ஈழத்தமிழர் இறைமையை உலகுக்கு வெளிப்படுத்தும் முயற்சி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 227

ஈழத்தமிழர் இறைமையை உலகுக்கு
வெளிப்படுத்தும் முயற்சி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் இவ்வாரத்தில் ஆற்றிய உரை ஈழத்தமிழர் இறைமையை உலகுக்கு வெளிப்படுத்தும் முயற்சியில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் “சுயாட்சி பெறாத தேசமாக ஈழத்தைப் பிரகடனப்படுத்துக” என விடுத்த வேண்டுகோளும், ஐ.நா. சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தியமையும், ஈழத்தமிழர் இறைமையை உலகுக்கு வெளிப்படுத்தும் முயற்சிக்குத் தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது. சுயாட்சி பெறாத நாடுகளாக ஐக்கிய நாடுகள் சபை 17 நாடுகளை வகைமைப்படுத்தியுள்ளது. தன்னாட்சி உடைய பகுதிகள் என இவை அழைக்கப்படும்.
அனைத்துலக நாணயநிதியத்தின் குழுமம் 48 மாத நீடித்த நிதி வசதிக்கு கீழ் (இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக ஈ.ஈ. எவ் திட்டம் என்பர்) சிறிலங்காவினை பொருளாதார நெருக்கடியில் இருந்து பிணையெடுப்பதற்கு உதவியாக 2.9 பில்லியன் டொலர்களை வழங்க அனுமதித்துள்ளது. இதன் முதற்கட்டமாக 0.33 பில்லியன் டொலர்களை இவ்வாரத்தில் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆசிய நாடுகளில் அனைத்துலக நாணயநிதியத்தின் நேரடி நெறிப்படுத்தலில் தனது அரச செயற்பாடுகளையும், பொருளாதார முடிவுகளையும் மேற்கொண்டு அதற்கு அறிக்கை செய்ய வேண்டிய முதல் நாடாகச் சிறிலங்கா இம்மாதம் 22ம் திகதி முதல் தன் இறைமையை அனைத்துலக நாணய நிதியத்துடன் பகிர்ந்து எல்லைப்படுத்தியுள்ளது.
அத்துடன் அனைத்துலக நாணயநிதியத்தின் விதந்துரைப்பின் பேரில் இலங்கை மத்திய வங்கி சுயாதீன செயற்பாடுடைய நிறுவனமாக மாறும் பொழுது பாராளுமன்றத்தின் மீயுயர் அதிகாரமாக இறைமை இருக்கும் நிலை இழக்கப்பட்டு பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இறைமை கொண்ட நிறுவனமாக இலங்கை மத்தியவங்கியும் செயற்படத் தொடங்கும். இது நாட்டின் இறைமையில் இரட்டைத்தன்மையைத் தோற்றுவிக்கும்.
அத்துடன் அமெரிக்காவும் இந்தியாவும் அனைத்துலக நாணயநிதியத்தின் மூலம் அரசைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வளர்த்தல் செய்பணித் திட்டங்கள் என்பதன் வழி தங்கள சொந்த நலன்களை சிறிலங்காவுள் மக்கள் இறைமையை மீறி செயற்படுத்தும் இறைமைப் பகிர்வும் நடைமுறைச்சாத்தியமாகியுள்ளது. இது சீனா இந்துமாக்கடலில் மேலாண்மை பெறும் நிலையைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க இந்திய தந்திரேபாயமாக அமைகின்றது. ஆயினும் சீனாவுக்கான இலங்கையின் படுகடன் காரணமாகவும் சீனா ஏற்கனவே நீண்டகால குத்தகை முறைமையிலான நிலையெடுப்பை அனைத்துலக வர்த்தக சட்டங்களுக்கு ஏற்ப தனியார் வர்த்தகச் செயற்பாடாகவும் இலங்கையில் மேற்கொண்டுள்ள நடைமுறை எதார்த்தம் காரணமாகவும் சீனாவின் இலங்கையின் கடல் நில வான் பரப்பு மேலான பயன்பாட்டு நிலைமைகளில் பெரியளவிலான மாற்றங்கள் எதனையும் செய்ய உதவாது. இதனால் அனைத்துலக முறுகல் நிலைகளின் மேடையாக இலங்கை மாறும் பேரபாயமும் எழுந்துள்ளது.
