ஈழத்தமிழருக்குச் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலையில் இறைமையுடன் கூடிய தன்னாட்சியே உயிர் பாதுகாப்புக்கான ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 254

ஈழத்தமிழருக்குச் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலையில்
இறைமையுடன் கூடிய தன்னாட்சியே உயிர் பாதுகாப்புக்கான ஒரே வழி
| ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 254

முல்லைத்தீவு மாவட்ட நீதியரசர் சீ சரவணராஜா அவர்களைச் சிறிலங்காவின் சட்டமா அதிபர் அழைத்து ஆலோசனை என்ற பெயரில் குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் அவர் அளித்த தீர்ப்பை மாற்றும்படி வலியுறுத்தி நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாடு சட்டமா அதிபராலேயே அனுமதிக்கப்படாதநிலை இலங்கையில் உண்டென்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்காப் பாராளுமன்றத்தில் யூலை மாதம் 23ம் நாள் சிறிலங்காவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரா தனது உரையில் மிகமோசமான முறையில் நீதியரசர் சீ சரவணராஜாவை அவதூறாகப் பேசி பாராளுமன்ற உறுப்பினருக்குள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தித் தான் அவதூறு பேசியதற்கான சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து சிங்கள பௌத்த இனமதமொழி வெறியை மக்கள் மத்தியில் தூண்டியுள்ளார். அதே வேளை பாராளுமன்றத்துக்கு நீதித்துறையினைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையை உள்ளாராட்சி தேர்தலுக்கு நிதியை வழங்க வேண்டுமென தீர்ப்பளித்த நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்கப் போவதாக எச்சரித்ததின் மூலம் இன்றைய அரசு வெளிப்படுத்தியது. இதன் மூலம் சனநாயக ஆட்சியில் சட்டவாக்கம் சட்ட அமுலாக்கம் நிர்வாகம் மூன்றும் வெவ்வேறாக இருக்க வேண்டுமென்ற வலுவேறாக்கக் கோட்பாட்டையே மீறி சனநாயக ஆட்சியைச் சர்வாதிகார ஆட்சியாகப் பாராளுமன்ற கொடுங்கோன்மையை வெளிப்படுத்தினர் .இதனை ஊக்குவிக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் உள்ள் சர்வ வல்லமையுள்ள ஜனாதிபதிதான் என்பதை உணர்த்தும் வகையில் ஜனாதிபதியே கடன்மறுசீரமைப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பைப் பொருட்படுத்த மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்து நிர்வாகத்தின் தலையீட்டை நீதித்துறை மேல் வெளிப்படுத்தினார்.
இவற்றுக்கு அப்பால் இலங்கை அரசியலில் அமுக்கக் குழுக்களாக என்றும் உள்ள மகாசங்கப் பௌத்தபிக்குகள் தாங்களே நாட்டின் மீயுயுர் இறைமையாளர்கள் என்று மக்களின் இறைமையைக் கையிலெடுத்து சர்வாதிகளாகப் பலவழிகளில் குருந்தூர்மலைத் தீர்ப்பை அளித்தும், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளை அகழ்வாராய்வதைப் பார்வையிட்டு கட்டளைகள் இட்டு நெறிப்படுத்தியும், தியாக தீபம் திலீபனின் நினைவினை முன்னெடுப்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்தும் தனது நீதித்துறைக் கடமையைச் செய்த நீதியரசர் சீ சரவணராஜா அவர்களுக்கு எச்சரிப்புக்களும் மிரட்டல்களும் செய்துள்ளனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் அவர்மேல் போடப்பட்டு அவரின் சுதந்திரமாகத் தீர்ப்பளிக்கும் உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டது இவற்றின் உச்சநிகழ்வாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் செய்து, இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியதால் நீதியரசர் சீ.சரவணராஜா தனது நீதியரசர் பதவியினைத் துறப்பதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துவிட்டு நாட்டை விட்டு உயிர்ப்பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளார்.
இந்த வார இறுதியில் நடந்த இந்த நிகழ்வானது ஈழத்தமிழருக்கு சனநாயக ஆட்சியின் ஆணிவேராக உள்ள சட்டத்தின் முன் நாட்டின குடிகள் அனைவரும் சமம் என்பது நீதிபதியரசராக தமிழர் இருந்தாலும் அவருக்கில்லை என்பதையும் சட்ட அமுலாக்கத்தின் மூலம் இனம்காணக்கூடிய அச்சத்தால் நீதியரசரையும் வேறுநாடுகளில் அரசியல் புகலிடம் கோரும் நிலையை உருவாக்குவார்கள் என்பதையும் உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் கடந்த வாரத்தில் ஈழத்தமிழர்களின் நடமாடும் சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம் போன்ற அடிப்படை மனிதஉரிமைகளையே மறுத்து தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தியை தாக்கிச் சேதப்படுத்தியும் கூடவே நினைவு ஊர்தியோடு சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனைக் கைகளாலும் சிறிலங்கா தேசியக் கொடியுடன் பொல்லுகளாலும் தாக்கிச் சிறிலங்காவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர்கள் தமிழராக இருப்பின் அவரின் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமைகளும் மதிக்கப்படாது பொலிசாரின் பாதுகாப்பும் இருக்காது என்பதை உலகுக்கு ஈழத்தமிழர்களுடன் தாம் கூடிவாழ விரும்பவில்லை என்பதைச் சிங்களவர்கள் ஈழத்தமிழர்களின் தலைநகரமாகக் கருதப்படும் திருகோணமலையில் வைத்து நிரூபித்திருந்தார்கள்.
