ட்ரம்பின் விருப்ப அலையில் உலக புதிய அரசியல் ஒழுங்குமுறை காணப்போகும் மாற்றத்துக்கேற்ப செயற்பட வல்லவரை தெரிவு செய்யுங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 312

இன்றைய சமகால உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தீர்மானிக்கும் தன்மை வாய்ந்தது எனக் கருதப்படும் அமெரிக்க அரசத்தலைவர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்காவின் 47 வது அரசத்லைவராக 06.11.2024இல் தெரிவாகியுள்ளார். அவரது குடியரசுக்கட்சி அமெரிக்காவின் செனட்டை முழுமையாகவும் அமெரிக்கக் காங்கிரசை முதன்மைநிலையிலும் கட்டுப்படுத்திய பலமான அமெரிக்க அரசாங்கத்தை நிறுவியுள்ளது. இதனைக் குறித்துப் பிரித்தானியாவின் ‘த கார்டியன்’ 06.11.2024 இதழ் “அமெரிக்காவின் அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவு புதிய உலக ஒழுங்குமுறையில் ட்ரம்பின் புதிய விருப்பு அலையொன்றை உருவாக்கும்” என எதிர்வு கூறியுள்ளது. கூடவே “உலகப் பிரச்சனைகளுக்கு மிதவையாக முன்வைக்கப்பட்ட எல்லாக் கருதுகோள்களும் இன்று தகர்ந்து போயின. இந்நேரத்தில் அமெரிக்காவுடனான பிரித்தானியாவின் சிறப்பு உறவு நடைமுறைத்தன்மைக்கேற்ப அமைய வேண்டும்” என்ற எச்சரிப்பும் இந்த ஆய்வினை எழுதிய த கார்டியன் பத்திரிகையின் பத்தி ஊடகவியலாளர் மார்ட்டின் கெட்டில் அவர்களால் விடுக்கப்பட்டு உளளது. “வித்தியாசமான” முறையில் வாக்களித்தல் என்ற உத்தியைப் பயன்படுத்தியுள்ள அமெரிக்க மக்கள் அதன் விளைவுகளை அனுபவிக்கப் போகின்றார்கள் என எடுத்துரைத்துள்ளது. கூடவே இவ்வாய்வு ட்ரம்ப் 2 என சனவரி 21 2025 இல் தொடங்கவுள்ள ட்ரம்பின் 2வது ஆட்சிக்காலத்தைத் குறிப்பிட்டு இது PAX என்கிற ஆங்கில எழுத்துக்களாலான சமாதானத்தைக் குறிக்கும் உரோமர்களின் குறியீட்டை அமெரிக்கா 2வது உலகப் போருக்குப் பின்னான தனது உலக சமாதான முயற்சிக்கான குறியீடாக PAX AMERICANA என உலகுக்கு அறிமுகப்படுத்தித் தொடங்கிய அனைத்தையும் சவப்பெட்டியுள் போட்டு ஆணி அடிக்கப்போகிறது என்கின்ற எதிர்வு கூறலையும் இவ்வாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடத்தில் இந்த பக்ஸ் அமெரிக்கானா உலக சமாதான முயற்சியில் ஈழத்தமிழர்கள் உடைய பாதுகாப்பான அமைதி வாழ்வும் வளர்ச்சிகளும் இன்று வரை அடைந்து வரும் இன்னல்கள் எண்ணிலடங்கா. இதனை இலண்டனில் 2008ம் ஆண்டு உலக அமைதிக்கான ஆதரவாளர்களால் நடாத்தப்பெற்ற “சிறிலங்காவின் இனமுரண்பாடுகள் குறித்த அனைத்துலக மாநாட்டில் சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஷாக் அவர்கள் படித்த “தமிழருடைய எதிர்ப்புப் போராட்டங்களும் பக்ஸ் அமெரிக்கானா- ஐரோப்பிய ஒன்றியமும்” என்ற ஆய்வுக்கட்டுரை 16 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்தது. இவ்வாய்வைத் “தமிழ் நேசன்” வலைத்தளத்தில் மீள்வாசிப்புச் செய்தால் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்ட அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் 2006 முதல் பயங்கரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டு ஈழத்தமிழர்கள் அனுபவித்த இன்னல்கள் தெளிவாகும். எனவே ட்ரம்பின் அலையில் புதிய உலக அரசியல் முறைமை மீள் கட்டமைக்கப்படும் நேரத்தில் தாயகத்திலும் உலகிலும் உள்ள தமிழர்கள் இந்த பயங்கரவாதப்பட்டியிலிடலால் இன்றும் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களின் நீதிக்கான குரல் அமைதிக்கான செயற்பாடுகள் மறுக்கப்பட்டு வருகின்ற நடைமுறை உண்மையை இன்றைய பொதுத்தேர்தல் மேடையிலாவது தெளிவாக்க வேண்டும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
மேலும் வியட்னாம் போர் தொடங்கி நடைமுறையில் உள்ள ‘சமாதானத்துக்கான போர்’, “நீதியான போர்” என்கிற போர்களை நியாயப்படுத்தும் பழமைகளும் ஜோர்ஜ் புஸ்ஸின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்பதும் உலகில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் பிரச்சினைகளையே வளர்த்துள்ளன.. அண்மைக்காலங்களில் மத்திய கிழக்கில் பராக் ஒபாமாவும் பைடனும் அமெரிக்காவின் கோலை நிலைநிறுத்தத் தவறின. இவைகள் எல்லாம் நடைமுறை உண்மைகள். ட்ரம்பின் ஆட்சியில் நாங்கள் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன உலக செயற்திட்டங்கள் நிச்சயமாக அவரது விருப்புக்கு ஏற்ப மாற்றப்படும். காலநிலை சீரழிவு குறித்த உலக முயற்சிகளுக்கு வயிற்றில் குத்து விழப்போகின்றது. அனைத்துலகத் தொடர்புகள் நாடு கடந்தனவாக மாறும். உக்ரேனின் ரஸ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் முதுகில் குத்தப்படும். தைவான் சீனாவின் துப்பாக்கிக் குழல்கள் முன்பான சிறுபொருளாக்கப்படும். தாராண்மைவாதம் பிரித்தானியா உட்பட எங்கும் திகழும். ட்ரம்புக்கு ஆதரவான முறையில் சமுக வலைத்தளங்கள் முற்றுகையிடப்படும் எனவும் த கார்டியன் எழுத்தாளர் எதிர்வு கூறுகின்றார்.
