தேசமக்கள் இறைமைகளைப் பேணும் முயற்சிகளின் தொடக்கமாக இவ்வாரம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 226

தேசமக்கள் இறைமைகளைப் பேணும்
முயற்சிகளின் தொடக்கமாக இவ்வாரம்

சமகாலத்தில் வளர்ந்து வரும் புதிய உலக அரசியல் ஒழுங்கில் சீனாவின் வகிபாகம் முக்கிய பங்கினை ஆற்றி வருவது உலகறிந்த விடயம். இதன் அடிப்படையில் அமெரிக்காவின் தலைமையில் மேற்குலகநாடுகளால் 1945 முதல் கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த உலக அரசியல் ஒழுங்கு தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான பல்வேறு தந்திரோபாயங்களையும் உக்ரேன் ரஸ்ய போரை மையப்படுத்தி முயன்று வருகின்றன. சீனாவும் ரஸ்ய விரிந்த கூட்டுறவுடன் இந்தியா உட்பட்ட ஆசிய நாடுகளை உள்ளடக்கிய தந்திரோபாயங்களை முன்னிலைப்படுத்தி தனது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது. இதுவே இன்றைய அனைத்துலக அரசியலாகவுள்ளது.
இந்த முயற்சியில் கடந்த வாரத்தில் சீன வெளிவிவகார அமைச்சர் குய்யின் காங்
(Qin Gang) அவர்களுக்கும் உக்ரேனிய வெளிவிவகார அமைச்சர் டிமைட்ரோ குலிபா
(Dmytro Kuleba) அவர்களுக்கும் அலைபேசி வழியாகப் பேச்சுக்கள் நடைபெற்றன. அப்பொழுது சீன வெளிவிவகார அமைச்சு “மக்களைப் பேணுதல், அவர்களது இறைமையை அவர்கள் வாழும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்தல் வழி உறுதி செய்வது” என்பதை முன்னிலைப்படுத்தி உக்ரேன் இரஸ்ய போரில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் சீன இரஸ்ய நட்பை வெளிப்படுத்தி
உலகுக்கு அதனைத் தெளிவுறுத்தும் வகையில் எதிர்வரும் 20-22 திகதிகளில் மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள சீன அரசத்தலைவர் சிய் யின்பிங் அவர்களை தனது தலைசிறந்த நண்பனென ரஸ்ய அரச தலைவர் விளடிமிர் புடின் ரஸ்யாவுக்கு வருகை தரும்படி விடுத்த அழைப்பைச் சீனத்தலைவரும் ஏற்று சீன ரஸ்ய நட்பு எல்லையற்றது என்பதை ஏற்று ரஸ்யாவுக்குச் செல்கின்றார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ரஸ்யாவுக்கு எதிரான தீர்மானங்களை தனது பலத்தால் முறியடித்து வரும் சிய் யங்பின் ரஸ்யாவுக்கு உத்தியோக பூர்வமாகவும் சென்று பல இருநாட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுகின்றார். இதனை அடுத்து உக்ரேன் அரச தலைவர் உடன் அலைபேசி வழியாக எதிர் வரும் வாரங்களில் இவற்றின் அடிப்படையில் அமைதியை ஏற்படுத்த உரையாடவும் உள்ளார். சிய் யங்பின் தனது 12 குறிப்புக்கள் என்னும் உக்ரேன் போர் குறித்த அறிக்கையில் நேட்டோ நாடுகளே யுத்தத்தைத் தோற்றுவிக்கின்றன என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய நிலையிலும் தனது நாடு மேற்குலகுடன் கொண்டுள்ள பொருளாதாரத் தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் செயற்பாடுகளையும் சீனாவின் மூன்று வருட ‘கோவிட் பூச்சிய திட்டத்தை’ அறிவித்து வேகப்படுத்தி வருகின்றார். தனது நண்பனான ரஸ்யாவையும் பாதுகாத்து தனது நாட்டையும் பாதுகாக்கும் தந்திரோபாய முயற்சிகளில் அனைத்துலக மட்டத்தில் சீனா இவ்வாறாகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. இந்நேரத்தில் இரஸ்யாவின் அரசத்தலைவருக்கு மேல் அனைத்துலக நீதிமன்றத்தின் வழியாகப் பிடியாணை பிறப்பித்து அவரின் அனைத்துலக நேரடித்தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் தந்திரேபாயத்தை மேற்குலகு மேற்கொண்டுள்ளது. ஆனால் இரஸ்யா தான் உரோமைச்சாசனத்தில் கையொப்பம் இடாத நாடு என்பதால் அனைத்துலக நீதிமன்றத்தின் ஆணை தன்னைக் கட்டுப்படுத்தாதென எடுத்த எடுப்பிலேயே அறிவித்துள்ளது. இவ்வாறாக உலகின் நாடுகள் தங்கள் தங்கள் இறைமையைப் பேணும் முயற்சிகளின் தொடக்கமாக இவ்வாரத்தை முன்னிலைப்படுத்தியுள்ளன.
ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் உலக அரசியல் தலைமைகள் மக்களைப் பாதுகாத்தல், அந்த தேச மக்கள் வாழும் நாட்டெல்லையின் இறைமையை உறுதிப்படுத்தல் என்பதற்குக் கொடுக்கும் சமகால முக்கியத்துவத்தைப் பார்த்தாவது இதனையே ஈழத்தமிழர்கள் 1978 முதல் 2009 வரையான தங்களின் நடைமுறை அரசிலும் செய்தார்கள் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்வார்களாக. ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு உடன் கூடிய அமைதி வாழ்வு என்பது அந்த மக்களுக்குச் சக்தியளிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் இறைமையை நிலைப்படுத்த உதவும் செயற்பாடே தவிர வேறொன்றாகவும் இருக்க முடியாது. தங்கள் வரலாற்றுத் தாயகத்தையும் மக்களையும் பாதுகாத்து பாதுகாப்பான அமைதியான வாழ்வை வாழ்தல் என்பதே ஈழத்தமிழர் அரசியல் கோட்பாட்டு இலக்கு என்பது ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் 31 ஆண்டுகள் 1978 முதல் 2009 வரை உலகுக்கு ஈழத்தமிழர்களின் நடைமுறை அரசால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நடைமுறை அரசுக்கான உலக ஏற்புடைமையை உலகநாடுகளிடம் இருந்து பெறுவதே ஈழத்தமிழர்களின் அரசியல் கொள்கையாக அமைய வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் குடியொப்ப முடிவு. இதனை முன்னெடுப்பதே ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் நோக்காகவும் போக்காகவும் அமைதல் வேண்டும் என்பது ஈழத்தமிழ் மக்களின் மக்களாணை. ஈழத்தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையில் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப வெளிநாட்டுத் தொடர்புகளையும் சட்டத்தின் ஆட்சியின் கீழ் தங்கள் உள்நாட்டுத் தொடர்புகளையும் மேற்கொண்டு நாளாந்த வாழ்வை நிலைநிறுத்தல் என்பது உயிர்த்தியாகங்களாலும் வாழ்வியல் அர்ப்பணிப்புகளாலும் உறுதிப்படுத்தப்பட்ட விடயம். . இதன் வழி ஈழத்தமிழர்களின் தலைமை என்பது மக்கள் இறைமையின் அடிப்படையில் தன்னலமற்ற முறையில் மக்களையும் மண்ணையும் பாதுகாக்க தங்கள் அறிவை ஆற்றலை உழைப்பை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு தாயகக் குடிமக்களதும் கூட்டுத் தலைமை என்பது தெளிவாக்கப் பட்டவொன்று. இதனை ஈழத்தமிழருக்கு இன்று தலைமையில்லை என்பவர்கள் மனதிருத்தல் அவசியம். இந்த மக்கள் கூட்டுத் தலைமையை சனநாயக முறைகளில் நிலைநிறுத்துவதற்கான நாட்டின் பாதுகாப்பு அமைப்பாகவே சீருடை அணிந்த முப்படைகள் நிர்வாக அமைப்புக்கள் 31 ஆண்டுகள் கட்டி வளர்க்கப்பட்டன. இந்த ஈழத்தமிழர்களின் தேச உருவாக்கத்திற்கான நடைமுறை அரசைத்தான் சிறிலங்கா அனைத்துலக வல்லாண்மை பிராந்திய மேலாண்மைகள் உடைய சந்தை இராணுவ நலன்களுக்கு இலங்கையின் இறையாண்மையை அடைவு வைத்து, தங்களின் சிங்கள பௌத்த பேரினவாத நிறவெறி மதவெறியை நிலைநிறுத்தி தங்களின் படைபலத்தால் ஈழத்தமிழின அழிப்பை நடைமுறைப்படுத்தி, ஈழத்தமிழர்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வாழ்வை அனைத்துலகச் சட்டங்கள் மனித உரிமைச்சாசனம் என்பவற்றை வன்முறைப்படுத்திச் செயலிழக்க வைத்தது. ஈழத்தமிழர் சனநாயகப் பங்களிப்பைத் தடுப்பதற்கான ஆக்கிரமிப்பு யுத்தத்தை 31 ஆண்டுகள் நடாத்தப் பட்ட கடன்களே இலங்கைத் தீவின் அனைத்து இறைமையையும் கடன் கொடுக்கும் நாடுகளுக்கும் தனியாருக்கும் விற்று தங்கள் பதவிநிலை அதிகாரத்தைத் தக்கவைக்க தமிழ் சிங்கள தேசமக்களுக்குரிய இலங்கைத் தீவையே அவர்களுக்கு இல்லாது செய்யும் தேசத்துரோக ஆட்சியை முன்னெடுக்கும் இன்றைய நிலையாகியது.
இந்நேரத்தில் சிங்கள மக்களும் ஈழத்தமிழ் மக்களும் தங்கள் தங்கள் தனித்துவமான இறைமைநிலைகளை ஏற்று ஈழத்தமிழர் தாயகத்தினதும் சிங்களவர்கள் தாயகத்தினதும் இறைமைகளை எந்த வகைகளில் பகிர்ந்து வாழ்ந்து இலங்கைத் தீவை அனைத்துலக நாயணநிதியத்தின் கட்டுப்பாடுகளின் பின்னணியில் மேற்குலகத்தின் பொருளாதார காலனித்துவ நாடாகவோ சீனாவின் இந்தியாவின் பொருளாதாரக் காலனித்துவ நாடாகவோ மாறாது காக்கலாம் எனச் செயற்பட வேண்டும் என்பதே இலக்கின் எண்ணம். இந்த இலக்கு நோக்கிய இலக்கின் பயணத்தில் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மலையக மக்களும் உடன் இணைந்து எல்லா மக்களினதும் பாதுகாப்பான அமைதிவாழ்வை இலங்கைத் தீவில் உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்பதே உலகில் தேச மக்கள் தங்களின் இறைமைகளைப் பேண முயற்சிக்கும் இவ்வாரத்தில் இலக்கின் இலங்கைத் தீவின் அனைத்து மக்களுக்குமான இவ்வார அழைப்பாகவுள்ளது.

Tamil News