ஈழத்தமிழர் இறைமை ஏற்பு 2026க்குள் உலகால் முன்நிபந்தனையாக்கப்பட்டாலே வங்குரோத்து தடுக்கப்படும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 221

ஈழத்தமிழர் இறைமை ஏற்பு 2026க்குள் உலகால் முன்நிபந்தனையாக்கப்பட்டாலே வங்குரோத்து தடுக்கப்படும்

ஈழத்தமிழரின் இறைமையை சிறிலங்கா ஏற்காதவரை இலங்கை 2026இல் வங்குரோத்து அடைவதை எவராலும் தடுக்க இயலாது இருக்கும். இந்த உண்மை ரணிலின் சிங்கள பௌத்த அரசியலில் ரணில் சம்பந்தர் 46 ஆண்டுகால சிந்தனைக் கொள்கை விளக்கத்தில் தெளிவாகியுள்ளது.
இந்தக் கொள்கை விளக்கம் நாட்டின் 51 பில்லியன் படுகடன் என்பது ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்க 1978 முதல் 2009 வரை சிறிலங்கா முன்னெடுத்த இனஅழிப்பு நட வடிக்கைகளுக்கான ஆயுதக் கொள்வனவுகள் படைகளைப் பேணல் என்பவற்றக்கான செலவு என்பதையோ இன்றும் பெருமளவு நிதி இதே நோக்குக்காகவே ரணிலாலும் செலவிடப்படுகிறது என்பதையோ கவனத்தில் எடுத்து மாற்றியமைக்காது, அனைத்து மக்களது தியாகத்தாலும் பொருளாதாரம் மீட்கப்பட வேண்டுமென உணவுக்கே 32 வீதம் மக்கள் வழியின்றி தவிக்கும் நிலையில் மக்கள் பணியாகத் திசைதிருப்பியுள்ளது.
ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இறைமைப்பிரச்சினை என்பதை மறைத்து இனப்பிரச்சினையாக மாகாண சபைகளை மாகாண அபிவிருத்தி சபைகளாக மாற்றி நிதிப்பரவலாக்கத்தைசச் செய்வதன் மூலம் தீர்க்கலாம் என வழிகாட்டியுள்ளது. கூடவே 1987 இல் நிதியை மாகாணசபைகள் வழி பகிர்வதன் மூலம் மாகாணசபைகள் மூலம் பாராளுமன்ற ஆட்சிக்கு மேலாக நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி ஆட்சியாலும் மாகாணசபைகளைக் கட்டுப்படுத்த உதவவென உருவாக்கப்பட்ட, ரணிலின் மொழியில், ‘இலண்டன் நகரசபைக்கு உள்ள அதிகாரங்கள் கூட இல்லாத’ 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தமது ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினைக்கான தீர்வு எனவும் ரணில் தெளிவாக்கியுள்ளார். அத்துடன் பொலிஸ் அதிகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லையென அடித்துக்ககூறி 13ம் திருத்தம் நிர்வாகப் பரவலாக்கல் என ரணில் விளக்கியும் அதனை கூட நாட்டைப்
பிளவு படுத்தும் செயலென மகாநாயக்க தேரர்கள் கூறித் தமிழர் தாயகங்களை இலங்கையின் பிராந்தியங்களாகக் கூடக் கருத அனுமதிக்க மாட்டோம் என ரணில் இதனை வாபஸ் பெறுவதற்கு ஒரு கிழமை காலக்கெடுவும் கொடுத்துள்ளனர். இல்லையேல் நாடளாவிய நிலையில் இனமொழிமதவெறிப் போராட்டத்தை முன்னெடுக்கவும் அறைகூவல் விடுத்துள்ளனர். இவை எல்லாம் ஈழத்தமிழர்களின் இறைமைப்பிரச்சினை தீர்க்கப்படாததினால் வளர்ச்சியுற்ற பொருளாதார நெருக்கடி அது தீர்க்கப்படாத வரை தொடரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனாலேயே 2026க்குள் ஈழத்தமிழர் தேசியப் பிர்ச்சினையை உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் அனைத்துலக நிதிநிறுவனங்களும் ஏற்று அதனைத் தீர்க்குமாறு முன்நிபந்தனை வைக்காவிட்டால் இலங்கை வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுக்க இயலாது.
இதற்கிடை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வைப்பதே இலங்கையில் தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கான முதற்படியென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் கூறி அனைத்துலக நாடுகளினதும் அமைப்புக்களினதும் ஈழத்தமிழர் குறித்த அக்கறைகளைத் திசைதிருப்பியுள்ளார். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்திய கலாச்சார மையம் யாழ்ப்பாண மாநாகரசபையின் நிலத்திலே கட்டப்பட்ட நிலையில் அதனை இந்தியா யாழ்ப்பாண மாநகரசபையின் பராமரிப்பில் ஒப்படைக்காது யாழ்ப்பாண மக்களின் உள்ளூராட்சி உரிமையையும் கூட வன்முறைப்படுத்தி சிறிலங்காவிடம் ஒப்படைத்துள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் எந்த முதல்வரின் காலத்தில் கட்டடம் கட்டப்பட்டது என்ற வரலாற்றுப்பதிவை நடுகல்லில் பொறிப்பதற்குக்கூட யாழ்ப்பாணமக்கள் சிறிலங்காவிடம் அனுமதி பெறப்போராடும் நிலையில் மாகாணஅபிவிருத்திசபை என்பது தமிழர் தாயகங்களில் சிங்கள பௌத்த மேலாண்மைக்கான அதிகார மையங்களாகும் என்பது தெளிவாகிறது. இவ்வாறாக ஈழத்தமிழ் மக்களின் தாயக தேசிய தன்னாட்சி நோக்கிய பயணத்தைத் தடைசெய்வதற்கான பல்வேறு சக்திகளின் விழிப்புக்கிடை உலகத் தமிழர்கள் தான் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இனப்பிரச்சியாகவோ மதப்பிரச்சினையாகவோ காட்டப்படும் பொய்மைகளை உலகுக்குத் தெளிவாக்கி அது இறைமைப்பிரச்சினை என்பதை உலகுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்பது இலக்கின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும் ரணில் சம்பந்தர் கொள்கை விளக்கமென இதனை அழைப்பதற்குக் காரணம் இருவருமே ஈழத்தமிழரின் இறைமைப்பிரச்சினையாக அவர்கள் பாராளுமன்றத்துக்குள் 1977இல் நுழையும் பொழுதே மாறிவிட்ட ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினையை இனப்பிரச்சினை எனச் சிங்கள பௌத்த பேரினவாத மொழியில் உலகுக்கு வெளிப்படுத்தி வந்துள்ளதை ரணில் தனது கொள்கை விளக்க உரையில் கூறாமல் கூறியமையே ஆகும்.
1977-2009 க்கு இடையான 32 ஆண்டுகால ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்ட காலத்திலும் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றச் சங்கத்தின் அங்கத்தவராக விளங்கிய சம்பந்தர் எவ்வாறு ஈழத்தமிழர் இறைமையை உலகம் ஏற்காது இனப்பிரச்சினை என உள்நாட்டுப் பிரச்சினையாக பரப்புரை செய்துள்ளார் என எடுத்து நோக்கின் ஈழத்தமிழின அழிப்பினை உலகநாடுகள் உலக அமைப்புக்கள் அனைத்துலகச் சட்டங்கள் என்ற அச்சமின்றி சிறிலங்கா முன்னெடுக்க இந்த இனப்பிரச்சினையென உள்நாட்டுப் பிரச்சினையாகவே சம்பந்தர் வெளிப்படுத்தியதும் ஊக்கியாக அமைந்துள்ளது. இன்று சம்பந்தரின் உண்மை முகம் பலநிலைகளில் வெளிப்படுத்தப்பட்ட பின்னரும் சம்பந்தர் தலைமையை விட்டு விலக வேண்டும். அல்லது மக்களால் சனநாயக வழிகளில் விலக்கப்பட வேண்டும். .
அவ்வாறே உலகத் தமிழ் அமைப்புக்களாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் சில புலம்பதிந்து வாழும் தமிழ் அமைப்புக்களும் சம்பந்தர் போலவே சிறிலங்காவுடன் பேசுவதன் மூலம் உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்வு காணப்படக்கூடிய ஒன்றாக ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை இறைமைப்பிரச்சினையல்ல இனப்பிரச்சினை என உலகுக்குக் காட்டி வருகின்றனர். அத்துடன் இன அழிப்பு என்ற சொல்லைத் தங்களின் அரசாங்கங்கள் அமைப்புக்களுடனான தொடர்பாடல்களில் தவிர்த்தும் வருகின்றன. இதனால்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சிறிலங்கா உள்நாட்டுத் தீர்வுகளை எழுந்தமானமாக முன்மொழிந்து வருகிறது. கொள்கை விளக்கத்தில் சில வரிகளில் அதனை மூடி மறைத்துள்ளது.
இந்நிலையில் மதிப்புக்குரிய முன்னாள் நீதியரசரும் வடமாகாணசபை முன்னாள் தலைவருமான விக்னேஸ்வரன் அவர்கள் பௌத்தம் எதனைப் போதிக்கிறது? தமிழரை அடிமைப்படுத்தவா போதிக்கிறது என மகாநாயக்கர்களுக்கு எழுதியுள்ள கடிதம் உலகத் தமிழர்களால் உலகமயமாக்கப்பட வேண்டிய ஆவணமாக உள்ளது. இத்தகைய செயல்களைச் செயற்படுத்தவும் அனைத்து பிரச்சினைகளையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து முன்னெடுக்கவும் ஈழத்தமிழர்களுக்கான பொது அமைப்பு ஒன்றை நிறுவுமாறு மீண்டும் மீண்டும் இலக்கு ஈழத்தமிழர்களை வேண்டி நிற்கிறது. இதற்கு முன்னோடியாக ஈழ மக்களவைகளை தாயகத்திலும் உலகநாடுகளிலும் அமைத்து முன்னேறுவது பொருத்தமாக இருக்கும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.

Tamil News