இலங்கைத் தீவில் உலகு குறித்த எந்தவிதமான அச்சமுமின்றி அத்தீவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான மூத்த குடிகளாகிய ஈழத்தமிழர்களை வகைதொகையின்றிப் பல்லாயிரக்கணக்கில் இனஅழிப்பு செய்து வரும் சிறிலங்கா அரசாங்கம், குரோனாக் காலத்தைத் தனக்குச் சாதகமாக்கி ஈழத்தமிழினத் துடைப்பையே நாட்டின் அரசியலாக்கி வருகின்றனர்.
இலங்கையின் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புக்களும் சிறிலங்காப் படையில் இருந்தவர்களிடமும் இருப்பவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இந்த ஜனநாயகத்தின் வழி சர்வாதிகாரத்தை உருவாக்கும் உத்தியை யேர்மனியின் ஹிட்லர் மேற்கொண்டு சர்வாதிகார ஆட்சியைத் தோற்றுவித்தமையையும் அந்த சர்வாதிகாரத்தனத்தைப் பயன்படுத்தி யூத மக்களைப் பல்லாயிரக்கணக்கில் இனஅழிப்புச் செய்தமையையும் உலக வரலாறு இன்றளவும் கண்டித்த வண்ணம் உள்ளது.
இப்பொழுது அதே உத்தியைப் பயன்படுத்தி மகிந்த சிந்தனையென அண்ணா உருவாக்கிய முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்புக்குப் பின்னரான சிங்கள பௌத்த சிறிலங்கா என்ற இனவெறி மதவெறிக் கோட்பாட்டை தம்பி கோத்தபாயா அதனை விட மோசமான முறையில் சிறிலங்கா என்கிற அரசின் கொள்கையாகவே மாற்றியுள்ளார். இலங்கையில் இனத்துவப்பிரச்சினையே இல்லையெனத் தமிழர்களின் பிரச்சினையை நிராகரித்தார்.
தொடர்ந்து சிங்கள பௌத்த பேரினவாதிகளைத் திருப்பதி செய்யும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லையென்ற அரசகொள்கையை வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக அனைத்துலக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் உதறித்தள்ளி முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான நீதியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த பொறுப்புக் கூறலையும் அந்த அநீதியால் பாதிக்கப்பட்ட கிட்டிய உறவினர்க்கான தகவல் அளிக்கும் பொறுப்பையும் மறுவாழ்வு அளிக்கும் கடமையையும் மறுத்து எல்லாமே யுத்தத்தின் விளைவு என மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களையும் யுத்தக் குற்றங்களையும் நியாயப்படுத்தினார்.
இலங்கையின் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இனப்படுகொலை குற்றவாளிக்கு தண்டனையை விலக்கி மன்னித்தருளி தன்னால் எந்த நீதிமன்றத் தீர்ப்பையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையைச் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு அளித்து என்றும் இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்கே இடமில்லை எனத் தெளிவாக்கினார்.
இத்தகைய மக்களாட்சிக்கு எதிரான மனித உரிமைகளுக்கு எதிரான சர்வாதிகாரப் போக்கின் உச்சமாகத் தமிழர்களின் தொன்மைத் தாயகமான மட்டக்களப்புப் பிரதேசத்தில் 2200 அளவிலான தொல்லியல் பொருள்களை உள்ளடக்கிய தொல்லியல் பிரதேசத்தை பௌத்த பிக்குகளிடம் கையளித்து ஜனாதிபதி செயலணியை உருவாக்கினார். தனது இராணுவ பொலிஸ் உயரதிகாரிகளையும் பிக்குகளுக்கு ஆதரவாக நியமித்தார்.
வரலாற்றுத் திரிபுவாதத்திற்குத் துணை நிற்கக் கூடிய சிங்களப் பேராசிரியர்களையும் வரலாற்றுத் திருட்டினுக்கு நிலத்தை அளந்து உறுதிப்படுத்தக் கூடிய காணி நிலஅளவையாளரையும் மற்றும் தமிழர் தாயகத்தை சிங்களவர் தொன்மை நிலமாக உண்மைக்கு மாறாக அனுமதிக்கக் கூடிய காணி அத்தாட்சிப்படுத்தும் உயர் அதிகாரிகளையும் திட்டமிட்ட முறையில் நியமித்தார். இந்த சர்வாதிகாரத்தைக் கண்டு பொங்கியெழக் கூடிய மக்களுக்கு இனங்காணக் கூடிய அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய செயலணி ஒன்றையும் நல்ல குடிமக்களை உருவாக்க உதவும் அமைப்பாக நிறுவியுள்ளார்.
இத்தனை நுணுக்கமான சர்வாதிகாரத் திட்டமிடலைச் சர்வாதிகரி கிட்லர் கூட எப்போதாவது செய்தாரா என்பது ஆய்வுக்குரியது.
ஜனாதிபதியின் இந்த மக்கள் நிர்வாகத்தை இராணுவமயப்படுத்தும் செயற்பாட்டுக்கு செயலணி உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் ஆசி வழங்கி சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஊக்குவித்ததும் அல்லாமல் தமிழர்க்கு இலங்கையில் பூர்வீகத் தாயகம் என்பதே இல்லை எனப் பகிரங்க செவ்வி அளித்துள்ளார்.
இது சிறிலங்காப் பாராளமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் இந்நேரத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை நடனமிட வைப்பதற்கான இனவெறி மதவெறி மொழிவெறிக் குழலூதலாக “ வினைத்திறன் உள்ள ஆட்சிக்காக ஜனாதிபதி இராணுவத்தினரை உள்வாங்கி உள்ளார் என்று சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தியும் உள்ளார். இவையெல்லாமே இத்தேர்தலில் கோத்தபாய அரசுக்கு அதீத பெரும்பான்மையுள்ள பாராளமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உருவாக்கி பாராளமன்றத்தின் சட்டவாக்கத்தின் மூலமே சர்வாதிகாரத்தை மக்கள் நிர்வாகமாக்கும் முயற்சியே.
இந்நேரத்தில் வடக்கின் 11 பாராளமன்ற உறுப்பினர்களை 7 ஆகக் குறைந்த நிலையிலும் அந்த 7க்குள் ஒருவராகி விட வேண்டுமெனத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் முட்டி மோதுவதையும்,தமிழ் மக்கள் தங்கள் வாக்குப் பலத்தைக் கூட தங்களுக்கான பாதுகாப்புச் சத்தியாக மாற்ற இயலாதிருப்பதையும் உலகம் வேதனையுடன் நோக்கிக் கொண்டுள்ளது. தமிழ்த்தலைமைகள் கூட்டமென்னும் வேடதாரிகள் இனியேனும் தங்கள் பதவியாசை என்னும் அரிதாரத்தைக் கலைத்துவிட்டு மக்களுக்குத் தோள் கொடுப்பார்களா?