படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – பகுதி – 2 – மட்டு.திவா

இலுப்படிச்சேனை சந்தியில் வாங்கிக் கொண்டு வந்த பயத்தம் உருண்டைகளைச் சாப்பிட்டு, நீரையும் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு அடிவாரத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

இவ்வளவு நாளும் போய்த் திரிந்த காடுகளை விட இது சற்று அடர்த்தியாகவும், பரந்து விரிந்து அருகில் இருப்பவர்களைக் கூட இலகுவில் கண்டுபிடிக்க இயலாத அளவு வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதைகளை கொண்டதாகவும் காணப்பட்டது.

முன்னர் போன இடங்களில் 4 மணிக்கு முதல் யானை வராது. பயமில்லாமல் காட்டு வழியே போய் வரலாம் என ஊர் மக்கள் சொல்வார்கள். ஆனால் இந்தக் காடுகள் அப்படியல்ல. யானை முழு நேரமும் சுற்றிக்கொண்டிருக்கும் சூரிய வெளிச்சம் அரிதாக மண்ணில் படும் அடர்ந்த காடுகள். யானைக்கு மேலதிகமாக பயங்கரமான ஆளைக் கொல்லும் சிறுத்தைகளும் இந்த இடத்தில் நடமாடித் இருக்கின்றன.

சற்று தூரம் உள்ளே சென்றதும் ஒற்றையடிப்பாதை இல்லாமல் போய்விட்டது. இனி மலை இருக்கும் திசையைத் தெரிந்தவர்களால் மட்டும்தான் போகக் கூடியதாக இருக்கும். வழிமாறிச் சென்றால் திரும்பி அடிவாரத்திற்கு வரவும் முடியாமல் போய்விடும்.

நம்முடைய குழுவில் இருந்த வடிவேல் ஐயாவுக்கு கடுபுளியம்பழம் ஆய அடிக்கடி வருவதால் இந்த இடங்களும் வழிகளும் பழகிப் போயிருந்தது. காலில் செருப்பு கூட போட மாட்டார். ஒரு தண்ணீர் போத்தலை கமக்கட்டில் சொருகிக்கொண்டு சேட் பொக்கேற்றில் ஒரு கட்டு வீடியும் நெருப்பெட்டியும் சிறிய தொலைபேசியும் வைத்துக் கொண்டு சாரணை மடித்துக் கட்டிய படி மிக வேகமாக நடக்கத் தொடங்கி விடுவார்.

எம் ஒருவரிடமும் பசிக்கு எந்த ஒரு சாப்பாடும் கையில் இல்லை. சற்று நேரத்தில் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டோம் ஆனால் நேர தாமதமாகும் போல் தெரிகிறது சரி நடப்பது நடக்கட்டும் வந்த வேலை முடியாமல் திரும்புவது சாத்தியமற்றது. கதைத்துக் கொண்டே செல்லும் வழியில் பெரிய மலை போன்ற ஒரு பாழடைந்த செங்கற்களால் ஆன தூபி ஒன்று தெரிந்தது.

போகும் வழி தான் என்பதால் தூபியையும் சற்று சுற்றிவளைத்து பார்த்து விட்டுச் செல்வோம் என முடிவெடுத்து அருகே சென்றபோது காத்திருந்தது மிகப் பெரிய அதிர்ச்சி. அந்தத் தூபியானது புதையல் போட்டி காரர்களால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்தது. தூபியின் நடுவே மிகப்பெரிய துளையிட்டு அதன் அடியில் இருந்து எதையோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. தூபியின் அருகே ஒரு செவ்வக வடிவான பீடக்கல் ஒன்றும் இருந்தது.

அகழப்பட்ட தூபி காட்சி 1 படர்கல் மலை - ஓர் பயண அனுபவம் - பகுதி - 2 - மட்டு.திவா

நேரம் நண்பகல் 12.30 ஐ தாண்டி போய்க்கொண்டிருந்தது. அப்போதும் சூரிய வெளிச்சம் அவ்வளவாக காட்டுக்குள் ஊடுருவ முடியாமல் பின்னேரம் 5 மணி போலக் காட்சியளித்தது. தொடர்ந்து அண்ணளவாக அரை மணி நேரம் பயணத்தின் பின்னர் எமது இலக்கான படர்கல் மலையை வந்தடைந்தோம்.

