ரஷ்யாவில் போருக்கு எதிரான பேரணிகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

உக்ரைன் போருக்காக ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புகளை அணிதிரட்டும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் இடம்பெற்ற பேரணிகளில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 1,300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செயின் பீட்டர்ஸ்பேர்க் மற்றும் மொஸ்கோவில் பெரும் எண்ணிக்கையானோர் கைதாகி இருப்பதாகவும் ரஷ்ய மனித உரிமைகள் குழுவான ஓ.வி.டி–இன்போ தெரிவித்துள்ளது. மொஸ்கோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், “போர் வேண்டாம்” என்று மக்கள் கோசம் எழுப்பியதோடு செயின் பீட்டர்ஸ்பேர்க்கில் அணிதிரட்டலுக்கு எதிராக குரலெழுப்பினர்.

இராணுவம் மற்றும் போரை விமர்சிப்பதற்கு எதிராக ரஷ்யாவில் கடும் சட்டங்கள் இருந்தபோதும் 38 நகரங்களில் கடந்த புதன்கிழமை (21) இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அனுமதியற்ற ஒன்றுகூடல்களுக்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக ரஷ்ய உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.