இறைமையை மீளுறுதி செய்து பாதுகாப்பான அமைதி வாழ்வும் வளர்ச்சிகளும் பெற 2025இல் ஒருமைப்பாட்டுடன் உழைப்போம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 319

கிரகேரியன் ஆண்டு 2025இல் உலகம் காலடி எடுத்து வைக்கும் சனவரி 1 இல் இப்புத்தாண்டு அனைவருக்கும் பொது வாழ்விலும் தனிவாழ்விலும் பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் அமைய ‘இலக்கு’ ஆசிரிய குழு வாழ்த்துகிறது.
பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் ஒவ்வொருவரும் தமது மக்கள் இறைமையைப் பேணிட உண்மையும் நேர்மையுமாக அர்ப்பணிப்புக்களுடன் உழைப்பதன் மூலமே என்றும் நடைமுறைச்சாத்தியமாகும். இதனால்தான் 24.12.24 அன்று இவ்வாண்டை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் எதிர் கொள்ளும் யூபிலி ஆண்டாக அறிவிக்க கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் அடிகளார் அனைத்துக் கத்தோலிக்க ஆலயங்களினதும் தாயாகப் போற்றப்படும் பேதுரு பேராலயத்தின் கதவை மூடி வெளியே நின்று தட்டித் திறந்து கடவுளின் துணையுடன் அனைத்து மக்களும் “நம்பிக்கை என்றுமே ஏமாற்றாது” என்ற உண்மையின் அடிப்படையில் உழைத்திட அழைத்துள்ளார். இந்நேரத்தில் அனைத்து உலக மக்களும் மத வேறுபாடின்றி உலக பாதுகாப்புக்கும் அமைதிக்கும் வளர்ச்சிகளுக்கும் உழைத்திட உறுதி பூணுகையில் உலகில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுள்ள ஈழத்தவர்களாகிய நாமும் “நம்பிக்கை என்றுமே ஏமாற்றாது” என்ற நம்பிக்கையுடன் எமது இறைமையையும் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் மீளுறுதி செய்ய ஒருமைப்பாட்டுடன் உழைக்க “இலக்கு” அழைக்கிறது.
டிரம்பின் வரிவிதிப்பால் உலக பொருளாதார மந்த நிலையும் அவரின் ‘பாதுகாப்பை பணம் கொடுத்துப் பெறு’ என்னும் அமைதிக்கான முன்நிபந்தனை 3ம் உலகப்போர் அச்சத்தை வேகம் பெற வைப்பதால் உலக அரசியல் போருக்குரிய மனநிலையில் உலக மக்களை நிறுத்தும் நிலையும் ஒருங்கே வளர்ச்சி அடையப் போவதால் 2025 மிகுந்த சவால்களைக் கொண்ட ஆண்டாக அமையும் என்பதே அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் பெருங்கவலையாக உள்ளது. இதனை எதிர்கொண்டு உக்ரேன் இரஸ்ய களமுனையும் இஸ்ரேயல் பலஸ்தீனியக் களமுனையும் இன்னும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தின் வழி தோன்றக் கூடிய களமுனையையும் லெபனானிலும் கௌட்டியிலும் வேகம் பெறும் களமுனைகளையும் பயன்படுத்தி ஆசியாவின் அமைதியையும் பொருளாதார வளர்ச்சிகளையும் டிரம்ப் சிதைக்காதவாறு அனைத்து ஆசிய ஆபிரிக்க மக்களும் “பிரிக்ஸ்” கட்டமைப்பின் வழி எதிர்வினையாற்ற முயற்சிப்பதையும் ஐரோப்பிய பாதுகாப்பு என்ற பெயரில் நேட்டோவிற்கு அமெரிக்க இராணுவப் பங்காண்மையும் பொருளாதாரக் கூட்டாண்மையும் அளிப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் குறிப்பிட்ட பணத்தை வழங்க வேண்டும் என்னும் முன்நிபந்தனை மூலம் டிரம்ப் ஏற்படுத்த முயலும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிகளும் கங்கேரி பிரதமர் விக்டர் தலைமையில் அதிருப்தியுற்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட முயற்சிப்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பன்முனைவாக்கத்தை ஏற்படுத்தி நிற்பதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதும் 2025இல் தான் தீர்மானமாகவுள்ளது. பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடுகளுடனான தனது பொருளாதார உறுதிப்பாட்டுக்கான நட்புறவாடல்கள் சந்தை