Home Blog Page 110

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறிய அரசு அதை நிறைவேற்றவில்லை – கோமகன் ஆதங்கம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி வழங்கி ஆசனமேறிய அரசு அதை நிறைவேற்ற தவறியுள்ளது என தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் இன்றையதினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

30 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டு இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பானது தொடர்ச்சியாக தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த நேரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கைகள் உள்ளடங்கிய கடிதம் மற்றும் அவர்களுடைய பெயர் பட்டியலை கையளித்திருந்தோம்.

அத்துடன் கடந்த தை மாதம் 8ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருக்கு மின்னஞ்சல் ஊடாக இந்த கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக கடந்த பங்குனி மாதம் பிரதமரை சந்தித்து, இது குறித்து அவருடன் கலந்துரையாடி பெயர் பட்டியலையும் கையளித்திருந்தோம். இதனையும் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இதன் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற செய்தியையும் கூறினோம்.

இந்த அரசானது அரசியல் கைதிகளை விடுவதாக வாக்குறுதி வழங்கி ஆசனமேறியது. ஆனால் இதுவரைக்கும் ஒரு அரசியல் கைதிகூட இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்பது தொடர்ச்சியாக ஏமாற்றத்தை தருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கும்போது, கடந்த காலத்தில் தற்போதைய ஜனாதிபதியை நேரில் தொடர்புகொண்டு கதைத்தவேளை தாங்கள் ஆட்சிக்கு வந்து 24 மணிநேரத்தில் விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டவர்கள் இன்று சாட்சிகளாக இருக்கின்றனர்.

அதேநேரம் அமைச்சர் சந்திரசேகரனை நேரில் சந்தித்து கைதிகளின் விடுதலை தொடர்பாக கோரிக்கை முன்வைத்திருந்தவேளை எங்களை விட தாங்களே கைதிகளின் விடயத்தில் அதிகம் கவனம் எடுப்பதாகவும், கடந்த காலங்களில் இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வலுவான கோரிக்கை முன்வைத்து வந்ததாகவும் கூறினார். ஆனால் அதிகாரம் அவர்களிடம் கிடைத்தும்கூட கைதிகளின் விடுதலை என்பது சாத்தியப்படவில்லை.

30 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் மீதமாக 10 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றார்கள். போர் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள இந்த காலத்தில் எமது நாட்டில் வாழக்கூடிய ஒரு நல்லெண்ண சூழலை உருவாக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றார்.

சர்வதேசதராத்திலான உள்நாட்டு பொறிமுறை – ஐ. நா.மனித உரிமை ஆணையாளர் அழைப்பு

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேசதராதரத்திலான உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் அழைப்பு விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதை குழி- எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம்: சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துசான்

செம்மணியில் புதைக்கப்பட்ட கைக்குழந்தைகளிற்கும் தங்கள் உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களிற்கும்  தாய்மார்களிற்கும் நாங்கள் எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம் என சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துசான் தெரிவித்துள்ளார்

அந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

நீங்கள் நாளாந்தம்  பயணம் செய்யும் வீதியிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் 19 உடல்களை கண்டெடுத்துள்ளனர்.

செம்மணியில் தற்போது இதுவே இடம்பெறுகின்றது.

மூன்று குழந்தைகளின் உடல்கள் உட்பட 19 பேரின் உடல்களை மீட்டுள்ளனர், இவர்கள் போராளிகள் அல்ல,வளர்ந்தவர்களும் இல்லை மூன்று கைக்குழந்தைகள்.

எனது ஆதரவை வெளிப்படுத்தும் அதேவேளை மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த பொறிகளில் ஒன்று குறித்து நான் குறிப்பிடப்போகின்றேன்.

இலங்கையில் காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்ற பொறி , இலங்கையை வாட்டும் பொறி,நான் இங்கு ஒரு சட்டத்தரணியாகவோ அல்லது சட்டத்துறை சார்ந்த அதிகாரியாகவோ இங்கு பிரசன்னமாகவில்லை,ஆனால் வடக்குகிழக்கை சேர்ந்த பலரின் கதைகளை சொல்வதற்காக வந்திருக்கின்றேன்.

2011- 2014 அறிக்கைகளில் மிகத் தெளிவாக தெளிவுபடுத்தப்பட்டிருந்ததை போல, இலங்கையில் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன.

