ஈழத் தமிழர் நில, கடல் உரிமைகளை மீளுறுதி செய்ய முறையே 16, 60 நாட்களே உள | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 335

இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற வரலாற்றுக்கு முன்புள்ள காலம் முதலாக இன்றுவரையுள்ள தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையை உள்ளூராட்சித் தேர்தலில் மீளுறுதி செய்ய ஈழத்தமிழர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க வைக்க உழைக்கும் காலமாக இன்று முதல் மே மாதம் 06ம் நாள் வரையான 16 நாட்களே உள. இன்று உள்ளூர் ஆட்சித் தேர்தல் மேடைகளில் ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தை அவர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரையான இறைமையின் அடிப்படையில் ஈழத்தமிழர் தாயகமாக அடையாளப்படுத்தாது சிறிலங்கா நாட்டின் வடக்கு கிழக்கு என அடையாளப்படுத்துவதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத அரசாகவே தன்னை வெளிப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈழத்தமிழர்களை சிறிலங்கா அரசில் வாழும் ஒரு சமுகமாக மாற்றும் நுட்பமான ஈழத்தமிழினத்துடைப்பு அரசியலை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இத்தாலியின் அதி வலதுசாரி ஆதரவுப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அமெரிக்க அரசத்தலைவர் இடம் சென்று ஐரோப்பிய தேசிய வாததத்தை அமெரிக்காவின் அமெரிக்கத் தேசியவாதத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகளைச் செய்த இந்த வாரத்தில் இலங்கையில் ஈழத்தமிழ்த்தேசியத்தின் இருப்பையே இல்லாதொழிக்கும் வகையில் ஈழத்தமிழர்களை குடியேற்றச் சமுகமாக அநுர அரசு மாற்றிக்கொண்டிருப்பது சிங்களத் தேசிய வாதத்தையே இலங்கைத்தீவின் ஒரே தேசியத்தன்மை எனக் காட்டும் அதி வலதுசாரிச் சிந்தனையை விட மோசமான கிட்லரிச மீட்டுருவாக்கமாக உள்ளது. இந்த சிங்கள கிட்லரிசத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த ஏப்ரல் மாதத்து முதல் வாரத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்க அநுராதபுரத்தில் பௌத்த நாடு சிறிலங்கா என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினார். இதனை மக்கள் மயப்படுத்தும் வகையில் சிறிலங்காவின் பிரதமர் ஹரிணி அமரசூரிய கொலன்னாவ பண்டைய ரஜமகாவிகாரையில் நடைபெற்ற தலைமை விகாராதிபதி தம்மிக்க தேரரின் சித்திரைப்புத்தாண்டு அரச எண்ணெய் பக்தர்களுக்கு தலையில் வைக்கும் அரச விழாவில் கலந்து சிறப்பித்து பௌத்த பாரம்பரியத்தை மீளுருவாக்கும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்குப் புத்துணர்வு அளித்தார். இதைத்தொடர்ந்து பௌத்த வரலாற்று மேம்படுத்தலாகவும் சிறிலங்கா பௌத்தத்தின் அனைத்துல கப்படுத்தலாகவும் சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்க மல்வத்த அஸ்கிரிய தேரர்களின் அனுசரணையுடன் ‘தலதா வழிபாடு’ என்னும் 16 ஆண்டுகளுக்கு ஒருமுறை பௌத்தர்களின் புனித சின்னமான புத்தரின் தந்ததாதுவை 10 நாள்களுக்கு கண்டி தலதா மாளிகையில் வழிபடும் விழாவை ஏப்ரல் 18 அன்று வியட்நாம்,பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீனம், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, யப்பான், தாய்லாந்து, கனடா, தென்கொரியா ஆகிய நாடுகளின் தூதுவர்களையும் தன்னோடு அழைத்துச் சென்று அவ்விழாவை அரசவிழாவாக மட்டுமல்ல அனைத்துலகப் பௌத்தப் பெரு விழாவாகவும் இதுவரை முன்னைய சிங்கள அரசாங்கங்கள் செய்யாத பௌத்த மேம்படுத்தலாகச் செய்து முடித்துள்ளார்.
