பேச்சுவார்த்தைப் பலத்தை அதிகரிப்பதன் மூலம் இறைமையை உறுதிப்படுத்தல் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 252

ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்னும் மையப்பொருளில் இந்தியாவில் நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான ஜி20 உலகத்தலைவர்களின் உச்சி மாநாடு 200 மணித்தியால இந்திய ராஜதந்திரிகளின் சோர்வற்ற தொடர் உழைப்பால் 300 இருதரப்பு உறவுக்கலந்துரையாடல்களை உள்ளடக்கி 15 வரைபுகளைக் கட்டமைத்து இறுதியில் உக்ரேன் யுத்தம் குறித்து பங்குபற்றிய நாடுகளின் ஒருமித்த பிரகடனத்துடன் கடந்த வாரத்தில் முடிவடைந்துள்ளது. இது குறித்து பிரித்தானியாவின் கார்டியன் ஆங்கில நாளிதழின் ராஜதந்திரம் குறித்த பத்திரிகையாசிரியர் பற்றிக் வின்ரூர் அவர்களின் 10.09.2023ம் திகதி “உக்ரேன் குறித்துத் தளர்த்தப்பட்ட ஜி20 அறிக்கை இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பின் அடையாளம்” என்னும் தலைப்பிலேயே இந்தியாவின் முயற்சியைப் பாராட்டிய ஆய்வுக்கட்டுரையில் உக்ரேனுக்கான முன்னுரிமையில் வழுகும் ஜோபைடன் சீனாவுடன் நெருக்கமாகின்றார் என்னும் மையக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது. ஒருவருடத்துக்கு முன்னர் இதே தலைவர்களால் பாலியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ரஸ்யாவைக் கண்டித்தது போன்றோ அல்லது ரஸ்யப் படைகள் விலகவேண்டுமென்று நிபந்தனைகள் அமைத்தது போன்றோ எதுவுமில்லாது உக்ரேன் யுத்தம் அமைதிக்கு வரவேண்டுமென்ற பொதுவான கொள்கைப் பிரகடனமாக இந்த அறிக்கை அமைந்ததற்கு இந்தியாவின் செல்வாக்கே காரணமென்பது ராஜதந்திர பத்திரிகையாசிரியரான பற்றிக் வின்ரூரின் மதிப்பீடாக உள்ளது. உக்ரேனின் ஜனாதிபதி செலன்ஸ்கியை டிஜிற்றல் வெளியில் கூட மாநாட்டில் உரையாற்றவிடாது முழுக்க முழுக்க ரஸ்ய வெளிவிவகார அமைச்சருக்கே இடமளித்த மாநாடாக இம்மாநாடு நிறைவுபெற்றுள்ளது. ஒரு அரசின் தேசிய இறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஐக்கியநாடுகள் சபையின் சாசனங்களுக்கு மதிப்பளித்தல், அணுவாயுதப் பயன்பாட்டுக்கு அனுமதி மறுத்தல், முன்னைய அறிக்கைகளை மீளவும் பயன்படுத்தாமை என்கின்ற நான்கு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி இந்த உக்ரேன் சார்பு நிலையில்லாத ஜி20 நாடுகளின் ஒருமித்த பிரகடனத்திற்கு இந்தியா நெறிப்படுத்தியுள்ளது என்பது பற்றிக் வின்ரூரின் ஆய்வு வெளிப்பாடாகவும் அமைகிறது.
இதே பாணியான ராஜதந்திர உத்தியையே இந்தியா ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சார் பாக உலக நாடுகளும் அமைப்புக்களும் அவர்களின் இறைமையுடன் கூடிய வெளியக தன்னாட்சி உரிமை யின் அடிப்படையில் ஏற்புடைய தீர்வுக்கு உதவவிடாது இலங்கை அரசாங்கத்தின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் முக்கியத்துவப்படுத்தி தனது சந்தை நிலை இராணுவ நிலை என்னும் உலகச் செல்வாக் கால் தடுத்து வருகிறது. இதனையே ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54வது கூட்டத்தொடர் இம்மாதம் 11ம்நாள் தொடங்கிய பொழுது அன்றைய நாளிலேயே இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பார்வை அறிக்கையை வெளிப்படுத்தலில் மனித உரிமைகள் ஆணையகத்தின் பதில் உயர் ஆணையாளர் நடா-அல் நஷிங் அவர்கள் இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைத்தல் என்பதற்கு மட்டுமே முன்னுரிமை அறிக்கையில் இனஅழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுக்கான விதந்துரைத்தமை வெளிப்படுத்துகிறது. இந்தியா ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் ஏற்பதற்கு தடையாக முன்னிலைப்படுத்தி வரும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்பது ஈழத்தமிழரின் இறைமை மறுப்பாகவே அமையும். இதனை இந்தியாவைத் திருப்திப்படுத்த ஈழச் செயற்பாட்டாளர்களும் ஆதரிப்பது உலகு இதனை முன்னெடுக்க மூலகாரணமாகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் இதனைக் கூறி 13ஐ ரணில் நடைமுறைப்படுத்த இதுவே தருணமெனக் கூறியுள்ளார். 2009 சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பால் நடைமுறை அரசுடன் விளங்கிக் கொண்டிருந்த ஈழத் தமிழரின் தமிழீழத் தேசத்தையே 146000க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை தேசமாகவே மனிதப்படுகொலை செய்து 14 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இன்று வரை தங்களுக்கான பரிகாரநீதியையோ அல்லது இனஅழிப்பைச் செய்த சிறிலங்கா அரசத்தலைமைகளுக்கும் அவர்களின் ஆணையை முன்னெடுத்த ஆயுதப்படையினருக்கும் தண்டனை நீதியையோ பெற்றுக் கொடுக்க இயலாத கையாலாகாத இனமாக இன்று வரை ஈழத்தமிழினம் உலகில் விளங்கிக் கொண்டிருப்பதை இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை மீளவும் உறுதி செய்துள்ளது.
