ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை வலுப்படுத்தும் வகையிலேயே சிறிலங்காவின் 2025ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 321

அனைவருக்கும் எங்கும் மகிழ்ச்சி பொங்கிட வைக்கும் தைப்பொங்கல் வாழ்த்து. கூடவே வாழும் நாடுக ளில் சமத்துவத்தையும் சமுகநீதியையும் நிலைநிறுத்த தைத்திங்களைத் தமிழர் மரபு மாதமாகக் கொண்டாடும் கனடியத் தமிழருக்கும் பிரித்தானியத் தமிழருக்கும் தமிழர் மரபுமாத வாழ்த்து. இனத்துவச் சிறுபான்மையினர் தாங்கள் வாழும் நாடுகளில் நாட்டுக்கான தங்கள் பங்களிப்புக்களை வெளிப்படுத்திச் சமத்துவத்தையும் சமூகநீதியையும் உறுதிப்படுத்துவதற்கே “மரபு மாதம்” அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வகையில் இலங்கையில் 1983 ம் ஆண்டு யூலையில் சிறிலங்கா அரசாங்கம் நிகழ்த்திய ஈழத்தமிழின அழிப்பை அடுத்து பிரித்தானியாவுக்கும் கனடாவுக்கும் ஈழத்தமிழர் அரசியல் புகலிடம் கோரி பெருமளவில் புலம்பெயர்ந்து பின்னர் இந்நாடுகளின் இனத்துவச் சிறுபான்மை இனங்களாக வாழ்கின்ற வரலாற்றுப் பரிணாமத்தின் விளைவாக கனடாவில் கனடாவின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வாழ்வுக்கு கனடியத் தமிழர்கள் அளித்த-அளிக்கிற அளப்பரிய பங்களிப்புக்களை கனடாவின் அனைத்துக் குடிகளுக்கும் வெளிப்படுத்திக் கனடியத் தமிழர்கள் தங்களின் சமத்துவத்தையும் சமுகநீதியையும் உறுதிப்படுத்திக் கொள்ள ஜனவரி மாதத்தை “தமிழர் மரபு” மாதமாகக் கனடா பிரகடனப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்திலும் சில இலண்டன் கவுன்சில்களும் இலண்டன் பெருநகர் முதல்வர் அலுவலகமும் ஈழத்தமிழரின் வேண்டுகோளின் பேரில்”தமிழர் மரபு மாதமாக” ஜனவரியை முன்னெடுக்க அனுமதி வழங்கின. இதன் அடிப் படையில் அந்த அந்தக் கவுன்சிலில் வாழும் பிரித்தானிய தமிழரும்
தமிழ் மரபு மாதமாக இம்மாதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தமிழ் மரபுமாதத்தில் கனடாவிலும் இங்கிலாந்திலும் வாழும் அனைத்து மக்களுக்கும் ஈழத்தமிழர் இந்நாடுகளுக்கு ஆற்றிய ஆற்றும் அளப்பரிய பங்களிப்புக்களும் இயன்ற அளவு அறிவாலும் கலையாலும் பகிரப்படவேண்டும். அத்துடன் ஈழத்தமிழர் இந்நாடுகளுக்கு வந்து அரசியல் புகலிடம் கோரிய வரலாற்றின் காரணங்களையும் அவை இன்னமும் 1983 முதல் இன்று வரை 41 ஆண்டுகள் அனைத்துலக நாடுகளாலும் அமைப்புக்களாலும் தீர்த்து வைக்கப்படாததின் சமகால விளைவுகளையும், இம்மாதம் முழுவதும் 01. பள்ளிகளில் பல்கலைக்கழகங்களில் அறிவியல் வரலாற்று ரீதியாக மாணவர்களுக்கும் 02. சமகால நிலைமைகளையும் ஈழத்தமிழரின் தொன்மையின் தொடர்ச்சியின் தன்மைகளையும் ஊடகங்கள் வழி அனைத்து உலகிற்கும், 03. நேரடிச் சந்திப்புக்கள் வழி நாட்டின் உள்ளூர் அரசியல் தலைமைகள் மக்கள் அமைப்புக்கள் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். இத்தெளிவாக்கல் வழி ஈழத்தமிழரின் வெளியகத் தன்னாட்சி உரிமையினை ஈழத்தமிழர்கள் பெருமளவில் குடிகளாக வாழும் பிரித்தானியாவும் கனடாவும் அங்கீகரித்து ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கு இலங்கைத் தீவில் தீர்வுக்கு உதவுவது இந்நாடுகளின் ஈழத்தமிழர் தாயகத்துடனான கூட்டாண்மையும் பங்காண்மையும் வலுப்பெற வைக்குமென்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 1வது வரவுசெலவுத் திட்டமான 2025ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திலும் முன்னைய சிறிலங்கா அரசாங்கங்களின் வழியிலேயே ஈழத்தமிழர் இறைமை நீக்கம் ஈழத்தமிழர் தேசிய நீக்கம் என்பவற்றை வேகப்படுத்தி அனைவரும் சிறிலங்கன் என்கிற அரசியலமைப்பால் ஈழத்தமிழரின் தேசஇனத்தன்மையை வலுவிழக்கவைக்க உதவக்கூடிய வகையிலேயே நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்காக கடந்த 2024ம் ஆண்டை விட 5298 கோடியே 65 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கி மொத்தம் 61744 கோடியே 50 இலட்சம் ரூபா இவ்வாண்டில் வழங்கப்பட்டுள்ளமை உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாக்கியுள்ளது ஏன் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தைப் பாதுகாப்புக்குச் செலவிட வேண்டும்? எந்த நாட்டுடன் சிறிலங்கா போர் செய்யப் போகிறது என்ற இயல்பான கேள்வியை முன்வைக்கும் எவருக்கும் இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு ஈழத்தமிழர் தாயகத்தில் ஈழத்தமிழரின் இறைமை நீக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்களுக்கான பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு என்பது விடையாக அமைகிறது.