இவைகள் எல்லாம் தேசிய மக்கள் சக்தியும் முன்னைய சிறிலங்காவின் அரசாங்கங்கள் போல பௌத்த சிங்கள பேரினவாதத்தின் அரசாங்கம் தான் என்பதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறிலங்காவில் இனப்பிரச்சினையே இல்லை சமுகங்களின் பிரச்சினையே உள்ளன என்ற மகிந்த சிந்தனையையும் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற கோத்தபாயாவின் சிந்தனையையும் இணைத்து எங்களில் நம்பிக்கை வைத்து தங்களின் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்காது, எமக்கு வாக்களித்த சமுகங்களுக்கு அவர்களின் நம்பிக்கையை ஏற்று சிங்கள மேலாண்மை ஆட்சி அமைப்புக்குள் பல சலுகைகள் அளிப்போமென மக்களை மயக்கும் அழகிய உரைகளை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டி விகாரையினைக் கட்டி முடிக்கு மட்டும் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பை மதவாதம் என்று விமர்சித்து கட்டிடம் கட்டுவதற்கு உதவிய தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வார்த்தைகளால் அள்ளி வழங்குகின்றார்களே தவிர நடைமுறையில் ஒன்றைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிப்படையாகவே இனவாதத்தை வெளிப்படுத்திய முன்னைய சிங்களத்தலைமைகளை விட இத்தலைமை ஈழத்தமிழர்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் மிகமோசமானவர்கள் என எச்சரிப்பும் செய்துள்ளார். கூடவே தமது கட்சியின் ஆட்சியில் இருக்கக் கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கு கண்மூடிக் கொண்டு அவை கேட்கும் நிதி ஒதுக்கீட்டை வழங்குவோம். தங்களின் கட்சியின் ஆட்சியில் இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு அவை கேட்கும் நிதி ஒதுக்கீட்டை மீளாய்வுக்கு உட்படுத்தி ஆராய்ந்து காலதாமதமாகவே நிதி வழங்குவோம் என சிறிலங்காவின் அரசத்தலைவர் யாழ்ப்பாண தேர்தல் மேடையில் வைத்துப் பேசியது எத்தகைய சனநாயக விரோத தன்மையானது என்பதையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தி தேசிய மக்கள் சக்தியின் பேச்சுக்களில் ஈழத்தமிழரின் தேசிய இருப்பையே இல்லாது செய்வதற்கான நுட்பமான உத்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் தெளிவாக்கியுள்ளார். இதனைக் கவனத்தில் எடுத்து 16 நாட்களும் நிலத்தின் மேலான ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதி செய்ய சைக்கிளுக்கு வாக்களிக்க உழைக்க வேண்டிய கடமை ஒவ்வொரு ஈழத்தமிழர்க்கும் உள்ளது என்பதை இலக்கு வலியுறுத்தும் அதேவளையில் உலகமே சமகாலப்பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு கூட்டாண்மை பங்காண்மை அரசியலில் பயணிக்கும் இன்றைய காலத்தில் தமிழரசுக்கட்சி எதற்காக ஈழத்தமிழர்களின் தேசியக் கட்சிகளின் கூட்டாண்மை பங்காண்மை செயற்பாட்டுக்கு மறுத்தது என்பதையும் ஈழத்தமிழர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் இலக்கு வேண்டுகிறது.
மேலும் தமிழக அரசு 61 நாட்களுக்கு மீன்களின் சினைவளத்தைப் பேணும் வகையில் கடலில் இயந்திர மயமாக்கப்பட்ட மீன்பிடித்தலுக்குத் தடையினை வழமைபோல் அறிவித்துள்ளது. இந்த இருமாதங்களும் ஈழத்து மீனவர்கள் தமிழக மீனவர்களுக்குத் தங்களுக்கு கடலின் மேலுள்ள இறைமையினை எடுத்து விளக்கும் காலகட்டமாகப் பயன்படுத்தி ஈழத்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய மீன்பிடி ஒழுங்குமுறையை நிறுவிக்கொள்ள வேண்டுமென்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது. உண்மையில் இவ்விடயத்தில் இந்த மீனவ சமுகங்களிடை இணைப்புப் பாலமாக விளங்கக் கூடிய கத்தோலிக்க திருச்சபை இருபக்கத்து மீனவர் களிடையான சந்திப்புக்களுக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்பதையும் இலக்கு எடுத்தியம்ப விரும்புகிறது. இரண்டாயிரம் படகுகளும் 400 றோலர்களும் தமிழகத்தில் கரைஓதுக்கப்பட்டுப் பழுது பார்க்கப்பட்டுச் சீர் செய்யப்படும் இக்கால கட்டத்தில் ஈழத்து மீனவர்களுக்கும் அவர்களது மீன்பிடி றோலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனைத்துலகிலும் வாழும் ஈழத்தமிழர்கள் ஏற்புடைய உதவிகளைச் செய்ய வேண்டுமென இலக்கு வலியுறுத்த விரும்புகிறது. அதே வேளை ஏற்கனவே மடிவலைகளைப் பயன்படுத்தி மீன்வளத்தையே அழிக்கும் மீன்பிடித்தலைச் செய்வதைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள இந்திய சிறிலங்காச் சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்த இருநாட்டு அரசாங்கங்களுக்கும் அனைத்து உலகிலும் வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் தங்கள் நாட்டு அரசாங்கங்களை அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு கேட்க வேண்டுமென்பதும் இலக்கின் கருத்தாக உள்ளது. அவ்வாறே காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளத்தில் தொடங்கப்பெற்றுள்ள பொருளாதார முயற்சிகளில் முப்பது ஆண்டு குத்தகையுடன் கூடிய இடங்களும் வர்த்தகச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றில் ஈழத்தமிழர்கள் பொருளாதார மேலாண்மை பெறக்கூடிய வகையில் தாயக உலக ஈழத்தமிழ் வர்த்தகர்கள் உடன் செயற்பட வேண்டுமென்பதும் இலக்கின் இவ்வார வேண்டுகோளாக உள்ளது.
ஆசிரியர்

Tamil News