‘பிரிக்ஸ்’ நாடுகளிடம் உலகப் பொருளாதார அரசியல் வாழ்வில் ஈழத்தமிழரின் இறைமையின் வகிர்பாகம் உணர்த்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 232

‘பிரிக்ஸ்’ நாடுகளிடம் உலகப் பொருளாதார அரசியல் வாழ்வில்
ஈழத்தமிழரின் இறைமையின் வகிர்பாகம் உணர்த்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 232

யூன் 23ம் திகதி சீனா, ரஸ்யா, இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா உட்பட்ட 19 ஆசிய ஆபிரிக்கத் தேசங்களின் கட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ (BRICS) தென்னாபிரிக்காவில் தனது வருடாந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இம்மாநாடு புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையில் சீனா தனிநாடாக மேற்குலக கூட்டொருங்குடன் கூடிய அமெரிக்க 1945ம் ஆண்டு முதலான கடந்த 78 ஆண்டுகால உலக மேலாதிக்க அரசியல் ஒழுங்கு முறைக்கு எதிர் ஒழுங்கு முறையொன்றைத் தோற்றுவிப்பதை உறுதி செய்கிறது. இன்னும் 13 நாடுகள் இந்த ‘பிரிக்ஸ்’ கட்டமைப்பில் இணையவுள்ளதாகவும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் இணைவதற்கான தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் இந்நிலையில் ‘பிரிக்ஸ்’ கட்டமைப்பை எவ்வாறு எந்த வகையில் விரிவாக்கம் செய்வது என்பது குறித்தே யூன் 23இல் ‘பிரிக்ஸ்’ கட்டமைப்பின் மையநாடுகளாகிய ஐந்து நாடுகளினதும் பிரதிநிதிகள் தென்னாபிரிக்காவில் கூடி ஆராயவுள்ளனர்.
இதற்கிடை சீனா தன்னை அரசியல் தரகராக உலகநாடுகளின் பிரச்சினைகளில் முன்னிலைப்படுத்தும் தனது பணியையும் வேகப்படுத்தத் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியாவையும் ஈரானையும் சமாதானப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள சீனா பலஸ்தீன- இஸ்ரேயல் பிரச்சினைக்கும் தன்னை அரசியல் தரகராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ரஸ்யா-உக்ரேன் போரிலும் சீனா ஜனாதிபதியின் ரஸ்ய விஜயமும் ரஸ்யாவை கண்டிக்க மறுத்து வருவதும் சீனாவின் உலகளாவிய அரசியல் தரகர் வளர்ச்சியில் மற்றொரு உதாரணமாக உள்ளது. இந்நிலையில் ஆசிய ஆபிரிக்க நாடுகளின் இந்த ‘பிரிக்ஸ்’ கட்டமைப்பு சமகால உலகில் மேற்குலக அமெரிக்க கூட்டொருங்கு கட்டமைப்புக்கு எதிரான பலம்பொருந்திய கட்டமைப்பாக வளர்ச்சி பெற்று வருவது சமகால அரசியல் எதார்த்தமாக உள்ளது.
உலக அரசியலில் ஏற்பட்டு வரும் இந்த புதிய உலக அரசியல் ஒழுங்குமுறை மாற்றத்துக்கு ஈழத்தமிழர்கள் எந்த அளவுக்கு ராஜதந்திர மட்டத்தில் தங்களது இறைமையை இந்நாடுகள் ஏற்று அங்கீகரிப்பது உலகப் பொருளாதார அரசியல் வாழ்வில் முக்கியத்துவமானது என்பதை எடுத்து விளக்குவதிலேயே ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினைக்கான நியாயமான நீதியான தீர்வைப் பெற வைக்கும்.
இதற்கு முதலில் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சிறிலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையுமல்ல, சிறுபான்மைஇனப்பிரச்சினையுமல்ல, பிரித்தானிய காலனித்துவ காலத்து உலகால் தீர்க்கப்படாத ஈழத்தமிழரின் இறைமைப்பிரச்சனை என்பதை உலகுக்குத் தெளிவாக்க வேண்டும். அத்துடன் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தன்னாட்சி உரிமையைக் கொண்டு தங்களை ஆட்சிப்படுத்த இயலாமல் இருக்கின்ற எல்லைகளைக் கொண்ட உலக மக்களினமாகச் சிறிலங்காவின் இனஅழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதே ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினை என்பதை அனைத்துலக மக்களுக்கும் அரசுக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். இதற்கான முதலடியைச் சிறிய அடியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எடுத்து வைத்துள்ளார். நீல் ஆம்ஸ்ரோங் சந்திரமண்டலத்தில் முதன்முதலில் கால் வைத்த பொழுது இது சிறிய அடி ஆயினும் இதுவே மனித குலத்தின் மிகப்பெரிய அடி என அழுத்தமாகக் கூறியமை, இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது. அதுபோலவே மதிப்புக்குரிய கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் இந்தச் சிறிய அடி ஈழத்தமிழ் மக்கள் தங்களது சுதந்திரத்தைத் தாங்கள் அடைவதற்கான பெரிய அடியாக அமைவதற்கு உலக மக்கள் இனமாக உள்ள உலகத் தமிழர்கள் கூட்டொருங்காக