சமுக ஒன்று திரட்டல் வழி கூட்டுறவு முயற்சியூடாக இடர் முகாமைத்துவம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 189

ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 189

சமுக ஒன்று திரட்டல் வழி கூட்டுறவு முயற்சியூடாக இடர் முகாமைத்துவம்

யூன் மாதம் இலங்கையில் பணவீக்கம் 15.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 39.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் யூனில் 54.1 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் அலுவலகத்தின் இக்கணிப்பின்படி மே மாதத்தில் 57.4 சதவீதமாக காணப்பட்ட உணவுப்பணவீக்கம் யூன்மாதத்தில் 80.1 சதவீதமாகவும், மேமாதத்தில் 30.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பொருட்கள் அல்லாத பொருட்களின் பணவீக்கம் 42;.4 சதவீதமாகவும் போக்குவரத்துப் பணவீக்கம் என்றுமில்லாத வகையில் 128 சத வீதமாகவும் உயர்ந்து காணப்பட்டுள்ளது. கூட்டு முழுதாக நுகர்வோர் விலைச் சுட்டி கொழும்பில் 220..1 ஆகியுள்ளது. இந்தப் புள்ளி விபரங்கள் இலங்கையில் உணவுப் பற்றாக்குறையும் போக்குவரத்துக்களும் முழுதாகக் தடைப்படும் அபாயகரமான நிலை மட்டுமல்ல நாட்டின் வாழ்வியலே முற்றாகத் தடைப்படும் நிலை வேகமாக வளர்ந்து வருவதை உறுதி செய்துள்ளன.

இதற்கிடை உணவின்றி உயிர்வாழ்தலுக்குக் குரல் கொடுக்கும் மக்கள் போராட்டங்கள் இயல்பாகவே இலங்கையில் அதிகரித்து வருகையில் தெற்கில் அதனைப் பொலிசாரைக் கொண்டு பொறுமையாகக் கையாளும் சிறிலங்கா அரசாங்கம், வடக்கு கிழக்கில் இராணுவத்தைக் கொண்டு சுட்டு அச்சப்படுத்தி தனது ஈழத்தமிழின அழிப்பு அரசியலை இந்த மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் முன்னெடுப்பதை முல்லைத்தீவு சிறிலங்கா இராணுவத் துப்பாக்கிச்சூட்டு நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

300000 படையினர்க்கு இலங்கையின் சம்பளங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த செலவீட்டுத் தொகையில் 50 வீதத்தைச் செலவிட்டு இன்றைய இக்கட்டான நிலையிலும் ஈழத்தமிழினத்திற்கு இனங்காணக் கூடிய அச்சத்தை நாளாந்த வாழ்வாக்கி அவர்களின் அரசியல் பணிவைப்பெறும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிரானதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற மக்களாட்சிக்கான சட்டத்தின் ஆட்சியை மறுப்பதுமான சிறிலங்கா அரசாங்கத்தின் இன்றைய மனநிலை முன்னர் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில் எல்லாம் இனப்போரைத் தூண்டி சிங்கள பௌத்த பேரினவாத இனவெறி மொழிவெறி மதவெறி ஆட்சியினை வேகப்படுத்திச் சிங்களவர்களிடை சிங்கள இனத்திற்கும் சிங்கள மொழிக்கும் சிங்கள பௌத்தத்திற்கும் ஆபத்து எனப்பரப்புரைகள் செய்து மக்கள் நல மறுப்பு ஆட்சியினை முன்னெடுத்தது போலவே தற்போதும் இன மொழி மத வெறிகளைத் தூண்டக் கூடிய அரசியற் செயற்பாடுகளைச் சிறிலங்கா நாள்தோறும் வேகப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழர்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இனங்காணக் கூடிய அச்ச வாழ்வினை நாளாந்தம் வாழும் நிலையும் வேகமாகி வருகிறது.

இத்தகைய பொருளாதார அரசியல் சூழலில் சமுக ஒன்று திரட்டல் வழி கூட்டுறவு முயற்சியூடாக இடர் முகாமைத்துவம் ஈழத்தமிழரிடை புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களால் தொடங்கப்பட்டாலே ஈழத்தமிழர்களின் உயிர் வாழ்தலும் உடமைகளைப் பேணலும் நாளாந்த வாழ்வாதாரங்களும் பேணப்பட முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

சமுக ஒன்று திரட்டல் என்பது வறுமைக்குள்ளாகியவர்கள் தம்மிடமுள்ள ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து சமூக பொருளாதார வாய்ப்புக்களை அறிந்து அதனைப்பயன்படுத்துவதன் மூலம் தங்களது நிலையை உயர்த்தி தங்கள் ஆற்றலகள்  மீது நம்பிக்கை வைக்கின்ற ஒரு நடைமுறை. சமுக உரிமைகள், பொருளாதார உரிமைகள் என்பனவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வதன் வழியாக வறியவர்கள் தாமாக முன்வந்து உருவாக்குகின்ற ஒரு அமைப்பின் மூலம் தீர்மானம் எடுத்தல். தங்கள் அலுவல்களைத் தாமே முகாமை செய்தல், கூட்டுறவு நடவடிக்கைகள் மூலம் சமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரது நன்மைகளையும் பாதுகாத்தல் செயற்பாடுகளை உருவாக்கிச் செயற்படுத்தல் என்பன சமுக ஒன்று திரட்டலை நாளாந்த வாழ்வில் இயல்பாக்கும். மக்களால் உருவாக்கப்படும் இவ்வமைப்பானது மக்களைக் கூட்டாக வலுவுடையவராகச் செய்யும் ஊடகமாகவும் விளங்கும். மக்களால் உருவாக்கப்படும் இவ்வமைப்புக்கள் சிறிய குழுக்களாக இருப்பினும் வளர்ச்சிப் போக்கில் பெரிய அமைப்புக்களாகப் பரிணாமம் அடையும்.