அவ்வாறே பௌத்தத்துக்கு பௌத்த கலாச்சாரத்துக்கு முன்னுரிமை என்ற அதே பழைய நிலைப்பாட்டையே மாற்றத்துக்கான அரசாங்கம் என்கிற தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கொண்டுள்ளமையைப் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சுக்கு 13,725,000,000 ரூபா. பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 3,563,000,000 ரூபா, முஸ்லீம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு, 210,000,000 ரூபா, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 270,000, 000 ரூபா, இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 300,000,000 ரூபா என்ற நிதி ஒதுக்கீடுகள் உறுதி செய்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் முன்னர் எந்தக் குறைபாடுகள் இலங்கைத் தீவின் மக்களின் சமத்துவ வாழ்வுக்குச் சகோதரத்துவ வாழ்வுக்குச் சுதந்திர வாழ்வுக்கு பாதகமாக இருந்தனவோ அவற்றை மீளவும் உறுதிப்படுத்தும் நிலையில்தான் தேசிய மக்கள் சத்தியின் 2025 வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது. சிறிலங்காவின் சிங்கள ஆய்வாளரரன முனைவர் ஜெகான் பெரேராவே தூய்மையான சிறிலங்கா போன்ற முடிவெடுக்கும் அமைப்புக்களுக்கு அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டவர்கள் பெரும்பான்மைச் சமுகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது கடந்த கால நினைவுகளை எழுப்பக் கூடியதாக உள்ளதென்று நாளாந்தப் பத்திரிகைகளில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளமை தேசிய மக்கள் சத்தி இனத்துவச் சிறுபான்மையினங்களை எந்த அளவுக்கு முடிவெடுக்கும் உரிமையற்றவர்களாக இன்றும் நடாத்துகிறது என்பதை உலகிற்குத் தெளிவாக்குகிறது.
இந்நிலையில் கவர்ச்சிகரமான பேச்சுக்கள் வழி சிறிலங்காவினர் அனைவருக்குமான சமத்துவ ஆட்சி என்பதன் உள்நோக்குகளை உணராத ஈழத்தமிழ் இளையோரும் தெரிந்தும் இணைந்து வாழ்ந்து அரசியல் வாழ்வைத் தங்களது சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழர் தாயகப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்கான வெற்றிக்குக் காரணமாகும் நிலையிலேயே இன்று உள்ளனர். தேசிய மட்ட ஆட்சி யென்பது சிங்கள பௌத்தர்களுக்கே என்பது உறுதியான நிலையில் உள்ள இலங்கைத் தீவில் கிராமங்கள் நகரங்கள் வழியான சக்தியளித்தல் வழியாகத் தான் ஈழத்தமிழர் இறைமையும் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளும் மக்கள் மனநிலையில் நிலைப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் இறைமை குறித்த அறிவார்ந்த விழிப்புணர்வும் தேசிய வாழ்வுக்கான ஈழத்தமிழரின் ஒருமைப்பாட்டுடன் கூடிய ஒருமித்த வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படாவிட்டால் ஈழத்தமிழர் இலங்கைத் தீவினர் என்ற தேசத்தன்மையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையுடன் இலங்கைத் தீவில் வாழ்கின்றனர் என்ற உண்மையும் தேய்வடைந்து ஈழத்தமிழர் சிங்கள தேசத்தில் சிங்களவர்களில் தங்கி வாழும் உரிமைகளற்ற சமுகமாக அடிமைப்படுவர் என்பதே இலக்கின் கருத்து.
இந்நிலை தோற்றுவிக்கப்பட்டால் அமெரிக்காவின் ஜனவரி 20ம் திகதிக்கு பின்னதான டிரம்பின் அரசியல் அநுரகுமர திசநாயக்காவை நண்பராக்கி எப்படி கனடாவில் பனமாவில் கிறீன் லாண்டில் ஆட்சிப்பரப்பை அகலப்படுத்தப்பார்க்கின்றதோ அவ்வாறே இலங்கையிலும் அகலப்படுத்த முயலலாமென்பதால் ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினை மேலும் சிக்கலாகும் என்பது இலக்கின் எச்சரிப்பாகவுள்ளது.

Tamil News