இவைகள் எல்லாம் அலை எழுச்சிகள் அரசியலில் ஏற்படும் காலங்களில் ஏற்படும் சர்வாதிகாரத்தன்மையான பாராளுமன்றத்தின் வழியான ஆட்சி மாற்றங்களைக் குறிக்கின்ற பொதுப்பண்புகள். இலங்கைத் தீவிலும் அநுர அலை சிங்கள மக்கள் மத்தியில் மத்திய அலையாகச் சிறிலங்காவின் அரசத்தலைவர் தேர்தலில் தோன்றி 48 வீதமான வாக்குகள் வழி அநுரகுமார திசநாயக்காவை இலங்கையின் புதிய அரசத்தலைவராகத் தோற்றுவித்துள்ளது. இந்த அநுர அலை மகிந்த கோத்தபாய அலைகள் ஈழத்தமிழர்களின் 31 ஆண்டுகால நடைமுறையரசை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் மூலம் 2009 இல் பின்னடையச் செய்து சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பு அரசை மீளவும் நிறுவி 15 ஆண்டுகளின் பின்னர் தோற்றம் பெற்ற ஒன்று என்பது முக்கியமான விடயம். அதாவது எந்த அநுர குமரதிசநாயக்கா மக்கள் விடுதலை முன்னணியின் தமிழர்களின் இறைமைக்கெதிரான பலம் பொருந்திய செயற்பாட்டாளராக விளங்கினாரோ அதே அதே அநுர அடித்துப் போட்டு அப்பம் தீத்திய கதையாக இன்று “இலங்கையராகத்” தான் பார்க்கும் வடக்குச் சமுகத்துக்கான ஆட்சியை வழங்க முயற்சிக்கின்றார். மகிந்தாவால் இனப்பிரச்சினையே இலங்கையில் இல்லை, என்ற ஒரினமாகச் சிங்கள இனமாகச் சிறிலங்காவில் உள்ள பல்லினத்தன்மையை பல்லினப்பண்பாட்டை மாற்றிய தத்துவம் முதல் கோத்தபாயாவின் அதிகாரப்பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை நாம் எம்மை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள பௌத்த பெரும்பான்மையினர்க்கே அரசியல் பணிகள் செய்ய ஆட்சிப் பொறுப்பேற்றம் என்கின்ற தத்துவம் வரை ஏற்றுச் செயற்படும் அரசியல் போக்குடையவர் அநுர. ரணிலின் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தமிழர் தாயகத்தின் நிலம் நீர் வான் வளங்களையும் தமிழர் தாயகத்தில் உள்ள மனிதவலுவையும் உள்ளூர் நிலையிலும் அனைத்துலக நிலையிலும் பயன்படுத்தல் என்ற தமிழர் தாயகப் பொருளாதார ஒடுக்குமுறையில் இருந்தே அநுர தனது அரசத்தலைவர் பொறுப்பைத் தொடர்கிறார். ஆகவே அநுர அலை என்பது ஈழத்தமிழரின் இறைமையையும் தேசியத்தையும் ஒருங்கே நீக்கம் செய்யும் நோக்கும் போக்கும் கொண்டது. இந்நிலையில் சஜித் பிரேமதாசாவோ அல்லது வேறெந்த சிங்களவர்களோ விட்டுக்கொடுப்பிலாத உறுதியுடனேயே உள்ளனர். அந்த வகையில் ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் எந்தச் சிங்களக் கட்சிக்கும் தமிழர் தாயகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கிடைக்காது தடுக்க வேண்டியது அதி முக்கியம். அதே நேரத்தில் கொள்கைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். கோரிக்கைகள் பலவிதம் ஒவ்வொன்றும் சிறிலங்காவிடமே விடுக்கப்பட்டு ஈழத்தமிழர் இறைமையை அழிப்பதில் ஒருவிதம் என்ற நிலையில் தமிழர் தாயகத்தில் ஈழத்தமிழர் அரசியல்வாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஈழத்தமிழர்களிடை பலத்த கருத்து உள்ளது. இவை சிறிலங்காவின் ஈழத்தமிழர் இறைமை மீதான தீக்கும் தேசியம் மீதான தீக்கும் எண்ணெய் ஊற்றும் செயற்பாடாகவே நடைமுறையில் உள்ளது. அதனால் தான் ஒவ்வொரு தமிழர் தாயகப் பகுதி வேட்பாளர்களும் உங்கள் தேர்தல் கொள்கை விளக்கத்தை அளிப்பதுடன் முன்னர் நாடாளுமன்றத்தில் பதவி வகித்திருந்தால் இதனை இவ்வாறு நாம் ஈழத்தமிழர்களுக்குச் செய்தோம் என்பதை வெளிப்படுத்தும் தன்மையுடனும் செயற்பட வேண்டுமென இலக்கு எடுத்துக் கூறுகிறது.

Tamil News