ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 188

ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 188

ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும்

இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட உலகின் மக்கள் இனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் இறைமை சிறிலங்காவால் 2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் இன்றைய சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வியலையும் பாதிக்கும் தன்மையுடையதாக உள்ளது.
எரிபொருள் வழங்கல் வீழ்ச்சியுற்றதால் வடக்கு கிழக்கில் நிலம்படு நீர்படு பொருளாதார முயற்சிகள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன. கூடவே மின்சார வெட்டுக்களால் வர்த்தகத்திற்கான உற்பத்திகளையும் மேற்கொள்ள இயலாத நிலை வேகப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி வேலை கல்வி சந்தை என்பவற்றுக்கு பயணிக்க இயலாத அளவுக்கு பயணச் சீட்டுக்களின் விலை அதிகரித்து வருகிறது.


எல்லாவற்றுக்கும் மேலாக மருந்துகள் தட்டுப்பாடும் மருத்துவ நிலையங்கள் அறுவைச் சிகிச்சைகளையோ அல்லது உடல் இரத்தப் பரிசோதனைகளையே செய்ய இயலாத நிலையும் வேகமாகி வருவதால் சிறு நோய்களும் விபத்துக்களும் கூட மரணத்தை விளைவிக்கும் தன்மை அதிகரித்து வருகிறது. இன்றைய இந்த நிலை அதிகரித்து வரும் உணவு நெருக்கடியாலும் பரவி வரும் தொற்றுக்களுக்கு முகங் கொடுக்க இயலாமை அதிகரிப்பினாலும் ஆகஸ்ட்டு செப்டெம்பர் ஒக்டோபர் மாதங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கும் மிக மோசமான பட்டினிச்சாவுகளாலும் உள உடல் நோய்களாலும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளவர்களாக உலகத்தமிழர்கள் உள்ளனர். அத்துடன் சிறிலங்கா இனவெறியை மொழிவெறியை மதவெறியைத் தூண்டி இன்றைய சூழலை திசை திருப்பும் பேரபாயத்தில் இருந்தும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையும் உலகத் தமிழர்களுக்கு உள்ளது.

இதனை உலகத் தமிழர்களில் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகக் கடமையாகவும், தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழகத் தமிழர்கள் உடன்பிறப்பாளர் கடமையாகவும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எனவே ஈழத்தமிழர்களுக்கான இடர் முகாமைத்துவம் ஒன்று புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் உலகத் தமிழர்களும் தாயக ஈழத்தமிழர்களும் கூட்டிணைந்த கட்டமைப்பின் வழி உருவாக்கப்படல் உடன் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களிடை அவர்களின் இன்றைய தேவைகள் குறித்த தேடல்கள் மேற்கொள்ளப்பட்டு அந்தத் தரவுகளின் அடிப்படையில் அந்த தேவைகளுக்கான நிதி முகாமைத்துவம், கட்டியெழுப்பப்பட வேண்டும். உலகில் தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த ஈழத்தமிழர் இடர் முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் கட்டியெழுப்பப்பட்டு அவற்றை இணைத்து ஒரு அணியில் ஈழ மக்களின் துயர் தீர்க்கும் செயற்றிட்டங்களாக மாற்ற வேண்டும்.

இவ்விடத்தில் இடர் முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் ஈழத்தமிழரின் உயிர்வாழ்தலுக்கான அடிப்படை வழங்கல்களை வழங்கத் தமிழர்களுக்கு ஒரு தளமாக அமைவது மட்டுல்லாமல் இலங்கைக்கு உதவும் நாடுகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இந்த உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு வற்புறுத்தவும் உதவும். இன்று இந்தியா தான் சிறிலங்காவை பொருளாதார நெருக்கடியில் நின்று மீட்டு விடும் நிதிக்கடனாக 3.5 பில்லியன் டொலர்களை அளிக்கும் ‘சுவப்’ கடன்; முறையினை இந்த ஆண்டு சனவரி மாதத்திலேயே தொடங்கி இன்று வரை உதவிவருகிறது.

யூன் 15இல் இந்த சுவப் கடன் வசதி முடிவடையும் நேரத்தில் கடந்த வாரம் சிறிலங்காவுக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவி வேண்டுமென்ற சிறிலங்காவின் அழைப்பை ஏற்று அது குறித்து சிறிலங்காவின் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு கொழும்புக்கு குறுகிய கால இடைவெளியில் வந்து பேசி சிறிலங்காவுக்குத் தொடர்ந்தும் இந்தியா உதவும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. கூடவே அனைத்துலக நாணயநிதியத்தினையும் சிறிலங்காவுக்கு உதவும்படி இந்தியா அழுத்தங் கொடுத்து வருகிறது.

டில்லியில் ஐரோப்பிய நாடுகளின் 14 தூதுவர்களுடன் டில்லியில் உள்ள சிறிலங்காவின் தூதர் சந்தித்துப் பேசும் மாநாடு ஒன்றை நடாத்தி உதவியுள்ளது. அயலக நாடுகளில் அனைவர்க்கும் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல் என்னும் இந்திய வெளிவிவகார கொள்கையின் அடிப்படையில் தான் இதனைச் செய்கின்றது என்பது இந்தியாவின் விளக்கமாக உள்ளது.

அப்படியானால் அனைவருக்கும் என்ற சொல்லாட்சியுள் ஈழத்தமிழரை இந்தியா ஏன் அனுமதிக்காது அவர்களுக்கான வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பை உறுதிப்படுத்த மறக்கிறது அல்லது மறுக்கிறது என்ற கேள்வியை ஈழத்தமிழர் இடர்முகாமைத்தவக் குழு எழுப்ப வேண்டும். அதுவும் வெளிவிவகார அமைச்சராகச் சுப்பிரமணியம் ஜெயசங்கர், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடல் ஆலோசகராக பொருளாதார அறிஞர் முனைவர் ஆனந்த நாகேஸ்வரன் என்னும் மூன்று தமிழகத் தமிழர்களின் முன்னிலைப்படுத்தலிலும் சிறிலங்காவின் முன்னாள் மத்திய வங்கியாளுநர் இந்திரஜித் குமாரசுவாமி முன்னாள் உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர் தேவராஜன் என்னும் இலங்கைத் தமிழர்கள் மூவர் குழுப்பங்களிப்பில் இருவராக உள்ள நிலையிலும் தமிழர் தொடர்புள்ள கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கரான கீதா கோபித் அனைத்துலக நாணயநிதியத்தின் பதில் இயக்குநராக உள்ள நிலையிலும் இந்தியாவின் இலங்கைக்கான பொருளாதார உதவிகள் வழங்கப்படும் இன்றைய சூழலில் தமிழர்களே ஈழத்தமிழர்களின் உண்மைநிலையை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கான உரிய தீர்வுகளைக் பெற்றுக் கொடுக்க முடியுமென உலகத்தமிழர்கள் இவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அவ்வாறே இன்று இலங்கைக்கு உதவும் நாடுகளாக உள்ள அமெரிக்கா அவுஸ்திரேலியா நியூசிலாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிடமும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை தீர்க்கப்படாத வரை சிறிலங்காவில் நிதிநிலை வளர்ச்சி ஏற்படாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்து சிறிலங்காவை ஈழத்தமிழர்களுக்கான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை ஏற்கச் செய்வதன் வழியாகவே அது நிதி நெருக்கடியில் இருந்து விடுபட முடியும் என்பதைச் சான்றாதாரங்களுடன் எடுத்துரைக்க இத்தகைய இடர் முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் இன்றைய காலத்தின் தேவை என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.

Tamil News