எரிக்சொல்கைம்மின் தவறான கருத்துக்காக நோர்வே அரசாங்கம் அவரைத் திருப்பியழைக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 204

எரிக்சொல்கைம்மின் தவறான கருத்துக்காக
நோர்வே அரசாங்கம் அவரைத் திருப்பியழைக்க வேண்டும்

“ஆயுத மோதலின் போது காணாமல் போதல் உயிரிழப்பு என்பன சாத்தியமே” என்னும் கருத்தை இன்று இலங்கையின் எதிர்காலம் குறித்து காலநிலை குறித்த விடயங்களை முன்னெடுப்பதன் மூலம் உறுதிப்படுத்தவென சிறிலங்கா ஜனாதிபதியால் அவருக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்ட நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்கைம் தெரிவித்துள்ளார். இவர் முன்னர் சிறிலங்காவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அனைத்துலகப் பேச்சுவார்த்தைக்கு நடுநிலையாளராக விளங்கியவர். இந்தச் செய்தியை வீரகேசரிப் பத்திரிகை “விடுதலைப்புலிகளை நான் அழித்தேன் எனத் தெரிவிக்கப்படுவது சரியான விடயமல்ல- எரிக்சொல்கைம்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டமை யுத்தத்தின் இயல்புநிலை எனச் சிறிலங்கா அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்குப் பொறுப்புக் கூற மறுக்கும் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றச் செயலுக்கு பக்கபலமளிக்கும் நோக்கிலும், அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறிலங்காவில் மனித உரிமைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் போக்கிலும் அமைந்துள்ள எரிக்சொல்கைம்மின் இந்தத் தவறான கருத்து உலகின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் எதிரான செயலாக அமைகிறது.
ஐக்கியநாடுகள் சபையின் அனைத்துலகச் சட்டங்கள், உலகில் போர்க்காலங்களிலும் யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைகள், இனஅழிப்புக்கள், இனத்துடைப்புக்கள், பண்பாட்டு இனஅழிப்புக்கள் செய்யப்படுவது அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான அனைத்துலக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் எனத் தெளிவாகத் தெரிவிக் கின்றன. இந்த அனைத்துலகச் சட்ட மரபை மீறி உலகின் பாதுகாப்பையும் அமைதியையும் ஒழுங்கு படுத்தும் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு கருத்தள வில் ஊறுவிளைவிக்கும் வகையில் நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்கைம் அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்துலகக் குற்றச் செயலுக்கு நியாயப்படுத்தல் செய்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் 158 பேரை தங்களின் இரண்டாயிரம் நாட்களுக்கும் மேலான நேரடியான நீதிக்கான ஜனநாயகப் போராட்டத்தில் சாகக் கொடுத்த நிலையி லும் உறுதியுடன் போராடிக் கொண்டிருப்பது உலகறிந்த விடயம். இவர்கள் கோரும் தண்டனை நீதியும் பரிகார நீதியும் இவர்களுக்கு கிடைப்பதை அனைத்துலக ரீதியில் தடைசெய்ய முயற்சிக்கும் சிறிலங்காவின் முயற்சிகளுக்குப் பக்கமளிக்கும் கூற்றாக நோர்வேயின் முன்னாள் அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது.
