ஈழத்தமிழர்களுக்குப் பெயரளவு வாக்குறுதிகளல்ல இறைமையின் சட்ட உறுதிப்படுத்தல்களே தேவை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 199

ஈழத்தமிழர்களுக்குப் பெயரளவு வாக்குறுதிகளல்ல
இறைமையின் சட்ட உறுதிப்படுத்தல்களே தேவை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் நடப்பு ஆண்டுக்கான 51வது அமர்வு செப்டெம்பர் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இம்முறை இந்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ள ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளரின் சிறிலங்கா குறித்த அறிக்கையில் சிறிலங்காவில் மனித உரிமைகள் வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக்குற்றங்களுக்கு 2015முதல் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் பொருளாதாரப் பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளார். வெளிப்படையாகவே இந்தப் பொறுப்புக்கூறலுக்கான அழைப்பை ஒருநாட்டின் இறைமைக்கு எதிரான தலையீடுவென நிராகரித்துள்ளன. இலங்கையில் மனித உரிமைகள் வன்முறைகள் எவ்வாறு ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வில் அரசபயங்கரவாதத்தைப் படைபலம் மூலம் முன்னெடுப்பதன் மூலம் வன்முறைப்படுத்தி ஈழத்தமிழர்களை இனங்காணக்கூடிய அச்சப்படுத்தலுக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்களின் அரசியல் பணிவை 1979ல் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது முதல் இன்று வரை சிறிலங்கா பெற்று வருகின்றது. இவ்வாறு தமிழ் மக்களின் மனித உரிமைகளை வன்முறைப்படுத்தித் தனக்கான அரசியல் பணிவைப் பெற்றுப் பழகிய சிறிலங்காவின் ஆட்சியாளர்கள், அதே பாணியில் இன்று சிங்கள மக்களின் மனித உரிமைகளையும் வன்முறைப்படுத்தி அவர்களைச் சிறையில் அடைக்கிறது இன்று மனித உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் நாடுகளும் அமைப்புக்களும் ஈழத்தமிழர்களுக்கு 1956 முதல் இழைக்கப்பட்ட – இழைக்கப்படும் மனித உரிமைகள் வன்முறைகள் குறித்து 66 ஆண்டுகளாகச் அனைத்துலகச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் செயலளவில் கட்டுப்படுத்தாது விட்ட தால் இன்று அவர்களின எச்சரிப்புக்களையும் நெறிப்படுத்தல்களையும் ஏறெடுத்தும் பார்க்கும் நிலையில் கூடச் சிங்கள ஆட்சியாளர்களில்லை.
இந்நிலையில் யாழ் குடாநாட்டில் மானிப்பாய் கந்தசுவாமி கோயில் முன்றலில் 10.09. 2022 இல் தொடங்கப்பெற்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் அதன் வழியான தடுப்புக்களையும் இரத்துச் செய்யக் கோரும் கையெழுத்துப் போராட்டம் ஊர்திவழிப்போராட்டமாக மற்றைய மாவட்டங்களிலும் மூன்று நாட்கள் தொடரவுள்ளது. ஆயினும் ஈழத்தமிழர் பிரச்சினையை தேசியத்திற்கு எதிரானதும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பயங்கரவாதச் செயலெனவும் இதனை எதிர்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாக்கப் பயங்கரவாதத் தடைச்சட்டம் தேவையெனவும் கடந்த 43 ஆண்டுகளாகச் சிறிலங்கா செய்யும் நியாயாப்படுத்தலையே இன்றும் முன்னெடுக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த விடயம் எனவே ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகளும் புலம்பெயர் தமிழர்களம் ஈழத்தமிழர் பிரச்சினை சிறுபான்மை இனப் பிரச்சினையல்ல ஈழ தேசமக்களின் இறைமைப்பிரச்சினை என்பதை ஐக்கியநாடுகள் சபையும் உலக நாடுகளும் மற்றைய உலக அமைப்புக்களும் ஏற்கக் காலதாமதம் செய்வதின் விளைவே இலங்கைத் தீவின் எல்லாப் பிரச்சினைகளினதும் அடிப்படை என்ற உண்மையை, இந்தப் பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டம் முதல் ஐக்கிய