ஈழத்தமிழர் இறைமை புல் அல்ல சிங்களவர் இறைமை நெல் அல்ல | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 307

“நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் – புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்று ஒளவையார் மூதுரையில் கூறிய பாடல் வரிகள் தான் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் இறைமை குறித்து கொண்டுள்ள மனநிலையை விளக்கும் சிறந்த வரிகளாகின்றன. நீங்களே ஈழத்தமிழர் இறைமையைப் புல்லாகவும் சிங்களவர் இறைமையை நெல்லாகவும் உலகுக்குக் காட்டி நெல்லுக்கு இறைப்பதில் உங்களுடைய கட்சிகள் என்னும் வாய்க்கால்கள் வழி புல்லுக்கும் பொசிய வைக்க முயற்சிக்கும் முட்டாள்களாக உள்ளீர்கள் என்பதையே சிறிலங்காவின் 9வது அரசத்தலைவராக அநுரகுமரா திசநாயக்கா தெரிவானதன் பின்னர் வடக்கு கிழக்கில் உங்களின் பேச்சுக்களும் செயல்களும் உலகுக்கு வெளியாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இலக்கு உங்களின் முகங்களில் அடித்துச் சொல்ல முனைகிறது.
1910 இல் பிரித்தானியக் காலனித்துவம் அறிமுகப்படுத்திய “படித்தோர் குழாத்து சனநாயகம்” தான் இலங்கைத் தீவின் அத்தனை பிரச்சினைகளுக்கும் குறிப்பாக ஈழத்தமிழருடைய இறைமை நீக்கத்துக்கும் தேசிய நீக்கத்துக்கும் இன்று வரை 114 ஆண்டுகள் மூலகாரணமாகவுள்ளது. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் ஒவ்வொரு ஈழத்தமிழரும் வாழ்ந்து வருகின்றனர். எல்லா மக்களது உயிர்-உடைமை-நாளாந்த வாழ்வு இழப்புக்களை தடுக்கத் தங்கள் உயிர்களையே அர்ப்பணித்த மண் ஈழத்தமிழர் தாயகம். இங்குமண்ணைப் பற்றி அக்கறையில்லா மக்களைப் பற்றி அக்கறையில்லத நிலையில் தங்கள் விருப்புக்குத் தீர்மானங்கள் எடுக்கும் படித்தவர்க்குப் பிரதிநிதித்துவம் சொத்துடைமையுள்ளவர்களுக்குப் பிரதிநிதித்துவம். என்கின்ற அடிப்படையில் மக்கள் இறைமை மறுக்கப்பட்டுக் குழுநிலை இறைமையும் மக்கள் தீர்மானமெடுக்கும் பலம் சிதறடிக்கப்பட்டு சிலர் பலருக்காக முடிவெடுக்கும் மேலாண்மை நிலைகளும் இன்றும் தொடர்கிறது.
இந்நிலை இனியும் வேண்டாமெனச் சிங்கள மக்கள் அநுரகுமார திசநாயக்கா என்னும் சாதாரண மனிதன் ஒருவரை ஜனாதிபதியாக்கியதன் மூலம் புரட்சிகரமான அரசியல் அதிகார மாற்றத்தை-வர்க்கநிலை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அவர்கள் எப்படிச் செய்தனர் சிங்கள தேசத்திலும் உலகெங்கும் உள்ள சிங்களவர் இடையிலும் உள்ள துறைசார் அறிவினை இணைத்தார்கள், உழைப்பை சமுக மூலதமனாக்கினார்கள் இவ்விதம் உண்மையாகவே தங்கள் தன்னலத்துக்குப் படிப்பைப் பணத்தைச் செல்வாக்கைப் பயன்படுத்தாத சிங்களவர்களின் தொகுதியொன்றை இலங்கைத் தேசிய மக்கள் சக்தி உருவாக்கித்தான் இதனை அடைந்துள்ளது என்பது ஆய்வாளர்கள் முடிபு.
