சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி முகமிழக்கும் தமிழரின் அரசியல் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 198

சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி முகமிழக்கும் தமிழரின் அரசியல்

சிறிலங்காவின் முன்னாள் அரசுத்தலைவர் கோத்தபாய ராசபக்சா மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்துப் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இவ்வார சிங்களவரின் அரசியல் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. சிங்களவர்களின் அரசியல் சிங்கள பௌத்த பலமான அரசாங்கம் ஒன்றை இலங்கைத்தீவில் நிறுவுதல் என்கிற அரசியல் கொள்கை உறுதிப்பாட்டுடன் 1948 முதல் 74 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனை முதன்மைப்படுத்திய நிலை யிலேயே சிங்களவர்களின் அரசியல் தனக்குள் ஏற்படும் அரசியல் முரண்பாடுகளையும் பதவிக்கான போட்டாபோட்டிகளையும் அன்றும் இன்றும் என்றும் முன்னெடுக்கும் என்பது அரசியல் பட்டறிவாக உள்ளது.

இந்நிலையில் இலங்கைத் தீவில் சிங்களத் தேச இனத்தை விடத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமைக்குரிய இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைமைகள் தங்கள் மக்களின் அரசியலின் தனித்துவத்துடன் அதனைத் தொடராது 1948 முதல் 1978 வரையும் 2009 முதல் இன்று வரையும் 43 ஆண்டுகள் சிங்களவரின் அரசியலை மையப்படுத்தித் தமிழரின் அரசியல் முகத்தை இழக்கவைக்கும் தன்னல அரசியலையே முதன்மைப்படுத்தி வருகின்றனர். இதுவே இலங்கைத் தீவில் தமிழரின் தேசியப்பிரச்சினை (Tamils’ National Question) என்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு இலங்கைத் தீவில் உள்ள யாராலும் அகப்படுத்த முடியாத இறைமையின் அடிப்படையில் அவர்கள் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணியிக்கும் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்தல் என்கிற உண்மையை அனைத்தலக சமுகம் இன்றுவரை சிந்திக்க முன்வராதுள்ளமைக்கான முக்கிய தலைமைக்காரணியாக உள்ளது.

04.02.1948 வரை 152 ஆண்டுகால பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ், சிங்கள தேசியங்கள் ஒருங்கிணையாதனவாகவும் இத்தேசியங்களின் அரசியல் கோரிக்கைகள் பொருளாதாரத் தேவைகள் சமுக தேச உருவாக்கங்கள் என்பன தனித்தனியாகவே பிரித்தானிய அரசிடம் முன்வைக்கப்பட்டன என்பது வரலாற்று உண்மை. வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் இலங்கை முஸ்லீம்கள் என்ற வர்த்தகக் குடிவரவு வழியான குடிசார் இனத்துவ சிறுபான்மையினமும், 1949இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது முதல் மலையகத்தவர் என்ற தொழில்நிலைக் குடிவரவின் வழியான குடிசார் இனத்துவச் சிறுபான்மையினமும் இலங்கைத் தமிழ் சிங்கள தேச இனங்களுடன் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர நிலையில் வாழும் உரிமையுள்ள மக்கள் இனங்களாகி நான்கு மக்கள் இனங்களின் தாயகமாக இன்று இலங்கைத் தீவு உள்ளது. இந்த நான்கு மக்கள் இனங்களதும் தேவைகள் தனித்தனியானவை அவை தனித்தனியாகவே அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியவை. ஆதனை முஸ்லீம், மலையக அரசியல் தலைமைகள் இயன்றவரை செய்கின்றன. ஆனால் தமிழர்களின் அரசியல் தலைமைகள் சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி அதனையே பேசி விமர்சித்து முகமிழக்கும் அரசியலாக தமிழரின் அரசியலை 2009 முதல் இன்றுவரை 13 ஆண்டுகள் முன்னெடுத்து வருகின்றன.

