ஈழத்தமிழரை இறைமையை முன்னிலைப்படுத்திச் செயற்பட ஜி 20ம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமும் அழைக்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 251

“ஓரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்” என்னும் மையப்பொருளில் இந்தியாவின் தலைமையில் இவ்வாண்டுக்கான ‘ஜி20’ உலகத்தலைவர்களின் உச்சிமாநாடு டில்லியில் இன்று செப்டெம்பர் 09 ஆரம்பமாகி நாளை செப்ரெம்பர் 10 நிறைவுபெறுகிறது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் பிரதமர் லீ கியாங், ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ், பிரேசிலின் ஜனாதிபதி லூலா டா சில்வா, தென்ஆபிரிக்கா ஜனாதிபதி சிறில் ரம்போசா ஆகிய ‘பிரிக்ஸ்’ கட்டமைப்பின் முக்கிய ஐந்து தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மேற்குலக தலைமைகள் அணியும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், பிரித்தானியாப் பிரதமர் ரிஷி சுனாக், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, அவுஸ்திரேலியாப் பிரதமர் அந்தனி அல்பானிஸ் ஆகிய நான்கு ஆங்கிலமொழிவழி நாடுகளின் தலைவர்களும், மேற்குலகின் அனுசரணை நாடுகளான யப்பானின் பிரதமர் புமியோ கிஷிதா தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல், ஆகியோரைக் கொண்டதாக இவ் அணி அமைகிறது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களான பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், யேர்மனியின் அதிபர் ஓலாவ் ஷோலஸ், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, துருக்கியின் ஜனாதிபதி தையீப் அர்துவான் ஆகியோரும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மற்றும் இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ, ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி அல்பேர்ட்டோ பெர்னாண்டஸ் ஆகியோரும் குறிப்பிடத்தக்க உலகத் தலைவர்களாகக் கலந்து கொள்கின்றனர். விசேட விருந்தினர்களாக சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சல்மான், நைஜிரியாவின் ஜனாதிபதி போலா டினுபு, பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசினா, எகிப்து மொரிசியஸ், நெதர்லாந்து, ஓமான் சிங்கப்பூர், ஸ்பெயின், சர்வதேச நாணய நிதியம், உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம், உலக தொழிலாளர் நிறுவனம், உலக வங்கி, ஆபிரிக்க ஒன்றியம், உலக பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்கினலறனர். கூடவே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸூம் கலந்து கொள்ளும் உலகின் முக்கியமான உச்சி மாநாடாக இந்த மாநாடு அமைகிறது. இதன் தலைப்பே ஒரு பூமியென உலகை வெளிப்படுத்தி இறைமைகளின் கூட்டொருங்கு செயற்பாடே இன்றைய உலகில் உள்ளது. தனியான வல்லமை பொருந்திய இறைமையாளராக இன்று உலகில் எந்த நாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
இங்குதான் சிக்கல் ஆரம்பமாகிறது. ஈழத்தமிழர்கள் போன்ற வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக உலகில் தொன்மையும் தொடரச்சியுமுள்ள இறைமையைக் கொண்டிருக்கும் தேசஇனங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை அவற்றின் இறைமையுடன் கூடிய வெளியக தன்னாட்சி உரிமையை இந்த மக்களின் இனங்கள் காலனித்துவ ஆட்சியின் தவறான முடிவுகளால் இழந்துள்ள நிலையில், அவற்றை காலனித்துவத்தால் தீர்க்கப்படாத உலகப் பிரச்சினையாகக் கருதி அவற்றுக்கான தீர்வை அளிக்க வேண்டிய அதனுடைய கடமைப் பொறுப்பில் இருந்து தவறுவதால் இத்தகைய மக்கள் இனங்கள் இனஅழிப்புக்கு உள்ளாகும் நிலையிலும் ஒரு பூமியாகத் தங்களை வெளிப்படுத்தித் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் பெற முடியாதுள்ளனர். இத்தகைய நடைமுறை எதார்த்த நிலையில் ஒரு குடும்பம் என்னும் தகுதி உலக வல்லாண்மைகளாலும் பிராந்திய மேலாண்மைகளாலும் தீர்மானிக்கப்படுகையில் இத்தகைய மாநாடுகள் வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் தங்கள் ஆட்சி அதிகாரங்களையும் சந்தை நலன்களையும் இராணுவத் தேவைகளையும் உறுதிப்படுத்தும் மூலவளத்தொகுதியாக ஒரு பூமியென்பதையும், அவர்களுக்கு மனித வலுவளிக்கும் ஒரு குடும்பம் என்பதையும், தங்களின் அரசுக்களின் எதிர்காலத்தையே ஒரு எதிர்காலம் என்று செயற்படுவதையுமே இந்த உச்சிமாநாடுகள் செய்ய இயலுமே தவிர இதே அரசக்கட்டமைப்புக்களால் இந்த அறிவியல் தொழில்நுட்ப எழுச்சி மிகு உலகிலேயே வாழ்வு மறுக்கப்பட்டு இனஅழிப்புக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள் போன்ற உலகின் மூத்த குடிகள் பல ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்னும் இந்த வல்லாண்மைகளினதும் பிராந்திய மேலாண்மைகளினதும் சொல்லாட்சிகளுக்குள் உட்படுத்தப்படவே மாட்டார்கள். இதே நிலைதான் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்த மாதத்தில் தொடக்கமுறும் பொழுதும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் அடுத்து இடம்பெறும் பொழுதும் உலகின் சிறு தேச இனங்களுக்கு
தொடர்கதையாகிறது.