ஈழத்தமிழரம் படித்தோர் குழாத்து சனநாயகத்தின் பாராளுமன்றக் கொடுங்கோன்மைப் பிடியிலிருந்து ஈழத்தமிழர் தங்களையும் விடுவித்து தங்களுடைய மக்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுடைய சனநாயகப் பங்களிப்புக்கான புதிய மாற்றத்தை ஏற்படுத்தவே ஈழத்தமிழரிடையிலும் பொதுவேட்பாளர் நியமனம் சிறிலங்காவின் 9வது சனாதிபதி தேர்தலை நமக்கு நாமே வாக்களித்துப் புறக்கணிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரே அலகு ஈழத்தமிழர் தாயகம் என்பதை உறுதிப்படுத்தி முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்கள் தன்னை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல ஈழத்தமிழர் தங்கள் இறைமையின் அடிப்படையிலான தன்னாட்சி உரிமையை பயன்படுத்தி வாழ இயலாத எந்தச் சிங்கள பௌத்த மேலாண்மை ஆட்சிகளையும் அதன் ஆட்சித் தலைவரைத் தெரிவு செய்யம் தேர்தலையும் நிராகரிக்கின்றோமெனச் சிங்கள தேசத்துக்கும் அனைத்துலகுக்கும் பிரகடனப்படுத்த சனநாயகப் போராட்டத்துக்கான சின்னமாக தன்னைப் பொதுவேட்பாளராக ஈழத்தமிழர் முன் நிறுத்தினார். சிங்கள தேசமும் அனைத்து உலகமும் ஈழத்தமிழரின் தனித்துவமான அரசியல் அடையாளத்தைக் கண்டு கொண்டது. இதன்வழி ஈழத்தமிழரும் தங்கள் அரசியலில் புதிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ம் திகதி நடாத்தி தான் நிர்வாக நிலையில் தொடங்கியுள்ள ஆட்சிக்கான சட்டவாக்க அதிகாரத்தையும் தனது கட்சிக்குப் பெறுவதற்கு முனைந்துள்ளார். இதற்காக அவர் சிங்கள மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார். இதனை அடுத்து இந்திய சீன அமெரிக்க பிரித்தானிய யப்பான் இரஸ்ய கியூபா கொரியா அவுஸ்திரேலிய தூதுவர்கள் என பெரும்பாலான நாடுகளின் இலங்கைத் தூதுவர்கள் புதிய அரச அதிபருக்கான வாழ்த்துக்களையும் தங்கள் நாடுகளின் முழு அளவிலான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியதுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை இணைப்பாளரும் அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளும் புதிய அரசத்தலைவருடன் தங்களது நிலைப்பாடுகள் குறித்த உரையாடல்களைத் தொடங்கியுள்ளனர். அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் முனைவர் ஜெயசங்கர் சுப்பரிமணியம் அவர்கள் இம்மாதம் 4ம் திகதியில் இருந்து இலங்கையில் தனது உத்தியோகபூர்வமான பயணத்தையும் ஆரம்பித்துள்ளார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் சிலர் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையும் புதிய ஜனாதிபதியின் கோட்பாடும் சிங்களவர்க்குரிய நாடு சிங்கள இனத்துக்குரிய நிலம் பௌத்த ஆகமத்துக்கும் சிங்கள மொழிக்கும் முன்னுரிமையுள்ள சட்டத்தின் முன் அனைவரும் சமனற்ற நாடு என்ற 1956ம் ஆண்டு முதலான நிலைப்பாட்டில் நின்றபடியே சிங்களவர்களுக்கான சமுக பொருளாதார அரசியல் மாற்றங்களை செய்ய முனைகிறார் என்பதே உண்மை என்கின்றனர். சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாமலே மகிந்த சிந்தனையான இலங்கைத் தீவில் அனைவரும் சிறிலங்காவினர் என்ற கொள்கை அடிப்படையினை மீளுறுதி செய்கின்றார். கோத்தபாய