘திரு­கோ­ண­ம­லை கொக்கிளாய்-கொக்­குத்­தொ­டு­வாய்-முல்­லைத்
தீ­வு-முள்­ளி­வாய்க்­கால்-அம்­ப­லன்­பொக்­க­னை- சா­லை-சுண்­டிக்­கு­ளம்-ம­ரு­தங்­கேணி-ப­ருத்­தித் துறை’ வரையில் கடற்­க­ரையை அண்­மித்­ததாக தரை­வழி வீதி­யொன்றை அமைப்­ப­தற்­கான திட்டம் வீதி அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்­திடம் உள்­ளது.
பருத்­தித்­து­றையில் இருந்து திரு­கோ­ண­மலை வரை­யி­லான இந்த வீதி­ய­மைப்பு திட்டம் தற்­போது கிடப்பில் இருந்­தாலும் போரின் பின்­ன­ரான சூழலில் கொக்­குத்­தொ­டு­வா­யி­லி­ருந்து புல்­மோட்­டைக்கு பாலம் அமைக்கும் திட்­டத்­துக்கு சமாந்­த­ர­மாக ‘இந்­திய’ தரப்­புக்­களால் ஒரு­சில சந்­தர்ப்­பங்­களில் விருப்­புடன் சீர்­தூக்கிப் பார்க்­கப்­பட்­டது. கள­வி­ஜ­யங்­களும் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.
அப்­ப­டி­யி­ருக்­கையில், தமிழ் மக்­களின் தாயகக் கோட்­பாட்­டுக்கும், இலங்கை, ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இணைந்த வடகிழக்­குக்கும் முழு­மை­யான எதிர்­நி­லைப்­பாட்டில் உள்ள ஜே.வி.பி. தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சியில் அமர்ந்­தி­ருக்­கி­றது. ஆகவே தான் பருத்­தித்­துறை, திரு­கோ­ண­மலை கரை­யோர வீதித் திட்­டத்­தினை அடை­யா­ள­மின்றி சிதைப்­ப­தற்கு ‘காணி’ சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்­கையை திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கின்­றது என்­பதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை.
அதே­நேரம் மன்­னாரில் அரு­வி­யா­றுக்கு அண்­மித்த பகுதி அடை­யா­ள­மி­டப்­பட்­டுள்­ளது. அது ‘கீழ் மல்­வத்து ஓயா’ திட்­டத்தின் அங்­கத்­துக்குள் வரு­கின்ற நிலப்­ப­ரப்­பாகும். ஆகவே, மல்­வத்து ஓயா திட்­டத்­தினை தடை­யின்றி முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­னேற்­பா­டா­கவே அண்­மித்த பகு­தி­களில் உள்ள காணி­களை கைய­கப்­ப­டுத்தும் செயற்­பாட்டை பார்க்க வேண்­டி­யுள்­ளது.
அநுர அர­சாங்கம் உட்­பட சிங்­கள தேசி­யத்தின் மேற்­படி பல்­நோக்கு இலக்­கு­களைக் கொண்ட வர்த்­த­மானி மீளப்­பெ­றப்­பட்டால் மட்­டுமே தமிழ் மக்­க­ளி­னதும், தமிழ்த் தேசத்­தி­னதும் இருப்பு உறுதி செய்­யப்­படும்.
ஆகவே, வர்த்­த­மானி விட­யத்தில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களும் சரி, சிவில் அமைப்­புக்­களும் சரி, தமிழ் மக்­களும் சரி, நெகிழ்ச்சித் தன்­மையை காண்­பிக்­கவே முடி­யாது.  அநுர அர­சாங்­கத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் வர்த்­த­மா­னியை மீளப்­பெ­று­வதில் எள்­ள­ளவும் ஆர்­வ­மில்லை.