ஒருங்கமைவையும் வரி ஒருங்கமைவையும் தவிர்த்த நேருக்கு நேரான பாச உறவாக வளர்ச்சி பெற பிரித்தானியா முயல்கையில் பிரித்தானிய அமெரிக்க ஐரோப்பிய நட்புப்பாலமாக டிரம்பால் பய்னபடுத்தப்படும் நிலையும் ஒருங்கே கட்டமைகிறது. அத்துடன் ஐரோப்பாவில் மத்திய வலதுசாரி கட்சிகளின் சனநாயக தாராண்மைவாத ஆட்சிகள் முடிவுக்கு வரக்கூடிய அளவுக்கு அதிதீவிர வலதுசாரிகள் நடைபெற்ற தேர்தல்களில் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்று ஐரோப்பா ஐரோப்பியர்க்கே என இங்கு வாழும் நிற மக்களை தாமாகவே வெளியே வைக்கும் அரசியல் நகர்வுகளும் வன்முறையால் அச்சப்படுத்தி வெளியேற வைக்கும் உத்திகளும் வேகப்படுகையில் டிரம்ப் தனது நாட்டில் மட்டுமல்ல கனடாவிலும் அதிதீவிர வலதுசாரித்தனத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து மனிதாயத்தைக் கூடச் சிதைக்கும் அரசியலை உலகில் வேகப்படுத்துவார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இதன்வழி அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் உள்நாட்டில் எழும் எதிர்ப்பலைகளைத் தான் நீந்திக்கடக்க முயற்சிப்பார் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது
இந்நேரத்தில் நேரடி அரசியலால் இராணுவ நடவடிக்கைகளால் அல்லாது பொருளாதாரத் தலையீடுகளால் கடலாதிக்கத்தால் உலகின் அனைத்து நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சீனா புதிய உலக அரசியல் ஒழுங்கு முறைமையில் மற்றைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் இணைந்து பிரிக்ஸ் மூலம் பொருளாதார உறுதிப்பாட்டையும் அரசாங்கங்களுக்கு அரசாங்கங்கள் என்ற நேரடி அரசியல் உடன்படிக்கைகள் இராணுவக் கூட்டமைப்புக்கள் மூலம் உலகின் தலைமைச் செல்நெறி நாடாக வளர்ச்சி அடைவதால் இதனை அணைத்தும் அடித்தும் திசைமாற்றம் செய்ய டிரம்ப் முயற்சிப்பார் என்பதற்கு உதாரணமாக சனவரி 20இல் தனது பதவியேற்பு விழாவுக்கு சீன அரசத்தலைவரை அழைத்துள்ள அதே நேரத்தில் மறுபுறத்தில் சீனாவின் உற்பத்திகளுக்கு எதிரான கடும் வரிகளைத் தானும் தனது ஐரோப்பிய அணிநாடுகளும் விதிக்க வைப்பது டிரம்பின் இரட்டைப்போக்கை தெளிவுபடுத்துகிறது.
இந்நேரத்தில் இரஸ்யா செலோவியாவில் உக்ரேனுடன் அமைதிப்பேச்சு நடாத்த முன்வந்துள்ளதும் உக்ரேன் போரின் தாக்கத்தால் தளர்ந்து போயுள்ளமையும் உக்ரேன் இரஸ்ய களத்தில் மாற்றத்தை எறபடுத்தலாம் என்ற சிறு நம்பிக்கை இருப்பது போலவே இஸ்ரேலியர் கமாஸ் போர்முனையிலும் அமைதிக்கான சிறுநம்பிக்கைகள் துளிர் விட்டாலும் ஈரானுடன் அமெரிக்க இஸ்ரேயல் வழியாக நடாத்தும் சீண்டுகைகள் இலகுவில் இந்தக் களங்கள் மூடப்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்பதை உலகுக்குத் தெளிவாக்கி வருகிறது. அவ்வாறே மதத் தேசியத்தால் தம்மைக் கட்டமைத்துள்ள மத்திய கிழக்கு அரபு நாடுகளும் அமெரிக்காவுடனும் மேற்குலக நாடுகளுடனுமான பல்வேறு பொருளாதார அரசியல் தொடர்புகளால் நீதிக்கோ உண்மைக்கோ துணைநிற்கப் போவதில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. இந்நிலையில் தெற்காசிய தென்கிழக்காசிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்த மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கொண்ட சனநாயக நாடான இந்தியா உலகின் இந்த அரசியல் பொருளாதாரச் சுழற்சிகள் வழி தன்னை வல்லாண்மையாக தரம் உயர்த்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்வது எதார்த்தமாகவுள்ளது. இதனை குளோபல் தெற்கு என்ற உலக அரசியலாகவும் அயலகத்துக்கு முதலிடம் என்ற பிராந்திய