ஐந்து வருடத்தில் 29 பில்லியன் டொலர் கடனை திருப்பிக்கட்டி கடனிலிருந்து மீளவேண்டிய நிலையில் உள்ள ரணில் அரசாங்கம் அதில் பத்திலொருபங்கினைத்தான் 2.9 பில்லியனைத் தான் இப்பொழுது நடைபெற்று வரும் அனைத்துலக நாணயநிதியத்துடனான பேச்சுக்கள் வெற்றி பெற்றாலும் பெற முடியும் அதனையும் இலங்கைக்குக் கடன் கொடுத்த நாடுகளுடன் இலங்கை செய்யும் கடன் மறுசீராக்கம் உரிய முறையில் அமைந்தாலே அனைத்துலக நாணய நிதியம் வழங்கும். சீனா இலங்கையின் இன்றைய கடனில் 10 வீதத்தை வழங்கிய உதவிக் கரமாக இருந்தாலும் அது கடன் மறுசீரமைப்புக்கான வட்டி வீதத்தைக் குறைத்தாலோ அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் கால நீடிப்பைச் செயதாலோ அது உலகநாடுகள் அனைத்துக்கும் சீனா பின்பற்ற வேண்டிய பொதுவழக்காகிச் சீனாவின் அனைத்துலக வர்த்தகத்தை மிகக்கடுமையாகப் பாதிக்கும். இதனால் சீனா இதனைத் தவிர்த்து மக்களுக்கு தான் நேரடியாக உதவும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதன் அடிப்படையிலேயே இவ்வாரத்தில் சீனத்தூதுவர் புதிய திட்டங்களை யாழ்ப்பாணத்தில் தொடங்குவதற்கு அங்கு செல்லவுள்ளார். இந்நிலையில் அனைத்துலக நாணயநிதியத்தின் தற்காலிக உதவிகளைக் கூட இலங்கை பெறுமா என்ற கேள்வி இன்னமும் தொடர்கிறது. இதனால் புலம்பதிந்து வாழ் தமிழர்கள், இலங்கை முஸ்லீம்கள், மலையக வர்த்தகப் பெருமக்கள், மற்றும் உலகெங்கும் வாழும் சிங்களவர்கள் ஆகியோரிடம் பெறப்படும் முதலீடுகள், உழைப்புக்கள், நன்கொடைகள் வழியாகவே வட்டியில்லாத நிலையில் இலங்கையின் இன்றைய அரசாங்கம் தன்னை பலமான அரசாங்கமாகக் காட்ட முயற்சிக்கிறது.

அதேநேரத்தில் இன்றைய சிறிலங்கா அரசாங்கம் கோட்டபாயாவையும் திருப்பி அழைத்து அவர் ஈழத்தமிழர்கள் மேல் நடாத்திய இனஅழிப்பைத் தேசியப்பாதுகாப்புக்கு அவர் செய்த சிங்கள பௌத்த புனிதப்பணியாக சிங்கள மக்கள் முன் மீளுருவாக்கம் செய்து அவரைச் சமுகஉள்வாங்கல் அடையச் செய்து, சிங்கள பௌத்த பேரினவாதம் வீறுகொண்டெழுவதற்கு உதவுகிறது. இதன்வழி இனங்காணக் கூடிய அச்சத்தை மக்கள் போராட்டங்களுக்கான தடையாக அமைத்து அரசுக்கு எதிரான அனைத்தையும் மேற்கொள்ளும் ஆற்றலுள்ள பலமான அரசாங்கம் தன்னுடைய அரசாங்கம் என உலகநாடுகளின் அமைப்புக்களின் கடனுதவிகளை பெறமுயல்கிறது. அத்துடன் முதலீடுகளுக்கான பாதுகாப்பு உண்டென உலக முதலீடுகளை ஊக்குவிக்கவும் முயல்கிறது. அதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 12 அமர்வில் அது பொறுப்புக் கூறல், நல்லாட்சி, மனித உரிமைகளை உறுதிப்படுத்தலுக்கான முன்மொழிவுகளை மேற்கொள்ளாமலும், அதன் மனித உரிமைகள் வன்முறையாளர்கள், யுத்தக்குற்றவாளிகள், மனிதாயத்துக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் மேலான அனைத்துலகச் சட்ட நடைமுறைப்படுத்தல்களைச் செய்யாமலும் உலகநாடுகள் உலக அமைப்புக்களது ஆதரவைப் பெறுவதும் ரணில் நரித்தந்திர அரசியல் செயற்திட்டமாகவுள்ளது.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் சமுக அரசியல் பொருளாதார ஆன்மீகத் தனித்துவத்தை அவர்களின் தாயகம் மீதான இறைமையின் அடிப்படையில் முன்னெடுத்துத் தமிழரின் அரசியல் முகத்தை உலகுக்குத் தெளிவுபடுத்தினாலே தமிழர்கள் பாதுகாப்பான அமைதியில் வாழும் நிலை அனைத்தலக சமுகத்தால் உறுதிப்படுத்தப்படுமென்பதே இலக்கின் கருத்தாகவுள்ளது.

ஆசிரியர்

Tamil News