போர் நிறுத்தமும் புதிய களமுனைகளின் மாற்றமும் -வேல்ஸில் இருந்து அருஸ்
ஜனாதிபதியின் செயலாளருக்கும் நெதர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது நெதர்லாந்தில் உள்ள இலங்கையின் பழங்காலப் பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை மீளக் கொண்டுவருவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தப் பணியில் இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பொனி ஹோர்பாக் (Bonnie Horbach), இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான வாய்ப்பாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
காலனித்துவ நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த, நெதர்லாந்து அரசாங்கம் காலனித்துவ காலத்து கலைப்பொருட்களை உரிய நாடுகளுக்கே மீண்டும் திருப்பி வழங்குவதற்கான கொள்கை முடிவை எடுத்துள்ளது. அதன்படி, அவர்கள் அந்தக் கலைப்பொருட்களை மீளமைப்பதற்கான ஆரம்பமாக ஒரு ஆராய்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளதுடன், அந்நாட்டில் உள்ள காலனித்துவ கலைப்பொருட்கள் தொடர்பில் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பமாக, இலங்கையின் தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் தலைமையில் இரு நாட்டு ஆய்வாளர்களும் நெதர்லாந்தில் உள்ள ஓலைச்சுவடி கையெழுத்துப் பிரதிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கலாசார அலுவல்கள் தொடர்பான நெதர்லாந்து தூதுவரின் ஆலோசகர் கிரிஷேன் மெண்டிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
செம்மணியில் இன்றும் 4 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் 4 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை 37 மனித என்புக் கூட்டு தொகுதிகள் குறித்த புதைகுழியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 30 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்தார். அத்துடன் 4 என்புக் கூட்டு தொகுதிகள் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சித்துபாத்தி மனித புதைகுழியை அண்மித்த பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மேற்பார்வையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவர்கள் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் 24 ஆயிரம் ஏக்கர் காணிகளை மீள பொதுமக்களிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் உறுதி
வவுனியா மாவட்டத்தில், 24 ஆயிரம் ஏக்கர் காணிகளை மீள பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட விவசாய அமைப்புகளுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய காணி கையகப்படுத்தல் வர்த்தமானி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரச உத்தியோகத்தர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, காணி தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
‘மக்கள் காணிகளின் உரித்துகளை இழந்துள்ளனர். மறுபுறம், பாதுகாப்பு தரப்பும், வனவளத்திணைக்களமும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன’.
இது குறித்து உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி, அவற்றை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதேநேரம், வவுனியாவில் வனவளத்திணைக்களம் கையகப்படுத்திய விவசாய நிலங்களை மீள மக்களிடமே பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யப்படுவதுடன், அதற்கு குறித்த திணைக்களங்கள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2026 ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல்
2026 ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரித்தல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘செழிப்பான நாடு – அழகான வாழ்வு’ எனும் கொள்கைக்கு அமைய 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரிக்கும் போது கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய அமைச்சுக்களின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்கள் அடையாளங் கண்டுள்ள வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து அமைச்சுக்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செம்மணி வழக்குக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அரசாங்கம் அறிவிப்பு
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய (02) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த விடயம் தொடர்பான வழக்கொன்று கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி அழைக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நீதியமைச்சின் தரப்பில் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்குக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும், வழக்கு இடம்பெறுவதால் இது குறித்த மேலதிக விடயங்களை தம்மால் தெரிவிக்க முடியாது எனவும் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, செம்மணி பகுதியில் ‘அணையா தீபம்’ போராட்டம் இடம்பெற்ற வேளையில் அங்கு சென்ற அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு எதிர்ப்பு வெளிடப்பட்டமை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த அமைச்சருக்கு எதிர்ப்பு உள்ளதாக முன்கூட்டிய புலனாய்வு தகவல்கள் கிடைக்கவில்லையா? என்று கேள்வி எழுப்ப்பட்ட போதிலும் அமைச்சரவை பேச்சாளர் அதற்கு எந்தவித பதிலையும் வழங்கியிருக்கவில்லை.
அணு உலை விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க இலங்கையில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கை
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கடற்படைத் தளங்களில் இந்த அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
அண்டை நாடுகளில் உள்ள அணு மின் நிலையங்களில் ஏற்படும் இயற்கை அல்லது மனிதனால் ஏற்படும் விபத்துகள் காரணமாக நாட்டிற்குள் நுழையக்கூடிய கதிர்வீச்சைக் கண்டறிய இந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று எரிசக்தி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை!
இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்.
கீரிமலை ஜனாதிபதி மாளிகை: காணிக்கு அனுமதிபெறவில்லை நகர அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் தெரிவிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள காணிக்கு சட்டபூர்வ அனுமதிபெறப்படவில்லை. நாம் இந்தக் காணிகளுக்கு சட்டபூர்வ அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் காணிக்குரிய சட்டபூர்வ அனுமதியைப் பெற்றுவிடுவோம். அதன்பின்னர் மக்களுக்குப் பயனுள்ள வகையில் ஜனாதிபதி மாளிகையைப் பயன்படுத்துவோம் – என்றார்.
இந்த ஜனாதிபதி மாளிகை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி 3.5 பில்லியன் ரூபா செலவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்; 13 நாடுகளுக்கு புதிய சட்டம் நடைமுறை
சர்வதேச நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்பவர்களுக்கான புதிய சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 13 நாடுகளில் இப்புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
சுயதொழில் மூலமான தொழில்துறை மற்றும் நிறுவனத்துறை வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள், குறித்த நாடுகளில் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டியதை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் அமுல்படுத்தியுள்ளன.
ஏற்கனவே கடந்த ஜூன் 07 ஆம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. நேற்று வரை இந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறைக்கு அமைய, சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், இஸ்ரேல், ஜோர்தான், லெபனான், மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புக்கு செல்வோர் இப்பதிய திட்டத்தை பின்பற்றுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பதிவைப் பெறுவதற்கு அவர்களின் சேவை ஒப்பந்தம் அந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவுகளால் சான்றளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்காக 60 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கடந்த காலங்களில், ஆட்கடத்தல் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.