Home Blog Page 113

இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடரும் அணையா விளக்கு போராட்டம்!

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” நேற்று(23) செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில், முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

நேற்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படுகிறது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளை யாழ் வருகை தரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது: எதிர்க்கட்சி தலைவர் சஜித் கருத்து

மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு வழங்கப்படாமை குறித்து கொள்கை வகுப்பாளர்கள் என்ற ரீதியில் வெட்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு – லியோனல் வென்ட் அரங்கில் மலையக இளைஞர், யுவதிகளால் ”20010 ஆர்ப்பாட்டத்துக்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து வெளியிட்ட போதே எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மலையக தமிழ் இளைஞர், யுவதிகள் இணைந்து இந்த தனித்துவமான கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். எமது நாட்டில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் மிக முக்கியத்துவமான விடயங்களை அவர்கள் இந்த புகைப்படங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அவை மிகவும் கவலையளிப்பவையாகவுள்ளன. கவலையடைவது மாத்திரம் போதுமானதல்ல. மலைய மக்களின் பிரச்சினைகளுக்கு ஸ்திரமான தீர்வொன்றை வழங்க வேண்டியது எமது கடமையும், பொறுப்புமாகும். மலையக மக்கள் குறிப்பாக தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனால் அவர்களது உழைப்பிற்கு சமமான வாழ்வாதாரமோ வாழக்கை தர உயர்வோ அவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.

கொள்கை வகுப்பாளர்கள் என்ற ரீதியில் அவை தொடர்பில் நாம் வெட்கப்பட வேண்டும். அதற்காக நாம் எமது கவலையை வெளிப்படுத்துகின்றோம். 200 ஆண்டுகள் என்ற நீண்ட வரலாற்றுக்குள் எமது நாட்டுக்கு பாரியளவில் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்த மலைய சமூகத்துக்கு, நாம் ஆற்றியுள்ள வரையறுக்கப்பட்ட சேவை தொடர்பில் எந்த வகையிலும் எம்மால் மகிழ்ச்சியடைவோ, திருப்தியடையவோ முடியாது.

நானும் தனிப்பட்ட ரீதியில் அதற்கு பொறுப்பு கூற வேண்டும். எவ்வாறிருப்பினும் இவ்வாறான புகைப்படக் கண்காட்சிகள் ஊடாக பாடங்களைக் கற்றுக் கொண்டு களத்தில் நடைமுறை சாத்தியமான மலையக மக்களுக்கு உயர் வாழ்க்கை தரத்தை வழங்கக் கூடிய புதிய கொள்கைக்கான வேலைத்திட்டத்தின் அவசியத்தை நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்கின்றோம்.

தேயிலை தொழிற்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்ற மலைய மக்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் துயரமும் இந்த கண்காட்சியில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேயிலை ஏற்றுமதியூடாக பல மில்லியன், பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வருமானம் கிடைக்கப் பெற்றாலும், அதற்கு வழிவகுக்கும் மக்களின் வாழ்க்கை தரம் கீழ் மட்டத்திலேயே காணப்படுகிறது. எனவே அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட இராணுவத்தினரால் அனுமதியில்லை!

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

அந்நிலையில் யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2002ஆம் ஆண்டு கால பகுதியில், மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் இராணுவ தரப்புகளுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு மாத்திரம் மக்கள் செல்ல அனுமதி பெற்று , பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னர் 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் குழப்பமடைந்ததை அடுத்து ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர்.

