பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ‘இலக்கு‘ ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன்,
”இதுவரையில் தமிழரசுக்கட்சியிடம் இருந்து விளக்கம் கோரிய கடிதம் எனக்கு எதுவும் அனுப்பப்படவில்லை.
ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முதல் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதில் 7 நாட்களுக்குள் பதில் தரவேண்டும் என்றொரு செய்தி வந்திருந்தது. பின் நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக கூட்டப்பட்ட கூட்டத்தில் 2 வாரத்துக்குள் விளக்கம் தர வேண்டும் என செய்திகளைப் பார்த்தேன். ஆனால் எனக்கு எந்த விளக்கமும் கோரி கடிதங்கள் அனுப்பப்படவில்லை. அப்படி அனுப்பப்பட்டால் அதற்குப் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறன். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது, பொது வேட்பாளர் தெரிவு தொடர்பில் அடிக்கடி கூட்டம் கூட்டப்படுவது எந்தமாதிரியான மன நிலையில் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் எனத் தெரியவில்லை.
நான் பொது வேட்பாளராக போட்டியிடுவதன் நோக்கம், தந்தை செல்வாவின் கொள்கையின் அடிப்படையில் தான் நான் போட்டியிட முடிவெடுத்துள்ளேன். ஆகவே நான் 22ம் திகதி என்ன முடிவு
வருதோ அதை ஏற்றுக்கொள்ளத்தயாரக இருக்கிறேன். பொது வேட்பாளராக நான் போட்டியிடுவது தவறாக இருந்தால், ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிக்கப்போகின்றார்கள் என்ற எந்த ஒரு முடிவையும் கட்சி இது வரையில் எடுக்கவில்லை. ஆனால் இது தொடர்பில் முடிவெடுக்காமலே கட்சியில் இருக்கிறவர்கள் தனிதனியாகக் கருத்துக்களைக் கூறுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்குள்ளது. ஏன் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்ட இவ்வாறு துரிதமான கூட்டங்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் மற்றும் தமிழ்தேசியத்தில் பற்றுள்ளவர்கள் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் என்னால் கூற முடியும்” என்றார்.



