தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை

தாயக மேம்பாடு
வருமானம் தரும் தொழிற்சாலைகளை மீள உருவாக்க வேண்டும் Development
எமது தாயகமானது, உள்ளூர்  உற்பத்தியிலும், பழமரக் கன்றுகள் உற்பத்தியிலும் மிகவும் தன்னிறைவு உடைய பகுதியாக நேற்றுக் காணப்பட்டது. பழ மரங்களில் இருந்து கிடைக்கும் எல்லா வகையான கனிகளும் பழ ரசங்களாக, நெல்லி ரசமாகப்  பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்பட்டன. 1990இல் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் ஊடாக பழரசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, குளிர் பானங்கள் காட்சிப் படுத்தப்பட்டன.

இலங்கையிலே மிகவும் சிறப்பு வாய்ந்த பழரசங்கள் யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. ரேஸ்ரி நிறுவனம், சுரபி நிறுவனம், வல்வெட்டி சோடா போன்ற பல உற்பத்திகள் சந்தைப் படுத்தப்பட்டன.  ஆனால் இன்று எல்லாம் கைவிடப்பட்ட நிலையில் கொக்கோகோலா,  ஃபன்டா போன்ற வெளிநாட்டு குளிர் பானங்கள் சந்தையில் காணப்படுகின்றன.

தொழிற்சாலைஎமது தாயகத்தில் உள்ள சில திராட்சை, Fashion Fruits போன்ற பழங்களைப் பயன்படுத்தி, நல்ல போசாக்கான பழச் சாற்றை உற்பத்தி செய்து, விற்பனை செய்யக் கூடிய தொழிற்சாலைகளை, முதலீடு உள்ளவர்கள் உரிய அனுமதியைப் பெற்றுத் தொழிற் சாலைகளை ஆரம்பித்தால், நமது மக்களுக்கு மிக அதிகமான வருமானம் கிடைக்கும்.  பொருளாதாரம் மிகவும் வலுவடையும்.

இன்று எல்லா வகையான கைத் தொழில் ஆலைகளும் பெரும்பான்மை சமுதாயத்தால் முதலீடு செய்யப்பட்டு ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப் பட்டாலும், எமது வளமும், திறமையும் சுரண்டப் படுகிறது.

மக்களுக்கான உண்மையான விலை கிடைக்காது  உள்ளது. எனவே வசதியுடைய மக்கள் தொழிற் சாலைகளை உருவாக்கவும் நியாயமான விலை மக்களுக்கு கிடைக்கவும் முன்வர வேண்டும் .

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் சாமானிய தொழிற் சாலைகள் யாவும் பெரும்பான்மை மக்களால் மட்டுமே மேற்கொள்ளப் படுகின்றது. எமது வளத்தில்  25 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளங்கள் யாவும் பயன்படுத்தப் படாமல் உள்ளது.

தாயகத்தின் கைத்தொழில் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தன்னிறைவான நிலையை உருவாக்கி சிறு தொழில் திட்டங்களை மேற்கொள்ள புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நிதி வசதி உடைய மக்கள் முன்வர வேண்டும். எல்லா வகையான அனுமதிகளை பெற்று பால் உட்பட்ட அனைத்து உற்பத்திகளையும் சந்தைப்படுத்த எமது மக்கள் முன்வர வேண்டும்.

இன்று உற்பத்தி செய்பவர்களுக்கு உரிய வருமானம் கிடைக்காமல், கொள்வனவு செய்து கைத்தொழில் பொருளாக மாற்றுபவர்கள் அதிக லாபத்தை தரும் நிலையே காணப் படுகின்றது.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், எமது மக்களும் கூட்டுறவு அடிப்படையில் பங்குதாரர்களாக மாற வேண்டும். பழங்கள் மரக்கறி வகைகள் மீன் போன்றவை சந்தைப் படுத்தி பதனிட்டு மேற்கொண்டால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்கும். இந்த நிலைமையை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும்.

சர்வதேச நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி எமது மக்களின் பொருளாதாரம் பல மடங்கு வளர்ச்சி அடைய துறைசார் நிபுணர்களும், நிதி வளம் உடைய மக்களும் முன்வந்து எல்லாத் துறைகளிலும் பொருளாதார வளர்ச்சி அடையக் கூடிய பல கைத் தொழில் திட்டங்களை மேற் கொள்ள முன்வர வேண்டும்.

