ஈழத் தமிழர் இறைமை உள்ளூராட்சி வழி மீளுறுதியாகுமா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 338

சமூக கொள்கையாக்கமோ அல்லது பொருளாதாரத் திட்டமிடலோ அல்லது அரசியல் உறுதிப்பாடோ இல்லாத ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற தங்கள் கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்து ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சியை அமைக்க முயற்சித்துக் கொண்டிருப்பது இவ்வாரத்து ஈழத்தமிழர் அரசியல் போக்காக உள்ளது.இந்நேரத்தில் இவர்களின் நோக்கு கடந்த 16 ஆண்டுகளாகச் சிறிலங்கா அரசாங்கத்தை மையப்படுத்தி ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வை வீணடித்து வருவது போலவே ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சியையும் தங்கள் பதவியை நோக்காகக் கருதி சிறிலங்காவின் அரசியலில் தங்களை நிலைநிறுத்த முயன்று பாழடிக்கப் போகின்றார்களா? என்பதே இன்று உள்ள முக்கிய கேள்வி என்பதை இலக்கு தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் ஈழத்தமிழர்கள் முன்வைக்க விரும்புகின்றது.
சுவிட்சலாந்தில் அமெரிக்க வர்த்தகப் போரை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுக்கள் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தொடங்கவுள்ள வாரம் இவ்வாரம் . சம்பந்தப்பட்டவர்களின் உரையாடல் வழியாகப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய உலகாக சமகால உலகு மாறியுள்ளதற்கான உதாரணமாக இது அமைகிறது. ரஸ்ய அமெரிக்க உக்ரேன் போர் குறித்த பேச்சுக்கள் இவ்வாரத்தில் மத்திய கிழக்கின் மூன்று நாடுகளுக்கு அமெரிக்க அரசுத்தலைவர் மேற்கொள்ளப் போகின்ற வருகைகளின் பின்னுள்ள நேரடியுரையாடல் நோக்குகள். ஈரானின் சுதந்திரமான அணுசக்தி வளர்ச்சியினை அமெரிக்கா மட்டுப்படுத்த எடுக்கும் பேச்சுக்கள். யேமனின்
துறைமுகங்களையும் மக்களையும் வான்வழி தாக்கிப் பலவீனப்படுத்திவிட்டு குதீஸ் அமைப்பினருடன் மத்திய கிழக்கு நாட்டையே நடுவராக மேற்கொள்ளப்பட்டுள்ள சமாதானம். பிரான்சுக்கு சிரியாவின் இடைக்கால அரசத்தலைவரின் உத்தியோக பூர்வ வருகை. நோர்வேயில் அமெரிக்காவின் முப்பது நாள் போர்நிறுத்தக் கோரிக்கைக்கு பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய அமெரிக்க நட்பு நாடுகளின் ஆதரவு மாநாடு. இன்று 10.05. 2025 இல் உக்ரேனில் இடம்பெறவுள்ள பிரித்தானியா தொடக்கி வைத்த “விரும்பியர்களின் கூட்டணி” மாநாடு என்பன எல்லாமே உலகம் உரையாடல் ராஜதந்திரத்தை முன்னிறுத்தி அந்த அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உலகின் மற்றைய நாடுகளின் மூலவளங்களையும் மனிதவலுவையும் மூலதனங்களையும் பயன்படுத்தல் என்ற அரசியல் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் செயலாகவே உள்ளது. இந்நிலையில் ஒரு மக்களின் உள்ளூராட்சி என்பது அவர்களின் மண்ணின் மேலான உரிமையின் அடிப்படையில் அவர்களின் நாளாந்த வாழ்வியலை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடாகும் என்பதை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் கவனத்தில் எடுத்து எவ்வாறு உலகின் ஒவ்வொரு தேச இனமும் தங்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகத் தளங்களை பொருளாதாரத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் செயற்படுத்துகின்றனவோ அவ்வாறு ஈழத்தமிழர்களின் நாளாந்த பொருளாதாரத்தை மேம்பட வைக்கக் கூடிய முறையில் தங்கள் பொருளாதாரத் திட்டமிடலை ஈழத்தமிழ் மக்கள் முன் வைப்பார்களா?
