காசாவும் ஈழமும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஒரு தேசமக்களின் இறைமை இழப்பால் அவர்கள் இனஅழிப்படைவர் என்பதற்கு உதாரணம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 257
அமெரிக்க, சீன, இரஸ்ய, பாக்கிஸ்தானிய, இந்திய, அவுஸ்திரேலியப் புலனாய்வாளர்கள் சிறிலங்காவில் புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டனர் என்று சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா யேர்மனிய டொச்சே வெல்லே ஊடகத்தின் ஊடகவியலாளர் மார்ட்டின் கக் அவர்களுடான செவ்வியில் வெளியிட்ட தகவல் சிறிலங்கா தன்னுடைய இறைமையை இழந்து சிறிலங்காவில் தங்கள் இராணுவ சந்தை நலன்களில் அக்கறையுள்ள நாடுகளின் கூட்டு இறைமைக்குள் உள்ளது என்ற அரசியல் நடைமுறை உண்மையை உலகுக்குத் தெளிவாக்கியது.
மேலும் சிறிலங்கா அரசாங்கம் தனக்கு ஏற்பட்டு விட்ட இறைமை இழப்பின் விளைவுகளிலிருந்து சிங்கள மக்களைத் திசைதிருப்ப சிங்கள இனவெறியுணர்வுகளையும் பௌத்த வெறியினையும் மகாநாயக்கர்கள் மூலமும் 2009 இல் ஈழத்தமிழின அழிப்புப் படையினராக அனைத்துலகச் சட்டங்களை மீறியவர்கள் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் சிவில் நிர்வாக உயர் அதிகாரிகளாகவும் சிறிலங்கா அரசாங்கத்தில் இடமளிக்கப்பட்டார்கள். இவர்கள் இனவெறியினைத் தூண்டி மீளவும் ஈழத்தமிழின அழிப்பு நோக்கிலான இனக்கலவரங்களை உருவாக்கும் அரசபயங்கரவாதச் செயற்பாட்டை உருவாக்க கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இதனால் இஸ்ரேயல் காசா பிரச்சினையில் உலக கவனம் இருக்கையில் எந்நேரத்திலும் ஈழத்தமிழின அழிப்பு மீளவும் சிறிலங்காவால் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சம் ஈழத்தமிழரிடை தாயகத்திலும் உலகெங்கிலும் உண்டு.
மேலும் சிறிலங்காவின் பொருளாதார வங்குரோத்துப் பிரகடனம், கடந்த ஆண்டு மேமாதத்தில் சிறிலங்காவின் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பின்னர் இன்று வரையான காலப்பகுதியில் சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு முறையும், முதல் “தலைமுடி வெட்டல்” ( Hair cut) என்று நிதிமுகாமைத்துவத்தில் சுட்டப்படும் குறித்த இலக்கை அடைவதற்கான நிபந்தனைகளை வைத்து அதனைச் செயற்படுத்தினால் கடன் மன்னிப்புக்களும் வட்டிக் குறைப்புக்களும் கடன்கொடுத்தவர்களால் அளிக்கப்படும் என உறுதிப்படுத்தும் முறையும் இன்று சிறிலங்கா அரசாங்கத்தால் அல்ல இலங்கைத் தீவின் மேல் தங்களின் இராணுவ சந்தை நலன்களை நிறுவப் போட்டியிடும் உலக வல்லாண்மைகளாலும் பிராந்திய மேலாண்மைகளாலும் தீர்மானிக்கப்படும் ஒன்றாகவே நடைமுறையில் காணப்படுவது இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசாங்கம் தனது இறைமையை முற்று முழுதாக இழந்துவிட்டது என்ற பொருளாதார நடைமுறை உண்மையை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது.