Vanni techபொருளாதாரத் தடை இருந்த போது Vanni tech, TR Tec போன்ற நிறுவனங்கள் ஊடாக பல ஆயிரம் மாணவர்கள் தொழில் நுட்ப,  கணினி பயிற்சிகள் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமைகள் அன்று  காணப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் போன்றோர் நீண்ட கால திட்டங்களை இனம் கண்டு பல திட்டங்களை வகுத்து செயல்பட வழி காட்டியாக இருந்தனர்.  இவற்றைக் கட்டம் கட்டமாக செயல் படுத்த வேண்டும்.

இதனை செயல் வடிவில் கொண்டு வர நிதி மூலமே தடையாக இருந்தது.  எனவே எம் மக்களுக்காக  நிதி வளம் கொண்டவர்கள் உலக துறைசார் நிபுணர்கள் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான கைத் தொழில் திட்டங்களை முழுமையாக பயன்படுத்த முன்வர வேண்டும். ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவான நிலைமையை கொண்டு வர வேண்டும்.

உலகிலேயே நிலவளம், வனவளம், மீன்வளம், நீர்வளம், கைத் தொழில் வளம் போன்ற எமது  வளங்கள் அதிகம் பயன் படுத்தாமல் இருக்கும் இடங்களில் எமது தாயகம் முதன்மை இடத்தில் உள்ளது. இவ்வளங்களை முழுமையாக பயன் படுத்தினால் எமது மக்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

இன்று உற்பத்திப் பொருட்கள் விலை குறைவு. ஆனால் பொருட்களை சந்தைப் படுத்தும் போது விலை அதிகம். எனவே நாம் கைத் தொழில் திட்டங்களை நேரடியாக மேற் கொண்டால், இலாபம் எமது மக்களுக்கு நேரடியாகப் போய்ச் சேரும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை

எனவே வசதி படைத்தோர் முதலீட்டாளர்கள் சர்வதேச உள்ளூர் அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக திட்டங்களுக்கான உரிய அனுமதியை பெற்று நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும்.

எமது கடலில் கிடைக்கும் மீன்கள் வெளி நாடுகளில் ரின் மீன்களாகவும், பால் வளமானது   பால்மா பவுடர்களாகவும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி மேற் கொள்ளப் படுகின்றது.  எனவே எமது வளங்களை நாமே கைத் தொழில் திட்டமாக மாற்ற முன்வர வேண்டும்.

காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை

இரும்பை எடுத்துக் கொண்டால் அது ஆணியாக மாற்றப்படும் போது 10 மடங்கு விலை போகின்றது. இவ்வாறு ஒவ்வொரு பொருட்களும் சந்தைப்படுத்தும் போது எமது மக்களுக்கான வருமானம் 10 மடங்கு அதிகரிக்கச் செய்யும். 1950ஆம் ஆண்டு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என பத்துக்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உருவாக்கப்பட்டது.  அதன் பின் எந்த ஆலைகளும் உருவாக்கப் படவில்லை .

உலகிலேயே நிலவளம், வனவளம், மீன்வளம், நீர்வளம், கைத் தொழில் வளம் போன்ற எமது  வளங்கள் அதிகம் பயன் படுத்தாமல் இருக்கும் இடங்களில் எமது தாயகம் முதன்மை இடத்தில் உள்ளது. இவ்வளங்களை முழுமையாக பயன் படுத்தினால் எமது மக்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

எனவே எமது மக்கள் சொந்தக் காலில் வாழக் கூடிய தொழிற் சாலைகளை உருவாக்குவோம். 25இற்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய நிலையில் அதற்கான வளங்கள் எமது தாயகத்தில் காணப்படுகின்றன.  இன்று அந்த பயன்படுத்தப் படாமல் வீணாகின்றன.

எனவே நாம் சிந்திப்போம் எமது தாயக வளத்தை முழுமையாக பயன் படுத்துவோம். இதன் மூலம் ஒரு தன்னிறைவான வாழ்வை நம் மக்களுக்கு வழங்க முன்வாருங்கள் எமது மக்களே!