ஈழத்தமிழர் இறைமை மீளுறுதிக்கான நில – மக்கள் ஒருமைப்பாட்டுக்கான பொதுவேட்பாளருக்கான வாக்கு நமக்கு நாமேயளிக்கும் வாக்குப்பலம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 303

ஈழத்தமிழர்களுக்கான எந்தத் தீர்வாக இருந்தாலும் அது ஈழத்தமிழரின் இறைமையையும் தன்னாட்சி உரிமையையும் அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் எனச் சிறிலங்காவுக்கும் அதன் கூட்டாண்மை பங்காண்மை நாடுகளுக்கும் பொதுவேட்பாளர் தேர்தல் கொள்கைத் திரட்டு உறுதி செய்துள்ளது. இலக்கு வாராந்த மின்னிதழ் இறைமைக்கு முன்னுரிமை கொடுத்தே தாயக அனைத்துலக எந்த அரசியற் செயற்பாடுகளும் செய்யப்பட வேண்டுமென்று சில ஆண்டுகளாக ஆசிரிய தலையங்கத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை வாசகர்கள் நன்கு அறிவர். இதனால் இன்னும் 14 நாட்களே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் பொதுவேட்பாளர்க்கு அளிக்கும் வாக்கு நமக்கு நாமே அளிக்கும் வாக்கு என்பதை அனைத்து வாக்களிக்கத் தகுதியுள்ள ஈழத்தமிழர்களும் ஏற்று வாக்களிக்கத் தாயகத்திலும் புலத்திலும் உள்ள ஒவ்வொரு ஈழத்தமிழரும் தம்மாலானவற்றைச் செய்யுமாறு இலக்கு மீளவும் பணிவன்பாக வேண்டுகிறது. அத்துடன் தென்தமிழீழத்தைச் சார்ந்த ஒருவர் தன்னலமற்ற முறையில் பொதுவேட்பாளருக்கான அடையாளத் தலைமையினையேற்று  பொலிகண்டி முதல் பொத்துவில் வரை வாக்களிக்க வேண்டி தொடங்கியுள்ள ஒற்றுமைப் பயணம் ஈழத்தமிழர் தாயகத்தின்  பிரிக்க இயலாத நில ஒன்றிப்பையும் மக்களின் ஒருமைப்பாட்டையும் உலகுக்கு வெளிப்படுத்துவதற்கான விழிப்புணர்வுச் சங்கோசையாக அமைந்து அவரின் சங்குச் சின்னத்தை ஈழத்தமிழரினதும் தாயகத்தினதும் உரிமைச்சின்னமாக வாக்குகளால் உறுதிப்படுத்த ஈழத்தமிழரை அழைக்கிறது என்பது இலக்கின் கருத்து.
அடுத்து பொதுவேட்பாளர் தேர்தல் கொள்கை திரட்டின் முக்கிய தீர்மானங்களையும் அவை குறித்த குறிப்புரைகளை யும் முன்வைக்க வேண்டிய கடமையையும் இலக்கு முன்னெடுக்க வேண்டியதாக உள்ளது.
1. இலங்கையின் புதிய அரசியலமைப்பு ஈழத்தமிழ் மக்கள் இறைமையும் தன்னாட்சி உரிமையும் கொண்ட இனம் என்பதை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
இந்த முதலாவது தீர்மானம்தான் பொதுவேட்பாளர் மூலம் ஈழத்தமிழர் உலகுக்கு உணர்த்தும் தலைமைச் செய்தியாக உள்ளது.
2. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொண்டால் தான் இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பு  உறுதிப்படுத்தப்பட்டு இலங்கை தேசங்களின் ஒன்றியமாக அமைந்து பன்மைத் தேசிய அரசாக (Plurinational State) அரசு கட்டமைக்கப்படலாம்
இந்த இரண்டாவது தீர்மானம் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இலங்கை சிங்கள நாடு சிங்கள இனத்துக்குரிய நாடு பௌத்த ஆகம சட்டங்களுக்குரிய நாடு என்ற 1956 முதலான 68 ஆண்டுகால ஈழத்தமிழர் இறைமையழிப்பு அரசியற் கொள்கைக்கு எதிர்வினையாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பன்மைத் தேசிய அரசாக அரசு உருவாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து ஈழத்தமிழரின் தேசிய நீக்கத்துக்கும் ஈழத்தமிழரின் இறைமை நீக்கத்துக்கும் சிறிலங்காவும் அதன் ஆதரவு நாடுகளும் முன்னெடுத்து வரும் அரசியல் தத்துவம் என்பதைத் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பு கவனத்தில் கொண்டு. 21ம் திகதிக்குப் பின்னர் ஈழத்தமிழர்களை வெறுமனே சிறிலங்காவின் சமுகமாகத் தீர்வு காண முயல்பவர்களுக்கு எதிராகச் சரியான முறையில் இத்தீர்மானம் திருத்தப்பட வேண்டும்.