அந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி, மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் மனைவியும், அப்போதைய மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று, விசேட தினங்களில் ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நவராத்திரி தினத்திற்கு 10 நாட்களும் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

2022ஆம் ஆண்டு திருவெம்பாவை உற்சவத்திற்கு ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தில் இருந்த பழமை வாய்ந்த முருகன் சிலை உள்ளிட்ட சிலைகள் சில என்பன களவாடப்பட்டு இருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் உட்பட  கட்டுவன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வசாவிளான் மணம்பிறை கோயில், வசாவிளான் சிவன் கோயில், வசாவிளான் நாக கோயில், பலாலி நாக தம்பிரான் கோயில், பலாலி சக்திவெளி முருகன் கோயில் என்பவற்றில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இருந்த போதிலும் , ஆலயத்திற்கு செல்லும் மக்கள் ,கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும் , அவற்றினை உரிய முறையில் அமைத்த பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு பின்னரே உத்தியோக பூர்வமாக ஆலயத்தினை கையளிக்க உள்ளதாகவும் , அதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக ஆலயத்திற்கு சென்று வழிபட முடியும் என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

இராணுவத்தினர் அவ்வாறு அறிவித்து 06 மாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட முடியாத நிலைமையே காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி பலாலி மக்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆலயத்தில் இராணுவத்தினரிடம் விசேட அனுமதி பெற்று , விசேட பூஜைகளை நடாத்தி இருந்தனர்.

குறித்த பூஜையில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர தற்காலிக வீதி அமைத்து தரப்படும் என உறுதி அளித்திருந்தார்.

அந்நிலையில் தற்போது தற்காலிக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை திங்கட்கிழமை (23) நாடாளுமன்ற உறுப்பினர் , க. இளங்குமரன் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

குறித்த தற்காலிக வீதி அமைத்து முடிந்ததும் இராஜ இராஜேஸ்வரி அம்மனை மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உறுதி அளித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Volker Türk மற்றும்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பிரதமர் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை  அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் , பொருளாதாரம் மற்றும் சமூகத்தை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியமைத்தல் ஆகியவை தொடர்பில் அரசாங்கம் கனவம் செலுத்தி வருவதாக பிரதமர் எடுத்துக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்

