ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம்

மரணம்4 e1627571190407 ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம்

ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஓருங்கிணைப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஹிஷாலினியின் மரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தலவாக்கலை அக்கரப்பத்தனைப் பிரதேசத்தின் டயகம மூன்றாம் பிரிவைச் சேர்ந்த ஜூட்குமார் ஹிஷாலினி என்ற 16 வயதுச் சிறுமி கொழும்பிலுள்ள அரசியல் பிரிமுகரின் வீட்டில் பணிப் பெண்ணாக அமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி குறித்த சிறுமி பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு-தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த போதும் சிகிச்சை பலனின்றி 15 ஆம் திகதி அவரது உயிர் பரிதாபகரமாகப் பிரிந்துள்ளது.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் அவரது குடும்பத்தினரும் பணிப்பெண் தரகரும், சிறுமியை வேலைக்கு அமர்த்தியிருந்த வீட்டாரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

தவிர, சிறுமியின் சாவுக்கு நீதி வேண்டி நாடு தழுவிய ரீதியில் பலரும் கண்டன அறிக்கைகளையும் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையில் சட்டத் துறையும் நீதித் துறையும் இவ்விடயத்தில் சுயாதீனமாக வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். சந்தர்ப்பத்தை தம்வசப்படுத்திக் கொண்டு பல தரப்பினராலும் ஊகத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டு வரும் வதந்திகள் நீதி விசாரணைக்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை கண்டித்து மொத்தச் சமூகமும் குரலுயர்த்துவது வரவேற்கத்தக்கதே. எனினும், கரிசனைகள் வெறுமனே களச் சூழலோடு மட்டும் காணாமல்  போகும் விடயமாக அன்றி இவ்வாறான சம்பவங்கள் மீள் நிகழாதவாறு ‘ஏன்? எதனால்? எப்படி? என ஆராய்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

நாட்டினுடைய பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பாக விளங்கக் கூடிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் நூற்றாண்டு காலத் துயரமாகத் தொடர்கின்றது. இது இன்றுவரை அரசின் மனச்சாட்சியை உரசிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இந்த மக்களின் தொழில் கௌரவம், பாதுகாப்பான வாழிடம், கல்வி, சுகாதாரம், நிரந்தர வருமானம், சுயதொழில் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்பு போன்ற அடிப்படைக் காரணிகள் தொடர்பில் அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல், லயன் அறைச் சீவியத்தையும் நகர்ப்புறத்துச் செல்வந்தர்களின் பங்களாக்களை நாடிச் செல்லும் சிறுவர் கூலிகளையும் மலையக மண்ணிலிருந்து இல்லாதொழித்திட முடியாது.

சிறுவர்கள் தொழிலாளர்களாவதில் குடும்பங்களின் பொருளாதாரச் சமூகப் பண்புகள் குறித்து பெற்றோர்களின் தீர்மான மனப்பாங்கும் ஒரு காரணமாகின்றது. பிள்ளைகளை தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு இந்தக் குடும்பங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மலையக சமூகத்தின் முக்கிய குறைபாடான வறுமையை ஒழித்து அவர்களது நிரந்தர வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மலையக தொழிற்சங்களும், அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்து விரைந்து முன்னெடுக்க வேண்டும்” என்றுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021