இதற்கு மேலாக சில உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவங்கள் – மூதூர் மனிதபிமான பணியாளர்கள் கொலை, திருகோணமலை ஐந்து மாணவர்கள் கொலை, கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை போன்றவற்றிற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான நீதி என்பது வெறும் கனவாக மாத்திரமே காணப்படுகின்றது இவ்வாறான  சூழமைவில், தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல்,பொறுப்புக்கூறல் இன்மை என்பன  இலங்கையில் வழமைக்கு மாறான விடயங்கள் இல்லை மாறாக ஒரு விதிமுறையாக மாறியுள்ளன.

நாங்கள் எங்கள் விருப்பம் காரணமாக இந்த விடயங்களிற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச சமூகத்தை நாடாவில்லை மாறாக வேறுவழியில்லாததால் நாங்கள் சர்வதேச சமூகத்தை நாடுகின்றோம்.

ஒவ்வொரு அரசாங்கமும்; வாக்குறுதிகளை மீறியமை என்ற திட்டமிடப்பட்ட தோல்வியால் இந்த நம்பிக்கையிழப்பு ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியது போல உள்நாட்டு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மையும் இதற்கு ஒரு காரணம் , இந்த நிறுவனங்கள் விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளன,குறைந்த வளங்களை குறைந்த பெறுமானத்தை கொண்டுள்ளன.அந்த நிறுவனங்கள் வெறுமனே கண்துடைப்பிற்காக இயங்குகின்றன.

இலங்கையில் காணப்படும் ஒரு சொல்லாட்சி குறித்து நான் எச்சரிக்க விரும்புகின்றேன் – உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும்.

கடந்த தேர்தல்களின் பின்னரும் புதிய அரசாங்கம் வந்த பின்னரும் இலங்கையை யுத்தத்திற்கு பிந்தைய வெற்றி நாடாக சித்தரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.சர்வதேச சமூகம் புதிய அரசாங்கம் அனைத்து சமூக பிரச்சினைகளிற்கும் தீர்வை காணப்போகின்றது என தெரிவிக்க முயல்கின்றது .

நாங்கள் நேர்மையாக பேசவேண்டும் என்றால் வடக்குகிழக்கில் இன்று காணப்படும்யதார்த்தத்தை பார்க்கும் இந்த மோதலிற்கான அடிப்படை காரணங்கள் தொடர்ந்தும் உயிர்ப்புடன் உள்ளன என்பது நன்கு புலனாகின்றது.

நில ஆக்கிரமிப்புகள் நில அபகரிப்புகள்-  மூன்று மாதத்திற்கு முன்னர் வெளியான  வர்த்தமானி முதல் – தையிட்டி குருந்தூர்மலை மயிலத்தமடு  முதல் மன்னார் வரை நிலங்கள் ஒவ்வொருநாளும் அபகரிக்கப்படுகின்றன.

இராணுவமயப்படுத்தல் அதிகரித்து வரும் ஒரு விவகாரம்.

நாங்கள் மீண்டும் முன்னர் பேசிய செம்மணி விடயம் குறித்து நமது கவனத்தை திருப்பும்போது செம்மணி ஒரு நினைவுச்சின்னமோ அல்லது கட்டிடமோ இல்லை.அது ஒரு தொல்பொருள் தொடர்பான இடமும் இல்லை.

அது அரசாங்கபொறிமுறைகளின் திட்டமிடப்பட்ட திறமையின்மைகள் குறித்து எங்களை கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளும் ஒரு இடம் அது.

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களின் பின்னரும் நாங்கள் கைக்குழந்தைகள் உட்பட பலரின் உடல்களை மீட்டுக்கொண்டிருக்கின்றோம்.

தற்போதுள்ள கேள்வி என்னவென்றால் நாங்கள் உண்மையை தோண்டப்போகின்றோமா அல்லது உள்ளே வைத்து புதைக்கப்போகின்றோமா என்பதே தற்போது எங்கள் முன்னால் உள்ள கேள்வி

ஐக்கிய நாடுகள்மனித உரிமை ஆணையாளர் அவர்களே இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை சர்வதேச கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறலுடன் புதுப்பிக்குமாறும்,சர்வதேச சமூகம் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற  அழைப்பையும் விடுக்கவேண்டும்.நாங்கள் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்.ஆதாரங்கள் வெறும் அறிக்கைகளாகவே அல்லாமல், உண்மையான நீதிக்கு வழிவகுக்கும் வகையில். இது வரும் செப்டெம்பரில் UNHRC தீர்மானங்களுக்கு முன்னேற்பாடாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு சுயாதீனமான பொது வழக்கறிஞர் அலுவலகம் (independent public prosecutor’s office) அமைக்க வேண்டும்—அது அரசியல் அமலாக்கத்திலிருந்து முழுமையாகத் தனித்திருக்க வேண்டும், மேலும் ஐ.நா. ஆதரவுடன் செயல்பட வேண்டும்.

