ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை’ என்ற தலைப்பில் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Turk) தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் தொடக்க நாளில் இலங்கை குறித்த அறிக்கையை உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
அவரது இந்த விஜயத்தின் போது இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்த அதேவேளை, செம்மணி மனித புதைகுழிக்கும் சென்றிருந்தார்.
இந்தநிலையில் அவரால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த புதிய யோசனையை சமர்ப்பிக்க பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பிக்கவுள்ளார்.