Home Blog Page 117

கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சந்திரசேகரன்

கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற கூட்டமொன்றின்போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படை அதிகாரிகள்,  காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளும் மேற்படி கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

கிழக்கு கடற்பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் கடற்கொள்ளைச் சம்பவங்களால் அம்பாறை, மட்டக்களப்பு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும், அதனை தடுப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

கிழக்குப் பிராந்தியத்தில் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்திலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிலும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளின் பாதகமான தாக்கத்தை எடுத்துரைத்து இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகிய இருவருக்கும், பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஏ. ஆதம்பாவா ஏற்கனவே கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.

நிலைமையை விரிவாக மதிப்பாய்வு செய்தல், மீன்பிடி சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமலாக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

இதன் விளைவாக, இலங்கையின் கிழக்கு கடலோர நீரில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உடனடி தலையீடுகள், நடுத்தர கால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால உத்திகள் உள்ளிட்ட பல கட்ட அணுகுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி மட்டக்களப்பில், அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அரச மற்றும் எதிர்க்கட்சி), இலங்கை கடற்படை, இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்கள, காவல்துறை  மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள்,கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள  அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவினை  வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

காணி உரிமைக்கான தினம் என்பது ஒரு கொண்டாட்டம் அல்ல! இது-நமது உரிமைக்காக, நமது நிலத்திற்காக, நமது வாழ்வாதாரத்திற்காக, நமது வரலாற்றுக்காக நாம் எழுப்பும் குரல் என்ற தொனிப்பொருளிலே நாளைய தினம்(21) இந்த காணி உரிமைக்கான போராட்டமானது நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜீவன் தொண்டமான்  கருத்துத் தெரிவிக்கையில்…

மலையக மக்களின் விடுதலைக்கு காணி உரிமை என்பது அடிப்படையானதாகும். காணி உரிமைதான் எமது மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும். ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகின்றமையை அனைவரும் அறிவார்கள்.

அந்த வகையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகிய நாள் தொடக்கம் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த மக்களின் காணி உரிமைக்காக பாராளுமன்றத்திலும் , பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பலமாக குரல் கொடுத்து வருகிறேன். இந்தப் போராட்டம் கடைசி மலையைகத் தமிழனுக்கும் காணி உரிமை கிடைக்கும் வரை தொடரும்…

காணி உரிமை தொடர்பாக நான் அமைச்சராக இருந்தக் காலப்பகுதிகளில் இரண்டு அமைச்சரவை பத்திரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு
இனைந்து செயற்படுகின்ற அனைத்து சக்திகளையும் இனைத்துக்கொண்டு காணி உரிமை கோசத்தை இந்த நாடே கேட்கும் அளவிற்கு கொண்டுச்செல்ல வேண்டிய அவசியம் மலையக சமூகத்துக்கு இருக்கிறது .

ஆகவேதான் நாளை நடைபெறவுள்ள  “காணி உரிமை தொடர்பான அமைதிவழி போராட்டத்திற்கு” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கவுள்ளோம்” இவ்வாறு ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு நீதி கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதேவேளை, வடக்கில் மனித புதைகுழிகள் என வதந்திகள் பரப்பப்படுவதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

இஸ்ரேல்-ஈரான் போர்: ஈரானில் 639 பேர் பலி!

இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13-ம் திகதி அதி​காலை ஈரான் மீது இஸ்​ரேல் விமானப் படை திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இரு நாடு​களிடையே 7-வது நாளாக நேற்​றும் போர் நீடித்​தது. கடந்த 7 நாட்​களில் ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட அந்த நாட்​டின் 1,100 இடங்​கள் மீது இஸ்​ரேல் போர் விமானங்​கள், ஆளில்லா விமானங்கள்  தாக்​குதல் நடத்தி உள்​ளன. குறிப்​பாக ஈரானின் அணு சக்தி தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், எண்​ணெய் வயல்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்​கள், 16 எண்​ணெய் வயல்​கள் அழிக்​கப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஈரான் இராணுவ தரப்​பில் இஸ்​ரேலை குறி​வைத்து இது​வரை 400 ஏவு​கணை​கள் வீசப்​பட்டு உள்​ளன. மேலும் 1,000 ஆளில்லா விமானங்கள் மூல​மும் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு உள்​ளன. இஸ்​ரேலின் டெல் அவிவ் உட்பட பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. கடந்த 7 நாட்​களில் இஸ்​ரேல் முழு​வதும் 24பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் 200-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​துள்​ளனர்.

