வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமானால் அதற்கு எதிராக போராடுவோம் – செல்வராசா கஜேந்திரன்

வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட  இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  (22)  இடம்பெற்ற கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள்  மீதான விவாதத்தில் உரையாற்றும்  போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்  நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை நாட்டின் ஒருபகுதியாக வலுக்கட்டாயமாக 1948இல் இருந்து கையகப்படுத்தி வைத்துள்ள வடக்கு, கிழக்கு தமிழ்த் தேசிய பிரதேசத்தில் எங்களின் பொருளாதாரத்தை அழிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம்  ஈடுபடுகின்றது.

 வடக்கு கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழரை காட்டிக்கொடுத்த ஈபிடிபியின் நபரை கடற்றொழில் அமைச்சராக வைத்துக்கொண்டு விரலால் கண்ணைக் குத்தும் வேலைகளை அரசாங்கம் செய்கின்றது.

வெளிப்படையாகவே இவ்வாறாக கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் அவ்வாறு நடந்தால் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணி திரட்டி போராடுவோம்.

இதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கிற்கு சென்று மக்களின் மூளை சலவை செய்யும் செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

இதேவேளை சர்வதேச விசாரணைகளுக்கு கோரிக்கை விடுக்கப்படுகையில் இங்குள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளக விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதை போன்று கூறியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி சுதந்திர தின களியாட்ட நிகழ்வை ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தார். தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது நாங்கள்  கைது செய்யப்பட்டோம். எங்களின் மீது தாக்குதல்களையும் நடத்தினர். எங்களில் 18 உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எம்மீது  பொய் வழக்குகளை பொலிஸார் தொடுத்துள்ளனர். அதற்கு  நாங்கள் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இன்று தேர்தலை நடத்த நிதி இல்லை என்று கூறிக்கொண்டு பெரஹரா என்ற பெயரில் ஜனாதிபதி பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றார். முறைகேடான வகையில் அரசாங்கத்தின் பணத்தை செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமே என்றார்.