நம்பிக்கையின்மைப் பண்பாடும், காலத்துக்குரிய விளக்கமின்மையும், எதனையும் நிராகரிக்கும் மனநிலையும் 21ம் நூற்றாண்டில் மக்களிடை இது எப்படி நடக்க அனுமதிக்கப்பட்டது என்ற உளவியல் தாக்கமாகி மனிதரை “இனங்காண முடியாத களைப்புக்கு உள்ளாக்கும்” (Chronic Fatigue Syndrome) நோயாக மாறி வருகிறது. இந்தக் களைப்பு உடலை வைரஸ் பக்ரியாக்களின் தாக்கத்தை எதிர்க்கும் உடலெதிர்ப்புச் சத்தியையும் இழக்க வைக்கிறது. இதனால் இந்த உளவியல் நோய் பெருமளவிலான மனிதர்களின் மரணத்துக்கே காரணமாகின்றது. இந்த உண்மையை உளவியல் அறிவியல் வெளிப்படுத்தியுள்ளதை ஜோர்ஜ் மொன்பைட் (George Monbiot)பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான “த கார்டியன்”க்கு எழுதியுள்ளார். இந்த மனநோயை மேற்குலகில் திடீரென பெருவளர்ச்சி பெற்று வரும் நிற இனவெறிகளை ஊக்குவிக்கும் அதி தீவிர வலதுசாரி இயக்கங்களின் தேர்தல் வெற்றிகளின் போக்குடன் இணைத்து ஆய்வு செய்துள்ளார். இந்த Maeve Boothby O’Neill died because of a discredited view of ME. How was this allowed to happen? என்ற ஆய்வினை, ‘த கார்டியன் 18.10.24ம் திகதிய தனது எண்ணமாகவே வெளியிட்டு இதன் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்தியுள்ளது.
சிறிலங்காப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் புதிய சிறிலங்கா அரசத்தலைவர் அநுரகுமார திசநாயக்கா தனது சட்டவாக்க அதிகாரத்தை ஏற்படுத்துவதற்கு அதற்கான பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 14இல் நடத்துகின்றார். இதில் தெரிவாகவுள்ள 196 பிரதிநிதிகளில் 28 பிரதிநிதிகள் அநுராவின் மொழியில் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் இருந்து ஈழத்தமிழரின் மொழியில் தங்கள் தாயகப் பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர். கூடவே 29 பிரதிநிதிகள் தேசியப் பட்டியலால் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு மொத்தப் பாராளுமன்ற பிரதிநிதிகள் எண்ணிக்கை 225 ஆக அமையும். அதாவது இந்த 225 பிரதிநிதிகளிடை ஈழத்தமிழரின் கூட்டு மொத்த 28 பிரதிநிதிகள் ஒன்றாக இணைந்தாலும் பாராளுமன்றத்தின் சட்டவாக்கத்தில் எதனையும் தனித்துச் செய்ய முடியாதவாறு சிறிலங்காவின் அரசியலமைப்பு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கையாலாகாத 28 இல் ஒன்றாகத் தாங்கள் மாற வேண்டுமென்று ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் ஆயிரக்கணக்கில் வேட்பாளராகி ஈழத்தமிழரின் வாக்குகளைப் பிரித்து சிங்களக் கட்சிகளுக்கு தமிழர் தாயகத்தில் பிரதிநித்துவ அதிகரிப்பு ஏற்பட வைத்து செய்யும் கேவலமான செயற்பாடுகள் ஒருபுறம். மறுபுறம் இதே ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் 13 தீர்வாக வேண்டுமென்றும் சமஸ்டி தீர்வாக வேண்டுமென்றும் அனைத்துலக ஆதரவால் தீர்வைப் பெறலாமென இருதேசம் ஒருநாடு என பலஸ்தீனிய தீர்வுப்பாணியில் இருநாடுகள் ஒரு தீவு என்ற உண்மையை மாற்ற முயல்வதும் எல்லாமே ஈழத்தமிழரின் இறைமைக்கும் தன்னாதிக்கத்துக்கும் தொடர்பேயில்லாதனவற்றைத் தேர்தல் கொள்கைகளாக மாற்றும் செயலாகிறது. இவற்றுடன் படித்தோரும் பணம் படைத்தோரும் அநுராவுடைய நாடு அநுரா அளிப்பார் எதையும் என்று மயங்கி நிற்பதையும் பார்க்கும் எந்த இனமான ஈழத்தமிழரும் “இனங்காண முடியாத களைப்புக்கு உள்ளாக்கும்” (Chronic Fatigue Syndrome) மனநோய்க்கு உள்ளாவதில் வியப்பில்லை. இதனால் ஈழத்தமிழினமே இந்நோயின் முக்கிய வெளிப்பாடான செயலாற்ற இயலாத நிலைக்கு வந்து விடுமோ என்கிற பேரச்சம் எழுகிறது. இதற்கு நாம் இலங்கையரல்ல இலங்கைத் தீவின் தேச மக்கள் என்ற வரலாற்று உண்மை இத்தேர்தல் மேடைகளில் ஈழத்தமிழர்களால் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது இலக்கின் எண்ணம்.
