ஈரான் மேலான இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுத் தாக்குதலின் விளைவுகளை ஈழத்தமிழர் எவ்வாறு எதிர்கொள்வது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 381

ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்க கூட்டுத் தாக்குதல் என்பது ஈழத்தமிழர்கள் மேல் 2009 இல் சிறிலங்காவும் அதன் கூட்டு நாடுகளும் கையாண்ட அதே உத்தி களையே கையாளுகின்றன. அந்த உத்தியை  விளங்கிக் கொள்ளுவது அவசியம். முதலில்  மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் வலிமையைப் படைபலம் கொண்டு இன அழிப்புப் போக்கிலான இனங்காணக் கூடிய அச்சத்தை உருவாக்கி ஒடுக்குவதுடன் அவர்களுடைய தேசத்தின் உட்கட்டுமானங்களை இயன்றளவு அழித்து அவர்கள் மீண்டும் போராட்ட சக்தியாக கட்டமையாதவாறு செய்வது.
அடுத்து எந்த மக்களின் இறைமையை ஒடுக்கினார்களோ அதே மக்களிடையே அவர்களைத் தாங்கள் விடுவித்துவிட்டதாக உலகிற்குக்காட்டக் கூடிய முறையில் அவர்களிடை இருந்தே தமக்கு முகவர்களாக விளங்கக்கூடியவர்களை இறைமையுள்ள ஆட்சியாளர்களாகச் செயற்கையாக உரு வாக்குவது. அந்த ஆட்சியில் மக்களின் இறைமையைத் தேசியத்தை ஒடுக்கி நாட்டின் மூலவளங்களை யும் மனிதவலுவையும் மக்களின் மூலதனங்களையும் தங்களின் உள்ளூர் முகவர்களும் தாங்களும் தங்களுடைய விருப்பப்படி பயன்படுத்துவது.
இந்த நிலையில் இன்று தொடர்கின்ற ஈரான் மேலான இஸ்ரேல் அமெரிக்கக் கூட்டு தாக்குத லின் விளைவுகளை எவ்வாறு ஈழத்தமிழர்கள் எதிர்கொள்வது என்பது இன்றுள்ள முக்கிய கேள்வியாக உள்ளதென இலக்குக் கருதுகிறது. இந்த எண்ணம் இந்தப்போர் நீடிக்கும் என்கிற விளக்கத்தை இந்திய என்.டி.டி.வி தொலைக்காட்சி தெளிவாக அளித்த பொழுதுதான் பிறந்தது. ஈரான் குறைந்த விலையில் சில ஆயிரம் செலவில் மிக அதிக எண்ணிக்கையில்   83000 ட்ரோன்களை உற்பத்தி செய்து வைத்துள்ளதாக வும், மாதமொன்றுக்கு 500 ட்ரோன்களை உற்பத்தி செய்யும் வலிமையைக் கொண்டுள்ளதாகவும் இந்திய போரியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த உற்பத்தியை ஈராக் யுத்தத்தில் அமெரிக்கா பயன்படுத்திய லூசி டரோன்கள் ஈராக்கில் வீழ்ந்த காலம் முதலே அதனை எடுத்து உள்ளூரில் செய்யத் தொடங்கிவிட்டதால் மத்திய கிழக்கில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பலநாடுகளிலும் பதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போரை வான்வெளி வழியாக முடிவுக்குக்  கொண்டு வர நீண்ட காலம் எடுக்கும் என்பது அந்தத் தொலைக்காட்சி ஆய்வாளரின் கருத்தாக அமைந்தது. சிந்தித்துப் பார்த்தால் இது உண்மையாகவும் உள்ளது.
இந்நிலையில் விலையேற்றங்கள் தட்டுப்பாடுகள் ஆட்கள் பொருட்கள் போக்குவரத்துத் தடைகள் எனப் பலநிலைகளில் உலகின் நாளாந்த வாழ்வியல் பாதிப்புக்கு உள்ளாகும் பேரபாயம் வளர்ச்சி அடைகின்ற காலமாகவே அண்மைக்காலங்கள் அமையப் போகின்றன. இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது எதிர்வு கூறக் கூடிய நிலையில் இல்லை. இந்த நிலையில் இந்துமாக்கடலின் இலங்கையைச் சுற்றியுள்ள பகுதியில் ஐந்தில் மூன்று பங்கினை தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வுக்குள்ள பேரிடர்கள் கொஞ்சமல்ல.
அப்படியானால் ஈழத்தமிழர்கள் இந்தப் பேரிடர் காலத்தில் எப்படி வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தங்களின் சொந்த மண் என்கின்ற தொன்மையும் தொடர்ச்சியுமான மக்கள் இறைமையுடன் இன்று வரை வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள்  தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளை முன்னெடுக்கப்போகின்றார்கள் என்பதே இப்பொழுது எழுகின்ற முக்கிய கேள்வியாக உள்ளது.
இதற்கு பேரிடர்கால முகாமைத்துவ பேரவை ஒன்றை உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அமைத்து, தாயகத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளுக்கு ஏற்ற செயல்திட்டங்களை சமூகநல பொருளியல் தொழில்நுட்ப திட்டங்கள் மூலம் முன்னெடுப்பதே சிறந்த வழியாக அமையும் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது. அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மனிதநேயத் தேவைகளை முன்னிறுத்தி இந்தத் திட்டங்கள் திட்டமிடப்படுவது அவசியமாகிறது.
