ஆறுவார அபாயத்துள் சிக்கியுள்ள ஈழத்தமிழர் இறைமை | இலக்கு இதழ் 213

237 Views

ஆறுவார அபாயத்துள் சிக்கியுள்ள ஈழத்தமிழர் இறைமை

யுத்தம் முடிந்த காலத்தில் தமிழர்களைக் கொல்லச் சிங்களவர்களுக்குச் சம்பந்தர் அனுமதி கொடுத்தாரா? சம்பந்தனும் போர்க்குற்றவாளியா? என வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உற வினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் வவனியாவில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளார். சம்பந்தர் யாழ்ப்பாணத்தில் ரணில் கூறிய அதே பாணியில் நீங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரையும் கொன்று விட்டீர்கள் என எங்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளமை சிறிலங்கா அரசாங்கம் விரும்புவது போல இந்த அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மனிதாயத்திற்கு எதிரான யுத்தக்குற்றச் செயலான மனித உரிமைகள் வன்முறையை அனைத்துலக விசாரணையின்றி மூடிமறைப்பதற்கான திட்டமிட்ட செயலா என்ற கேள்வி அவரின் கேள்வி வழி எழுகிறது. போராட்ட காலத்தில் சென்னையில் ஒளிந்து இருந்து விட்டு சம்பந்தர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வன்னியில் மக்கள் கொல்லப்பட்டதன் பின்னரே தாங்கள் அரசியல் நடத்துவதற்காக நாடு திரும்பியதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜ்குமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அனைத்துலக விசாரணையை விரும்பாததற்குக் காரணம் அத்தகைய விசாரணையில் சம்பந்தரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைத்துலக யுத்தக் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்தக் கேள்வியை எழுப்பியதன் வழி, இவர்கள் 15.12.2022ஆம் நாளுடன் 2126வது நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் பிள்ளைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காக்கும் தமிழர்களின் இறையாண்மையை உறுதிப்படுத்தவும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவிகளைத் தாங்கள் பெறுவதற்கும் நடத்தி வரும் சனநாயகப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரணிலின் காணாமல் ஆக்கப்பட்டுள்ள அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற யாழ்ப்பாணப் பிரகடனத்திற்கு வழிமொழிதலாக சம்பந்தரின் கூற்று அமைகிறதா என்ற நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டதற்கான சான்றாதரங்களையும் நேரில் கண்ட சாட்சியங்களையும் வெளிக்கொண்டுவர உழைக்க வேண்டிய வரலாற்றுக் கடமையுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தர் அவற்றை மூடிமறைக்கக் கூடிய வகையில் ஒரு வார்த்தையில் கொல்லப்பட்டது எங்களுக்குத் தெரியும் என்று கூறினால் அவர் அவ்வாறு சொல்வதற்கான சான்றுகளைத் தங்களுக்குக் காட்ட வேண்டும் என ராஜ்குமார் வலியுறுத்திக் கேட்டு உள்ளார்.
ஈழத்தமிழர்களின் இறைமையை உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் கவனத்தில் எடுக்க வைத்தாலே இனியாவது சிறிலங்கா தனது இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பேணும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கை எனத் தனது ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகள், இனத்துடைப்புச் செயற்பாடுகள், பண்பாட்டு இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்துலகத்திற்கு நியாயம் கற்பித்தலைத் தடுக்க இயலும். அனைத்துலக நாடுகளும் அனைத்துலக அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சிறிலங்காவின் இறைமையை மீறி ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்கான அனைத்துலகச் சூழ்நிலை வலுப்பெற்று வருவதைச் சம்பந்தரின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும் வலுவிழக்கவைத்துச் சிறிலங்காவின் இறைமைக்குள் ஈழத்தமிழர்கள் மேலும் மேலும் இனஅழிப்புக்கும் இனத்துடைப்புக்கும் பண்பாட்டு இனஅழிப்புக்கும் நாளாந்தம் பலியாகும் நிலை தொடர வைக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அபே ரட்ட (எங்களுடைய நாடு) அபே ஜாதிய ( எங்களுடைய தேசியம் ) அபே ஆகமய ( எங்களுடைய பௌத்த ஆகமயச் சட்டம் ) என்ற ஈழத்தமிழின இறைமை மறுப்பு, தேசிய மறுப்பு, சட்டத்தின் ஆட்சி மறுப்பு என்ற இனத்துடைப்பு அரசியலை ரணில் கோத்தபாய மகிந்த சிங்கள பௌத்த சிந்தனைகளின் அடிப்படையில், ராசபக்சாக்களால் நியமிக்கப்பட்டதற்கு நன்றிக் கடனாக அனைத்துலக நாடுகளில் தனக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கைப்பயன்படுத்தி முன்னெடுத்துக் கொண்டிருப்பதே இன்றைய சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் கொள்கையாகவும் கோட்பாடாகவும் செயற்பாடாகவும் உள்ளது.