உடன் செயற்ட வேண்டிய காலமாக இன்றைய காலத்தை மாற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் திட்டச் செயற்பாட்டுக்கான வியன்னாப் பிரகடனத்தின் இரண்டாவது பத்தியில் “எல்லா மக்களும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். இந்நெறிமுறையின் அடிப்படையில் தமது அரசியல் நிலைப்பாட்டையும்ஈ பொருண்மியம் மற்றும் சமுக கலாச்சார விடயங்களையும், மேற்கொள்ளும் வழிவகைகளைத் தீர்மானிக்கும் உரித்துடையவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் தகுதி ஈழத்தமிழ் மக்களுக்கு உண்டெனபதையும் அந்த வியன்னாப் பிரகடனம் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிப்பது மனித உரிமை மீறலாகவும் ஈழத்தமிழர்களுக்கு உள்ள அரசியல் உரிமையினை முறைப்படி நிலைநாட்டுவதற்கான சனநாயக வழியிலான தன்னாட்சி முயற்சிகளை மறுதலிக்கும் அனைத்துலகச் சட்ட மீறலாகவும் உள்ளது என்பதை ஈழத்மிழரின் இறைமையராளராகத் தேர்தல் மூலம் தெரிவான மாண்பமை கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் ஈழத்தமிழரின் இறைமையின் குரலாக ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்துரைத்துள்ளார். இந்த ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை குறித்த விளக்கம் ‘பிரிக்ஸ்’ தேசக்கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தெளிவுபடுத்தப்பட்டாலே புவியியல் நிலையில் ‘பிரிக்ஸ்’ தேச நாடுகளின் கட்டமைப்புப்பகுதியில் தங்களது வரலாற்றுத் தாயகத்தைக் கொண்டிருக்கும் ஈழமக்களின் பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகள் நடை முறைச்சாத்தியமாகும்.
ஈழத்தமிழினத்தை இனஅழிப்பு செய்வதையே தனது அரசியல் கொள்கையாகவும் கோட்பாடாகவும் கொண்டுள்ள சிறிலங்கா ஈழத்தமிழர்களின் நிலத்தையும் கடலையும் வானையும் படைபலம் மூலம் ஆக்கிரமித்துத், தான் ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்வதற்குப் பட்ட கடன் பிரச்சினையால் உருவாகியுள்ள பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட, வல்லாண்மைகளுக்கும் பிராந்திய மேலாண்மைகளுக்கும் விற்றுப் பிழைக்கும் தந்திரோபாயத்தைத் தொடங்கியுள்ளது. அதே வேளை தனது இனஅழிப்புக்குத் திட்டமும் சட்டமும் வகுக்கும் பௌத்த மகாநாயக்க தேரர்களை சிறிலங்காவுக்கான அரசியல் அமுக்க உயர்குழுவாகச் சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுள்ளமையால், சீனா தான் இலங்கையில் தனது சினோபி கம்பெனி மூலம் நிறுவியுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்தும் இதற்கான எண்ணெய் சேகரிப்புக்குத் தான் முதலீடு செய்துள்ள 140 மில்லியன் டொலர் முதலீடு குறித்தும், இந்தப் பொருளாதார வீழ்ச்சி நிலையிலும் கொழும்புத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தனது தெற்காசிய வர்த்தகக் கட்டமைப்பு மூலம் முதலிட்ட 392 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியமை, உலக முதலீட்டாளருக்கு சிறிலங்காவில் முதலிடுவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளதெனவும் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடாதிபதிகளுக்கு விளக்கி அவர்களின் ஆசியைப் பெற்றுள்ளது. இந்தியா ஒருபடி மேலேபோய் அதன் தூதுவரை, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மடாதிபதிகளிடம் அனுப்பி, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி எப்ரல் 23இல் டில்லியில் உலக பௌத்த மாநாட்டில் நிகழ்த்திய பௌத்தத்தை இந்தியா வளர்க்க உறுதிபூண்டுள்ளது என்பது தொடர்பான உரையைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து அவர்களின் பாதங்களில் வைத்து இந்திய சிறிலங்கா நல்லுறவுக்கு ஆசி பெற்றுள்ளது. சீன வல்லரசுக்கும் இந்திய பிராந்திய மேலாண்மைக்கும் பௌத்த மகாநாயக்க பீடாதிபதிகள் அமுக்கக் குழுக்களாகத் திகழும் அளவுக்குச் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கட்சிகள் கூட்டொருங்கு நிலையில் பொதுவெளியில் செயற்படுகின்றனர். இந்த உண்மையை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக இருந்தால் தாங்கள் கூட்டொருங்கு நிலையில் பொதுவெளியில் செயற்படாமையே தங்களின் பின்னடைவுகளுக்கான காரணம் என்பதை விளங்கிக் கொள்வார்கள் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.

Tamil News