நாடுகள் சபை வரை ஈழத்தமிழர்கள் கூட்டொருங்கு இயக்க அரசியல் மூலம் வெளிப்படுத்தினாலே சிறிலங்காவின் பயங்கரவாதத் தடைச்சட்டம் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரானது என்ற உண்மையும் ஈழத்தமிழின இனஅழிப்புக்களும் உலகுக்குத் தெளிவாகும் என்பதே இலக்கின் எண்ணம். இதனைச் செய்யாதவரை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையகத்தின் சிறிலங்கா மீதான அனைத்துலக சட்டச் செயற்பாடுகளை ஒரு நாட்டின் இறைமைக்கு எதிரான தலையீடுகளாகச் சித்தரிக்க சிறிலங்கா பலமாக முனைகிறது.
மேற்குலகநாடுகளின் ஆசிய ஆபிரிக்க நாடுகள் மேலான தலையீடாக அரசியல்படுத்தவும் செய்கின்றது. இதற்கு ஆசிய ஆபிரிக்க நாடுகள் எடுபடவும் செய்யும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் தலையீட்டை மட்டுப்படுத்தும் இராஜதந்திர முயற்சியில் சிறிலங்கா பலமான அரசாங்கம் பொருளாதார உறுதிப்பாட்டுக்கும் அனைத்துலகத் தொடர்புகளுக்கும் உடனடியாக நிறுவப்பட்டாலே அனைத்துலக நாணய நிதியம் உட்பட்ட அனைத்துலக அமைப்புக்களின் கடன் உதவிகளையும் நிதி உதவிகளையும் பெறலாம் எனக்கூறி, இன்றைய ரணில் ஆட்சியுpலும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை இரண்டாவதாக மாற்றுவதற்கு முயல்கிறது. இது ராசபக்ச குடும்ப ஆட்சியாளர்களதும் அவர்களின் ஆட்சிக்காலப்; படையினரினதும் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றச் செயல்களை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதைத் தடுக்கும் நோக்காகவும் போக்காகவும் உள்ளது. ஆயினும் தேசிய அரசாங்கமமைக்து பலமான அரசை நிறுவ முயற்சித்து தோல்வி கண்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி ரணில் எல்லாக் கட்சியின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை மூலம் பலமான அரசாங்கத்தை நிறுவ முயற்சித்து வருகிறார். அதே வேளை புலம் பெயர் இலங்கையருக்கான அலுவலகம் ஒன்றைத் தொடங்கி புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிக்கக் கூடியதான பேச்சுக்களைப் புலம்பெயர்ந்தவர்களுடன் உலகளாவிய நிலையில் முன்னெடுத்து பொருளாதார நெருக்கடிக்கு இலங்கைத் தமிழர்களின் டொலர் நிதிப்பங்களிப்பைப் பெறவும் முயல்கின்றார். கூடவே இவ்வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் அனைத்துலக வளர்ச்சிக்கான நிறுவனத்தின் (USAID) தலைவர் சமந்தா அவர்களுடன் இலங்கையில் அனைத்துலக நாணய நிதியத்தின் நெறிப்படுத்தல்களுக்கு ஏற்ப மக்களுக்கு வரிகளையும் விலைகளையும் அதிகரிக்கையில் அவரின் நிறுவனத்தின் உதவிகள் எவ்வாறு அமையும் என்ற பேரப்பேச்சுக்கள் வழியாகவும் யப்பானுக்கு இவ்வாரத்தில் செல்லவுள்ள சிறிலங்காவின் அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா யப்பானைக் கொண்டு சிறிலங்காவுக்குக் கடன் கொடுத்த நாடுகளுடன் கடனின் திருப்பிக் கட்டும் காலஎல்லையைக் கூட்டவும் வட்டிவீதத்தைக் குறைக்கவும் அதற்குப் பேரமாக இந்துமாக்கடலில் அந்த நாடுகளுக்கு உள்ள விருப்புக்களை வளர்க்க சிறிலங்கா எவ்வாறு இடமளிக்கும் என்னும் இராணுவத் தந்திரோபாயப் பேச்சுக்கள் வழியாகவும் தனது அரசாங்கத்தைப் பலம்பொருந்திய அரசாக உலகில் முன்னிறுத்த முயற்சிக்கவுள்ளார். இதுவே இன்றைய நடப்பாக உள்ள நிலையில் ஈழத்தமிழர்களுக்குப் பெயரளவு வாக்குறுதிகளல்ல அவர்களின் இறைமையின் சட்ட உறுதிப்படுத்தல்களே தேவை என்பதை மையப்படுத்தி ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் புலம்பெயர் தலைமைகளும் உண்மையடனும் நேர்மையுடனும் துணிவுடனும் செயற்பட வேண்டும் என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது.

ஆசிரியர்

Tamil News