வரும் வழியிலேயே மலையின் பிரம்மாண்டத்தோடு தூரத்திலேயே சில கற்புருவ வெட்டுக்களும் தெரிந்தன. அப்போது கல்வெட்டுகள் எதையாவது இன்று பார்த்துவிடலாம் என்று மனதில் நம்பிக்கை வந்தது. நுழைவாயிலை நெருங்கியதும் பெரிய மரம் ஒன்று சரிந்து கிடந்தது அதில் மழைக்காடுகளில் இருப்பது போல் பாசியும் வளர்ந்திருந்தது.

நுழைவாயிலில் படிகள் அமைக்கப்பட்டு இருந்தது அவை தற்போது சிதைவடைந்து காணப்பட்டதாலும் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்ததாலும் சற்று அவதானமாகவே நடக்க வேண்டியிருந்தது. மரங்களின் கிளைகள் பின்னால் வருபவர்களது முகத்தில் அடிக்கும் என்பதால் சற்று இடைவெளி விட்டே நடந்து வந்து கொண்டிருந்தோம்.

முதலாவதாக ஒரு பெரிய குகை எம்மை வரவேற்றது. அண்ணளவாக 20 தொடக்கம் 30 பேர் தங்கக் கூடிய குகை. அதில் சிறப்பான முறையில் கற்புருவம் வெட்டப்பட்டிருந்தது.    குகையினுள் மழை நீரானது வடியாமலும், கல்வெட்டுகளுக்கு நீரால் பாதிப்பு (பாசி பிடித்தல், நீரால் அடிப்படைதல்) ஏற்படாமலும் இருக்கவே கற்புருவமானது வெட்டப்படுகிறது. கற்புருவத்தின் கீழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றும் இருந்து. இதில் “இந்தக் குகை மகாதீச மன்னனின் மகனால் பெளத்த சங்கத்தினருக்கு வழங்கப்பட்ட தானம்” என எழுதப்பட்டிருந்தது.

நாக வழிபாடும் சிவ வழிபாடும் காணப்பட்ட காலத்தில் பெளத்தம் தலைதூக்கத் தொடங்கியது. தமிழர்களும் புத்த மதத்தை தழுவிக் கொண்டனர். தமிழ் பௌத்தம் உருவாக்கப்பட்ட அல்லது வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

தொடர்ந்து நடக்கையில் அருகே அதைவிட சற்று சிறிய உயரமான குகை ஒன்று கண்ணில் பட்டது அதிலும் இதேபோன்று சிறப்பாக செதுக்கப்பட்ட கற்புருவங்களும் பிராமிக் கல்வெட்டுகளும் காணப்பட்டது. இந்த  நுழைவாயில் ஒரு கோட்டை வாசலை போல் இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

படர்கல் மலை - ஓர் பயண அனுபவம் - பகுதி - 2 - மட்டு.திவாசிறப்பாக வெட்டப்பட்ட படிகளும் வானுயர்ந்த மலைகளுடனுமாக கோட்டையானது மிகவும் கம்பீரமாக காணப்பட்டதால் இதனுள் செல்லும்போதே ஒரு பயங்கலந்த ஒரு சந்தோஷத்தை மனதினுள் அனுபவிக்க கூடியதாகவும் இருக்கும். அனைவரும் அறிந்த  சிகிரியா மலையில் குகைகளில் இருந்து  மேலே பார்க்கும் போது எவ்வளவு பிரமிப்புகள் இருக்குமோ அதேபோல இந்த குகையை கடந்து அடுத்த பகுதிக்கு அந்த படிக்கட்டினால் நாம் நடந்து செல்லும் போது உணர முடிந்தது. அந்தப்படிகளில் இடைக்கிடையே சில நேர்த்தியான முறையில் இருந்த குழிக்கல் பொருத்துக்களையும் அவதானிக்க முடிந்தது.