அதே வேளை சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இலங்கைத் தீவினை சமகால உலக நிலையில் அதன் இருப்பு நிலையில் தக்க வைப்பதற்கு அதன் காலனித்துவ ஆட்சிக்கு முற்பட்ட நிலையில் மக்களின் ஆட்சித்தன்மை உறுதிப்படுத்தப்பட்டாலே அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் நல்லெண்ணம் வேகம் பெறும் என்பதையும் இலக்கு நினைவூட்ட விரும்புகிறது. 1505 இல் கோட்டே சிங்களவர் அரசும் 1621 இல் யாழ்ப்பாணத் தமிழர் அரசும்  1815 இல் கண்டி சிங்கள அரசும் 1832 இல் வன்னித் தமிழ்ச்சிற்றரசும் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டன என்பது அனைவரும் அறிந்தவொன்றாக உள்ளது.
காலனித்துவத்தில் இருந்து இந்த அரசுகளின் மக்கள் தாம் விடுதலை பெறுவதற்காகத்தான் போராடினார்கள் என்பதும் வரலாறு. இதனை உறுதி செய்த வரலாற்று நிகழ்வாகத்தான் கண்டி ரட்ட சபாவ, கோட்டே ரட்ட சபாவ, யாப்பானய ரட்ட சபாவ எனச் சிங்களத்திலேயே மூன்று தேசியஇனத்தன்மையான வாழ்வும் பிரித்தானிய காலனித்துவத்திடமிருந்து அந்த அந்த மக்களைச் சென்றடைய வேண்டுமென 1920களின் நடுப்பகுதியில் கோரிக்கை எழுப்பி கண்டி ரட்டசபாவையும் நடைமுறைப்படுத்திக் காட்டிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநயாக்கா,  கண்டி கரையோரச் சிங்களவரிணைப்பு ஏற்பட்டதும்  அக்கோரிக்கையை கைவிட்டு தன்னல அரசியலை முன்னெடுத்தார் என்பது வரலாறு.
சிங்கள இடதுசாரித் தலைமைகளும் ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமையை ஏற்று அறிக்கைகள் விட்டதும் வரலாறு. ஆகவே தன்னாட்சியுடன் கூடிய கூட்டாட்சிக்கு உரியவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதற்கு இவற்றை விட வரலாற்று ஆதாரங்கள் வேறு தேவையில்லை.  இந்த மூன்றாவது உலகப்போர் நோக்கிய இன்றைய காலகட்டத்திலும் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளரச்சிகளை முன்னெடுக்க இயலாத நிலையுள்ளது. இதனை காலனித்துவத்தின் விளைவு களை மாற்றுவதை தங்களின் இலட்சியமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி மாற்றியமைத்து ஈழத்தமிழர்களின் நிலம் அவர்களின் தாயகம் என்பதை ஏற்று  இன்றைய காலத்துக்கு ஏற்ற முறை யில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இடைக்கால தீர்வாகத் தன்னாட்சி உரிமையுடன் கூடிய கூட்டாட்சியை தேசிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பு மூலம் ஈழத்தமிழர்களுக்கு உறுதி செய்வதன் மூலமே நாட்டின் தேச இனங்களான சிங்களவர் தமிழரிடையிலும் குடிகளான இலங்கை முஸ்லிம்கள் இலங்கை மலையகத் தமிழரிடையிலும் இனநல்லிணக்கம் ஏற்பட்டு ட்ரம்பின்லான்டாக இலங்கைத் தீவு மாறாது தடுக்கப்படலாம் என்பதையும் இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையுடன் கூடிய கூட்டாட்சியை இன்று வலியுறுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் பேரவையினர் இதற்கான அனைத்துலக ஏற்புடமையை திம்புப் பேச்சுவார்த்தை தருகிறது என்பதை பெப்ரவரி 15ம் திகதிய தீரிமானத்தால் உறுதி செய்து இதனை இன்றைக்கு உள்ள தாயகச் சூழலில் அடைவதற்கான பொதுச்சபை ஒன்றையும் நிறுவியுள்ளனர். அதே வேளை இந்த தன்னாட்சியுடன் கூடிய கூட்டாட்சி என்பது தமிழர்களின் 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1977 இல் மக்களாணையைப் பெற்று ஈழத்தமிழரின் அரசியல் கொள்கையாக உறுதியாகி 31 ஆண்டுகாலம் நடைமுறையரசின் மூலம் தங்களுடைய பாதுகாப்பான அமைதியான ஆட்சியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்திய அரசியற்பரிணாமத்தை மாற்றும் இயல்பற்றது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்த பெப்ரவரி 14ம் திகதிய ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றுத் தீர்மானமும் இவ்விடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.
இதனை மேலும் செம்மைப்படுத்தவதற்கான எண்ணங்களைக் கருத்துக்களை மார்ச் 15 வரை பகிருமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று நோக்கத்தில் ஈழத்தமிழரின் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையுமே கோருகின்றன. ஒன்று உள்ளகத் தன்னாட்சி அடிப்படையில் தன்னாட்சியுடன் கூடிய கூட்டாட்சியை பெற முயற்சிக்கிறது. முயற்சி புதிது விளக்கங்கள் நிறையத் தேவை. மற்றையது வெளியக தன்னாட்சி உரிமையையும் இழக்காத வகையில் செயற்பாடுகளை அமைக்க முயற்சிக்கிறது. இதனை எப்படி இன்றைய நடைமுறை அரசியலில் செய்வதென்பதற்கு நிறைய விளக்கங்கள் தேவை  இரண்டிலுமே விவாதத்தின் மூலம் விளக்கங்கள் வளர்க்கப்பட வேண்டியனவாக உள்ளன.  இதற்கான உரையாடல்களை இருதரப்பினரும் உருவாக்கி ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்கள் மூலம் ஈழத்தமிழரின் வாழ்வை வளம் பெறவைக்க வேண்டுமென்பதை இலக்கு மீளவும் மீளவும் வலியுறுத்துகிறது.
ஆசிரியர்