பிரித்தானிய காலனித்துவ அரசு ஈழத்தமிழர்களின் இறைமையையும் இலங்கை அரசாங்கத்துள் இணைத்த காலனித்துவப் பிரச்சினையால் கடந்த 75 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் தங்கள் தன்னாட்சியைப் பயன்படுத்தி தங்களின் ஈழத்தைப் பாதுகாக்க இயலாத நிலை தொடர்வதால் ஈழத்தமிழர்களின் இறைமையும் இழப்படைந்து வருகிறது. இந்த சிறிலங்காவின் இறைமை இழப்புக்குள் பிரித்தானிய காலனித்துவ அரசால், உள்ளடக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் இறைமையும், அவர்கள் தன்னாட்சியுடன் வாழ இயலாத நிலையைத் தோற்றுவித்து அவர்களது இறைமையயும் இழக்க வைத்து வருகிறது. இந்நிலையிலாவது உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையை ஏற்று அவர்களை சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து விடுவிப்பது அவர்களின் கடமை என்பதை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
மேலும் சிறிலங்காவின் இறைமையிழப்பை சிறிலங்காவின் அனைத்துலக நட்பின் சாதனையெனக் காட்டும் முயற்சியில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி “அமெரிக்கா எங்களின் பெரிய சந்தை அங்கேயே எங்களின் உற்பத்திகள் அதிகம் செல்கின்றன. இந்தியா அயல்நாடு. வர்த்தகக் கூட்டாளி, கடந்த வருட மிக நெருக்கடியான நிலையில் இருந்து எங்களைக் காப்பாற்ற உதவியது. சீனா எங்களின் நீண்டகால நண்பர். அனைத்துலக மட்டத்தில் அது எங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறது. நாங்கள் நடுவில் நிற்கிறோம். பக்கம்சாய மாட்டோம் எந்தத் தரப்புடனும் பதற்றத்தை விரும்பவில்லை. எந்த நாட்டையும் எந்த நாடும் அச்சுறுத்துவதற்கு எங்கள் கொல்லைப்புறங்களில் இராணுவத்தளங்களை அமைத்து அதனைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். அது உறுதியான தெளிவான விடயம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து நாட்டிற்கு அமைதியைக் கொண்டு வந்த போது பெரும் முதலீடு தேவைப்பட்டது. அதனை வழங்கச் சீனா துணிந்து முன்வந்தது. அடுத்து அபிவிருத்தியை மையமாகக் கொண்ட போது யாராவது பணத்தை முதலீடு செய்ய வேண்டும். உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் சீனா அதிக வலுவும் நிதியும் கொண்டது. சீனா முதலீடுகளுக்காகக் காத்திருக்கிறது. புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின் மூலோபாயமாக முதலீட்டை சீனா முன்னெடுக்கிறது. நாங்கள் அந்த முதலீடுகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். முதலீடு இலாபத்தை ஈட்டுவதற்கு முதலீடு செய்யப்படும் நாடு வெற்றி பெறுவதையும் முதலீட்டாளர்கள் விரும்புவர். இந்த விடயத்தில் சிறிலங்கா எங்கு தோல்வி அடைந்துள்ள தென்றால் எங்கு முதலீடு செய்வது எதற்கு முன்னுரிமை கொடுப்பதென்பதில் சிறிலங்கா சரியாகச் செயற்படவில்லை. இந்த விடயத்திலேயே சிறிலங்கா சரியான முடிவை இன்று எடுக்க வேண்டியுள்ளது” என இராஜதந்திரப் பேட்டியொன்றை சனல் நியூஸ் ஏசியா ஊடகத்துக்கு வழங்கியுள்ளார். ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர்கள் எப்படி எல்லாநாடுகளுடனும் இணைந்தும் தங்கள் கொள்கையில் உறுதியாகவும் செயற்பட வேண்டுமென்பதற்கு இப்பேட்டி அறிவளிக்கும் என்பது இலக்கின் நம்பிக்கை.
இங்குதான் வடக்கு கிழக்கு முதலீடுகளுக்கு வளமுடைய சரியான இடமாகச் சிறிலங்காவின் இன்றைய அரசால் தீர்மானிக்கப்பட்டு தங்களது வங்குரோத்துப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் ஈழத்தமிழர்களை அவர்களின் தன்னாட்சியைப் பயன்படுத்தி வாழாதவாறு அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்கவைத்து வெளியேற வைக்கவும் ஒரு கல்லில் இருமாங்காய் விழுத்தும் திட்டமாக வல்லாண்மைகளுக்கும் பிராந்திய மேலாண்மைகளுக்கும் அவர்களின் முதலீட்டுக்குரியதாக வடக்கு கிழக்கு சிறிலங்காவால் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை இஸ்ரேயலால் தனது பாதுகாப்புக்கென பலஸ்தீனியர்கள் காசாவில் இனப்படுகொலைகள் செய்யப்படும் அதே நிலையை 2009க்குப் பின் மீளவும் ஈழத்திலும் ஏற்படுத்தக் கூடிய அனைத்துலக வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகளின் போட்டித் தளமாக ஈழத்தமிழர் தாயகத்தைச் சிறிலங்காவின் இன்றைய அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது.
மேலும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஆட்சியைப் பெறும் தேசஇனம் மற்றைய தேசஇனத்தின் இறைமையை இழக்க வைப்பதால் அந்தத் தேசஇனம் இனஅழிப்படைவர் என்பதற்கு காசாவும் ஈழமும் உதாரணம் என்பதை இலக்கு தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறது. உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் ஆட்சிப்பொறுப்பேற்ற தேசஇனத்தின் இனஅழிப்பை அது தனது நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பேணும் தேசியப்பாதுகாப்பு நடவடிக்கை என நியாயப்படுத்துவதை ஏற்று அவர்களின் அரசு பலமான அரசாகத் திகழ்வதற்கான முழுஆதரவையும் அளிப்பர் என்பதையும் ஈழத்திலும் காசாவிலும் உலகம் கண்டு வருகிறது. எனவே பலஸ்தீனிய மக்களின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவு தெரிவிக்கும் இலக்கு, ஈழமக்களின் தன்னாட்சி உரிமையையும் உலகு தனது ஆதரவால் உறுதிப்படுத்தினாலே ஈழம் மீளவும் 2009 போன்று இனஅழிப்பைக் காணாது தடுக்கலாம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறது.