ஈழத்தமிழர் இறைமையினை மீளுறுதி செய்யும் அரசியலமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பும் உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 298

கடந்த வாரத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் முனைவர் சு. ஜெய்சங்கர்
அவர்கள் இரகசியமாகக் கொழும்பு வந்து சிறிலங்காவின் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இரகசியப் பேச்சுக்களில் கலந்து கொண்டதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்கா அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நாட்டின் விமானப்படைக்குச் சொந்தமான விமானநிலையங்களை அனைத்துலக விமானநிலையங்களாகத் தரமுயர்த்தல் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்திய மேலாண்மையின் கீழ் கொண்டு வரக் கூடிய முறையில் இந்தியாவின் அனைத்துலக விசாக்களை வழங்கும் நிறுவனத்தின் வழி விசாக்கள் வழங்குவதற்கான முறைமையைக் கொண்டு வருதல் என்பதும் இந்திய ரூபாவை சிறிலங்காவுக்கும் பொதுவான நாணயமாக்கி அமெரிக்க சீன நாணயமாற்றுக்களுடன் போட்டியிடுவதும், கூடவே இந்தியாவால் நிதி முகாமைத்துவம் செய்யக் கூடிய வகையில் பத்து செயற்திட்டங்களை சிறிலங்காவின் அரசுத்தலைவர் தேர்தலுக்கு முன்பே இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் ஆகஸ்ட் மாதச் சிறிலங்கா பாரத் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வருகைக்கு முன் சட்டவலுவுள்ளதாக மாற்றிச் செயற்பாடுகளை இந்தியப்பிரதமர் மூலம் தொடக்கி வைப்பதும் இந்த இரகசிய வருகைகளினதும்  பேச்சுக்களினதும் நோக்கு எனவும் அநுரகுமாரா திசநாயக்கா தனது ஊடகவியலாளர் அவசர சந்திப்பில் விளக்கியுள்ளார். ஆயினும் தற்போது தேர்தலுக்குப் பின்னரே இந்தியப் பிரதமரின் வருகை இடம்பெறும் என்கின்ற செய்தி வெளியாவது இரகசியப் பேச்சுக்களின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன.
அதே வேளை சிறிலங்கா கடற்படையினர் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தமிழ் நாட்டுப் படகொன்றை தங்கள் கப்பலால் மோதி இந்திய மீனவர் ஒருவரை உயிரிழக்க வைத்தது மற்றும் ஒரு மீனவரைக் காணாமல் போகச் செய்தது தொடர்பாக டில்லியில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து கடுங் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன் படைகளின் பலப்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும் என்ற எச்சரிப்பும் செய்துள்ளது. கூடவே கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரும் சிறிலங்காவுடன் இது தொடர்பாகப் பேசவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் பாரத் சிறிலங்கா கூட்டாண்மைக்குள் நெருடல்கள் ஏற்பட்டுள்ளதைத் தெரியப்படுத்துகின்றன. இந்நிலையில் தாயகத்து ஈழத்தமிழர்களும் உலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும் இந்தியாவுக்கு வேண்டப்பட்டவர்களாக மாறுவது இயல்பு. இதனால் உலகில் வாழும் ஈழத்தமிழர்களின் மூலதனங்களை இந்தியா வழியானதாக இலங்கையில் செயற்பட வைப்பதையும் ஈழத்தமிழர்க்கான இந்தியத் தீர்வுகளை அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்கள் அமைப்புக்கள் ஒன்றுபட்டு ஏற்பதற்கான திட்டமிடல்களைச் செய்யவும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை எதிர்வரும் வாரத்தில் இலண்டன் வரவுள்ளதாகவும் இதற்கான நெறிப்படுத்தல்களைச் செய்ய அவர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை எல்லாமே இந்தியக் கூட்டாண்மை சிறிலங்காவின் அரசுத்தலைவர் தேர்தல் உட்பட அனைத்து சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக நிலைகளிலும் சிறிலங்காவின் எதிர்காலத்தையும் ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தையும்  முடிவாக்கும் சத்தியாகத் தொடரும் என்பதையும் அதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையிலேயே ஈழத்தமிழினத்தின் எதிர்கால முடிவுகளும் அமையும் என்பதும் தெளிவாகிறது.
இவற்றைக் கருத்தில் கொண்டே ஐக்கிய நாடுகள் சபையுடன் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர் விடயங்களில் அனுபவமுடைய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் திரு
ச.கிருபாகரன் அவர்கள் இந்தியாவின் அனுசரணையுடன் ஆபிரிக்க நாடுகளான அல்ஜீரியா, பெனின், புருண்டி, கேமருன், ஐவோரி கோஸ்ட், எரித்திரியா, காம்பியா, கானா, மலாவி, மொரொக்கோ, சோமாலியா, தென்னாபிரிக்கா, சூடான், ஆசிய-பசுபிக் நாடுகளுடான சீனா இந்தியா, இந்தோனேசியா, யப்பான், கஜகஸ்தான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலைதீவுகள், கத்தார், ஐக்கிய அரபுநாடுகள், வியட்நாம், இலத்தீன் அமெரிக்க கர்பியன் நாடுகளான அர்ஜென்டினா, பிரேசில், சிலி கோஸ்டாரிக்கா, கியூபா, டொமினிக்கன் குடியரசு, ஹோண்டுராஸ், பராகுவே, மேற்கு ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்சு, பின்லாந்து, யேர்மனி, இலக்சம்பெர்க், நெதர்லாந்து, கிழக்கு அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா, பல்கேரியா, ஜார்ஜியா, லித்துவேனியா, மாண்டினீக்ரோ, ருமேனியா ஆகிய  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகள் 48 உடனும் ஈழத்தமிழர்கள் உரையாடல்களை உருவாக்கினாலே சிறிலங்காவைக் கண்காணிக்கக் கூடிய ஒரு விசேட பிரதிநிதியை நியமித்தல், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை முன்மொழிதலுக்கான ஆரம்ப வேலைகள் நடைமுறைச் சாத்தியமாகலாமென்ற மிக முக்கியமான வேண்டுகோளை ஆகஸ்ட் முதலாம் திகதி விடுத்துள்ளார்.