மேலும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் மிகப்பெரிய கட்டமைப்பான ஜி 77 பிளஸ் சீனா என்கிற 134 நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு கியூபாவின் தலைநகரான ஹவானாவில் நேற்று 15ம் திகதி தொடங்கி இன்று 16ம் திகதி வரை தொடர்கிறது. இந்த மாநாட்டில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “இந்தியாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் விளைவாகப் புதிய தொழில்நுட்பங்களான டிஜிட்டல் மயமாக்கல், உடல்நலம், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பசுமை நைட்ரஜன் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற தொழில்நுட்பத் தளங்களில் பொது மற்றும் தனியார் ஓத்துழைப்புக்களை வளர்க்க வல்ல நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உருவாக்க நான்கு பல்கலைக்கழகங்களை நிறுவ உள்ளதாகவும் காலநிலை மாற்ற ஆய்வுக்கான ஐந்தாவது பல்கலைக்கழகம் ஒன்றையும் திட்டமிடுவதாகவும் அறிவித்துள்ளார். உலகளாவிய தென்னகத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கான ‘கொஸ்டிஸ்’ (COSTIS) சமூகத்தைப் புதுப்பிக்க ஜி77 பிளஸ் சீனா அமைப்பினரின் பயனுள்ள ஒத்துழைப்பும் கொழும்பு திட்டம் போன்ற புதிய திட்டமும் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றினதும் ஆகக்குறைந்தது ஒரு வீத நிதிப்பங்களிப்பும் மாநாட்டின் கூட்டுக்குரலை அனைத்துலக சமுகத்துக்குக் கொண்டு செல்வதில் அனைத்து உறுப்புநாடுகளின் ஒருமித்த கூட்டுப் பங்களிப்பும் தேவை” என உரையாற்றியுள்ளார். இவருடைய இந்த உரையும் இறைமையைப் பாதுகாத்தலில் பேச்சுக்களின் பலத்தையும் கூட்டொருங்கு செயற்பாட்டின் முக்கியத்துவத்தையும் அனைத்துலகத் தொடர்பாடலின் இன்றியமையாமையையும் வலியுறுத்தி உள்ளதைக் காணலாம். சிங்கள தேசம் தன்னை இவ்வாறு பலப்படுத்த தமிழர் தேசம் கூட்டொருங்கு ஒருமிப்புச் செயற்பாட்டுக்கு மறுத்து தன் மண்ணையும் மக்களையும் விடுவிக்க இயலாத நிலையில் தவிப்பதே இன்றைய அரசியல் எதார்த்தமாக உள்ளது என்பதையே இலக்கு இம்மாநாடுகள் வழி சுட்டிகாட்ட விரும்புகிறது. இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் 23வது மாநாடு கொழும்பில் அக்டோபர் 10ம் 11ம் நாட்களில் நடைபெறவுள்ளது. இது குறித்த ஆயத்தக் கருத்தரங்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சீனக் கப்பலுக்கான வருகைத் தேதி நிரிணயிக்கப்படவில்லையென ராஜதந்திரமாகப் பேசி நிலைமையைச் சீர்படுத்தியமையும் ராஜதந்திர செயற் பாட்டின் முக்கியத்துவத்தை மீளுறுதி செய்துள்ளது.
இம்மாநாடுகள் எல்லாமே பேச்சுவார்த்தை பலத்தை அதிகரிப்பதன் மூலம் இறைமையை உறுதிப்படுத்தல் என்ற நோக்கிலேயே நடைபெறுகின்றன. இதன் வழி நாடுகள் தங்களுக்கான பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளல் என்பது இம்மாநாடுகளின் போக்காக உள்ளது. இவை ஈழத்தமிழர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் உலக அரசியல் பொருளாதார முறைமைகள் செயற்படுவதையும் சமூக பொருளாதார அரசியல் ஆன்மீக முரண்பாடுகள் நிறையவே உள்ள நாடுகள் அவற்றுக்கு மத்தியிலும் பொதுவெளியில் தம்மை இணைத்து வேறுபாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்காது மாறுபாடுகளை மதித்து தங்கள் தங்கள் தனித்துவங்களுடன் தங்களிடை இணைப்புகளையும் கட்டியெழுப்பும் எதார்த்த அரசியலில் செயற்படுவதைத் தெளிவாக உணர்த்துகின்றது. இதனைக் கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்கள் தாங்களும் தங்களிடையுள்ள மாறுபாடுகளை மதித்து அவற்றைக் கடந்து கூட்டொருங்கு செயற்பாடுகளை உருவாக்கினால் மட்டுமே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.

Tamil News