“எனது பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவி விலக போவதில்லை“- கோட்டாபய ராஜபக்சே தெரிவிப்பு

தனது பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவி விலக போவதில்லை எனவும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஆணை அளித்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களையும் நிறைவு செய்யவுள்ளதாகவும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ப்ளும்பெர்க் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்முகத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  “நான் இனி தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை. தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் செல்ல முடியாது. எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்றார்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிக காலம் உள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ பதவிக் காலம் முடிவடையும் வரை அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர் ஒருவரை மேற்கோள்காட்டி ப்ளும்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக சென்றிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

தான் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் உதவியை நாடியுள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் அந்த நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடி, கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் கோட்டாய குறிப்பிட்டுள்ளார்.

மசகு எண்ணெய்யை நீண்ட கால உடன்படிக்கையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் தான் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மானிய அடிப்படையில் முன்னோக்கி செல்ல வேண்டும். அரச ஊழியர்களை அல்லது ராணுவத்தை குறைக்க முடியாது. ஆள்சேர்ப்பை குறைக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே  குறித்த நேர்முகத்தில்  தெரிவித்துள்ளார்.

Tamil News