அத்துடன் ஈழத்தமிழர்களுடன் காலனித்துவ அரசாகத் தொடர்புடைய வரலாற்றைக் கொண்ட 1505 முதல் 1621 வரை 116 ஆண்டுகள் யாழ்ப்பாண அரசு எதிர்த்துப் போராடிய பின்னர் யாழ்ப்பாண அரசின் இறைமையைத் தனதாக்கி 1658 வரை 37 ஆண்டுகள் காலனித்து ஆட்சி செய்த போத்துக்கல், 1658 முதல் 1796 வரை 138 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சி செய்த நெதர்லாந்து, 1796 முதல் 1972 வரை 176 ஆண்டுகள் ஈழத்தமிழர்களின் இறைமையைத் தமதாக்கிய பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் அவற்றை ஈழத்தமிழரின் தனியான அரசு இருப்புக் குறித்த வரலாற்று உண்மைகளைப் பேச வைக்கக் கூடிய முறையில் தொடர்பாடல்களை உருவாக்க வேண்டுமென அவர் கூறியுள்ளமையும் காலனித்துவ நாட்டின் பரிந்துரையாலேயே கிழக்குத் திமோர் தனது தன்னாட்சியை நிறுவிக்கொண்டது என்ற அனைத்துலக உதாரணத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் போர்த்துக்கல்லுடன் அங்கு செல்வாக்குள்ள மக்களினமாக உள்ள கோவா மக்களின் உதவியுடன் தொடர்பாடல்கள் தொடங்கப்பட வேண்டுமென்ற விதந்துரையையும் வெளிப்படுத்தியுள்ளார்.   இவரது இந்த அறிக்கை கூட்டாண்மையாக இலங்கைத் தீவில் உள்ள இந்தியாவும் பங்காண்மைகளாக இலங்கைத் தீவில் நிலைபெற்றுவிட்ட சீன-அமெரிக்க-மேற்குலக மற்றும் ஆசிய நாடுகளும் இதே போன்று இலங்கைத் தீவில் அதன் தேசமக்களான சிஙகள தமிழ் மக்களிடை தங்கள் மேலாண்மைகள் வழி அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்வார்கள் என்கிற நடைமுறை உண்மை வழி சிந்திக்க வைக்கிறது.  இவை இன்று அரசியல் கூட்டாண்மைகள் பங்காண்மைகள் வழியாக மக்களின் எதிர்காலம் முடிவுசெய்யப்படுவதாக உள்ளது என்ற உலகப் பொதுமையைத் தெளிவாக்குகின்றன. இந்நிலையில் நாடுகள் மட்டுமல்ல தேசஇனங்களும் தங்களுடைய மக்கள் இறைமையை வெளிப்படுத்தும் அரசியலமைப்புக்களையும் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கைத் திரட்டுக்களையும் எழுத்துருவில் கட்டமைத்தால்தான் மற்றைய தேச இனங்களுடனும் நாடுகளுடனும் அமைப்புக்களுடனும் உட்தொடர்பாடல்களை வளர்த்து தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான ஆட்சிக்குள்ளும் வளர்ச்சிகளுக்குள்ளும் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்பது இலக்கின் தலையாய எண்ணமாகவுள்ளது.
அத்துடன் போராட்ட வலி சுமந்த அரகலியப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் போராட்ட முன்னணி என்ற தன்விருப்பு  அரசியல் கட்சியாகப் போட்டியிடுகின்றனர். இவர்களது “மக்களின் கொள்கை” என்ற தேர்தல் கொள்கை விளக்கத் திரட்டை “தன்னாட்சி மிக்க பிரதேசங்கள், இனங்களுக்கான தன்னாட்சி உரிமை, மீளப்பெற முடியாத அதிகாரங்கள், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக எதிர்நோக்குகின்ற காணிப்பிரச்சினைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள மயப்படுத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை போன்றவற்றைத் தெட்டத் தெளிவாக அடையாளம் கண்டுள்ளோம்.அவற்றுக்கான தீர்வையும் முன்வைத்துள்ளோம். மக்களின் பிரச்சினை அவர்களின் தேவை அடிநாதம் என்னவென்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் மக்களில் இருந்து வேறுபட்ட ஒரு குழுவாக அதிகாரம் மிக்க குழுவாக நிற்க ஒருபோதும் விரும்பவில்லை. நாங்கள் மக்களோடு மக்களாக நிற்கின்றோம்.” என எல்லா மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக வெளியிட்டுள்ளனர். இதனை வரவேற்கும் இலக்கு இவர்களுக்கும் மக்கள் என்ற நிலையில் ஈழத்தமிழர்களை வரைவிலக்கணப்படுத்துகையில் சிறுபான்மையின மக்கள், வடக்கு கிழக்கு மக்கள் என்ற கருத்தியலை வெளிப்படுத்தி தமக்கு ஈழத்தமிழர் இறைமையுள்ள தேசஇனம் என்பதில் உள்ள தெளிவின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய விடயங்கள் உரையாடல் மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எனவே தான் ஈழத்தமிழ்மக்கள் தங்களின் அரசியலமைப்பை வெளிநாட்டுக் கொள்கையை பொருளாதாரக் கட்டமைவுகளை எழுத்தில் வெளிப்படுத்துவது எல்லா வகையிலும் இன்றைய தேவையாக உள்ளது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.

Tamil News