அரசியலாகவும் இந்தியா வேகப்படுத்த முயல்கிறது. இதில்தான் இலங்கைத் தீவைத் தனது துரும்பாகப் பயன்படுத்தி அரசியல் விளையாட இந்தியா முயற்சிக்கிறது. இந்த அணுகுமுறையில் தான் வெளிப்படையாக இந்தியாவின் இலங்கையைப் பயன்படுத்தும் திட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்திச் சீனாவின் துணையுடனும் அமெரிக்காவின் இணைப்புடனும் இலங்கைத் தீவின் அரசியலை நடாத்த முயலும் அநுரகுமர திசநாயக்காவின் சிறிலங்கா அரசு இந்தியா சீனா அமெரிக்கா என்ற முக்கோணத்துள் ஐரோப்பிய நாடுகள் ஆபிரிக்க அவுஸ்திரேலியக் கண்ட நாடுகள் என்ற விரிந்த பரப்பில் இந்துமாக்கடல் இருப்பு என்ற பலத்தைப் பயன்படுத்தி தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்தி வருகிறது
இதனால் நேரடியாகப் பொருளாதார அரசியல் தாக்கங்களை அனுபவித்து ஒடுக்கமடையும் நில கடல் வான் பரப்பாக இறைமை நீக்கம் பெறும் பகுதியாக ஈழத்தமிழர் தாயகம் உள்ளது. ஒடுக்கமுறும் பண்பாடாக ஈழத்தமிழர் தேசியம் மாறியுள்ளது. வடக்கு கிழக்குக்கு இந்தியாவுடன் தனது விஜயத்தின் பொழுது அநுரகுமர திசநாயக்கா செய்த 33 செயற்திட்டங்களுக்கான உடன்படிக்கைளும் வடக்கு கிழக்கின் வளர்ச்சி என்ற போர்வையிலேயே இடம்பெற்றுள்ளது. ஜே ஆர் பாணியிலேயே ஈழத்தமிழரையும் இந்தியர்களையும் மோதவைத்து ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை இந்தியாவைக் கொண்டு மேலும் தன்னாட்சி நீக்கம் செய்விக்கும் உத்தியாகவும் அமைகிறது.
அவ்வாறே இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் இறைமையினைச் சமத்துவத்துடன் உள்ளத்தளவில் ஏற்க மறுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதம் ஈழத்தமிழர்களின் பொருளாதார நிலையையும் அரசியல் உறுதிப்பாட்டையும் ஈழத்தமிழர்கள் மேலான இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பால் அவர்களை தமது தாயகத்தில் வாழ இயலாது செய்து வெளியேற்றும் தனது சிறிலங்கா அரசியலை இவ்வாண்டில் சிறிலங்காவின் புதிய அரசுத் தலைவராக கடந்த ஆண்டில் பதவியேற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமர திசநாயக்காவின் ஆட்சியிலும் வேகப்படுத்தம் என்பதற்கு உதாரணமாக ‘தூய்மையான இலங்கை’ செயற்திட்ட அரசத்தலைவர் செயலணி 18 க்கும் செயலாளர்கள் அனைவரும் சிங்களவர்களாக நியமிக்கப்பட்டதும் அல்லாமல் அவர்களுக்கு நாடாளுமன்றத்தைப் போலவே சட்டவாக்கம் செய்யும் தகுதியை அளித்துள்ளதும் தனது திணைக்களங்களைக் கொண்டே நாகரிகமான முறையில் தமிழர் தாயக நிலப்பரப்பை அபகரிப்பதும் இன்னும் அனைத்து ஆயுதப் படைகளுக்கும் விடுமுறையை விலத்தி நாட்டை படைபலம் கொண்டு ஆட்சிப்படுத்த முனைவதும் அமைகிறது. இவையெல்லாம் இவ்வாண்டு ஈழத்தமிழர்கள் மிக வலுவான அரசியல் களமாடி உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பில் ஈழத்தமிழரின் இருப்பு நீக்கத்தை தடுக்க வேண்டுமென்னும் அழைப்பை விடுத்துள்ளது என்பதே இலக்கின் இப்புத்தாண்டின் முதற் செய்தியாகவும் இதனை ஒருமைப்பாட்டுடனும் தெளிந்த அரசியல் அறிவுடனும் மேற்கொள்ள ஈழத்தமிழர்கள் தவறினால் உலகின் புதிய அரசியல் பூகம்பத்தைப் பயன்படுத்தி அநுர அரசால் தூக்கி எறியப்பட்ட மக்களாவார்கள் என்பதையும் இலக்கு முன்எச்சரிப்பாக இப்புதிய புத்தாண்டில் ஈழத்தமிழர் முன்வைக்க விரும்புகிறது.

Tamil News
இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் இறைமையின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 317

Ilakku Weekly ePaper 319 | இலக்கு இதழ் 319 டிசம்பர் 28, 2024