ஈரானில் மீண்டும் ஹிஜாப் கெடுபிடி அமலாகியுள்ளது. இதனையடுத்து பெண்கள் தங்கள் முகம், தலையை முழுமையாக மறைக்கும்படி ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் சிறப்பு ரோந்துப் படையினர் தங்களின் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி மரணத்துக்குப் பின்னர் வெடித்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் சற்றே தளர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஹிஜாப் கெடுபிடி வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில், “ஈரானில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஹிஜாப் கண்காணிப்பாளர்கள் ரோந்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பெண்கள் முறைப்படி ஹிஜாப் அணியாவிட்டால் அது சட்டத்துக்குப் புறம்பானது. சிறப்பு ரோந்துப் படையினர் ஹிஜாப் முறைப்படி அணியாத பெண்களை முறையாக அணியும்படி கண்டிப்பார்கள். விதிமுறையை மீறுவேன் என்று பிடிவாதம் செய்வோர் மீது வழக்குப் பதிவு செய்வார்கள். அதனால் சிறப்பு ரோந்துப் படையினர், அனைவரும் ஆடை ஒழுக்கத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துகின்றனர். காவல்துறைக்கு இதைத் தாண்டியும் நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளதால் பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று ஈரான் சட்ட அமலாக்கத் துறை செய்தித் தொடர்பாளர் சயீது மோன்டாசெரல்மஹ்தி தெரிவித்துள்ளார்.