அத்துடன் அனைத்துலக நாணயநிதியத்தின் பொருளாதார நிதியியல் கடும் நிபந்தனைகள் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்துள் இலங்கையில் செயற்படுத்தப்படுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நிறைவு செய்யப்பட்டதாக அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலே 0.33 பில்லியன் டொலர்களைத் தாண்டி நாலு ஆண்டுளுக்கு உரிய 3பில்லியன் டொலரும் கட்டம் கட்டமாக இலங்கையை வந்து சேரும். ஆனால் இந்த நிபந்தனைகள் மக்கள் மேலான கடும் வரிச்சுமையாகவும் அரச நிறுவனங்களைப் பெருமளவில் தனியார் மயப்படுத்தும் செயற்பாடாகவும் அமைந்து இலங்கை மக்கள் அனைவருக்குமான துன்பவாழ்வாகவும் இலங்கையில் தனியார் சொத்தாக்கப் பெருக்கமாகவும் மாறி இலங்கை மக்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வு வளர்ச்சி என்பவற்றை அடிமைப்படுத்தும்.
கூடவே ஏற்றுமதி இறக்குமதிக்கான தடைகளை நீக்குதல் சுற்றுலாப்பயணிகளுக்கான முழுஅளவு சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் என்பவற்றின் வழி பொருளாதார வாழ்வும் பண்பாட்டு வாழ்வும் சிதைக்கப்பட்டு இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடி மக்களினதும்
தனிப்பட்டச் சுதந்திரம் இழக்கப்பட்டு இலங்கை பலநாடுகளின் கூட்டு ஆட்சிநாடாக மாற்றமடையும். சுருக்கமாகச் சொன்னால் இப்பொழுது அனைத்துலக நாணயநிதியத்தின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் இறால் போட்டுச் சுறாப் பிடிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளன. இது சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு பொருளாதார மீட்சிக்கான தொடக்கப் புள்ளியாகத் தெரியலாம். ஆனால் இலங்கையின் இறைமை இழப்புக்கான தொடக்கப்புள்ளியாகவே எதார்த்த அரசியலில் அமைந்து விட்டது.
இவ்வாறு இலங்கையின் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய சிங்கள இறைமை தன்னைத் தானே தற்கொலை செய்யத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் அதற்குள் பிரித்தானியக் காலனித்துவ அரசால் திணிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் இறைமையை அவர்கள் மீட்டு எடுக்காவிட்டால் சிங்கள தேசம் அழிகின்ற போது அதனுள் அடங்கிய அழிவாக ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் அடங்கிவிடும். இதனாலேயே ஈழத்தமிழரின் இறைமையின் தொன்மையும் தொடர்ச்சியும் பேசப்பட்டு ஈழத்தமிழர்களுக்குச் சத்தியளித்து அவர்கள் தங்கள் இறைமையின் அடிப்படையில் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் அவர்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் பேரில் உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளை மேற்கொள்தல் என்பது உலக நாடுகளாலும் அமைப்புக்களாலும் உறுதி செய்யப்பட உழைக்க வேண்டியவர்களாக இன்றைய ஈழத்தமிழ் மக்கள் தாயகத்திலும் உலகிலும் உள்ளனர்.
இதற்கு உதவும் வகையில் விடயங்களைச் சரியாகச் செய்தல் என்கிற வினைத்திறனுடனும் சரியானதைச் செய்தல் என்கிற விளைதிறனுடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடரில் சிறிலங்காவின் மனித உரிமைகள் குறித்த மதிப்பீட்டாய்வில் ஈழத்தமிழர்களின் தாயகமான ஈழத்தைச் சுயாட்சி பெறாத தேசமாகப் பிரகனப்படுத்தி ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதியை நியமித்து சிறிலங்காவின் அனைத்துலகச் சட்டங்களை மீறி இனஅழிப்பை நடாத்திய குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தும் படியும் கோரியுள்ளார். இலக்கின் நீண்டகால வலியுறத்தலாக உள்ள இவ்விடயங்களை ஈழத்தமிழர்களின் இறைமையாளராகப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் வழி நிற்கும் சட்டத்தரணி கஜேந்திரக்குமார் பொன்னம்லம் அவர்கள் அவருடைய தாத்தாவும் தமிழர் தலைவருமான மாண்பமை அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களும் அவரது தந்தை மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களும் அனைத்துலக நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் எதனை எடுத்துரைத்தார்களோ அதனை எடுத்துரைக்கும் பணியைச் செய்துள்ளார். இவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதம் இன்றும் இனஅழிப்பை இனத்துடைப்பைப் பண்பாட்டு இனஅழிப்பைச் சிறிலங்கா தொடரச் செய்கின்றது என்ற உண்மையையும் ஈழமக்கள் சார்பாக எடுத்துரைத்துள்ளார்.
அவரை இலக்கு நன்றியோடு பாராட்டுவதுடன் அவரது ஈழத்தமிழரின் இறைமையின் தனித்துவத்தை உலகில் நிலைநிறுத்தும்முயற்சிக்களுக்கான முழு ஆதரவையும் இலக்கும் அளிக்கும் என்பதையும் இவ்விடத்தில் இலக்கு உறுதியாகக் கூற விரும்புகிறது.

Tamil News