இதற்குக் காரணம் மண்ணின் மேல் மக்களுக்கு உள்ள உரிமைதான் இறைமை என்பதையோ மக்களின் இறைமையின் விருப்பப் பகிர்விலேயே உள்ளக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஆளுகின்ற அரசுக்கள் உருவாகின்றன என்பதையோ அந்த அரசுக்கள் மக்களுக்கான பாதுகாப்பான அமைதியை வளர்ச்ச்சிகளை அளிக்க மறுத்து அவர்களை அடிமைப்படுத்தும் பொழுது அந்த மக்கள் உலகின் குடிகளாகவும் உள்ளனர் என்ற உண்மையின் அடிப்படையில் அவர்களது வெளியக தன்னாட்சி உரிமையை ஏற்று அடிமைப்படுத்தும் அரசில் இருந்து அம்மக்கள் விடுதலை பெற வைக்கும் பொறுப்பு இந்த உலக நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் உள்ள தலையாய கடமை என்பதையோ இந்த வல்லாண்மைகள் மேலாண்மைகள் கும்பல் மறக்கிறது மறுக்கிறது. இதுவே ஈழத்தில் 146000 மக்கள் 2009 இல் முள்ளிவாய்க்காலில் மே மாதம் 17ம் நாள் ஒரு தேசமாகவே சிறிலங்கா என்னும் இனவெறி மதவெறி மொழிவெறி அரசால் இனவழிப்புச் செய்யப்பட்ட வரலாறு உலக வரலாறாகப் பதிவாக வைத்தது. அன்றுமுதல் இன்று வரை 14 ஆண்டுகள் இனவழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் மாற்றியமைக்காது எந்த இந்திய மேலாண்மை ஈழத்தமிழின அழிப்புக்குச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அன்றும் இன்றும் பக்கத்துணையாக நின்று தனது விருப்புக்கு ஏற்ப ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய தன்னாட்சி உரிமையை நடைமுறையாக விடாது தடுத்து வருகின்றதோ அந்த இந்திய அரசின் 13வது திருத்தம் என்னும் 36 ஆண்டுகளாக ஒரு எழுத்தைக் கூட நடைமுறைப்படுத்த இயலாதுள்ள அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக கண்ணியமான வாழ்வு தருமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரே விதந்துரைத்து தனது கடமையில் இருந்து தவறும் நிலையில் செப்டெம்பர் 11இல் தனது சிறிலங்கா குறித்த மனித உரிமைகள் ஆணையக மீள்பார்வை அறிக்கையைத் தாக்கல் செய்யப்போகின்றார். இந்தத் திசையிலேயே ஜி 20 உச்சி மாநாட்டிலும் இந்தியா ஈழத்தமிழர்களைக் குறித்த தனது கொள்கையை வெளிப்படுத்தும் என்பது உறுதியிலும் உறுதி. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை முன்னிலைப்படுத்தி தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் செய்தால் மட்டுமே தங்களுக்கான உலகின் வெளியக தன்னாட்சி உரிமையினை உறுதிப்படுத்த முடியும் என்பதே ஜி 20 மற்றும் மனித உரிமைகள் ஆணையக அழைப்பு என்பதே இலக்கின் உறுதியான நெறிப்படுத்தலாக உள்ளது. ஒவ்வொரு ஈழத்தமிழரும் இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் என்னும் தன்னலக் கும்பலில் இருந்து
தங்களை விடுவிக்கும் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்ற வல்ல தங்களுக்கான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்க கூட்டொருங்குத் தன்மையுடன் சனநாயக வழிகளில் செயற்பட்டாலே சிறிலங்காவின் இனவழிப்பு அட்சியிலிருந்தும் அதற்கு முழுஅளவில் துணை செய்யும் வல்லாண்மைகள் மேலாண்மைகளின் பிடிகளில் இருந்தும் உலக மக்களின் துணையுடன் விடுபட முடியும். இதற்காகவே ஜி20 உச்சிமாநாட்டில் பங்குபற்றும் தலைவர்கள் பெயர்ப்பட்டியல் விரிவாகத் தரப்பட்டது. இத்தனை தலைமைகளுடனும் உலக அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டு ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை உணர்த்த வல்ல செயற்பாட்டாளர்களாக உலக ஈழத்தமிழர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்பதே இலக்கின் வேண்டுகோள்.

Tamil News