இஸ்பானிய யுத்தங்களின் பின்னரும் பங்களாதேசு விடுதலைப்போராட்டத்தின் பின்னரும் இத்தகைய மக்களமைப்புக்களாலேயே சமுக பொருளாதார புனர்வாழ்வு புனர் நிர்மாணங்கள் நடைபெற்று தேச உருவாக்கம் நடைபெற்றமை சமகால உலக வரலாறாக உள்ளது. இத்தகைய மக்கள் நேரடிப்பங்குபற்று முறைமை மேம்பாட்டுச் செயற்பாட்டை அடிமட்டத்தில் இருந்து உருவாக்க வழிவகுக்கும். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இந்த சமுக ஒன்று திரட்டலின் வெற்றிகரமான செயற்பாடாக அமைந்ததும் உலக வரலாற்றில் சமுக ஒன்று திரட்டல் முறைமைக்கு சான்றாக அமைந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மானுடம் 2000ம் ஆண்டு சமுகவியல் ஏட்டில் பா.விக்னராணி அவர்கள் எழுதிய சமூக ஒன்று திரட்டல் என்ற ஆய்வுக்கட்டுரை 12 படிமுறைகளைச் சமுக ஒன்று திரட்டலுக்கான அணுகுமுறைகளாக முன்வைத்தது.

01. சமுகத்தை மையமாகக் கொண்ட அமைப்பினை உருவாக்கல்
02. மக்களுடன் ஒருங்கிணைதல்
03. சமுகத்தைப் படித்தல்
04. பிரச்சினைகளைப் பகுப்பாய்தல்
05. தற்காலிகத் திட்டமிடல்
06. மையக்குழு உருவாக்கல்
07. அடித்தளப்பணி
08. சமுதாயக் கூட்டம்
09. நடிபங்குப் பயிற்சி
10. ஒன்று திரட்டல் செயற்பாடு
11. மதிப்பீடு
12. மீளமைத்தல்

என்னும் இந்த பன்னிரு படிமுறைகள் வழி சமுக ஒன்று திரட்டல் மக்கள் அமைப்பாகச் செயற்பட்டு மக்களுக்கு மக்களே வலுவாக்கம் செய்ய உதவும். மண்ணின் மீது மக்களுக்கு இயல்பாகவே உள்ள உரிமைகள் தாயக உரிமைகள் எனவும் மக்கள் ஒவ்வொருவரும் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலை பெறுவதற்கான எண்ணங்கள் கருத்துக்களின் பகிர்வு தேசிய உரிமைகள் எனவும் மக்களை விட்டு என்றுமே யாராலும் பிரிக்க இயலாத அவர்களின் தன்னாட்சி உரிமை குறித்த தெளிவும் விளக்கமும் உள்ளக – வெளியக தன்னாட்சி உரிமைகள் குறித்த செயற்பாட்டு அறிவும் மக்களின் தன்னாட்சி உரிமை எனவும் இந்த சமுக ஒன்று திரட்டலில் மக்களுக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் இறுதியாகவும் மனதில் பதியக் கூடிய வகையில் அறிவார்ந்த அணுகுமுறைகள் வரலாற்றுச் சான்றாதாரங்கள் வழி எடுத்து விளக்கப்பட்டு மக்களின் பங்குபற்றல் மக்களாட்சியின் தேவையும் உரிமையும் சனநாயக வழிப் போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் போன்ற சமுக பிரச்சினை தீர்வு வழிகளது செயற்பாட்டு நிலையின் முக்கியத்துவங்களும் விளக்கப்படும்.

இவற்றைக் கூட்டுறவு முறையிலான பொருளாதாரப் பங்கெடுப்பின் வழி முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இனங்காணப்பட்டு உள்ளூரில் உள்ளார்ந்த ஆற்றலுள்ள தலைவர்கள் வெளிக்கொணரப்பட்டு தேசங்கடந்துறை மக்களாக உலக நாடுகளில் வாழும் புலம்பதிந்த ஈழத்தமிழினத்தைச் சாரந்தவர்களதும் தமிழகம் உட்பட்ட உலகத் தமிழினத்தின் தமிழின ஆர்வலர்களுடனும் செயற்திட்டங்களுக்கான அறிவியில், தொழில்நுட்ப, பொருளியல் வளங்களைப் பெற இணைக்கப்பட்டு இந்த சமுக ஒன்று திரட்டல் மக்களுக்கான மக்களின் தலைமைத்துவ முகாமைத்துவ ஆளுமை வளர்ச்சிக் கட்டமைப்பாக தேச உருவாக்கம் செய்யப்பட்டாலே இன்றைய கால கட்டத்தில் ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் முஸ்லீம் தமிழ்பேசும் மக்களும் ஒருங்கிணைந்து சிறீலங்காவின் ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் அபாயகரமான அரசியலமைப்பு முறைமையையும் இன்றைய பொருளாதார நெருக்கடிகளையும் எதிர் கொண்டு தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வைத் தங்கள் இலங்கைத்தீவில் அதன் குடிமக்கள் என்ற முறையில் உறுதிப்படுத்தி பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் தேவையான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகப் பாதுகாப்பை வழங்குவதில் சகோதரத்துவத்துடன் வாழு முடியும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.

Tamil News