கிளிநொச்சி: இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை விடுவிக்க கரைச்சி பிரதேச சபை தவிசாளர்  கோரிக்கை

கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள  காணிகள் கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என   வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேளமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக பதயை பொறுபேற்றுக்கொண்ட தவிசாளர் வேளமாலிகிதன் தலைமையிலான  உப தவிசாளர் உறுப்பினர்கள் வியாழக்கிழமை (19) வடக்குமாகாண ஆளுநரை  யாழ்ப்பாண அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில்,

கரைச்சி பிரதேச சபையானது கிளிநொச்சி நகரத்தை கொண்ட பிரதேசமாக இருப்பதால் அதனை உள்ளடக்கிய வகையில் பல்வேறு அபிவிருத்திகளை பூர்த்தி செய்ய  வேண்டியுள்ளது.

குறிப்பாக கிளிநெச்சி சுற்றுவட்ட பாதை புனரமைக்கப்படவேண்டும். குறித்த காணி பகுதி இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது இதனை விடுவித்து  பாடசாலை  மாணவர்களுக்கான பாதையை சீர்செய்ய வேண்டும்.

கிளிநொச்சி பொது நூலக கட்டுமானங்கள் முடிவுறுத்தப்படவேண்டும். இதற்கான மேலதிக நிதி தேடல் மற்றுப் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள கட்டடங்களை விடுவித்தல்  தொடர்பிலும்   ஆளுநருடன் கலந்துரையாடியதுடன் எமது பிரதேச சபையில் ஆளனிகள் நிரப்பப்பட வேண்டியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட ஆளனிக்கு குறைவானவர்களே கடமையில் உள்ளார்கள் குறிப்பாக 138 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளனியாக இருந்தும் தற்போது 78 பேரே கடமையில் இருக்கின்றார்கள்.

இவை  தொடர்பிலும் மேலும் கடந்த காலத்தில் 15 வீதிகள் அமைப்பதற்கு அனுமதி கிடைத்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கிறவல்கள் போட்டு நிறைவுசெய்த நிலையில் அவை முழுமைப்படுத்தபடாத நிலையில் அவை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது  வீதி புனரமைப்பிற்கேன புதிதாக  15 வீதிகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.  இவை தொடர்பில் ஏற்கனவே செப்பனிடப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதற்கான அனுமதி மற்றும் அதன் சாதக பாதக நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

இதனை விரிவாக கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு சாதகமான விடயங்களை விரைவுபடுத்துவோம் என்றார்.

 

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.00  மணிக்கு இந்த  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வந்தது. இவை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி மீண்டும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்கி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை: காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பக்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

பக்தர்களுக்காக அமைந்துள்ள லகுகலை – உகந்தை வன பாதையின் கதவு, இன்றையதினம்  காலை 6.00 மணியளவில் உகந்தை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“ஆரோஹரா” கோஷங்களுடன் பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை பயணத்தை இன்று தொடங்கினர். கதிர்காம திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4ஆம் திகதி முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு

இலங்கையின் கடற்பரப்பில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டின் ஜூலை 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த கப்பல் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவிருந்தது. எனினும் வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே குறித்த கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஆய்வு கப்பல்களை அனுமதிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிலையான செயற்பாட்டு முறைமை இல்லாததால் ஆய்வு கப்பலான எஃப். நான்சனின் இலங்கை வருகை ரத்தானதாக குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேரடியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக இழப்புகள் ஏற்படக் கூடும் எனவும், கப்பலின் தரவுகளை நம்பியிருக்கும் பசுமை காலநிலை நிதி திட்டங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் கீழ் குறித்த பணியை தொடர அனுமதிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை மீள் பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதன்போது முப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் சில விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறித்த காணிகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்பதால் இது தொடர்பான விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அனைத்து இராணுவ முகாம்களும் அமைந்துள்ள காணிகள் குறித்து மீளப் பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் மீண்டும் கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல்: வட கொரியா!

ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் இன்று ஏழாவது நாளை எட்டியது. இந்த நிலையில், வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று தெரிவித்துள்ளது.

கேசிஎன்ஏ தனது அறிக்கையில், ‘வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது “மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம்” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்படும் இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்கும் புற்றுநோய் போன்ற அமைப்பாகவும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளியாகவும் இருப்பதை தெளிவாக நிரூபிக்கிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்’ என்று தெரிவித்துள்ளது.