விசே­ட­மாக, அரச அதி­கா­ரி­க­ளுக்கு இந்த வர்த்­த­மா­னியை மீளப்­பெ­று­வதில் சிறி­த­ள­வேனும் உடன்­பா­டில்லை. பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய தலை­மை­யி­லான அர­சாங்க குழு­வி­ன­ருக்கும் வடக்கு,கிழக்கு பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு அதற்­கொரு சான்­றா­தாரம். அதன் பின்னர்  பிர­த­ம­ருடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலை அடிப்­ப­டை­யாக வைத்து வர்த்­த­மா­னியை மீளப்­பெ­று­வ­தற்­கான சட்ட ஆலோ­ச­னையை காணி அமைச்சின் செய­லாளர், சட்ட மா அதி­ப­ரிடம் கோரி­யி­ருக்­கின்றார்.
அரசியல் ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட் டால் வர்த்தமானியை மீளப்பெறுவதொன்றும் பெரிய விடயமல்ல. அதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டிய அவசியமும் இல்லை.
இங்கே சட்ட மா அதிபரின் ஆலோசனை யைப் பெற முனைவதன் நோக்கம் ஒன்று காலத்தைக் கடத்துவது, இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டது என் பதை சட்ட மா அதிபர் ஊடாக வெளிப்படுத்தி மீளப்பெறுவதை தவிர்ப்பது.
அரசாங்கத்தின் குறித்த எளிய நகர்வினைக் கூடக் கணிக்க முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் சட்டம் தெரிந்த தலைவர்களான சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் ஏட்டிக்குப்போட்டியாக வர்த்தமானி மீளப்பெறப்பட்டுவிட்டது என்ற தொனி யில் அதற்கு தாமே காரணம் என்றுரைத்து ஊடக சந்திப்புக்களை நடத்தி உரிமைகோரவே விளைந் திருக்கின்றார்கள்.
வெளியாகியிருக்கின்ற வர்த்தமானி நடை முறைக்கு வருவதற்கு இன்றிலிருந்து இன்னும் 14 நாட்கள் (28–06–2025) தான் இருக்கின்றன. இந்த விடயம் சட்ட ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக, தமிழ்த் தேசமாக ஒருங்கிணைந்து அணுகப்பட வேண்டியது. தவறினால் தலையெழுத்தே மாறி விடும், தமிழ் மக்களினது மட்டுமல்ல… அரசியல், சிவில் தலைவர்களினதும் கூட.
முற்றும்.

கிளீன் சிறிலங்கா மூலம் சூழல் பாதுகாக்கப்பட்டதா ? – கிண்ணியான்

சூழல் என்பது மனிதனை சுற்றியுள்ள அனைத்தும் என்பதை எடுத்துக் காட்டு வதுடன் சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதன தும் கடப்பாடாகும். இதன் ஒரு பகுதியாக சூழல் மாசடைவு என்பது இயற்கை மற்றும் மனித செயல்களால் ஏற்படும் மாசடைவு ஆகும், இது மனிதர்களின் வாழ்க்கை முறையும், உயிரினங்களின் வாழ்வும், பூமியின் நிலத்தன்மையும் மீது தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.  மனிதனது பல நடவடிக்கைகளால் சூழல் மாசடைகிறது.
சூழல் மாசடைவின் முக்கிய தாக்கங்களாக மனித உடல்நலத்தின் மீதான தாக்கங்களும் பங்கு வகிக்கின்றது .இதில் காற்று மாசடைவு காரணமாக  தும்மல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள், நுரையீரல் புற்றுநோய் போன்ற பல சுவாச நோய்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சூழல் மாசடைவு என்பது பல வழிகளில் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது.
தண்ணீர் மாசடைவு: 
வயிற்றுப்போக்கு, நெருப்பு காய்ச்சல், கொலரா போன்ற நீர் மூலம் பரவும் நோய்களாகும்.
நிலம் மாசடைவு: 
உணவுப் பயிர்கள் மீது பாதிப்பு, விஷச் சேர்க்கைகள் உணவுக்கு ஊடுருவுவதால் உடல்நல பாதிப்பு ஆகும்.
விலங்கு மற்றும் தாவரம் மீது தாக்கம்: 
வனவிலங்குகள் வாழும் சூழல் பாதிக்கப் படுகிறது. இது போன்று கடல் உயிரினங்கள் பிளாஸ்டிக் மற்றும்  கழிவுகளால் பாதிக்கப்படுகின் றன.இவை அனைத்தும் நம்மை மற்றும் எதிர்கால தலைமுறையை பாதுகாக்க முக்கியமான விடயங்களாகும்.
