ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க மூன்று சட்டமூலங்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 230

ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க மூன்று சட்டமூலங்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 230

ஏப்ரல் 25ம் நாள் புதிய பயங்கரவாதச் சட்டம் சிறிலங்காப்பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது. இது சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தனது அரசியல் குருவும் கிட்டிய குடும்ப உறுப்பினருமான சிறிலங்காவின் முன்னாள் அரசத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் 79ம் ஆண்டுப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் உண்மை நோக்கு ஈழத்தமிழினத்தை இனஅழிப்புச் செய்வதற்குச் சட்டத்தகுதியளித்தலே என்பதை உலகு கண்டுணர்ந்து வரும் நிலையை மாற்றியமைப்பதற்கான நரித்தந்திர முயற்சியாக உள்ளது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற உலகை ஏமாற்றக் கூடிய புதிய தலைப்புடன் பழைய பயங்கரவாதத் தடைச்சட்டம் முன்னையதை விட அதிக சர்வதிகாரத் தன்மை கொண்டதாக ரணிலால் கொண்டு வரப்படுகிறது. 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டம் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்ற தமிழர்களைக் கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில் விசாரணையின்றி எரிக்கவும் சிறிலங்காப் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரத்தை அளித்தது மட்டுமல்லாமல் குற்றம் இழைத்த சிறிலங்காப்படையினரை நீதிமன்ற விசாரணைகளில் இருந்து பாதுகாப்பதற்கான பல நுணுக்கமான சட்டப்பாதுகாப்புக்களையும் வழங்கி, ஈழத்தமிழர்களைச் சிறிலங்காப் படைகள் இனஅழிப்புச் செய்வதற்கான உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. தற்போதைய ரணிலின் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஈழத்தமிழர்கள் தங்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொடர்ந்து வரும் இறைமையின் அடிப்படையில் யாராலும் எக்காலத்திலும் பிரிக்கப்படவியலாத தங்களின் அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையை முன்னெடுத்துத் தங்களின் தாயகத்தில் தங்களின் தேசியத்தைப் பேணக்கூடிய முறையில் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்ய வேண்டுமெனப் பேசினாலே அவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் நிலையை ஏற்படுத்துகிறது.
ஜே. ஆரின் 78ம் ஆண்டு அரசியலமைப்பு ஈழத்தமிழ் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் அவர் களின் இறைமையாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் விருப்பைப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த இயலாதவாறு ஈழத்தமிழ் மக்களின் விருப்புப் பெறப்படாத சிங்கள பௌத்த சிறிலங்காக் குடியரசுக்கு எதிராகப் பேசமாட்டேன்-செயற்பட மாட்டேன் என உறுதிமொழி எடுக்கக் கட்டாயப்படுத்திச், சிங்களத் தலைமையான எஸ் டபிள்யூ. பண்டாரநாயக்காவின் 1924ம் ஆண்டு யூன்மாத இலங்கைக்கான கூட்டாட்சிக் கோரிக்கையிலேயே பலவாயிரம் ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து வரும் மக்களென வரைவிலக்கணப்படுத்தப்பட்ட ஈழமக்களின் தன்னாட்சி உரிமையைப் பிரிவினைக் கோரிக்கையென வரைவிலக்கணப்படுத்தியது. அத்துடன் ஜே. ஆரின் அரசியலமைப்பு சிறிலங்காப்படைகளாலும் அரச ஆரவு பெற்ற சிங்களக் காடையர்களாலும் இனஅழிப்பு நோக்கில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட, ஈழத்தமிழர்களின் உயிர் உடைமைகள் நாளாந்த வாழ்வுக்கு எதிரான இனங்காணக்கூடிய அச்சத்திற்கு எதிரான, உயிர்ப்பாதுகாப்பு உடைமைகள் பாதுகாப்பு நாளாந்த வாழ்வியல் பாதுகாப்பு என்னும் முந்நிலைப் பாதுகாப்புக்கான, மக்களின் சனநாயகப் போராட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் எழுந்த மக்களின் ஆயுத எதிர்ப்பபைப் பயங்கரவாதம் எனப் பெரிய படைபலத்தைச் சிறிய மக்கள் பலம் எதிர்கொள்ளக் கையாண்ட போர்த் தந்திரோபாயங்களின் அடிப்படையில் வகைமைப்படுத்தி, ஈழத்தமிழர்களின் 1978 முதல் 2009 வரையிலான நடைமுறை அரசுக்கு உலகநாடுகளின் உலக அமைப்புக்களின் ஏற்புடைமை கிடைக்காமல் செய்தது. ரணிலின் தற்போதைய தேசிய பாதுகாப்புச் சட்டமும் கொண்டுவரப்படவுள்ள சிறிலங்காவுக்கான புதிய அரசியலமைப்பும், 21ம் நூற்றாண்டின் உலகின் மனிதவரலாற்றின் மிகக் கொடிய மனிதவதையாகப் பதிவாகியுள்ள சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான தண்டனை நீதி, பரிகாரநீதி இரண்டிலும் இருந்து சிறிலங்காவின் இனஅழிப்பாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறிலங்காவின் இனஅழிப்பைத் தேசிய