சர்வதேச விசாரணை மற்றும் உள்நாட்டின் அர்த்தபூர்வமான விசாரணை ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பொறிமுறைகளிற்கு ஆதரவளியுங்கள் என இங்குள்ள சர்வதேச பிரதிநிதிகளை கேட்டுக்கொள்கின்றேன்.

இறுதியாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளர் தெரிவித்ததை மீண்டும் நான் வலியுறுத்துகின்றேன்.

தண்டனையிலிருந்து  விலக்களிக்கப்படுதலின் புதைகுழியின் மீது சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது,நீதியில்லாத அமைதி  என்பது தண்டனையிலிருந்து விலக்களித்தலை  ஒரு கொள்கையாக மாற்றிவிடும்.

அந்த தாய்மார்களிற்கும்  தங்கள் நேசத்திற்குரியவர்களை இன்னமும் தேடிக்கொண்டிருப்பவர்களிற்கும்  செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட கைக்குழந்தைகளிற்கும் நாங்கள் எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமனம்

இராணுவத்தின் 67வது தலைமைத் தளபதியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் வரை இராணுவத்தின் 66வது தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கேவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காலாட்படை படைப்பிரிவின் கேர்ணல்  மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத், இராணுவத்தின் 47வது பிரதி தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனமும் 26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் முதல் இராணுவத்தின் 46வது பிரதி தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் லங்கா அமரபாலவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மனிதப் புதைகுழிக்கு எதிர்ப்பு : யாழ். மாவட்ட சர்வமத பேரவை கண்டனம்

யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி மூலம் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது. வெளிப்பட்டுள்ள பேரவலம் எங்களை என்பதைக் குறிப்பிட்டு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

sar மனிதப் புதைகுழிக்கு எதிர்ப்பு : யாழ். மாவட்ட சர்வமத பேரவை கண்டனம்

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனித வாழ்க்கை, எமது சமய விழுமியங்களின்படி, மாண்புமிக்கது. அதனை மதிப்புடன் நோக்குவதும் அறம் மைய ஆன்மிகத்துடன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை, இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து சமயம் மற்றும் பௌத்தம் தெளிவாக விளக்கியுள்ளது. அன்புடனும் நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டிய நாம், எம்மவரது எலும்புகளை செம்மணி உட்பட பல இடங்களிலும், மனித புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கிறோம் என்பது மிகமிக வேதனைக்குரியது.

இது கடவுளுக்கு எதிரான, சமய விழுமியங்களுக்கு எதிரான கொடுமையான செயல். இந்தக் கொடுமையுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் நீதியின் முன்கொண்டுவரப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றின் 46/1 தீர்மானத்தின்படி, இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைக், காலம் தாழ்த்தாது. விரைவாகச் சேகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுக்கிறோம்.

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இந்த புதைகுழிகளுக்குள் எமது உறவுகள் உள்ளனரா?” எனும் கேள்வியை எழுப்புவதை சர்வதேச சமூகம், இலங்கையில் வாழ்வோர் அனைவரும் தெளிவாக செவிமடுத்து, அவர்களுக்கு நீதி கிடைக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். எமக்குத் தெரியவந்துள்ள அனைத்து மனித புதைகுழிகளையும் மீளப்பார்ப்பதும், சர்வதேச கண்காணிக்கப்புடன் அகழ்வாராய்ச்சி மிக வேகமாக நடைபெறவேண்டும்.

இனப்பிரச்சினை தீர்க்கப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இந்த விடயத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாம் முன்மொழிகிறோம். நீதியில்லாமல் அமைதி இலங்கையில் மட்டுமல்ல எங்கும் சாத்தியமில்லை என்பதை இலங்கைக்கும், உலகிற்கும் வலியுறுத்த விரும்புகிறோம். இனம், சமயம், மொழி, நிறம்… எனும் அனைத்து வரையறைகளையும் கடந்து, இலங்கை உட்பட உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதியாக வாழவும், எதிர்கால நம்பிக்கையை இன்று விதைக்கவும், கேவலமான மனித அழிப்பிலே ஈடுபட்டவர்களுடைய மனமாற்றம் தேவை என்பதை சமய விழுமியங்களின்படி வலியுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தொடர்தாக்குதல்!

மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும்  ஆளில்லா விமானங்களும் நேற்று காலை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில் அமைந்​துள்ள அவ்தா மருத்​து​வ​மனை அதி​காரி​கள் கூறும்​போது, “உணவுப் பொருள் லாரி​களை பாலஸ்​தீனர்​கள் நெருங்​கிச் சென்​ற​போது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

இந்த தாக்​குதலில் 25 பேர் இறந்​தனர். 146 பேர் காயம் அடைந்​தனர். இவர்​களில் 62 பேர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் உள்​ளனர். இவர்​கள் காசா​வில் உள்ள பிற மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்” என்றனர். ஆனால் சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் தங்​களை நோக்கி வந்​தவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக இஸ்​ரேலிய பாது​காப்​பு படைகள்​ கூறி வருகின்​றன.

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர்.

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி , யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூன்று நாட்களாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு புதன்கிழமை (25) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி போராட்ட களத்திற்கு சென்ற வேளை , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய் மார்களால் 06 அம்ச கோரிக்கைகள் அடங்கிய செப்பு தகடு கையளிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறை அவசியம்: உயர்ஸ்தானிகரிடம் வடக்கு சிவில் சமூகம் வலியுறுத்தல்

தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் ஓரங்கமாக புதன்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் சந்தித்த உயர்ஸ்த்தானிகர், சுமார் ஒருமணிநேரம் வரை அவர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து மீளக்குடியமர்த்தல், பட்டதாரிகள் முகங்கொடுத்து வரும் வேலையில்லா பிரச்சினை, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள் என்பன தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

அதேவேளை  வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியதன் அவசியமும்  வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று ஏனைய பிரதிநிதிகளில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், புதிதாக கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள், காணி சுவீகரிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், தமிழ்  சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதி பி.என்.சிங்கம், சிவகுரு ஆதினம் வேலன் சுவாமிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஏ.டி.தெலீசன், வட-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதி யோகதாஸா கனகரஞ்சனி, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிச் செயலாளர் கருணாகரன் நாவலன் ஆகியோரின் கையெழுத்துடன் பொறுப்புக்கூறலுக்கான நியாயமான செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தி உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

காணி விடுவிப்பு, இராணுவப் பிரசன்னம் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எடுத்து கூறிய வடக்கு ஆளுநர்

காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (25) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

மீள்குடியமர்வு – காணி விடுவிப்புத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை ஆணையாளர் கேட்டார். மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கு அமைவாக படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன என்று சுட்டிக்காட்டினோம்.

மேலும், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகளை சுவீகரித்துள்ளன. இதனால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் என்பன இழக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் மாவட்ட ரீதியிலான குழுக்களை அமைத்து இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலும் ஆணையாளரும், ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர். அந்தப் பொறிமுறை சரியானது என்றும், ஆனால் மக்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்டச் செயலர்கள் இதன்போது உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினர்.

மேலும், உயர்ஸ்தானிகர் இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும் இன்னமும் சில பிரச்சினைகள் அதில் உள்ளன எனவும் உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினேன். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் கரிசனையை வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டேன்.அத்துடன் கடந்த காலங்களிலிருந்த அரசாங்கங்கள் வெளிப்படுத்திய வேறுபாடுகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது முற்போக்கானது என்பதையும் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தினேன்.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதற்குரிய புனர்வாழ்வு நிலையம் என்பன தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவில்லை என்பதையும், விரைவில் அதை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்கின்ற விடயத்தையும் உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினேன்.

அந்தப் புனர்வாழ்வு நிலையங்கள் யாரால் இயக்கப்படும் என்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார். இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்தால் மாத்திரமே அவர்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்க முடியும் என்ற விடயத்தையும் உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினேன்.

மேலும், வடக்கில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் என்னாலும், மாவட்டச் செயலர்களாலும் உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தப்பட்டது, என ஆளுநர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் – தமிழ் அரசியல்வாதிகள் சந்திப்பு

யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை புதன்கிழமை இரவு (25) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.