சுற்றாடல் தினமானது ஒவ்வொரு வருட மும் ஜூன் மாதம் 05ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வருடம் மே 30 தொடக்கம் ஜூன் 05 வரை சூழல் தினம் கொண்டாடப்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடாக புதியதொரு திட்டமாக கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளின் கீழ் பல சுற்றாடல் நிகழ்வுகள் இடம் பெற்றன.
குறிப்பாக சூழல் தொடர்பில் சற்று பார்க்கின்ற போது குடியிருப்பு பகுதிகள்,வீதிகளில் சேரும் கழிவுகளை உள்ளூராட்சி மன்றங்கள் முறை கேடாக குப்பை தொட்டிகளாக சேமிப்பதால் அப்பகுதிகளினை அண்டிய மக்கள் பல இடர்களை எதிர் நோக்குகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுதல், யானைகளின் படை எடுப்பு போன்றனவும் இடம் பெற்று வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் காணப் படும் கிண்ணியா நகர சபைக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் பகுதி சின்னத்தோட்டத்தில் உள்ளது. இது போன்று திருகோணமலை மாநகர சபைக்கானது கன்னியா பகுதியிலும் தம்பலகாமம் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பை மேடு ஜெயபுரவில் உள்ளது. இதனால் பல பகுதிகளில் இருந்து வரும்  யானைகள் இந்த குப்பைகளை உண்பதற்கு வருகின்றன.  அதே நேரம்   துர்நாற்றமும் வீசுகின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை அண்டிய மக்கள் பல போராட் டங்களை குப்பை மேட்டுக்கு எதிராக நடத்தியுள் ளனர். இப் பகுதி ஊடாக பயணிக்க முடியாது உள்ளதுடன் பாலம் போட்டாறு பகுதியில் வாழும் மக்கள் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டி யுள்ளதாகவும் யானை தாக்குதல்களுக்கும் இலக் காகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
எங்களது ஊரில் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இதற்கான காரணம் குப்பை மேடுதான்.
குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரி பல ஆர்ப்பாட்டங்கள் செய்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  பேருந்து ஏறுவதற்காக காத்திருக்கும் போது இந்த குப் பைகளின் துர்நாற்றம் தாங்க முடியாது. அது மட்டுமன்றி இங்கு பாதுகாப்பான யானை வேலி இல்லை. இந்த யானை பிரச்சினையால் ஊருக்குள் நிம்மதியாக வாழ முடியாது. மாலை 5 மணிக்கே யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசங்களை மேற்கொள்வதுடன் எங்களது நெற்செய்கை விவசாயம் தோட்டச் செய்கைகளை அழித்து விடு கின்றன. கச்சான் போன்ற பயிர்களையும் துவம்சம் செய்து விட்டு செல்கின்றன. இங்கு குப்பை கொட்டுவதனால் அங்குள்ள விலங்குகள் அதனை சாப்பிட்டு விட்டு ஊருக்குள் வருவதனாலும் பல தொற்று நோய்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறானவற்றில் இருந்து பாதுகாக்க குப்பை மேட்டை அகற்றி பாதுகாப்பான யானை கள் வேலியினை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என பாலம்போட்டாறு பத்தினிபுர கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் ஜீ.விதுர்சியா (வயது_27) தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வாறான நிலையில் சூழல் மாசடைவு என்பது பல உயிர் ஆபத்துக்கள் உள்ளிட்ட பல நோய்களையும் ஏற்படுத்துகின்றதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக 2019ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான கடந்த ஆறு ஆண்டுகளில், யானை – மனித மோதல்களால் இலங்கையில் 2,425 காட்டு யானைகளும் 961 பொதுமக்களும் உயிரிழந்துள்ள தாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கைகளில் அவதானிக்க முடிகின்றது.
இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் மாத்திரம் 43 காட்டுயானைகளும், மூன்று மனிதர் கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
கடந்த காலத்தில் தொடர்ச்சியாக ஏற் பட்டுவரும் இந்த காட்டு யானைகள்- மனித மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் FactSeeker இனால் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி எழுத்து மூலம் தகவல் கோரப்பட்டது.