பாதுகாப்புக்கான அரசின் சட்டச் செயலாக வகைமைப்படுத்தி இனிமேல் ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமையின் அடிப்படையில் தன்னாட்சி உரிமை குறித்துப் பேசினால் எழுதினால் சனநாயக வழிகளில் போராடினால் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் அதிகாரத்தை நாட்டின் சட்டமாக்குகிறது. இது, மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ளும் தன்னாட்சி குறித்துப் பேச இயலாது என்ற ஜே. ஆரின். சர்வாதிகாரத்தில் இருந்து மேலும் ஒரு படி மேலே போய் மக்களும் பேச இயலாது என மக்களின் அடிப்படை மனித உரிமைகளான கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, மகிந்த சிந்தனையும் கோட்டபாயக் கனவுமான ஒரு நாடு ஒருசட்டம் என்னும் சிங்கள பௌத்த சர்வாதிகார அரசை நடைமுறைப்படுத்தும் தந்திரோபாயமாகிறது. அதே நேரத்தில் இந்தத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்துடனேயே 1978ம் ஆண்டு அரசியலமைப்பில் சிறிலங்காவின் மாகாணசபைகளின் நிதி என்னும் 17வது அத்தியாயத்தின் துணைப்பகுதியாக 17 அ என்ற வகைப்படுத்தலில் நிதிப்பரவலாக்கத்தைச் சீராக்கும் வகையில் விதந்துரைக்கப்பட்ட சிறிலங்காவின் எட்டு மாகாணசபைகளுக்கு கொண்டு வரப்பட்ட 14.11.1984ம் திகதிய 13வது திருத்தத்தினை, அதில் ஈழத்தமிழர்களுக்குச் சாதகமாக இருந்த வடக்கு கிழக்கு நிதிப்பரவலாக்கலுக்கான ஒரு மாகாண அலகு என்ற பதிவையும் கூட நீக்கிப் புதிய 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் சட்டவரைபையும் ரணில் கொண்டு வந்து இந்தியா இலங்கையில் தமிழர்களின் கண்ணிய வாழ்வுக்கான தனது பரிந்துரையாக முன்மொழிந்து இதனை நிறைவேற்றியுள்ளதாக உலகுக்குக் காட்டவுள்ளார். கூடவே ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மட்டுப்படுத்தும் புதிய ஊடகச் சட்டத்தையும் கொண்டு வந்து ஈழத்தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் குற்றச் செயலாக்கி ஈழத்தமிழர்கள் தங்களுக்கான பொதுக் கருத்துக் கோளத்தை ஊடகங்கள் சமுக ஊடகங்கள் வழி உருவாக்காதவாறு ரணில் செய்யவுள்ளார்.
இவ்வாறாக ஜே. ஆர் எவ்வாறு 1949இல் ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாட்டில் பிரித்தானியா தங்களிடம் ஈழத்தமிழர்களின் இறைமையை அவர்களின் விருப்பின்றி சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறையில் இணைத்ததும் தமிழர்களின் வாழ்வியலை மறுக்கும் வகையில் சிங்களம் மட்டும் நாட்டின் அரசசெயற்பாட்டு மொழியாக இருக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தாரோ, எவ்வாறு இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கான வரைபு என 125 ஆண்டுகள் இலங்கையில் அதன் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கிய இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமையை 1949 இல் பறித்தாரோ, எவ்வாறு 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் கல்வி அமைச்சரான ஐ. எம். ஆர். ஏ ஈரியக்கொல்லையைக் கொண்டு தமிழர்களின் உயர்கல்வி தொழில்நுட்பக் கல்விக்கான தரப்படுத்தலைக் கொண்டு வந்து அவர்களின் தொழில்பெறு சுதந்திரத்தையும் உயர்கல்விச் சுதந்திரத்தையும் பறித்தாரோ, எவ்வாறு அடையாள அட்டை முறையைக் கொண்டு வந்தும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தைப் புனிதபூமியாக அறிவித்தும் நன்மை செய்வது போல சிங்கள மேலாண்மையைத் தமிழர்களின் உயிரையும் நிலங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் பறிக்க வழி செய்தாரோ எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரான சிறில் மத்தியூவின் தலைமையில் 1983ம் ஆண்டு ஆடி ஈழத்தமிழின அழிப்பை அரச ஆதரவுடனான சிங்களக் காடையர்களைக் கொண்டு அரசபயங்கரவாதத்தின் மூலம் தோற்றுவித்து அன்று முதல் இன்று வரை ஈழத்தமிழர்களை அரசியல் புகலிடம் கோரும் உலக மக்களினமாக உலகில் நிலைப்படுத்தினாரோ, அதே ஜே. ஆரின் அரசியல் சீடனும் கிட்டிய உறவினருமான ரணில் இன்று ஜே. ஆரிசத்தை மீள் உற்பத்தி செய்து அன்று ஜே. ஆருக்குப் பக்கபலமாக அமைந்த அனைத்துலக நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிவசதியின் துணையுடனேயே, ஜே. ஆருக்குத் துணை செய்த அதே நாடுகளின் துணையுடன், மீளவும் 45 ஆண்டுகளின் பின் ஈழத்தமிழினத்தின் இறைமையை மீளவும் ஒடுக்கும் அரசியல் நடவடிக்கைகளைப் பொருளாதார மீட்சிக்கான செயற்பாடென எதிர்வரும்காலத்தில் முன்னெடுப்பதைத் தடுப்பதற்கு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் மக்கள் சபைகளை உடன் செயற்படுத்த வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.

Tamil News