அத்துடன் ஈழத்தமிழர்களின் இறைமையைத் தனதாகக் கொண்டு 152 ஆண்டுகள் அவர்களை ஆட்சிசெய்த பிரித்தானியா ஈழத்தமிழர்களின் விருப்பினைப் பெறாது சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைக்குள் 04.02.1948இல் இலங்கை அரசாங்கம் எனத் தங்களின் காலனித்துவக் காலச் சந்தை மற்றும் இராணுவத் தேவைகளுக்காகச் செயற்கையாக இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இருந்து வந்த தமிழ் சிங்கள தேசங்களின் எல்லைகளாக இயற்கையாக இருந்த காடுகளை அழித்தும் நதிகளை ஆறுகளைத் திசைமாற்றியும் தங்களாலே செயற்கையாக உருவாக்கப்பட்ட கொழும்பு என்னும் தலைநகரில் ஆங்கிலம் படித்த சொத்துடைமையுள்ள படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் வழி 1833 முதல் 1948 வரை ஏற்படுத்தி வைத்திருந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் ஒனறுக்கே இலங்கைத் தீவின் இறைமையுள்ள அரசாங்கமாகச் சுதந்திரம் வழங்கினர். இந்த சுதந்திரநாளின் 75வது ஆண்டு 04.02.2023 இல் இடம்பெறுவதற்கு இடையில் ஈழத்தமிழர்களின் இனத்துவ இருப்பையும் மொழித்துவப்பண்பாட்டுத் தனித்துவத்தன்மையையும் இல்லாதொழித்து இலங்கையில் ஒரே இனம் சிங்கள இனம் இலங்கை ஒரே நாடு சிங்கள நாடு என்ற வகையில் புதிய அரசியலமைப்பை வரஇருக்கும் ஆறு வார குறுகிய காலத்துள் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார். இதற்கு எதிரான ஈழத்தமிழர்களின் சனநாயகப் போராட்டங்களை நசுக்கத் தனது நாற்படைகளுக்கும் சிறிலங்காவின் அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இராணுவ கடற்படை விமானப்படைகளுக்குப் பாதுகாப்புச் செலவாக 41 ஆயிரம் கோடி ரூபாவும். பொலிஸ் படைக்கு 12. 9 கோடி ரூபாவும் ஆக மொத்தம் 53.9 ஆயிரம் கோடி ரூபாவை கடந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட ஓதுக்கீட்டை விட 14 வீதம் அதிகமாக இந்த பொருளாதார வங்குரோத்து நிலையிலும் ஒதுக்கியுள்ளார்.
அத்துடன் தனது அனைத்துலகப் பலத்தை வலுவாக்க எரிக்சொல்கைம் அவர்களை இரண்டாவது முறையாக அரசியல் கட்சிகளுடன் இனப்பிரச்சினை தொடர்பாகத் தனக்கேற்ற விதத்தில் பேச்சுக்களை நடத்த அழைத்துள்ளார். கூடவே இந்திய இலங்கை உடன்படிக்கையின் 13வது திருத்தத்தைக் கூடக் கைவிட்டு 1980களில் ஜே. ஆர். ஜயவர்த்தனா எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கா 1959இல் உருவாக்கிய வடக்குக் கிழக்குக்கான மாவட்ட சபைகள் என்னும் குறைந்த பட்ச அரசியல் அதிகாரப்பகிர்வைக் கூட மறுத்து வெறுமனே சிங்கள அரசின் நிர்வாகப் பரவலாக்கலை முன்னெடுத்த மாவட்ட அபிவிருத்திசபைகளை ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசியலமைப்பாக்கி 75வது ஆண்டுச் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் ஈழத்தமிழர்களின் இறைமையை முற்றாக இழக்கவைக்கும் ஒரேநாடு ஒரே சட்டம் ராசபக்சக் கனவை நனவாக்க முயல்கிறார்.
இந்நிலைக்கு அனைத்து வழிகளிலும் சம்பந்தர் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை நின்று இனஅழிப்புக்கான அனைத்துலகச் சட்டங்களில் இருந்தும் சிறிலங்காவைப் பாதுகாக்கும் அரசியலை முன்னெடுப்பதையே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சார்பில் ராஜ்குமார் விடுத்துள்ள சம்பந்தரும் போர்க்குற்றவாளியா? என்ற கேள்வி உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது என்பதே இலக்கின் எண்ணமாகவுள்ளது. ஈழத்தமிழர்கள் இன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் மேல் நம்பிக்கையிழந்த நிலை தெளிவாக ராஜ்குமாரின் கேள்வியால் உறுதியாகிறது. இந்நிலையில் தாயக, உலக ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து இன்றைய சமகால உலக அரசியலுக்கு மத்தியில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய குடைநிழல் அமைப்பொன்றை உடனடியாக உருவாக்கினால் மட்டுமே ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதுகாக்க முடியும் என்பதே இலக்கின் உறுதியான கருத்து.

Tamil News

Leave a Reply