இந்நேரத்தில் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஓட்டப்போட்டியில் ஓடிய இளைஞர் ஒருவர் வெற்றி பெற்ற பொழுது அங்கிருந்த அனைவரும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தனர். ஆனால் ஒரு முதியவர் மட்டும் மௌனமாகக் கைதட்டாது அந்த இளைஞனை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த இளைஞன் வந்து ஏன் என்னையே பார்த்துக் கொண்டு கைமட்டும் தட்டாது உள்ளீர்கள் எனக் கேட்டான். அதற்கு அந்த முதியவர் நீ கெட்டிக்காரன்தான் ஆனால் நான் கொண்டு வருபவர்களுடன் நீ ஓடி வென்றால் தான் நான் கைதட்டுவேன் என்றார். அவனும் இணங்கினான். அப்பொழுது அந்த முதியவர் விழிப்புலனற்ற ஒருவரையும் கால்வலு பாதிக்கப்பட்டு மெதுவாக நடக்கும் ஒருவரையும் அழைத்து வந்து இவர்களுடன் ஓடி வென்றாய் என்றால்தான் நீ உண்மையான விளையாட்டு வீரன் என்றார். அவனும் இணங்கி ஓடினான் – இலகுவில் வென்றான் ஆனால் முதியவர் மட்டுமல்ல இருந்தவர் யாருமே கைதட்டவில்லை. இளைஞன் வந்து காரணம் கேட்டான். முதியவர் மீண்டும் சிந்தித்து ஓடு என்றார். அவன் ஒரு நிமிடம் சிந்தித்தான். இப்பொழுது அந்த இருவரையும் வலதும் இடதும் நிறுத்தி அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்தே வெற்றி இலக்கை அடைந்தான். முதியவர் உட்பட அனைவரும் பலமாகக் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இப்பொழுது அந்த முதியவரிடம் அந்த இளைஞன் வந்து கேட்டான் இப்போது நான் வென்றேனா அல்லது இவர்களும் நானும் வென்றோமா? அப்பொழுது அந்த முதியவர் கூறினார். நீ ஓட்டப்பந்தயத்தில் பெரும் பலமுள்ளவர்களை எல்லாம் தாண்டி ஓடி வென்றாய். ஆனால் வெற்றி இலக்கில் நீ தனியாகத்தான் நின்றாய். மற்றவர்களை எல்லாம் தோற்கடித்துப் போட்டேன் என்ற ஆணவம் தான் அங்கு உன் மகிழ்ச்சியாக இருந்தது.