இந்த இரண்டு சமகால வரலாற்று நிகழ்வுகளும் ஈழத்தமிழர்களுக்குச் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தின் வழி நீதி பெறும் நீதிச் சமத்துவம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி அடிப்படை மனித உரிமைகள் ஈழத்தமிழருக்கு அனுமதிக்கப்படாதென்பதையும் மீளவும் உறுதியாக்கியுள்ளன. இதற்கு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் சட்டப்பலமளித்து, 1979 முதல் பயங்கரவாதத் தடைச்சட்டம் மூலம் ஈழத்தமிழரை இனவழிப்பு செய்வதை மேலும் வலுப்படுத்தவுள்ளது.
கூடவே சமூக வலைத்தளங்கள் சமூக ஊடகங்கள் வழி ஈழத்தமிழர்கள் உலகிடம் தங்களுக்கு நாளாந்தம் சிறிலங்கா செய்யும் இனங்காணக்கூடிய அச்சத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்க ஊடகங்களையும் மக்களையும் மௌனிக்கச் செய்யும் நிகழ்நிலைக்ககாப்பு ஆணைக்குழவை நிறுவும் நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழச் சட்டமும் பாராளுமன்றத்தில் சட்டமாகிறது. இவற்றின் துணையுடன் மீண்டும் ஒரு ஈழத்தமிழின அழிப்பை மதவெறிமூலம் தொடக்கி அனைத்துலக நாணய நிதியம் 2வது தவணைப் பணத்தை வழங்காது அல்லது மிகக்குறைத்து வழங்குவதால் ஏற்படப்போகும் பட்டினிநிலையால் சிங்களவர்கள் கிளர்ந்தெழுவதைத் திசைமாற்றச் சிறிலங்கா அரசாங்கம் பலமாக முயன்று வருகிறது.
இவற்றில் இருந்து ஈழத்தமிழர்களைக் காக்க ஈழத்தமிழ் மக்களின் இறைமையுடன் கூடிய தன்னாட்சியே அவர்களுடைய உயிரையும் உடைமைகளையும் நாளந்த வாழ்வையும் பாதுகாப்பதற்கான ஒரேவழி என்பதை உலகநாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் மீண்டும் தெட்டத்தெளிவாக்குகின்றன. எனவே உலகநாடுகளும் ஐக்கியநாடுகள் சபையும் அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாக ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்கும் பிரிக்கப்பட முடியாத அவர்களின் மனிதஉரிமையினை மதித்து அவர்களுக்கான தன்னாட்சியை அவர்கள் பெற்று வாழ அனைத்துலகச் சட்டங்கள் நெறிப்படுத்தும் செயற்பாடுகளை உடனே தொடங்க உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் செயற்பட வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார அழைப்பாக உள்ளது. வெறும் கண்டனங்களும் திறானய்வுகளும் செய்து காலத்தை வீணடிக்காது ஐக்கியநாடுகள் சபையையும் உலகநாடுகளையும் அவற்றின் அனைத்துலகச் சட்டக் கடமைகளைச் செய்யுமாறு ஊக்குவிக்கும் செயற்திட்டங்களை தாயகத்திலும் புலத்திலும் கூடித்திட்டமிடல், வேலைகளைப் பிரித்துச் செய்தல், இளையவர்களை அவர்கள் பாணியில் பங்கேற்க அனுமதித்தல் வசைபாடுவதை விடுத்து இசைவுள்ள சமுதாயமாகத் தேசமாக எழும் சத்தியை ஈழத்தமிழரிடை தோற்றுவித்தல் ஈழத்தமிழரின் மதிவளத்தையும் நிதிவளத்தையும் சமூக அறிவுப் பலமாகவும் சமூக முதலீடாகவும் மாற்றல் வழி முன்னெடுக்க முயற்சிப்பதே இன்றைய சவால்களை எதிர்கொள்ள ஒரேவழி என்பது இலக்கின் பலமான கருத்து.
அதே நேரத்தில் யேர்மனில் கடந்தவாரம் 28 29ம் திகதிகளில் நடந்த உலகமயமாக்கலை எவ்வாறு எதிர்கொள்ளுதல் என்ற அரசத்தலைவர்கள் மாநாட்டில் உலக வங்கிக்கும் யு எஸ் எய்ட் சமந்தாபவர் அவர்களுக்கும் நாட்டை வங்குரோத்து நிலையில் நின்று மீட்டு விட்டதற்கு நன்றி கூறி இந்தியாவைப் புறக்கணித்துச் சீனாவுக்கு மகிழ்வூட்டிய ரணில் இந்தியா சீனா அமெரிக்காவின் தலையீடுகள் இலங்கையின் தீர்மானமெடுக்கும் உரிமையைப் பாதித்த நிலையில் தாம் வாழப்பழகிவிட்டதாக ஐரோப்பியரை மகிழ்விக்கப் பேசி சிறிலங்கா இறைமையை இழந்துவிட்ட உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளார். சிங்கள ஆட்சியாளர்கள் அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தாங்கள் ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்புக்காக பிறநாடுகளில் போர் நடத்தப்பட்ட படுகடன்களைக்கட்ட இயலாத நிலையில் இறைமையை இழந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி போகுமிடத்துக்கு ஏற்ப பிறநாடுகளில் பழிபோடுகிறார். இம்மாதம் சீனாவுக்குப் போய் அங்கு சீனாவே எல்லாம் என்பார். இந்நிலையில் சிங்களவர்களின் இறைமைக்குள் அடங்காத ஈழத்தமிழர்களின் இறைமையை ஏற்றும் முஸ்லீம் மலையக மக்களின் குடித்துவத்தை மதித்து அவர்களின் அரசியல் உரிமைகளை வழங்கியுமே இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுபப்லாம் என்ற உண்மையை உலகுக்கு உலகத் தமிழர்கள் எடுத்துரைக்க வேண்டிய நேரமிது.

Tamil News