ஊர் அதிகார ஆட்சிகளான உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முடிந்ததன் பின்னர் தற்போது ஆட்சிகளை பிடிப்பதற்கான பேரம் பேசும் செயல்களுடன் சபைகள் ஆட்சியமைத்தல் இந்த மாதத்துடன் நிறைவுறுகிறது. ஆட்சிக்காக யாரோடும் சேருவோம் அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம் என்ற நிலையிலேயே சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் வட கிழக்கில் செயல்படுகின்றன.
வடக்கு கிழக்கை பொறுத்தவரை அனேகமான சபைகளில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தவிசாளர், உபதவிசாளர் பதவிகளை தக்கவைத்துள் ளது. தமிழ்த்தேசிய கட்சிகள் யாவும் ஆட்சிய மைப்பதற்காக யாருடைய காலைப்பிடித்தாவது பதவி நிலைகளை பெறுவதையே காணமுடிகிறது.
கிழக்கு மாகாணத்தில் முழுமையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சபை அமைப்பு விடயங்கள் நிறைவடைந்துள்ளன. அதில் தமிழரசுக்கட்சி எட்டு சபைகளிலும், மூன்று சபைகளில் ஶ்ரீலங்காமுஷ்லிம் காங்கிரசும், ஒரு சபையில் சுயேட்சைகுழுவும் ரிம்விபியும் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்க ளில் இந்த மாதம் முடிவுறும் போது சபைகள் ஆட்சி முழுமை பெற்று இருந்த போதும் திருக்கோயில் பிரதேச சபை முழுமையாக ஒரு சுயேட்சை குழு அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து தமிழ்தேசிய கட்சிகளை ஓரம்கட்டியுள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்  மாநகர சபை உட்பட சில சபைகளை தமிழரசுக்கட்சி கைப்பற்றியபோதும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய பேரவை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து உள்ளூ ராட்சிசபைகளை அமைக்க விரும்பி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது, வலிகாமம் கிழக்கு பிரதேசசபையையும் குறிப்பிட்டே, அந்த முயற்சிகளை இலங்கை தமிழரசு கட்சி தோல்வியடையவைத்தது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலை மையின் தீர்மானங்களால் அதிருப்தியடைந்துள்ள பிரதேசசபை உறுப்பினர்கள், இரகசிய வாக்கெடுப் பில் காலைவாரும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. கரவெட்டி பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் எதிர்தரப்புக்கு வாக்களித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் 1 வாக்கு வித்தியாசத்தில் இலங்கை தமிழரசு கட்சி மயிரிழையில் தப்பிப்பிழைத்தது.
தமிழ் தேசிய பேரவை 5, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 5 உறுப்பினர்களையும் கொண்டிருந்தன.
தேசிய மக்கள் சக்தி 9 உறுப்பினர்களை கொண்டிருந்தது.ஈபிடிபி யிலிருந்து பிரிந்தவர்கள் சுயேட் சையாக களமிறங்கி 2 ஆசனங்களையும், மற்றொரு சுயேட்சை அணி 1 ஆசனத்தையும் கொண்டிருந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி சார்பில் தவிசாளர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்கு பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வெளியேற்றப் பட்டார்.
அடுத்த வாக்கெடுப்பு இரகசியமா, பகிரங் கமா என தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இரு தெரிவுகளுக்கும் சம எண்ணிக்கையான வாக்கெடுப்புக்கள் கிடைத்ததையடுத்து, திருவுள சீட்டு முறையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.  வலிகாமம் கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை காணலாம்.
எதுவானாலும் சகல உள்ளூராட்சிசபைகளி னதும் ஆட்சியமைக்கும் நடவடிக்கை இம் மாதம் 30/06/2025, உடன் நிறைவடையும்.அதன்
பின்னர் எல்லா சபைகளும் பெயரளவில் இயங்க ஆரம்பித்தாலும் அவை செயல்வடிவில் முன்கொண்டு செல்ல அந்தந்த சபைகளின் வருமானங்கள் கூடிய சபைகள் ஓரளவு திருப்தியுடன் தமது ஆட்சி அதிகாரங்களை முன்எடுத்தாலும் வடகிழக்கில் பல பிரதேச சபைகள் வருமானம் குறைந்த சபைகளாகவே உள்ளதால் அபிவிருத்தி வேலைகளில் ஏற்றத்தாழ்வுகள் தொடரவும் வாய்ப்புள்ளது.
அரச நிதி ஒதுக்கீடுகளை பொறுத்தவரை தேசிய மக்கள்சக்தி அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்திக்காக பிரதேச சபைகளுக்கு நிதி ஒதுக்ககூடியளவில் தற்போது இல்லை.
ஆட்சி யமைத்து முடிந்தபின்னர் ஆளும்
கட்சி எதிர்கட்சி என்பது உள்ளூராட்சி சபைகளில் இல்லை உள்ளூராட்சி சபைகளுக்கான அதி காரங்கள்  மாநகர சபை ‘நகர சபை ‘பிரதேச சபை என்ற வேறுபாடு இன்றி சகல கெளரவ உறுப் பினர்களுக்கும்   அதிகாரங்கள் ஒன்றுதான் இதில் ஆளும் தரப்பு எதிர்தரப்பு என்ற வேறுபாடு இல்லை கட்சி வேறுபாடின்றி மக்களின் நலனுக்காக செயற்படுவது சகல கெளரவ உறுப்பினர்களின் கடமையாகும் அதிலும் சபைகளினுடைய  அதிகாரங்களை கையாள்வது ஆணையாளர், மற்றும் செயலாளர்களின் கடமையாகும்
மாநகர சபையின் முதல்வர் பதவி என்பது                            சபையின் தலைவர் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய நபராக மாநகரமுதல்வர் செயல்படுகிறார். மாநகர சபையின் கொள்கைகளை வகுப்பதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், மாநகரத்
தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல் படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும், மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு பொறுப் பேற்பதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக அவர்களின் நலனுக்காக செயல்படுகி றார்.
மாநகர சபை முதல்வரின் கடமைகள் பின் வருமாறு:
* சபை நடவடிக்கைகளை வழிநடத்துதல்:மாநகர சபைக் கூட்டங்களை கூட்டி, அதன் நிகழ்ச்சி நிரலை தீர்மானித்து, விவாதங்களை வழிநடத்தி, தீர்மானங்களை நிறைவேற்ற உதவுதல். மாநகர அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துதல்.
* மாநகரத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங் களை வகுத்து, அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
* நிதி மேலாண்மை: மாநகர சபையின் நிதி ஆதாரங்களை திறம்பட நிர்வகித்து, வரவு-செலவு திட்டங்களை தயாரித்து, செயல்படுத்த உதவுதல்.
* சுகாதாரம் மற்றும் தூய்மை பேணுதல்: மாநகரத்தின் சுகாதாரம் மற்றும் தூய்மையை பேணு வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
* பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல்: மாநகர மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்.
* சட்ட ஒழுங்குகளை பேணுதல்: மாநகர சபையின் சட்ட திட்டங்களை செயற்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவுதல்.
* மாநகர சபையின் பிரதிநிதியாக செயல் படுதல்: மாநகர சபை மற்றும் மாநகர மக்களின் நலனுக்காக, பல்வேறு மட்டங்களில் பிரதிநிதித்துவம் செய்தல்.
* சுருக்கமாக, மாநகர சபை முதல்வரின் பணி என்பது மாநகரத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்தி, மாநகர மக்களின் நலனுக்காக உழைப்பதாகும்.
பிரதேசபை,நகரசபை தவிசாளர் பதவியா னது              சபையின் நிர்வாகத்தை நடத்துவது மற்றும் சபையின் தீர்மானங்களை நடைமுறைப் படுத்து
வது ஆகும். மேலும், சபையின் வருடாந்த அபி விருத்தி திட்டத்தைத் தயாரித்தல், வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுதல் மற்றும் சபையின் நிதிகளை நிர்வகித்தல் ஆகியவை தவிசாளரின் கடமைகளில் அடங்கும்.
தவிசாளர் சபையின் நிர்வாகத் தலை வராக செயல்படுவார் சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்வதும் அவரின் கடமை. சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் சபையின் பணிக ளைச் செய்வது தவிசாளரின் பொறுப்பாகும். அவைகளோடு பின்வரும் கடமைகளும் அவருக் குண்டு.
* வருடாந்தத் திட்டம்: சபையின் வருடாந்த அபிவிருத்தி திட்டத்தைத் தயாரித்தல், அதற்குத் தேவையான வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித் தல் மற்றும் அதை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை தவிசாளரின் முக்கிய கடமைகளாகும்.
* நிதி மேலாண்மை: சபையின் வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித்து, நிதிகளை நிர்வகிப்பதும் தவிசாளரின் பொறுப்பாகும்.
* பொதுமக்கள் தொடர்பு: பொதுமக்களின் தேவை களையும், குறைகளையும் அறிந்து, சபையின் மூலம் அவற்றை நிவர்த்தி செய்ய தவிசாளர் முயற்சிக்க வேண்டும்.
* சபை விதிகளின்படி நடத்தல்: தவிசாளர் சபை யின் விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு, நியாயமான முறையில் சபையை வழிநடத்த வேண்டும்.
* சுருக்கமாக, தவிசாளர் சபையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர் மற்றும் சபையை திறம்பட வழிநடத்த வேண்டும். எனவே உள்ளூராட்சி சபையில் தெரிவான எந்த கட்சிசார்ந்தவர்களும் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என வேறுபாடுகள் இன்றி சகல வட்டாரங்களிலும் சமத்துவமாக அபிவிருத்தி, சேவைகளை செய்வதன்மூலம் வருடாந்த வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை எதிர்ப்புகள் இன்றி நிறைவேற்றி சபையை சரியாக கொண்டு நடத்தமுடியும்.
தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளில் குறிப் பாக இலங்கை தமிழ் அரசுக்கட்சி பெரும் பான்மை கொண்ட சபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய உணர்வுள்ள வட்டாரங்களில் தமிழ்தேசிய கொள்கைசார் விடயங்களையும், இளைஞர் யுவதிகளுக்கான விழிப்பூட்டல், போதைவஸ்து பாவனைகளுக்கு எதிரான கருத்தாடல்கள், ஒழுக்கநெறி விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடத்துவதற்கும் வட்டார உறுப்பினர்கள் முன்
வருவதோடு. ஈழவிடுதலை போராட்ட வரலாறு களையும், அதனோடு இணைந்த நிகழ்வுகளுக்கும் சகல சபைகளும் முன்னுரிமை கொடுப்பதும் மிக அவசியம்.
அடிமட்ட மக்களுடன் பழகும் உள்ளூ ராட்சி சபை உறுப்பினர்கள் இனம், மொழி, நிலம், மாண்பு, சார்ந்த விடயங்களிலும் சட்ட திட்டங்களுக்கு அப்பால் இன உணர்வு கொண்டவர்களாக பணி செய்வதே சாலச்சிறந்தது.

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: ட்ரம்ப்

இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலில், “அனைவருக்கும் வாழ்த்துகள்! இஸ்ரேல் – ஈரான் இடையே 12 மணி நேரத்தில் (தோராயமாக 6 மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் இரான் தங்களுடைய இறுதி மிஷன்களை நிறைவு செய்த பிறகு) முழுமையான போர் நிறுத்தம் ஏற்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கட்டத்தில் போர் முடிந்ததாகக் கருதப்படும்.

அதிகாரபூர்வமாக, ஈரான் இந்த போர் நிறுத்தத்தை தொடங்கும். 12-வது மணி நேரத்தில், இஸ்ரேல் இந்த போர் நிறுத்தத்தை தொடங்கும். 24-வது மணி நேரத்தில், இந்த 12 நாள் போரின் அதிகாரபூர்வ முடிவு, உலகத்தால் வரவேற்கப்படும். ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியும் மதிப்பும் நிலவும். எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் இந்த 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் புத்திசாலித்தனம் பெற்றதற்கு நான் வாழ்த்துகிறேன்.

இது பல ஆண்டுகளாக நடந்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக் கூடிய ஒரு போர். ஆனால், அது நடக்கவில்லை. ஒருபோதும் அப்படி நடக்காது. கடவுள் இஸ்ரேலை ஆசிர்வதிப்பாராக. கடவுள் ஈரானை ஆசிர்வதிப்பாராக. கடவுள் மத்திய கிழக்கை ஆசிர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பாராக. கடவுள் உலகை ஆசிர்வதிப்பாராக” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஈரான் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேல் தாக்கவில்லை என்றால் ஈரான் பதில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கம் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.

அதேவேளையில், இந்த போர் நிறுத்த அறிவிப்வை இஸ்ரேல் மற்றும் ஈரான் தரப்பு உடனடியாக உறுதி செய்யவில்லை. இரு தரப்புமே தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன மத ஜாதி பேதமின்றி திருகோணமலையை கட்டியெழுப்புவோம் – திருமலை மாநகர முதல்வர் கந்தசாமி செல்வராஜா

மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை  இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது அது போன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலை மாநகர சபை முதல்வர் தெரிவு திங்கட்கிழமை (23) இடம் பெற்றன இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள மாநகரங்களில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய வகையில் திருகோணமலை மாநகரத்தை எடுத்துக் காட்டுவோம் என்றார்.

திருகோணமலை மாநகர சபையின்  மாநகர முதல்வராக  கந்தசாமி செல்வராஜா தெரிவாகினார் அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.

