75 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் ஈழத்தமிழரின் ‘மக்கள் சபை’ உடன் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 222

75 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் ஈழத்தமிழரின் ‘மக்கள் சபை’ உடன் தேவையாகிறது

இலங்கையில் ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசின் இறைமையையும், வன்னிச் சிற்றரசின் இறைமையையும், 1833இல் சிங்கள அரசுக்களின் இறைமையுடன் தங்களின் பிரித்தானிய முடியாட்சியின் சந்தை இராணுவ நலன்களுக்காக ஒன்றிணைத்தது. அன்று முதல் 1948 வரை 115 ஆண்டுகள் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் செயற்கையான ‘இலங்கையர்’ என்ற தேசியத்தை தமிழ் சிங்கள தேசஇனங்களின் இணைப்புடன் முஸ்லீம் இந்திய பாக்கிஸ்தானிய குடிவரவு பெற்றவர்களையும் உள்ளடக்கி உருவாக்க முயன்று தோல்வி கண்டது.
இவ்வாறு இலங்கையர் என்ற தேசியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது தோல்விகண்டதை மறைக்கப் பிரித்தானிய காலனித்துவ அரசு, ஈழத்தமிழர்களின் விருப்பின்றி சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் இறைமையப் சிங்களவர்களின் இறைமையுடன் பகிர்ந்தனர். இவ்வாறு பகிரப்பட்ட தங்களின் இறைமையைச் சிறிலங்கா அரசாங்கம் அந்த இறைமைப்பகிர்வுக்கான அரசியலமைப்பு நிபந்தனையாகிய சோல்பரி அரசியலமைப்பு 29(2) இனை வன்முறைப்படுத்தி சிங்கள பௌத்த குடியரசை உருவாக்கித் தங்களை அரசற்ற தேசஇனமாக்கி படைபலத்தால் தங்களின் அரசியல் பணிவைப் பெறத் தொடங்கிய 22.05.1972 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் அரைநூற்றாண்டாக மீளவும் மீட்டிட உறுதியுடன் பாடுபட்டு வருகின்றனர்.
இதனை 1977 இல் குடியொப்பம் மூலம் ஈழமக்கள் தாங்கள் வழங்கிய மக்களாணையாக சனநாயகமுறையில் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப உலகுக்குப் பிரகனடப்படுத்தினர். இதனை சனநாயகவழிகளில் ஏற்க மறுத்து சிறிலங்கா ஈழத்தமிழின அழிப்பை தொடங்கியதை அடுத்து ஆயுத எதிர்ப்பின் மூலம் தங்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாத்து 1978 முதல் 2009 வரை ஈழத்தமிழ் மக்கள் தங்களின் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் 31 ஆண்டுகள் உலகில் நடைமுறை அரசை முன்னெடுத்த நிலையில் அதனைச் சட்ட அரசாக மாற்றுவதை 2009 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் 146000 ஈழத்தமிழ் மக்களை இனத்துடைப்புச் செய்து மீளவும் ஈழத்தமிழர்களை ஆக்கிரமிப்புச் செய்து இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு வழி ஈழத்தமிழர்களின் இறைமையை அழிக்க முயல்கின்ற நிலையிலேயே இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு 04.02.2023 இல் நிறைவேறியது.
இந்த 75வது சுதந்திரதின உரையில் இன்றைய சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் அறிவிப்பை விடுப்பாரென எதிர்பார்த்த உலகுக்கு எந்த வொரு சிங்களக் கட்சியும் என்றும் ஈழத்தமிழர்களுக்கான எதனையும் வழங்கமாட்டார்கள் என்பதை உரை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கான கண்ணியமான வாழ்வை உருவாக்குதல் என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையக வாக்குறுதியும் நடைமுறைச் சாத்தியமற்றதாகிவிட்டது. பௌத்த பிக்குகளே அரசியல் அமுக்கக்குழுக்களாகி இந்தியா விதந்துரைத்த 