3. ஒற்றையாட்சியினை உடைய எந்த அரசியலமைப்பாலும் தமிழர்களின் நியாயமான அரசியல் விருப்புக்களை ஒரு போதும் நிறைவு செய்ய இயலாது.
உண்மையில் இந்தத் தீர்மானம் வலியுறுத்தும் விடயம் அதி முக்கியமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை
4. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டுமென்பதை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.
இவ்விடத்தில் ஈழத்தமிழரின் உள்ளக தன்னாட்சி மறுக்கப்படுதலை வெளிப்படுத்துதலும் வெளியக தன்னாட்சியை வலியுறுத்துவதும் 21ம் திகதிக்கு பின்னரான தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பொறுப்பாகிறது.
5. தமிழ் மக்களின் சுயநிரிணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்தத் தமிழ்ப் பொதுக்கட்டமைப்பு தயாராக உள்ளது.
தமிழர் தாயக நில ஒன்றிணைப்பையும் மக்கள் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் இத்தீர்மானம் முஸ்லீம்கள் விடயத்தில் நாம் அவர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குபவர் போன்ற நிலையில் பேசப்படுவதையும் 21ம் நாளுக்குப் பின்னர் மீள் சிந்தனை செய்ய வேண்டும்.
6. மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர் களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடிப் பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பானது மலையகத் தமிழர்களுடன் தோளோடு தோள் நிற்கும்.
அருமையான இந்தத் தீர்மானம் தமிழினத்தவர் நாம் என்பதை மேம்படுத்துமென்பது உறுதி
7. ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் சிறிலங்கா அரசு நடாத்திய இனஅழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கு ஊடாக முழுமையாகவும் முறைமையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இனஅழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஜ.நா. பொதுச் செயலர், பொறுப்புக் கூறலை ஐ.நா. பொதுச்சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.
இத்தீர்மானத்தின் அரசியல் மொழி 21இன் பின்னர் வெளிப்படையாக்கப்பட்டு  தண்டனை நீதி குறித்துப் பேசாதிருக்கும் நிலை மாற்றப்பட்டு சமகாலத்தில் அனைத்துலக நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் பேரவை என்பவற்றுடன் வேலைசெய்யும் தமிழர்களுடனும் அனைத்துலகத்தவருடனுமான ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் அனைத்துலகத் தரத்துக்கு மீளமைக்கப்பட வேண்டும்.
8. அபிவிருத்தியின் பேரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும். நமது வளங்கள் இனஅழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்த வல்ல தற்சார்புக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.
தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட இத்தீர்மானம் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளூர் மற்றும் அனைத்துலக முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் புலம்பெயர் தமிழர்களதும் முதலீட்டாளர்களதும் நம்பிக்கையை வெல்வதற்கான வேலைத்திட்டங்களையும் மனிதவலு நிதிவளம் தொழில்நுட்பப் பலம் என்பவற்றையும் இணைக்கும் வகையில் 21க்குப் பின்னர் மறுசீரமைக்கப்படலவசியம்
9. தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும்.
இத்தீர்மானம் ஈழத்தமிழர் தாயகத்தின் இந்துமாக்கடலின் இருப்பின் முக்கியத்துவத்துக்கும் வளப்பயன்பாட்டுக்கும் சொந்தக் காரர்கள் ஈழத்தமிழர்கள் என்பது அறிவார்ந்த நிலையிலும் வரலாற்று நிலையிலும் விளக்கும் வகையில் 21க்கு பின்னர் மீள் அமைக்கப்பட வேண்டும்.
10. ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடொன்று (Protective Mechanism) உருவாக்கப்பட வேண்டும்.
இத்தீர்மானத்தில் 21க்குப் பின்னர் ஈழத்தமிழர் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ இயலாத மக்களாகப் பிரித்தானியக் காலனித்துவ அரசால் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையால் சிறப்புப் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டாலே பன்னாட்டுப் பாதுகாப்பு பொறிமுறை நடைமுறைச் சாத்தியமாகும். மேலும் மக்கள் ஒருமைப்பாடே ஒரு சமுகத்தைத் தேசஇனமாக்கும் என்பதும் மக்களின் ஒருங்கிணைந்த விருப்பே அத்தேச இனத்தின் இறைமையை உலகு ஏற்க வைக்கும் என்பதும் முக்கியமானது. இந்நிலையில் அனைத்துலக அறிவுத்தளமும் நிதித்தளமும் தொழில்நுட்பத் தளமும் நிபுணத்துவத் தளமும் வர்த்தகத் தளமும் அந்தத் தேசத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டாலே உலகம் அந்தத் தேச மக்களையும் தேசத்தையும் அங்கீகரிக்கும். இதனை ஈழத்தமிழர் அனைவரும் நெஞ்சிருத்திச் செயற்பட வேண்டிய நேரமிது என்பதை இலக்கு உரிமையுடன் வலியுறுத்த விரும்புகிறது.
ஆசிரியர்

Tamil News