ஐந்து நிமிடப் பயணத்தில் பின் மீண்டும் ஒரு மிகப்பெரிய குகையை அடைந்தோம் அங்கே 47 அடி நீளமான சயன நிலை புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுக் கிடப்பதை பார்க்க கூடியதாக இருந்தது. இது  ஒரு மிகப் பெரிய குகையாக இருந்ததோடு மனித நடமாட்டம் மிகக்குறைவென்பதாலும் காட்டு விலங்குகள் தங்கள் இருப்பிடமாக அவற்றை மாற்றி விட்டன.

அந்த குகையின் அடியில் காணப்படும் மண்ணானது தூசு போல இருக்கும். காலினை எடுத்து ஒரு அடி வைத்தாலும் புதைமணல் போன்று 5-7 சென்டிமீட்டர் உள்ளே செல்லும், பின்பு உறுதியான நிலம் வந்துவிடும். இந்த நிலத்தில் தான் புலி உறங்குமாம். இந்த குகை தான் படர்கல் மலை காடுகளில் வாழும் கொடிய புலிகளின் இருப்பிடமாம் என காட்டுக்கு வெளியே வந்து சில நாட்களின் பின் அறியக்கூடியதாக இருந்தது. முன்னரே இந்த கதை தெரிந்திருந்தால் சிலவேளை இந்த குகை பக்கமும் வந்திருக்க மாட்டோம்.

1 1 படர்கல் மலை - ஓர் பயண அனுபவம் - பகுதி - 2 - மட்டு.திவா

புத்தர் சிலையின் பின்னால் பாரிய இருளாக இருந்தது அருகே சென்று டார்ச் வெளிச்சம் அடித்து பார்க்கும் போது அங்கே இருட்டு போல் பிரம்மையை உண்டாக்கிய ஆயிரக்கணக்கான வெளவால்கள் எம்மை நோக்கியும், அங்குமிங்கும் எழுந்தமானமாக பறக்கத் தொடங்கி அந்த இடத்தையே அமைதி குலையைச் செய்துவிட்டன.

சரி சற்று குகைக்கு வெளியே வருவோம் என நினைத்து வெளியே வந்து குகை விளிம்பை அண்ணார்ந்து பார்க்கையில் வியப்புக்கு மேலானதொரு வியப்பு இந்த குகையில் தான் இதுவரை பார்த்ததிலேயே மிக நீளமான பிராமி கல்வெட்டு நேர்த்தியான கற்புருவத்துடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காமிராவின் படப்பிடிப்பு எல்லைக்குள் அந்த கல்வெட்டினை அடக்க முடியவில்லை எனவே 4 படங்களாக அந்த கல்வெட்டினை பிரித்து புகைப்படம் எடுத்தோம் எனவே எவ்வளவு நீளமாக இருக்கும் என யூகித்து பாருங்கள்.

காட்சி 2 படர்கல் மலை - ஓர் பயண அனுபவம் - பகுதி - 2 - மட்டு.திவா

இந்தக் கல்வெட்டை ஆராயும் போது சுவஸ்திகா சின்னம் இருப்பதை அவதானித்ததாக வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் ஐயா குறிப்பிட்டிருந்தார். அதில் சுவஸ்திகா சின்னம் இருப்பின் இந்தக்குகை தமிழர்களுடையதா அல்லது பெளத்தர்களுடையதா என நான் சொல்ல தேவையில்லை.

அந்த கல்வெட்டு “சிற்றரசன் யுவராஜன் நாகனுடைய மகனின் மகனின் மகன் பெளத்த சங்கத்துக்கு தானம் பண்ணியது” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் எமக்கு ஒன்று மட்டும் தெளிவாகிறது இந்தக் குகைகளை தமிழர்கள் மூன்று தலைமுறைகளாகவோ அதற்க்கு மேலதிகமாகவோ தம் வாழிடமாகவோ அல்லது கோட்டையாகவோ பயன்படுத்தியிருக்க வேண்டும்.

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – பகுதி – 3