கணவரை எனது கையால் படையினரிடம் ஒப்படைத்தேன்.பேரூந்தில் ஏற்றிச் செல்வதை கண்களால் கண்டேன்

”எனது கணவரை 2009-05 -17 திகதி எனது கையால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். ஆயிரக்கணக்கான சரணடைந்த உறவுகளை பேரூந்துகளில் ஏற்றிச் சென்றதை என் கண்ணால் கண்டேன்” என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

தற்போது சிறிலங்கா அரசுத் தலைவராக உள்ளவரால்த்தான் எங்களது உறவுகள் காணாமல் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர் அரசுத் தலைவராக இருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது .

எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமானது 10 ஆண்டுகளை கடந்து 11 வது ஆண்டில் தொடர்கின்றது .உயிருடன் ஒப்படைத்த என் உறவுகள் தற்போது இல்லை என அவர்கள் கூறமுடியாது . இராணுவ தளபதி மற்றும் அரசுத் தலைவர் எங்களுக்கு பதில் கூறவேண்டும்.

எமது போராட்டத்திற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்காது இருப்பதினாலே சர்வதேசத்திடம் கையேந்தி நிற்கின்றேன்.நூற்றுக்கணக்கான உறவுகள் காணாமல் போன உறவுகளுக்காக காத்திருந்து உயிரிழந்துள்ளனர் .

இனிமேலும் இந்த நாட்டில் எந்த ஒரு உறவும் காணாமல் ஆக்கப்பட கூடாது . என் கணவன் இருந்திருந்தால் நான் நான் வீதியில் நின்றிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இராணுவ தளபதியும் சானாதிபதியும் எவ்வித சாக்கு போக்குகளை சொல்லாது எமது சந்ததியை காப்பாற்றுங்கள்.