உலகில் பாதுகாப்பையும் அமைதியையும் காக்கப் பொறுப்புள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் ஒன்றான நோர்வே அவரை இந்த அனைத்துலகச் சட்ட மீறலுக்காக உடனே திருப்பி அழைத்து உலகின் பாதுகாப்பையும் அமைதியையும் பேண உதவ வேண்டுமென நோர்வே அரசாங்கத்தை வலியுறுத்துவது, உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் புலம்பதிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உலக ஈழத்தமிழினத்தின் பொறுப்பாகவும் தமிழகத் தமிழினத்தவரின் இனத்துவ உறவுக் கடமையாகவும் உள்ளது. எரிக்சொல்கைம்மின் சமகால நியமனம் குறித்து யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் வெளிவந்த குறிப்பு ஒன்றில் இதே விடயத்திற்கு இவர் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் ஆலோசகராகப் பணியாற்றப் போகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை இவர் கொழும்பில் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணி சுமந்திரன், திரு.சாணக்கியன் ஆகியோரையும் அழைத்துப் பேசியுள்ளார். இந்தச் செயற்பாடுகளுக்கும் காலநிலையை உறுதிப்படுத்தலுக்கும் எத்தகைய உட்தொடர்புகள் உள்ளதென காலநிலையைப் பேணல் தொடர்பில் அறிவார்ந்த அணுகுமுறை உள்ள பலருக்குத் திகைப்பாக உள்ளது.
இவை எல்லாமே இந்தியா முன்னெடுக்கும் சிறிலங்கா அரசியலமைப்பின் 1978ம் ஆண்டு 13வது திருத்தத்தைச் சிறிலங்காவை மீளவும் நடைமுறைப்படுத்த வைக்கும் முயற்சிக்கு அனைத்துலக அழுத்தத்தை ஈழத்தமிழர் மேலும் தமிழகத் தமிழர் மேலும் உருவாக்கி அவர்கள் இந்த முயற்சியைத் தடுக்கவெடுக்கும் சனநாயகவழிகளை அடைக்கும் நோக்குடையதாகவே எரிக்சொல்கைம்மின் செயற்பாடுகள் அமைகின்றன. இப்படித்தான் இவரால் விடுதலைப்புலிகளும் பலமிழக்கச் செய்யப்பட்டனர். இந்நிலையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் தங்களுக்கு உள்ள இறைமையையும் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளையும் 22.05. 1972 முதல் படைபலத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்காவிலிருந்து தாங்கள் அனைத்துலக நாடுகள் அமைப்புக்களால் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான அமைதியான வாழ்வில் வாழவேண்டும் என்பதே இன்றைய ஈழத்தமிழர் தேசியப்பிரச்சனை. இதற்கு, சிறிலங்கா அரசாங்கத்தின் நிதிப்பரவலாக்கலை மாகாணசபைகள் வழி பெற்றுக் கொடுக்கும் 13வது திருத்தம் எந்த அளவுக்கு அவர்களின் வாழ்வுக்கான கண்ணியத்தை ஏற்படுத்தும் அரசியல் தீர்வாக அமையும் என்பது இந்தியா விளக்கமளிக்க வேண்டிய விடயம். இலங்கை இந்திய ஒப்பந்தம் திருகோணமலைத்துறைமுகத்தை மையப்படுத்தி இந்தியப் பாதுகாப்பை இந்துமாக்கடலில் உறுதிப்படுத்தும் நோக்கானது. இதனை இலங்கையின் அரசியலமைப்பு வழி உறுதிப்படுத்த 13வது திருத்தம் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கிக் கொடுக்கும் என்பது இந்தியாவின் எண்ணம். இந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமலே புரிந்துணர்வு அடிப்படையில் இந்தியாவுடன் திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கிகளைப் பேணல் இந்தியாவுடன் இணைந்தே முன்னெடுக்கப்படும் எனத் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உறுதியுளித்துள்ளார். எனவே மறைமுகமாக 13வது திருத்தத்தைக்கூடச் சிறிலங்கா இனி ஏற்காது என்பது தெளிவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கான இந்திய ஆதரவைப் பெறும் அனுசரணையாளராக முன்னைய அனுசரணையாளருக்குப் புதிய நியமனத்தைச் சிறிலங்கா வழங்கியுள்ளது என்பதே இலக்கின் எண்ணம். இந்தப் பிராந்திய அனைத்துலக மேலாண்மைகள் வல்லாண்மைகள் கூட்டுறவின் மறைமொழிகள் வழியாக மறைமுகமாக வாழ்விழந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை உலக ஈழத்தமிழர்களின் அமைப்புக்களின் குடை அமைப்பொன்று உடன் உருவாக்கப்பட்டால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதே இலக்கின் உறுதியான எண்ணம்.

ஆசிரியர்

Tamil News