மற்றவர்கள் உன் அந்நேர வெற்றியைத்தான் பாராட்டுவார்கள் அவர்கள் எழுந்து சென்றதும் அது மறைந்து விடும். அதனாலேயே நான் மௌனமாக இருந்தேன். இப்பொழுது நாங்களாக வெல்கிறோம் என்று வலுவிழந்தவர்களையும் அணைத்து இணைத்துச் சென்று வெல்கையில் உனக்கே புரிகிறது. இதுதான் உண்மை வெற்றி. நிலையான மகிழ்ச்சி என்பது தனது ஆற்றலை மற்றவர்கள் வாழ்வுக்கும் இணைத்து அழைத்துச் செல்பவனே உண்மையான வெற்றியாளன். ஏனெனில் எந்த மனிதனும் சமுகத்துடன் வாழத் தோற்றுவிக்கப்பட்டுள்ளானே தவிர தனியாக அவனால் எந்த வெற்றியையும் பெற இயலாது. உனது மனித சமுதாயத்தின் வெற்றி உன் வெற்றி என்று முடித்தார் அந்த முதியவர். இந்தக் குட்டிக் கதை விடுதலைக்காகச் சிந்தப்பட்ட குருதி காயாத ஈழத்தமிழர் தாயக மண்ணை மறந்து அங்கு காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் நிலமாகவும் வானாகவும் பரந்து நிற்கும் மாவீரரை மறந்து இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் இறைமையுள்ள தேசமக்கள் என்பதை மறந்து, தேசியத் தலைவனின் கீழ் 31 ஆண்டுகள் 1978 முதல் 2009 வரை வாழ்ந்தோம் என்ற வரலாற்றை மறந்து இலங்கைத் தீவு என்பது இரு இறைமையுள்ள நாடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு என்பதை மறந்து இறைமையை மீளுறுதி செய்யாத எவர்க்கும் வாக்களிக்கப் போகையில் இக்குட்டிக் கதை சரியானதைச் செய்ய வைக்கும் என்பதே இலக்கின் எண்ணம்.
‘இலங்கையர்’ என்ற செயற்கையான தேசியம் பிரித்தானிய காலனித்துவம் 1833 இல் தனது சந்தை இராணுவ நலன்களுக்காகக் கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தத்தின் வழி உருவாக்கியது. ‘சிலோன் அரசாங்கம்’ என்ற அதுவரை இலங்கைத் தீவின் வரலாற்றில் என்றுமே இருந்திராத ஒற்றையாட்சி முறைமைக்குள் ஒருநாடாக இலங்கையின் தனித்தனியான தமிழ் சிங்கள அரசுக்களின் தனித்தனியான தேச மக்களையும் தனித்தனியான அரசுக்களின் எல்லைகளையும் ஒன்றாக்கி ஆட்சி செய்யக் கண்டு பிடித்த அரசியல் கருத்தியல். 115 ஆண்டுகள் இலங்கையர் என்ற செயற்கையான தேசியத்தைத் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களும் ஏற்காத நிலையில் 04.02. 1948 இல் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் உச்ச இறைமையாளராக தன்னையே சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) இன்படி தொடர்ந்தும் நிலைப்படுத்தி பிரித்தானியக் காலனித்துவம் 04.02. 1948 இல் சுதந்திரத்தை வழங்கியமையே ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சனை.
அனைத்து உலக மன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாகி இலங்கைத் தீவின் சமகாலப் பிரச்சினைக்கு எல்லாம் காரணம் என்பது வரலாறு. உண்மையில் ஈழத்தமிழரும் சிங்களவர்களும் இலங்கைத் தீவின் தேச இனங்கள் வர்த்தக வழி குடிகளாக முஸ்லீம்களும் தொழில் வழி குடிகளாக மலையக மக்களும் உள்ளனர். இலங்கைத் தீவில் உள்ளனர் என்பதால் இலங்கையர் என்று அடையாளப்படுத்தாது இலங்கைத் தீவின் மக்கள் என்று அடையாளப்படுத்தல் இலங்கைத் தீவின் மக்களின் தனித்துவங்களைப் பேணிய நிலையில் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை இணைந்து கட்டியெழுப்ப உதவும். இதற்கான முறையில் இருநாடுகளின் ஒரு நிலப்பரப்பு இலங்கைத் தீவு என்ற புதிய அரசியலமைப்பு உருவானாலே 2028க்குள் இலங்கைத் தீவின் மக்களால் கடன்களை அடைக்கும் பொருளாதார பலம் உருவாக்கப்படும் என்பதே இலக்கின் எண்ணம்.