வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள அர்ணாப் புயல் காரணமாக இலங்கை முழுவதும் பலத்த மழை வீழ்ச்சிக்கு எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
மேலும் குறித்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.
மேலும், வீடுகளில் இருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.