இந்த காலகட்டத்தில் அதிகமான மனித உயிரிழப்புகள் அநுராதபுரம் மாவட்டத்தில் பதிவா கியுள்ளன.
இதன்போது 185 பேர் அநுராதபுரம் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப் புத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான காட்டுயானைகளின் உயிரிழப்புகள் 2023ஆம் ஆண்டு பதிவாகியுள்ளன. அவ்வாண்டு 488 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வனப்பகுதி அடிப்படையில் கணக் கெடுப்பை முன்னெடுத்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான காட்டு யானை உயிரிழப்புகள் பொலன்னறுவை வனப்பகுதிகளில் பதிவாகியுள்ளன.
அப்பகுதிகளில் 487 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள காட்டு யானைகள் முக்கியமாக, துப்பாக்கிச் சூடு, மின்சாரக் கம்பி தாக்குதல் மற்றும் பட்டாஸ் மூலமான தாக்குதல் போன்ற காரணங்களால் நடந்துள்ளன.
2019 முதல் 2024 வரையிலான ஆறு ஆண்டு களில், துப்பாக்கிச் சூட்டால் 409 யானைகளும், பட்டாஸ் தாக்குதல் மூலம் 356 யானைகளும், மின்சார கம்பி தாக்குதலில் 316 யானைகளும் உயிரிழந்துள்ளன.
மேலும், அதிகமான சொத்து சேதங்களும் பொலன்னறுவை மாவட்டத்திலேயே இடம் பெற்றுள்ளன.
2024ஆம் ஆண்டில் மாத்திரம் மனித-யானை மோதலால் 3,756 பேர் சொத்து சேதங்களை சந்தித்துள்ளனர். இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவாகியுள்ள மிக அதிகமான சொத்து சேதங் களாகும். இயற்கையின் அழகை மனிதன் ரசிப்பதற்கு மாத்திரமல்ல உயிர் வாழ்வதற்கும் தான் என்ற நிலையில்  எனவே சூழல் பாதுக்காக்கப்பட வேண்டும். சுற்றாடல் துறை அமைச்சு உருவாக் கப்பட்டாலும் சூழல் மாசடைதலை தடுக்க பல திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தோல்வி கண்டுள்ளது. கொழும்பு நகர் அதிக சனத்தொகை கொண்டதாக காணப்பட்டாலும் அங்கு வீதிகளில் பல துப்புரவு தொழிலாளர்கள் சேவையில் ஈடுபட்டாலும் பல இடங்கள் பல வழிகளில் மாசடைகின்றது. புகை மூலம்,ஒலி ஒளி மூலம், தூசி துணிக்கைகள், நீர் உள்ளிட்ட பல வழி வகைகளில் மாசடைதல் ஏற்படுகிறது. ஆனாலும் தற்போதைய அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முறையான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளதாகவும் இது கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் என்பதாக அவர்கள்  கூறினாலும் முறையாக சூழல் மாசடைதலை தடுக்க முடியவில்லை .
எனவே தான் சூழலை சுத்தமாக்க ஒவ்வொருவரது வீட்டில் இருந்து உருவாக்க நாம் அனைவரும் வழியமைப்போமாக.

முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அபகரிப்பு முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள்.
இந்த காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் இன்று (17) சென்ற நிலையில் மக்கள் மற்றும் காணியின் உரிமையாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்தமையினால் காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரினால் காணி உரிமையாளர்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள், அரச நிலஅளவையாளர், சிலாவத்தை கிராம சேவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்த போது காணியின் உரிமையாளர்கள் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதனால் காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிலாவத்தை கிராமத்தில் கடற்படை முகாம் 2009 ஆண்டு இறுதி போருக்கு பின்னர் அமைக்கப்பட்டது.

எனினும் இந்த காணியானது நான்கு மக்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் என மக்கள் தெரிவித்துள்ளார்கள். 1981 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியில் தாங்கள் வசித்து வந்துள்ளதாகவும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணிக்கான ஆவணங்கள் அனைத்தும் அழிந்துள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பல சந்தர்ப்பங்களில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது குறித்த காணியை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சிலாவத்தை பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.