திருகோணமலை மாநகர சபையின் வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜாதி, மத ,மொழி பேதமின்றி ஒன்றினைந்து அனைத்து உறுப்பினர்களின் உதவிதை கோரி நிற்கிறேன் எதிர்காலத்தில் திறம்பட ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஈரான்-இஸ்ரேல் போர்: சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை

ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்க தேசிய பாதுகாப்பு பேரவையை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்றும், ஈரானிய நாடாளுமன்றத்தின் முடிவின்படி ஹார்முஸ் நீரிணையை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20-30 வீதத்திற்கும் அதிகமானவை மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் 1/3 க்கும் அதிகமானவை இந்த நீரிணை வழியாகச் செல்வதால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயரும் என்று பல கட்சிகள் எச்சரிக்கின்றன.

ஒரு நாடு என்ற வகையில், நாம் வேடிக்கை பார்க்காமல், தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தை நடத்தி, எழுந்துள்ள கடுமையான பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் எரிசக்தித் துறையில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்ய மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்தியா தற்போது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை அதிகரித்துள்ளது என்றும், ஒரு நாடாக நாமும் நடவடிக்கை எடுத்து மத்திய கிழக்கில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் ஏதேனும் வேலை இழப்புகள் ஏற்பட்டால், அது நாட்டை கடுமையாக பாதிக்கும் என்றும், இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.

வொல்கர் ரெக் இலங்கையை வந்தடைந்தார்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், இன்று (23) மாலை இலங்கையை வந்தடைந்தார்.

இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை அவர், நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரையும், வடக்கு கிழக்கின் ஆர்வலர்களையும் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பிலும், சிவில் சமூகத்தினரையும், கர்தினாலையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கடிதமொன்றை கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் செம்மணி சிந்துபாத்தி மயான பகுதிக்கு வருகைத்தருவாரா? என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றும் வேலன் சுவாமிகள் குறிப்பிட்டார்.

செம்மணி மனித புதைக்குழிக்கு நீதிக் கோரி கனேடிய தமிழர் பேரவை இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும், அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனேடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அத்துடன் செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இடம்பெறும் ‘அணையா தீபம்’ போராட்டத்திற்கும் கனேடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையுடனும் கவலையுடனும் இந்த கடிதத்தை எழுதுகின்றோம் என்று அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் உட்பட பலரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் சமூகத்தினை மீண்டும் உலுக்கியுள்ளது.  “இது தனிப்பட்ட ஒரு சம்பவம் இல்லை. மாறாக பல தசாப்த காலமாக காணாமல் போதல், அரச பயங்கரவாதம், பதில்கள் இன்றி பொறுப்புக்கூறல் இன்றி தமிழ் குடும்பங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை ஆகியவற்றின் துயரம் மிகுந்த பாரம்பரியமாகும்’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 வருடங்களாக செம்மணி தமிழ் சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை கடுமையாக பாதித்து வந்துள்ளது. இந்த பகுதி நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள், படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள், இரகசியமாக உடல்கள் புதைக்கப்படுதல் ஆகியவற்றுடன் நீண்டகாலமாக தொடர்புபட்ட பகுதியாகும்.
அதன் மோசமான தன்மை குறித்து தெரிந்திருந்தாலும் சிறிய பகுதியே தோண்டப்பட்டுள்ளது.
மேலும் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் உரிய காரணங்கள் தெரிவிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டன என்று கனேடிய தமிழர் பேரவை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மன்னார், கொக்குதொடுவாய், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் முழுமையாக தோண்டப்படாததும், தெளிவற்ற விசாரணைகளும், தமிழ் மக்களின் நம்பிக்கைகளை மோசமாக பாதித்துள்ளன.
நீதியை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த சமீபத்தைய கண்டுபிடிப்பு உண்மைக்கான மற்றுமொரு வாய்ப்பு தவறவிடப்படுதலாக அமையும் என்று கனேடிய தமிழர் பேரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.