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என அரசதலைவருக்குக் காலஅவகாசம் கொடுத்து தடைவிதித்ததை உலகு கண்டு கொண்டது. கொழும்பில் சீனா கட்டிய பண்பாட்டு மையத்தைச் சீனாவையே நிர்வகிக்க அனுமதித்த சிறிலங்கா யாழ்ப்பாணத்தில் இந்தியா யாழ்ப்பாண மாநகரசபையின் காணியில் தான் கட்டிய இந்திய பண்பாட்டு மையத்தை தங்களிடமே நிர்வகிக்க ஒப்படைக்க வேண்டுமென பறித்தெடுத்துக்கொண்டது. ‘அயலவர்க்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் இன்றைய வெளிவிவகாரக் கொள்கையால் இந்தியாவிடம் 4.5 பில்லியன் டொலர் மற்றும் உணவு மருத்துவ உதவிகளும் பெற்று ‘வங்குரோத்தில்’ இருந்து தப்பிப்பிழைத்து வாழத் தவிக்கும் சிறிலங்காவை ஒரு சிறிய விடயத்தில் கூட தன்மேலாண்மைக்குள் கொண்டுவராத நிலையில் இந்தியாவுள்ளது என்பது வியப்புக்குரிய விடயம். சீனா இந்தியாவை முழுஅளவிலான உளவுநிலை முற்றுகைக்கு உட்படுத்தும் களமாக இலங்கையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டமை உலகறிந்த உண்மை. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தேசியப்பிரச்சினைக்கு இந்தியா மனித உரிமைகள் அடிப்படையிலான தீர்வுகளைக் கூட வற்புறுத்த முடியாதநிலையிலேயே இலங்கையுடனான நட்பைப் பேணுவது சீனாவுடனான சிறிலங்காவின் சாய்வை தடுப்பதற்கான ராஜதந்திரமாக அமைகிறது. ஈழத்தமிழர்கள் அதிக அளவில் வாழும் மேற்குலக நாடுகளும் கூட ஈழத்தமிழர் தேசியபிரச்சினையின் உண்மை வடிவான ஈழத்தமிழர் இறைமையை மீட்டல் என்ற ஈழ மக்களாணையை விளங்கிக் கொள்ளாதவர்களாகவே ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகி வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து நாடுகளுடனும் அவற்றின் தூதரங்களுடனான ஈழத்தமிழ் மக்களின் நட்புறவே உலகுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பிரிவினையும் அல்ல பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளும் அல்ல என்ற உண்மையைப் பலமாக எடுத்துரைக்க முடியும். ஈழத்தமிழர் தாயகத்தின் இந்துமாக்கடல் 21ம் நூற்றாண்டின் புதிய உலக அரசியல் ஒழுங்கு முறையில் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடுகளின் தூதரங்களுக்கு ஈழமக்களின் நட்புறவு மூலமே இந்துமாக்கடலின் பாதுகாப்பும் அமைதியும் மேலும் சிறப்புறும் என்கிற உண்மைகள் அறிவார்ந்த நிலையில் விளக்கப்படல் வேண்டும். ஈழத்தமிழர் தாயகத்தின் நில கடல் மூலவளங்கள் மனித வளங்கள் குறித்த தெளிவான தரவுகளோ அறிக்கைகளோ தூதரங்களுக்கு வழங்கப்படாதநிலையில் ஈழத்தமிழர்களின் பொருளாதார கல்வி வளங்களின் உலகப்பகிர்வுக்குரிய வாய்ப்புகளும் ஈழத்தமிழர்களின் வர்த்தக முதலீட்டு வாய்ப்புக்களும் உலகால் அறியப்படாதநிலை தொடர்கிறது.
இவை போன்று பல தேச நிர்மாண மீளுருவாக்கத்தைச் செய்வதற்கு 75 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் ஈழத்தமிழர்களுக்கான மக்கள்சபை ஒன்றின் ஒருங்கிணைந்த வழிகாட்டல் காலத்தின் உடன் தேவையாகிறது என்பதை மக்கள் மயப்படுத்த இலக்கு விரும்புகிறது. தாயகத்திலும் புலம்பதிந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் எவ்வளவு வேகமாகவும் உறுதியாகவும் ஈழத்தமிழர் ‘மக்கள் சபைகளைக்’ கட்டியெழுப்ப முயுமோ அவ்வளவு விரைவில் செயற்பட்டாலே ஈழத்தமிழர் இறைமையை மீட்டல் என்பது நாளாந்தச் செயற்பாடாகும் என்பது இலக்கின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

Tamil News