இன்று உலகமயமாக்கல் தோல்வி அடைந்து விட்ட நிலையில் மண்சார்ந்த அந்த மண்ணின் மக்கள் நலன் சார்ந்த தாயக தேசிய தன்னாட்சியுடன் கூடிய உலக இணைப்பு என்பது வேகப்படும் நிலையில் ஈழத்தமிழர்களின் தாயகத்தின் வளங்கள் என்ன? மக்களின் பலங்கள் என்ன? இவற்றை மேம்படுத்துவதற்கான நலத் திட்டங்கள் என்ன? இவை தெளிவாக்கப்பட வேண்டிய நேரமிது. இதற்கு மக்களின் சிவில் அமைப்புக்கள் விரைவாகவும் உறுதியாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவை இணைக்கப்பட வேண்டும். கட்சி அரசியல் கடக்கப்பட வேண்டும். மக்கள் நல சமுக கொள்கை வகுப்பு மனித நல பொருளாதாரத் திட்டமிடல் நாட்டின் மண்ணை மக்களைப் பேணும் சமகாலத்தன்மையுடன் ஒப்புரவாகக் கூடிய அரசியல் கொள்கை கோட்பாடாக மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும். இங்கு அடிப்படையான ஈழத்தமிழர் தாயக தேசிய தன்னாட்சி முறைமைக்குப் பங்கம் வராத வகையில் இம் மீள்வரைவு செய்யப்பட வேண்டும். 1978 முதல் 2009 வரையான ஈழத்தமிழர்களின் நடைமுறையரசு தேசியத் தலைவரின் தலைமையில் அதற்கான சீருடை அணிந்த முப்படைகள் சட்டவாக்க சட்ட அமுலாக்க நடைமுறைகள் நிர்வாகக் கட்டமைப்புக்களுடன் 31 ஆண்டுகள் உலகின் ஈழத்தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் மண்ணின் வளத்தையும் அனைத்துலகத் தொடர்பையும் உறுதிப்படுத்தும் நடைமுறையரசாக தமிழீழம் என்னும் ஈழத்தமிழர் தாயகத்தில் பரிணமித்து உலகின் ஏற்புடைமையை ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் கோரிநின்ற நேரத்தில்தான் 2009ம் ஆண்டின் மே 18 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் சிறிலங்காவும் அதன் நேசப்படைகளான பிராந்திய மேலாண்மை உலக வல்லாண்மைப் படை அணியினரும் இணைந்து உலகின் 21ம் நூற்றாண்டின் கிட்லரிசத்தையும் விடக் கொடிய ஈழத்தமிழின அழிப்பின் மூலம் மீளவும் சிறிலங்காவின் ஈழத்தமிழர் தாயக ஆக்கிரமிப்பை நடைமுறைப்படுத்தினர். இவற்றை எல்லாம் இங்கு இலக்கு மீள்நினைவுபடுத்தவதற்குக் காரணம் சுமந்திரனுக்கோ அல்லது தமிழரசுக்கட்சியென அரிதாரம் பூசி நடிக்கும் இன்றைய தமிழரசுக்கட்சிக்கோ ஈழத்தமிழரின் இறைமை குறித்தோ அதன் செயற்பாட்டு நிலையான தாயாக தேசிய தன்னாட்சி உரிமைகள் குறித்தோ எந்தப் புதிய வரைவிலக்கணங்களையும் செய்யும் உரிமையில்லை என்பதை மீள்நினைவூட்டவேயாகும்.
மக்களாணை வழி 1978 முதல் 2009 வரை அமைந்த ஈழத்தமிழர் தாயக தேசிய தன்னாட்சி வாழ்வை சனநாயக வழிகளில் மீட்கவேண்டிய பணியாகவே ஈழத்தமிழரின் அரசியல் வாழ்வு தொடரப்பட வேண்டும். இதற்கு மக்களின் சிவில் அமைப்புக்கள் சுதந்திரமாகக் கட்டமைக்கப்படுவதே முக்கியம். இதற்கானதே ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சி. இதனை உணர்ந்து பேசுங்கள் இணையுங்கள் செயற்படுங்கள் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
உக்ரேன் மண்ணின் கனிம வளத்தில் தனக்கான சட்டபூர்வப் பங்களிப்பை உறுதிப்படுத்திய நிலையில் அமெரிக்கா ரஸ்யாவிடம் 30 நாள் போர்நிறுத்தத்தை இவ்வாரத்தில் வலியுறுத்துகிறது. அதே வேளை சீனப்படைப்பிரிவின் பங்கேற்புடன் சீன ரஸ்ய அரசுத்தலைவர்கள் அருகருகே இருக்க ரஸ்யாவின் உலக சாதனைகளில் ஒன்றான கிட்லரிசத்தை வென்ற வரலாற்று நிகழ்வின் 80வது ஆண்டு கிரெம்ளினில் இடம்பெற்று அமெரிக்காவால் ரஸ்ய சீனக் கொள்கை அடிப்படையிலான தோழமையைப் பிரிக்க இயலாது என்பது மீளவும் உலகுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டியது கொள்கைகளின் ஒன்றிப்பே பலம் பொருந்திய கூட்டாண்மைகளை உருவாக்கும் என்பதே. ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் முன் தங்களின் கொள்கைகள் என்ன என்பதை தெளிவாக இனியாவது முன்வைத்து அந்தக் கொள்கைகளின் இணக்கப்பாட்டில் மக்களின் உள்ளூராட்சியை உயிர்பெறச் செய்ய வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது. மேலும் இந்திய பாகிஸ்தானிய போர் என்பது ஈழத்தமிழர்களின் தாயகத்தில் எத்தகையதாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிகமுக்கிய சிந்தனையாக இவ்வாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு மட்டுமல்ல காலநிலைச் சீர்கேடு உலகின் பொருளாதாரப் போர் எல்லாவற்றுக்கும் ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சியில் கட்டமைக்கப்படக் கூடிய ஆபத்து முகாமைத்துவ எதிர்கொள்ளல் கட்டமைப்புக்களே பாதுகாப்பு அரண்களாக அமைய முடியும். எனவே உள்ளூராட்சியின் பலம் என்பது மக்களின் மனிதவலு இணைப்பு மண்ணின் மூலவள இணைப்பு மண்ணின் பொருள் வளம் உள்ளவரின் மூலதன இணைப்பு என்பதை மறவாது சிறிலங்காவிடம் மண்டியிடுவதை விடுத்து இவற்றைப் பலப்படுத்தக் கூடியதாக வெற்றி பெற்றவர்கள் ஈழத்தமிழரின் இறைமையை உள்ளூராட்சி வழி மீளுறுதி செய்ய ஒன்றுபடுங்கள்
என்பதே இலக்கின் ஆணித்தரமான வேண்டுகோள் அல்ல ஈழத்தமிழர் சார்பான ஆணை.
ஆசிரியர்

Tamil News