சிந்தனையான இனப்பிரச்சினையொன்று இங்கில்லை எம்மைத் தெரிவு செய்த சிங்கள பௌத்தர்களுக்கே நாம் பணி செய்வதற்கு உரியவர்கள் என்ற கோட்பாட்டுடன் எந்தப் புது அரசியலமைப்பும் சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்படுமெனவும் பொலிஸ் அதிகாரமற்ற, நில அதிகாரமும் தீர்மானிக்கப்பட வேண்டிய, தங்களால் நீதிமன்றத்தில் வழக்காடி வடக்கு கிழக்குத் தனியான அலகுகள் என்று பிரிக்கப்பட்ட 13ம் திருத்தத்தைக் கொண்ட மாகாணசபை வழங்கப்படலாம் என்ற எடுத்துரைப்புடனும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளுகின்றார். ரணிலின் சிந்தனையான வடக்கு கிழக்கு வாழ் தமிழர் இறைமையற்ற குடிவரவுச் சமுகத்தினர் அவர்களுக்கான தனிப்பட்ட உதவிகளை வழங்கி அவர்களின் மனித வலுவையும் நில கடல் வளங்களையும் சிறிலங்காவின் பொருளாதாரத் தேவைக்குச் சந்தைப்படுத்தல் என்பதில் எந்த மாற்றமும் இதுவரை பேசப்படவில்லை. அத்துடன் இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த குடியேற்றங்களுக்குரியது என்பதிலோ அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்தோ எந்த மாற்றும் இதுவரை கூறப்படவில்லை.
இந்நிலையில் அநுர குமார திசநாயக்காவுக்கான ஆதரவை வடக்கு கிழக்கில் பெருக்கி சுமந்திரன் நேரடியாக சஜீத்துக்கு வாக்களிக்கச் சொன்னதால் ஈழத்தமிழர் தேசிய மக்கள் சக்திக்கு அரசத்தலைவர் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பதிவு செய்தமையை மாற்ற வேண்டுமென்று வடக்கு கிழக்கில் ஒரு தரப்பினர் வேமாகச் செயற்படத் தொடங்கியுள்ளனர். சில தரப்பினர் நேரடிக் கூட்டு மறைமுகக் கூட்டுகளுக்கு புதிய சனாதிபதியுடன் உரையாடல்களைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடை பல கட்சிகளாகச் சுயேட்சைக்குழுக்களாகத் தேர்தலில் போட்டியிட்டு தேசிய பட்டியலில் ஒரு இடமாவது எடுக்கச் சிலர் முனைகின்றனர். இவை எல்லாமே தங்கி வாழும் மனநிலையில் தாங்கள் இறைமையுள்ள மக்கள் என்பதை ஈழத்தமிழர்களை மறக்கவைத்து ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தையும் தேசிய நீக்கத்தையும் தமிழர்களே செய்கின்ற செயலாக உள்ளது என்பதே இலக்கின் கருத்து எனவே இலங்கையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர அம்பிகா சற்குணநாதன் அவர்கள் சிவில் சமுகத்தில் சிலர் புதிய ஜனாதிபதியை விமர்சிக்கக் கூடாது. அது அவரைப் பலவீனப்படுத்தும். அவருக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இவர்கள் அவரின் தவறுகளை நியாயப்படுத்தும் அல்லது அலட்சியம் செய்யும் நிலையை உருவாக்கி அவரை மீண்டுமொரு ராசபக்சாவாக மாற்றிவிடுவர் எனக் கூறியள்ளமை முக்கியமாக ஈழத்தமிழர்களால் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது. அத்துடன் அவர் கூறியுள்ள மற்றொரு கருத்தான புதிய ஜனாதிபதி தமிழர்களின் நம்பிக்கையை வெல்ல விரும்பினால் சிங்கள பௌத்த பேரினவாதம் பேசுபவர்களுக்கான அவரின் கூட்டையும் ஆதரவையும் விலக்க வேண்டும். இது நடைபெறுமா? பேரினவாத அலைகள் ஓய்ந்து நல்லிணக்க நீராடுவது அநுரா அவர்களுக்கு ஆகக் கூடிய காரியமா? என்பதே இலக்கின் கேள்வி.
ஆசிரியர்

Tamil News